இன்றைய புராணங்கள்

எனக்கு எப்போதுமே புராணங்களில் ஈடுபாடுண்டு. ஏனென்றால் அவை நடந்தவை மட்டும் அல்ல, நடந்ததைச்சொல்பவனையும் உள்ளடக்கியவை. அந்த value added வரலாறு எப்போதுமே நாம் ஊகிக்கமுடியாத மர்மங்களையும் நுட்பங்களையும் கொண்டது.

உலகத்தில் எங்கும் எப்போதும் புராணங்கள்தான் மையக்கதையோட்டமாக உள்ளன, யதார்த்த இலக்கியமெல்லாம் எந்நிலையிலும் இரண்டாம்கதையோட்டங்கள்தான். டார்ஜான்,ஃபாண்டம்,ஜேம்ஸ்பாண்ட் எல்லாருமே புராணக்கதாபாத்திரங்கள்தானே? விண்வெளிக்கதைகள், பேரழிவுக்குப்பிந்தைய கதைகள் என நவீன புராணங்களுக்கு எத்தனையோ வடிவங்கள்.

இலக்கியத்தில் புராணத்தன்மை கொண்ட பல்வேறு அழகியல் வடிவங்கள் வந்துவிட்டன. மிகைக் கற்பனைப் படைப்புகள், மாய யதார்த்தப் படைப்புகள். அத்தனையும் போதாதென்று பழைய புராணங்களையே லார்ட் அஃப் த ரிங்ஸ் போல மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியமனம் புராணங்களை விட்டு விலகுவதே இல்லை. புராணக்கூறு இல்லாமல் நம்மால் சமகால வரலாற்றையே பார்க்கமுடிவதில்லை. வள்ளலார், பாரதி போன்ற இந்த நூற்றாண்டு ஆளுமைகளின் வரலாறே புராணங்களைக் கலந்துதான் எழுதப்பட்டுள்ளது. எம்ஜியாரின் கைக்கடிகாரம் சமாதிக்கடியில் இன்னும் துடிப்பது, கிருபானந்தவாரியார் சொர்க்கத்தில் இருந்து திருமண வாழ்த்து சொல்லி வெண்பா அனுப்புவது என நம் மக்கள் இன்றும் பௌராணிக யுகத்தில்தான் வாழ்கிறார்கள்.

இதை எதிர்மறை அம்சமாகக் கொள்ளவேண்டியதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இது ஒருபண்பாட்டின் இயல்பான செயல்பாடு. அது பிறிதொன்றைப் பிரதி செய்வதை விடத் தன்னுடைய சுயத்தை முன்னெடுப்பதே சிறந்தது.

சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த புராணப்படுத்தல் என்று இந்த புனைகதையைச் சொல்வேன்.
இதில் உள்ள கற்பனை வளம் நம்முடைய புராணமரபின் இரு அடிப்படை அம்சங்களை துல்லியமாக உள்ளடக்கியிருக்கிறது. மையக்கதாபாத்திரங்களின் ஆளுமையை மிகைப்படுத்தி இலட்சியவடிவம் நோக்கி கொண்டு செல்கிறது. எதிர்க்கதாபாத்திரங்களை உயர்தர அங்கதம் மூலம் எதிர்மறையாகக் காட்டுகிறது.

தமிழின் மரபான புனைவுவளம் நம்மிடம் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

முந்தைய கட்டுரைஇந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉறைகாலம்