தமிழர்மேளம்

அன்புள்ள ஜெயமோகன்,

தவில் குறித்த என்னுடைய கட்டுரையை உங்கள் இணையதளத்தில் வெளியிட்டதற்கு நன்றி.

இதில் நான் எழுதாத ஒரு விசயம் என்னவென்றால் நாகசுரத்தையும் தவிலையும் தமிழர்கள் கைகழுவி விட்டதைத்தான். தமிழர்களின் பெயராலும், மொழியாலும் உரத்த குரலில், பொருளற்ற வாதங்களைப் பேசி அதிகாரத்தைக் கைபிடித்தவர்கள் இக் கலைகளின் புனரமைப்புக்கு உருப்படியான எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. கோயில்களிலும் அரசவைகளிலும் இருந்து இருந்து சபாக்களுக்குக் குடியேறிய கலைகள் பாட்டும் நாட்டியமும். நாட்டியம் ஒரு காலகட்டத்தில் தேவதாசிகளால் ஆடப்பட்டது. ஆனால் அதைப் பிராமணர்கள் சுவீகரித்துக் கொண்டு அதற்கு ஒரு சமூக அந்தஸ்தை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இன்று ஒரு பெண்ணுக்கு பரதநாட்டியம் ஆடத் தெரிந்திருந்தால் அது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. பாட்டைப் பற்றியோ, இதர இசைக்கருவிகள் குறித்தோ சொல்ல வேண்டியதே இல்லை. பெரும் கல்வி நிலையங்களில் பயின்று, பெரிய தகுதிகளுடன் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கக் கூடிய பொறுப்புகளை விட்டு விட்டுக்கூட ஏராளமான பிராமண இளைஞர்கள் முழு நேரமாக இசைத்துறைக்கு வந்திருக்கிறார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்..

ஆனால் நாகசுரம் தவிலின் நிலை என்ன? குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே இந்த இரு கருவிகளையும் வாசிக்கிறார்கள். நம் தென்மாவட்டங்களில் கம்பர் சாதியினர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுண்ணாம்பு பறையர் சாதியினரும், காவேரி நாவிதன் என்று அழைக்கப்படும் சாதியினரும் நாகசுரம் தவில் வாசிக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது நையாண்டி மேளம்தான். நிறைய தலித் இனத்தவர்களும் நையாண்டி மேளம் வாசி்க்கிறார்கள். படையாச்சிகள் சிலரும் இத்தொழிலை செய்கின்றனர். முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சட்டநாதனின் தந்தை நாகசுரக் கலைஞர்தான். சோழ மண்டலத்தில் இசை வேளாளர்களே இத்துறையின் வல்லுனர்கள். தஞ்சை மாவட்டத்துக்காரர்களிடம் நாகசுரம் தவில் வாசிப்பதில் யாரும் போட்டி போட முடியாது. அது ஒரு காலத்தில் இக் கலைஞர்கள் செழித்து வளர்ந்த ஒரு வனம். எந்த ஊரைச் சொன்னாலும் அந்த ஊரில் ஒரு மேதை இருந்திருக்கிறார். சென்னை போன்ற தொண்டை மண்டலத்தில் நாவிதர் சாதியினரே இக்கருவிகளை வாசிக்கின்றனர்.

அறுபதுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் இக் கலைக்கு ஒரு புத்துணர்வைத் தந்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்குக் கலைகள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது. என்னுடைய அசைக்க முடியாத கருத்து என்னவெனில் பிராமணரல்லாதவர்களுக்கு இசை குறித்த அக்கறையே இல்லை. சென்னை சபாக்களில் தெலுங்கும் சமஸ்கிருதமும் பாடப்படுகிறது. அதை ஒழித்தே கட்டுவோம் என்று புறப்பட்டார்கள். இவர்களால் அதையும் ஒழிக்க முடியவில்லை. தமிழை வாழ வைக்கவும் முடியவில்லை. இன்று நிறைய தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் கச்சேரிக்கு வருபவர்களில் 10 விழுக்காடு பேர் கூட பிராமணர்களல்லாதவர்கள் இல்லை. பிராமணர்கள் சென்னை முழுக்க முழுக்க சபைகளை நிறுவி விட்டார்கள். அவர்கள் எங்கெல்லாம் குடி போகிறார்களோ அங்கே ஒரு சபை முளைத்து விடும். ஆலந்தூரில் இருக்கிறது. வேளச்சேரியில் இருக்கிறது. மடிப்பாக்கத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ் இசைச் சங்கம் பூகோள ரீதியாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களும் நிறுவனங்களும் உள்ள பாரி முனையில் ஒதுங்கி விட்டது.

