ஈரோடு-கடிதங்கள்

அன்பு ஜெயமோகனுக்கு,

எங்கள் ஈரோட்டில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

அறம் என்கிற சொல் எப்போதும் புதிரானது. அதற்கென்று தனித்த அர்த்தத்தை நம்மால் சுட்டிவிட முடியாது என்பது என் எண்ணம். அதன் புதிர்த்தன்மைதான் ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்ற எழுத்தாளரைத் தூங்கவிடாமலும், எங்களைப் போன்ற வாசகரை வாசிப்பில் நிறைவடையச் செய்யாமலும் தேடியபடியே இருக்கச் செய்கிறது. தேடுதலில் நாம் சந்தித்துக் கொள்கிற தருணம் வாழ்வை இலகுவாக்குகிறது;கூர்மையாக்குகிறது.

தத்துவங்களும்,தர்க்கங்களும் நிரம்பியிருக்கும் நம் மனதிற்கு உவப்பான – நிரந்தரமான – நித்திய சுகம் என்பது எப்போதும் சாத்தியமே இல்லை என்வும் படுகிறது. சாகும்வரை ஏதோ ஒன்றைக் கண்டடையும் பொருட்டு இயங்கிக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கப்போகிறோம் – ‘ஏதோ ஒன்று’ இருக்கிறதா,இல்லையா என்பது தெரியாமலே!

அடுத்த முறை உரையாடும் வாய்ப்பிருப்பின், பகிர்ந்துகொள்வோம்.

இறுதியாக,

நண்பர் அரங்கசாமிக்கு பிரத்யேக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம், யானை டாக்டர் இலவசப் பிரதிக்காக.

சிவவாக்கியன்(சக்தி)
1826 மீடியா/99769 515 85

அன்புள்ள சக்தி

நன்றி. ஈரோட்டில் நண்பர்களை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக இருந்தது. உரையாடலில் எப்போதும் நிகழ்வது ஒன்றுண்டு. சேர்ந்து நீந்தும்போது கைகால்கள் தொட்டுக்கொள்வதுபோல நம் மனங்கள் ஆழத்தில் உரசிக்கொள்வதுதான். அந்தரங்கமாக நம்மை நாம் கண்டுகொள்ளும் தருணம் அது.

அந்த வகையான நிமிடங்கள் சில வாய்த்தன

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

இன்னும் வெளிவர முடியாக் கனவென இறுக்குகிறது உங்களை
நேரில் கண்ட அந்த நிமிடங்கள். ஈரோட்டில் அறம் சிறுகதைத்தொகுப்பு
வெளியீட்டு விழா நவம்பர் 26 சனிக்கிழமை மாலை நடந்த பொழுது முதன் முதலாக
உங்களைப் பார்த்தேன். பேசுவதற்குப் பெரும் தயக்கம் .பெரும் பிரமாண்டத்தின்
முன் நிற்கிற சிறு துகளென என்னை உணர்ந்ததால் குரல் ஏதோ நீண்டகாலம்
படுக்கையிலிருந்து மீண்டவனுடையது போல மாறிப் போனது. உண்மையில் உங்களோடு
பேசியது நெடும் கனவோ என்ற அச்சம் இப்பொழுது வரை தொடர்கிறது.உங்களோடு
பேசவும் விவாதிக்கவும் நிறைய உள்ளன . இந்தத் தமிழ் தட்டச்சுதான் பெரும்
தடை …மீண்டும் வருவேன்

ம.கோவர்த்தனன்,ஈரோடு

அன்புள்ள கோவர்த்தனன்

பகலில் காலைமுதலே அறையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். நாம் அப்போது சந்தித்திருந்தால் இன்னும் நிறையவே பேசியிருக்கலாம். நிகழ்ச்சிக்குப்பின் சந்திப்பு என்று சொல்லமுடியாது. ஒரு மெல்லிய அறிமுகம் அவ்வளவுதான்.

ஈரோடு என்னுடைய ஊர். வந்துகொண்டேதான் இருப்பேன். அனேகமாக இனி ஜனவரி 13 தேதி வாக்கில் வருவேன் என நினைக்கிறேன்

சந்திப்போம்

ஜெ

அன்புள்ள ஜெ…

எந்தத் தொழிலிலும் வாரிசுகளை பார்க்க முடிகிறது, அரசியல், சினிமா, வணிகம், மருத்துவம் இப்படி.. அப்பாவோ, அம்மாவோ இருக்கும் துறையில் தாங்களும் நுழைந்து அவர்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களை விட சிறப்பாகவோ செயல்படும் வாரிசுகளைப் பார்க்க முடிகிறது…. இலக்கியத்துறை தவிர.. எனக்குத் தெரிந்து பிரபல இலக்கியவாதிகள் குழந்தைகள் இலக்கியத்துக்கு வருவதே இல்லை, அப்படியே வந்தாலும் அவர்கள் அளவுக்குப் புகழ் பெறுவதில்லை. இது தமிழில் மட்டுமா, இல்லை உலக அளவிலுமா? ஏன் என்று நினைக்கிறீர்கள்?

பி.கு: ஈரோடு புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்களில் அஜிதனைப் பார்த்தபோது, இவரும் அப்பா மாதிரி கதை எழுதுவாரோ என்று தோன்றியதால் எழுந்த கேள்வி இது…

நன்றி..

அன்புடன்
வெங்கட்
http://venpu.blogspot.com/

அன்புள்ள வெங்கட்

ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். எல்லாக் கலையிலும் பெரும்பகுதியைக் கற்பிக்க முடிகிறது. ஆகவே இசைக்கலைஞர்களின் பிள்ளைகள் இசைக்கலைஞர்களாக முடிகிறது. இலக்கியத்தைக் கற்பிக்கவே முடிவதில்லை. ஆகவே வாரிசுகளை இலக்கியவாதிகளாக ஆக்கமுடிவதில்லை என்று. ஆகவே இலக்கியம் கலை அல்ல, அது தரிசனம் என்று.

அஜிதன் நானறிந்த மகத்தான வாசகர்களில் ஒருவன். இன்றைய தகவல்தொடர்பு யுகம் அளிக்கும் வசதிகளை அனுபவிக்கும் தலைமுறை. தேவையான சிறந்த நூல்களை மட்டுமே வாசிக்க வாய்ப்பிருக்கிறது, அவன் வயதில் நானெல்லாம் நூல்களுக்காகத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். பத்து குப்பைகளுக்கு ஒரு நல்லநூல் என்று கிடைத்துவந்தது. மிகச்சிறந்த வழிகாட்டுதல் அம்மாவிடமிருந்து கிடைத்தபோதிலும், மிகச்சிறந்த நூலகங்களால் சூழப்பட்டிருந்தபோதிலும் வேறு வழியிருக்கவில்லை.

அஜிதனின் ஆங்கில நடையும் தமிழ் நடையும் மிகச்சிறப்பானவை. துல்லியமான சொல்லாட்சியும் மெல்லிய வேடிக்கையும் கொண்டவை. ஆனால் அவனுக்கு இலக்கியம் இரண்டாம்பட்சமே. அவனுடைய ஆர்வம் சூழியல் சார்ந்தே உள்ளது. அத்துறையில் எதிர்காலத்தில் சிறந்த ஆக்கங்களை எழுதக்கூடும்.

ஜெ


ஈரோடு படங்கள்


ஈரோட்டிலே

ஊழலுக்கு எதிராக ஈரோட்டில்…

கல்யாணப்பாறை

பருவமழைப்பயணம்

முந்தைய கட்டுரைஉறைகாலம்
அடுத்த கட்டுரைகாந்தியும் கடவுளும்