காளிகாம்பாள்

ஜெ..

சென்னை காளிகாம்பாள் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா??

ஒரு காலத்தில் கடற்கரைக் காவல் தெய்வமாக இருந்திருக்கலாம்.. இன்று வணிக வளாகங்களால் சூழப்பட்டு விட்டாலும், அங்கு செல்வது மனதுக்கு இதம் தருவதாக இருக்கிறது.

பாரதி, “யாதுமாகி நின்றாய்” பாடியது இக்கோவிலில் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. சிவாஜி இங்கு வந்து வழிபட்டுச் சென்றதாகக் கோவில் குறிப்பு உள்ளது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை..

காலை வணக்கம்..

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

காளிகாம்பாள் கோயிலைப்பற்றி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் சென்னையில் சிலகாலம் பணியாற்றிய அச்சகத்தின் கம்பாசிட்டர் மிகுந்த பிரியத்துடன் சொல்வார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் சென்னையின் பூர்வகுடிகளில் ஒருவர். தமிழறிஞரும்கூட. விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப்பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக இப்பகுதியில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்துவந்து கட்டிய ஆலயம் அது என்பார். அதன் மூலவர் அண்ணாமலையார். ஆனால் அம்பாள் காளிகாம்பாள் என்று புகழ்பெற்றார்

தெலுங்கில் இந்த ஆலயம் சென்றாய ஆலயம் என்றும் அம்மன் சென்னம்மன் என்றும் சொல்லப்படுவதாகவும் அப்பகுதி [புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் உயர்நீதிமன்றம் இருக்குமிடம்] சென்றாயபட்ணம் என அழைக்கப்பட்டதாகவும், சென்னை என்ற பெயர் அந்தச் சொற்களில் இருந்து வந்தது என்றும் அந்தப் பெரியவர் சொல்வார்.

அந்த ஆலயத்திற்கு மராட்டிய சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். சிவாஜி 1674ல் அவரது தென்னகப்படையெடுப்பின்போது செஞ்சியையும் வேலூரையும் ஆர்க்காட்டையும் கைப்பற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இங்கே முகாமிட்டிருக்கிறார். தாயார் வழிபாட்டில் பெரும் ஈடுபாடுள்ள சிவாஜி அங்கே வந்திருக்கலாம். சென்னையின் இன்றும் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் தெலுங்குமக்களுக்கு காளிகாம்பாள் முக்கியமான தெய்வம். விஸ்வகர்மா சமூகத்தின் பொறுப்பிலேயே இக்கோயில் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயில் இடிக்கப்பட்டு இடமாற்றம்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது

பாரதியார் சென்னையில் வாழ்ந்த நாட்களில் காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி வருவதுண்டு என்று சொல்லப்படுகிறது ‘யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மையெல்லாம் – நின்றன் செயல்களின்றி இல்லை’ என ஆரம்பிக்கும் பாடல் காளிகாம்பாளை நோக்கி எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

ஆனால் இன்றுவரை நான் காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்ல நேரவில்லை. மறுமுறை வரும்போது செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

ஜெ


சென்னைக்கு எப்படி பெயர் வந்தது- முத்துகிருஷ்ணன்


காளிகாம்பாள் கோயில் தலம்

முந்தைய கட்டுரைபூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
அடுத்த கட்டுரைரவிசங்கர்,ஜக்கி-கடிதங்கள்