இலட்சியவாதம் அழிகிறதா?

images

 

எரிக் ஹாப்ஸ்பாமின் வரலாற்றுச்சிந்தனைகள் பதினேழாம்நூற்றாண்டு ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதும் போக்கு கொண்டவை. மானுட இலட்சியவாதத்தின் ஓர் உச்சகட்ட தருணம் அது என்றே ஹாப்ஸ்பாம் எண்ணுகிறார். இந்த விஷயத்தில் எப்போதும் அவருடன் நான் ஒத்துப்போவதனால் அவர் எனக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று சொல்லலாம்.

 

ஐரோப்பிய அறிவொளியுகம் தொடங்கிய அந்தக்காலகட்டத்தில்தான ஐரோப்பா உலகளாவிய காலனியாதிக்கத்தை உருவாக்கியது. தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமான இனப்படுகொலைகள் வழியாக ஒட்டுமொத்த பழங்குடிகளையும் அழித்தொழித்தது. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் முழுமையான சுரண்டலதிகாரத்தை உருவாக்கிக்கொண்டு அதன் வழியாக மாபெரும் பஞ்சங்களை உருவாக்கி கோடிக்கணக்கான மக்களை சாகடித்தது. அவ்வாறு பஞ்சங்களில் இடம்பெயர்ந்த மக்களை அடிமைகளாக்கிக்கொண்டு நியூசிலாந்து முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரை உலகளாவிய அடிமைச்சமூகத்தை உருவாக்கியது.சுரண்டலுக்கும் அடிமைத்தனத்துக்கும் அறிவியலைப் பயன்படுத்துவது தொடக்கம்கொண்ட காலகட்டம் அது.

ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை விமர்சிக்கும் வரலாற்றாய்வாளர்கள் அறிவொளிக்காலம் என்பது ஐரோப்பாவின் அப்பட்டமான உலகச் சுரண்டலை சமாதானப்படுத்திக்கொள்ள ஐரோப்பாவின் மேல்மட்ட போலி அறிவுஜீவிகள் உருவாக்கிக்கொண்ட அசட்டு இலட்சியவாதம்தான் அது என்று சொல்வது வழக்கம். அந்த இலட்சியவாதம் மூலம் ஐரோப்பாவால் சுரண்டப்பட்ட நாடுகளில் ஒரு நடுத்தர வர்க்க சிந்தனை மட்டுமே உருவாகியது என்பார்கள்.

அந்த வாதங்களை எப்போதும் எரிக் ஹாம்ஸ்பாம் நிராகரிப்பது வழக்கம். ’அறிவொளிகொண்ட சாரவாதிகள்’ [Enlightened absolutists ]என பொதுவாக ஹாப்ஸ்பாம் குறிப்பிடும் நவ உலக இலட்சியவாதிகள் அனைவருக்குமே முதல் தூண்டுதலாக இருந்தது ஐரோப்பிய அறிவொளிக்காலமே. கம்யூனிஸ்டுகள் , தாராளவாதிகள், தனிமனிதசுதந்திரவாதிகள், இன்றைய பசுமையியலாளர்கள் என அனைவருமே அறிவொளிக்கால இலட்சியவாத ஊற்றில் இருந்தே தங்கள் தொடக்கநீரை மொண்டு கொண்டிருக்கிறார்கள். மனித குலத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு இலட்சிவாத அலை உருவாக அறிவொளிக்காலம் மிகமுக்கியமான பங்களிப்பாற்றியிருக்கிறதென்று எப்போதுமே வாதிடுகிறார்.

அதை நிராகரிக்கும் பின்நவீனத்துவச் சிந்தனைகளை ‘இன்றைய மோஸ்தர்’ என்றும் ‘ஆழமற்ற எதிர்வாதங்கள்’ என்றும் நிராகரிக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எவையும் அதனுடன் ஒப்பிடத்தக்க எந்த சாதகமான விளைவையும் உலகளாவிய தளத்தில் உருவாக்கியதில்லை. பெரும்பாலும் அவை வெறும் கல்வித்துறை சலசலப்புகள் மட்டுமே. இலட்சியவாத அம்சம் இல்லாத சிந்தனைகள் சமூக அளவில் சலனங்களை உருவாக்குவதில்லை என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

அறிவொளிக்காலச் சிந்தனைகளுக்கு அன்று உருவாகி வந்த காலனியாதிக்கம் அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது. உலகளாவ விரிந்த ஐரோப்பிய ஆதிக்கமே உலகளாவிய ஐரோப்பியப் பார்வை உருவாவதற்கும் காரணம். உலக மொழிகளின் இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளில் கிடைத்தது உலகளாவிய விவாதம் ஒன்றை உருவாக்க உதவியது. நவீன அறிவியல் உருவாக்கிய செய்தித்தொடர்பு அந்தச் சிந்தனை வளர ப்ரவ வழிவகுத்தது. அந்த ஊடகங்கள் வழியாக அன்றைய ஐரோப்பா செய்துவந்த சுரண்டல் வெளிப்பட்டபோது அதற்கு எதிராக எழுந்த ஐரோப்பிய மனசாட்சியின் குரல் என்றுகூட அறிவொளிக்காலத்தைச் சொல்லலாம்.