நாகசுரம் தவில் தமிழர்களின் கலை. நிறையப் பேரை இசைப் பக்கம் ஈர்த்தது இந்த இரு வாத்தியங்களும்தான். ஒன்றும் தெரியாதவன் கூட மேளம் கேட்பதில் உற்சாகம் காட்டுவான். ஒரு மாபெரும் இசைகேட்கும் கூட்டத்தை நாம் உருவாக்கியிருக்க முடியும். அதை செய்யவில்லை. மாணவர் நகலகம் நா. அருணாசலம் அவர்கள் சென்னையில் நாகசுர விழாக்களை நடத்தினார். ஆனால் கடை விரித்தார் கொள்வார் இல்லை என்ற நிலைமைதான் ஏற்பட்டது. தற்போது பல சபைகள் தனியாக நாகசுர இசை நடத்துகிறார்கள். நல்ல வரவேற்பு. மறுபடியும் அங்கு வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள்தான். தமிழன் சினிமாவில் விழுந்து கிடக்கிறான் என்று பொதுவான குற்றச்சாட்டை நான் சுமத்தவில்லை. ஒய் திஸ் கொலைவெறி இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுகிறது என்றால் எம்தமிழரின் இசை இரசனையை என்னவென்பேன்?

கோலப்பன்
நாகர்கோயில்

அன்புள்ள கோலப்பன்,

ஒரு கலாச்சார இயக்கம் அந்த கலாச்சாரக்கூறுகளுடன் தொடர்பில்லாத அரசியல்வாதிகளால் கையாளப்பட்டால் என்னாகும் என்பதற்கான உதாரணமாகவே நான் தமிழிசை இயக்கத்தைக் காண்கிறேன். உரிய வரலாற்று நியாயங்களுடன் மிகுந்த படைப்பூக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது. நம்மூரைச் சேர்ந்த லட்சுமணபிள்ளை முதலான பல மேதைகளின் பங்களிப்பு நிகழ்ந்த களம். ஆனால் ஒரு கட்டத்தில் அது எளிய பிராமண எதிர்ப்பாக திரிக்கப்பட்டது. பிராமண எதிர்ப்பு அரசியல்வாதிகளின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. அவர்களுக்கு இசையில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. அவர்களும் சரி அவர்களின் வாரிசுகளும் சரி இசையை கற்கவில்லை.

ஆகவே இன்று தமிழகம் முழுக்க உள்ள தமிழிசைச்சங்கங்கள் வெறும் கட்டிடங்களாகவும் சடங்குசம்பிரதாயங்களாக நிகழும் நிகழ்ச்சிகளாகவும் எஞ்சுகின்றன. தமிழிசை விழாக்களில் இசையை விட வசைதான் அதிகமாக நிகழ்கிறது. சில தமிழிசை விழாக்களில் சென்று அமர்ந்து நொந்து எழுந்தோடி வந்திருக்கிறேன். இன்று தமிழிசைச் சங்கங்கள் கொஞ்சமாவது செயல்பட்டுக்கொண்டிருப்பதே தமிழிசை பாடும் பிராமண பாடகர்களால்தான். பாட்டைக்கேட்க வருபவர்களும் அவர்களே. தமிழின் மரபிசையை பிராமணரல்லாத தமிழர்கள் முழுமையாகவே கைவிட்டுவிட்டிருக்கிறார்கள்.

தஞ்சை, அதிலும் கீழத்தஞ்சை, இசையின் விளைநிலம். திருவாரூரில் என் மாமனாரின் குடும்ப திருமணத்துக்குச் சென்றிருந்தேன். நாதஸ்வரக்காரர் சில்லறை சினிமாப்பாட்டுகளாகவே வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் ‘நாத தனுமனுசம்’ என ஆரம்பித்தார். நன்றாக வாசிக்கிறாரே என நினைத்தேன். ஆனால் உடனே இருவர் பாய்ந்துசென்று அவரிடம் சினிமாப்பாடல் வாசிக்கச் சொன்னார்கள். அவர் அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு ‘பார்த்தமுதல்நாளே…’ என வாசிக்க ஆரம்பித்தார். சென்ற தலைமுறை வரை இசையை அன்றாட வாழ்க்கையாகக் கொண்டிருந்தவர்கள். இதுதான் இன்றைய நிலை.

செவ்வியல்கலைகள் சாதியடையாளத்துடன் இருக்கையில் அவற்றை பயில அச்சாதியில் இருந்தே ஆட்கள் வரவேண்டியிருக்கிறது. பரத நாட்டியம் சாதியடையாளத்தில் இருந்து மீட்கப்பட்டமையால்தான் வாழ்கிறது. அது தமிழ் மேளமான நாதஸ்வரத்துக்கும் தவிலுக்கும் நிகழவேண்டும். அப்படி நிகழவேண்டுமென்றால் இசைக்கான ஊதியம் இன்னும் அதிகரிக்கவேண்டும். ருக்மிணிதேவி போல எவராவது அதற்காக இறங்கி அதன் சாதியடையாளத்தை அழித்து அதை மீட்கவேண்டும்

ஜெ

தங்கமே தமிழ்ப்பாட்டு பாடு-நாஞ்சில்நாடன்


கர்ணாமிர்த சாகரம்

தமிழிசை மீண்டும் கடிதங்கள்
காழ்ப்பே வரலாறாக

இசை, மீண்டும் சில கடிதங்கள்

தமிழிசையா?

இசை, கடிதங்கள்

இசை நீடிக்கும் விவாதம்

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகார்ல் சகனும் அரவிந்தரும்
அடுத்த கட்டுரைஇந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்