அம்மாவின் பேனா

நாலைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழினி வசந்தகுமாரின் அலுவலகத்தில் அவர் அச்சிட்டு உதவிய ஒரு புத்தகம் கிடந்தது. ‘தணல்கொடிப்பூக்கள்’ நவீனக்கவிதையின் மொழியும் படிமமுறையும் தெரியாத ஒரு அப்பாவித்தனம் அதிலிருந்தது. பின்னட்டையில் மாலதி என்றிருந்தது. ”யார் இவர்?” என்று கேட்டேன். ”ஒரு அம்மா, சதாராவில் போஸ்டல் துறையிலே இருக்காங்க. பாவண்ணனுக்கெல்லாம் ·ப்ரண்டு…நல்ல அம்மா” என்றார்.

எளிமையான கவிதைகள் நவீனக்கவிதை சந்திக்கும் சவால்களின் விளிம்புக்குச் செல்லமுடியாதவை. ஆனால் பலகோணங்களில் தன் சிக்கல்களை ஆத்மார்த்தமாகச் சொன்ன முனைபவை என்று தோன்றியது. கொஞ்சநாள் கழித்து ஒருநாள் அலுவலகத்தில் இருக்கையில் ஓர் அழைப்பு. ”நான் போயட் சதாரா மாலதி பேசறேன்”

அவ்வாறு மாலதி அறிமுகமானார். தொலைபேசியில் கவிதைகளைப்பற்றிப் பேசுவார். புதிதாக எழுதிய கவிதைகளை வாசித்துக்காட்டுவார். எனக்கு செவிக்கவனம் மிகவும் குறைவு. கவிதைகளைக் கவனிக்க முடியாது.  கவிதைகளை அச்சிலே வாசித்தாகவேண்டும். ஆனால் மாலதியின் உற்சாகம் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. நீளமான கவிதைகள், உணர்ச்சியும் மொழியும் கொதிப்பவை.

பின்னர் அவரது கவிதைகளைப்பற்றி விமரிசனமாக சிலவற்றைச் சொன்னேன். கவிதைகளை மேடைப்பேச்சு போல ஒரு பொதுவெளியில் இருந்து எல்லாருக்கும் தெரிந்த கருத்துக்கள் மனநிலைகள் சார்ந்து  உருவாக்கமுடியாது என்றேன். அடிக்கடி கவிதைகளைப்பற்றி பேசுவார். என்னை ஒருமுறை ஆணாதிக்கவாதி என்றார். ரொம்ப தாங்க்ஸ் அருண்மொழி கேட்டால் சந்தோஷப்படுவாள் என்றேன். அருண்மொழியை நேரில்சந்தித்து அவளை மனம்மாறச்செய்யப்போவதாக மிரட்டினார்

அதன்பின் அழைப்புகள் குறைந்தன. ஒருமுறை அழைத்தபோது உடல்நிலை சரியில்லை என்றார். என்ன உடம்புக்கு என்றபோது ”ஏதோ ஒண்ணு” என்று சலிப்பான பதில் கிடைத்தது. பின்னர் திண்ணை இதழில் மாலதியின் மறைவு குறித்த செய்தியையும் பாவண்னன் எழுதிய அஞ்சலியையும் பார்த்தேன். நான் அவரைநேரில் சந்தித்ததே இல்லை. அந்தப் புகைப்படமும் குரலும் கவிதைகளும்தான் அவர்

இந்த திண்ணை இதழில் மாலதியின் அம்மா லலிதா தன் மகள் என்.மாலதியைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்  http://www.thinnai.com/?module=displaystory&story_id=20903262&format=html  ஆச்சரியமான கட்டுரை. மாலதி இறக்கும்போது அவருக்கு 57 வயது. அம்மாவுக்கு கண்டிப்பாக இப்போது எண்பது தாண்டியிருக்கும். அவர் இதுவரை எதுவும் எழுதியதாக தெரியவில்லை.

ஆனால் நல்ல தெளிவான தமிழில், நுட்பமான தகவல்களுடன் உணர்ச்சிகளை மிகைப்படுத்தி செயற்கையான மொழிவெளிப்பாடுகளுக்குச் செல்லாமல் சரளமாக மகளைப்பற்றிய நினைவுகளை எழுதியிருக்கிறார். தெரிந்தவராக இருந்தபோதும் மாலதியைப்பற்றிய மனப்பிம்பமே என்னிடம் இல்லை. இக்கட்டுரை மூலம் மிகத் தெரிந்த ஒருவராக அவர் ஆகிவிட்டிருக்கிறார்.

மகளுக்கு அம்மா எழுதும் அஞ்சலிக்குப் பின்னால் உள்ள துயரத்தின் கனத்தை உணர முடிகிறது. அதிலும் அம்மா தன் மகளை கிட்டத்தட்ட ஒரு கதாநாயகி போல அரைநூற்றாண்டுக்காலம் ஆராதித்து வந்திருக்கிறார். அவளது அழகும், அறிவும், படிப்பும், புகழும் எல்லாம் அவரை பெருமிதத்தில் நிறுத்தியிருக்கிறது. முதுமையில் புத்திரசோகம் என்பது எளிய விஷயம் அல்ல.

மாலதி 1950ல் பிறந்ததை கைக்குழந்தை பிறந்ததைப்போல பதிவுசெய்யும் அம்மாவின் குதூகலமான மனம் அவள் இறந்ததை ககட்டுரையில் சொல்லாமலேயே விட்டுவிட்டிருக்கிறது . எப்படிச்சொல்லமுடியும். ஓர் அம்மாவுக்கு பெண் எப்படி இறக்க முடியும்?

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20903262&format=html

முந்தைய கட்டுரைஇசை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆதிச்சநல்லூர்:கடிதங்கள்