பெரும்பாலும் அந்த வரலாற்றுப்புள்ளியில் இருந்து சிந்திக்க ஆரம்பிக்கும் எரிக் ஹாம்ஸ்பாம் இப்போது அந்த இலட்சியவாதம் ஒரு தொடர் சரிவில் இருப்பதாக நினைக்கிறார். அவரது ’வரலாற்றைப்பற்றி’ என்ற நூலில் உள்ள ‘காட்டுமிராண்டித்தனம், ஒரு பயனர் கையேடு’ என்ற கட்டுரையில் உலகளாவிய தளத்தில் இலட்சியவாதம் வீழ்ச்சி அடைந்து அந்த இடத்தில் கட்டற்ற வன்முறைப்போக்கு, வன்முறைச்சிந்தனை ஆதிக்கம் கொள்வதாகச் சொல்கிறார். 1994ல் ஆக்ஸ்போர்டில் செய்த ஆம்னஸ்டி பேருரை இது.

இந்த உரையில் என்னை சட்டென்று அசைத்த ஒரு சொல்லாட்சி ‘வெர்சேல்ஸ் உடன்படிக்கை முதல் ஹிரோஷிமா வரை’ என்பது. என் வரலாற்றுப்பிரக்ஞையில் ஒரு புரளலை உருவாக்கியது அது. 1789 ல் பிரெஞ்சுப்புரட்சியின் வெர்சேல்ஸ் உடன்படிக்கை ‘சமத்துவம் சகோதரத்துவம் ‘ என்னும் ஆதார மதிப்பீடுகளின் முதல் அதிகாரபூர்வ பிரகடனமாக அமைந்தது. உண்மையில் அது உலகுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். அந்த முரசொலி உலகமெங்கும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் ஆழ்ந்து கிடந்த சமூகங்களை எழுப்பியது. நூற்றுக்கணக்கான தேசங்களில் சாதாரண மனிதர்கள் அரசியலுரிமைக்காக கிளர்ந்தெழ அது அறைகூவியது. ஜனநாயகம் என்ற விழுமியம் உலகம் முழுக்க சென்று சேர வழிவகுத்தது. இன்றைய உலகின் இடது வலது இலட்சியவாதங்கள் இரண்டுமே அதையே முதல்புள்ளியாகக் கொண்டவை

ஹிரோஷிமா? இருநூறாண்டுக்காலம் நீடித்த அந்த உலகளாவிய அலையின் முழுமையான முடிவுப்புள்ளியா அது? பிரெஞ்சுப்புரட்சி மானுட மேன்மைக்கான ஒரு சாசனம் என்றால் மானுடக்கீழ்மைக்கான ஒரு ஆவணமா ஹிரோஷிமா? இவ்விரு புள்ளிகள் நடுவே என்ன நடந்தது? ஒரு மாபெரும் பின்வாங்கல் என்று எரிக் ஹாப்ஸ்பாம் குறிப்பிடுகிறார். மானுட இலட்சியவாதமும் அறிவியலும் மனிதனைக்கைவிட்ட புள்ளிதான் ஹிரோஷிமா.

இரு உலகப்போர்களில் நேரடியான வன்முறை மூலம் பலகோடிபேர் இறந்தார்கள். போர்களை ஒட்டிய வதைமுகாம்களில், பஞ்சங்களில் மேலும் சிலகோடிபேர் இறந்தார்கள். ஒருவேளை கணக்கிட்டுப்பார்த்தால் அதன்பின் அந்த அளவுக்கு நேரடியான வன்முறையும் அழிவும் உலகளாவிய தளத்தில் உருவாகவில்லை என்று சொல்லலாம். ஆனால் எரிக் ஹாப்ஸ்பாமின் நோக்கில் அதன்பின்பு சிந்தனை அளவில் மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதையே காட்டுமிராண்டித்தனத்தின் வளர்ச்சி என்று அவர் கருதுகிறார்.

அறிவொளிக்காலத்திலும் அதன்பின் உலகப்போர்களிலும் வன்முறை இருந்தாலும் வன்முறைக்கு எதிரான இலட்சியவாதம் ஓங்கியிருந்தது. மானுடசமத்துவம் அடிப்படைநீதி ஆகியவற்றுக்கான பெரும் கனவு உலகமெங்கும் இருந்தது. ஆனால் ஐம்பதுகளுக்குப் பின்னர் படிப்படியாக அவை அழிந்தன. பதிலுக்கு நேரடியான வன்முறையின் அதிகாரம் மட்டுமே ஒரே மதிப்பீடாக உலகசிந்தனையில் வேரூன்றியது. அந்த அதிகாரத்திற்காக செய்யப்படும் எதுவும் நியாயமே என்றாகியது. அரசியல் ஆய்வாளர்கள், சமூகசிந்தனையாளர்கள் அதிகாரத்தை மட்டுமே உண்மையான சமூகஆற்றலாகக் கருதலானார்கள். இது ஒரு பெரும் வீழ்ச்சி என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

எரிக் ஹாப்ஸ்பாம் இந்த மாறுதலை நிகழ்த்திய பல கூறுகளைத் தொட்டுச்செல்கிறார். ஒன்று பனிப்போர். பனிப்போரின் இருபக்கமும் தங்களை நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கில் அதிகாரத்தையே நியாயப்படுத்தின. ருஷ்யாவின் முதலாளித்துவ வெறுப்பும் சரி அமெரிக்காவில் ஒலித்த Better dead than red போன்ற கோஷங்களும் சரி அடிப்படையில் இலட்சியவாதத்துக்கு எதிரானவையே.

இரண்டாவதாக எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுவது தீவிரவாதம் என்ற உலகளாவிய நிகழ்வை. எரிக் ஹாப்ஸ்பாம் 1960களில் கியூப புரட்சியை ஒட்டி உருவான ஒன்றாகவே இதை கருதுகிறார். அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஆதிக்க அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் செய்ய சாத்தியமான போர் இது. ஆனால் மெல்லமெல்ல அரசுகளை அச்சுறுத்தும் நிழல் அரசுகளை அமைப்பதாக இது இன்று மாறிவிட்டிருக்கிறது. உலகமெங்கும் தொடர்ந்து மானுட அழிவுகளைத்தீவிரவாதம் உருவாக்கி வருகிறது.

மூன்றாவதாக எரிக் ஹாப்ஸ்பாம் மதப்போர்களை சொல்கிறார். உலகளாவிய தளத்தில் இன்று நிகழ்ந்துவரும் வன்முறைகள் பெரும்பாலும் மதச்சார்பு கொண்டவை. அல்ஜீரியாவின் பிரெஞ்சுப்படை தளபதி ஒருவர் சொன்ன வரியை மேற்கோள் காட்டுகிறார் எரிக் ஹாப்ஸ்பாம்– ‘உண்மையில் போர் என்றால் அது மதப்போர் மட்டுமே’ இந்த ஐம்பதாண்டுக்காலத்தில் அரேபியாவில் ஆப்ரிக்காவில் நிகழ்ந்த மாபெரும் மதப்போர்களால் லட்சக்கணக்கானவர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்

மதப்போர்கள் தீவிரவாதத்தைத் துணைகொள்ளும்போது ஒருபோதும் முடியாமல் நீளும் உள்நாட்டுப்போர்கள் உருவாகின்றன. அரசு வன்முறை அதற்கு எதிராக உச்சம் கொள்கிறது. பல்லாயிரம்பேர் நோயிலும் பஞ்சத்திலும் செத்து அழிகிறார்கள். கூடவே மானுட மதிப்பீடுகளும் அழிகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் போர்களிலும் குண்டு வெடிப்புகளிலும் கூட்டம்கூட்டமாகக் கொல்லப்படும்போது அதைப் போரின் தவிர்க்கமுடியாத பக்கவிளைவு என்று கூறும் மனநிலை உருவாகி வந்துவிட்டிருக்கிறது.

ஐரோப்பாவை அரசியல்புரட்சிகள் உலுக்கிய பதினெட்டாம்நூற்றாண்டில் பல இலட்சியவாத மதிப்பீடுகள் இருந்தன என்பதை எரிக் ஹாப்ஸ்பாம் கவனப்படுத்துகிறார். ருஷ்யாவின் ஜார் இரண்டாம் அலக்ஸாண்டரைக் கொன்ற நரோத்னாயா வோல்யா குழுவினரின் அரசியல் அறிக்கையில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் கலந்துகொள்ளாதவர்களை நடுநிலையாளர்களாகவே கருதவேண்டும், அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்ற அறிவிப்பு இருந்தது. ஐரோப்பியப் புரட்சிகளை எல்லாம் முற்போக்கானவையாகக் கண்ட ப்ரெடெரிக் எங்கல்ஸ் ஐரிஷ் புரட்சியாளர்கள் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் குண்டுவைத்து அப்பாவிகளைக் கொன்றதைக் கடுமையாகக் கண்டித்தார் என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

ஆனால் இன்று அந்த இலட்சியவாதங்கள் அர்த்தமிழந்துவிட்டன; அரசுகள் தரப்பிலும் அரசுக்கு எதிரானவர்களின் தரப்பிலும். இன்று பிரம்மாண்டமான அழிவுகள்கூட மக்களின் அறவுணர்ச்சியைத் தீண்டுவதில்லை. பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியவை சிறிய நிகழ்ச்சிகள் என்பதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். தளபதி டிரைஃபஸ் துரோகிகளால் தண்டிக்கப்பட்டபோது பிரான்சில் எழுந்த கொந்தளிப்பை எடுத்துக்காட்டும் ஹாப்ஸ்பாம் இன்று அநீதிகள், வன்முறைகளை அன்றாட நிகழ்வுகளாக நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்.

இன்று நேரடியாக வன்முறை ஒப்புநோக்க குறைந்திருப்பதற்குக் காரணம் வன்முறைக்கு எதிரான இலட்சியவாதம் அல்ல. சமூக நெறிமுறைகளும் அல்ல. அதிகாரச் சமநிலைகளே. அவை நிரந்தரமானவையே அல்ல என்று எரிக் ஹாப்ஸ்பாம் நினைக்கிறார்.

எரிக் ஹாப்ஸ்பாம் காட்டும் சித்திரத்தை வாசித்துவிட்டு இரவில் நெடுநேரம் சிந்தனைசெய்துகொண்டிருந்தேன். ஒருபக்கம் அது ஒரு பழைய பாணி இடதுசாரியின் மிகைப்படுத்தப்பட்ட கவலை என்று தோன்றியது. நேற்றை விட இன்று வன்முறை குறைந்திருப்பதே ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனால் உலகளவில் மானுட இலட்சியவாதம் முனைமழுங்கி வருகிறதா என்று கேட்டால் ஆம் என்ற எண்ணம்தான் எழுகிறது. இன்று வணிகமானாலும் அரசியலானாலும் எந்த ஒரு தளத்திலும் அறமதிப்பீடுகளை விட ஆற்றலுக்கே முதலிடம் கொடுக்கும் போக்கு உருவாகி வந்திருக்கிறது. இலட்சியவாதத்தை விட நடைமுறைவாதமே அறிவார்ந்ததாக எண்ணப்படுகிறது.

இருபதாம்நூற்றாண்டின் தொடக்கம் வரை உலகளாவிய புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் அனைவருமே இலட்சியவாதிகளாக இருந்தார்கள். இன்று பெரும்பாலும் அப்படி அல்ல. நடைமுறைவாதம் சார்ந்த ’பயனுள்ள’ சிந்தனைகளை முன்வைப்பவர்களுக்கு முதல்முக்கியத்துவம் உள்ளது. பின்நவீனத்துவ அலையைச் சேர்ந்த நவீன மொழியியல் , குறியியல் சிந்தனையாளர்களைப்போல அவநம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள் அவ்வப்போது கவனம்பெற்று மறைந்துகொண்டிருக்கிறார்கள் . எரிக் ஹாப்ஸ்பாம் சொல்வது உண்மைதானா?

[On History. Eric Hobsbawm. ABACUS London]

மறுபிரசுரம்/ முத்ற்பிரசுரம் Dec 4, 2011

எரிக் ஹாப்ஸ்பாம் -வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை

வரலாற்றெழுத்தில் நான்கு மாற்றங்கள்

 

இடதுசாரிகளிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?

உலகத்தொழிலாளர்களே


மார்க்ஸியம் இன்று தேவையா?

 

கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாத கருதுகோள்கள்

 

மார்க்ஸ் கண்ட இந்தியா

 

வெறுப்புடன் உரையாடுதல்

சேகுவேராவும் காந்தியும்

 

மாவோயிச வன்முறை ஒன்றுஇரண்டுமூன்று நான்கு

 

இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா? 

கலைச்சொற்களை அறிய


1.கலைச்சொற்கள்


கலைச்சொற்களை அறிய ஒரு தளம்

 

 

 

 

 

முந்தைய கட்டுரைபுதுமொழியில்…. கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40