இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய திரு.ஜெமோ. அவர்களுக்கு,

இன்று உங்கள் வலை தளத்தில் “ இந்து மதம்,சமஸ்கிருதம், பிராமணர்” என்ற தலைப்பில் நீங்கள் திரு.செல்வம் அவர்களுக்கு எழுதிய பதில் கட்டுரை,மிகுந்த ஆழமான,ஆராய்ச்சி பூர்வமான, அர்த்தமுள்ள கருத்துக்களுடன் அருமையாக இருந்தது.

உண்மையில் இதைப் படித்தவுடன்,நானும் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற பெருமித உணர்வு ஏற்பட்டது.வைணவ பிராமணன் என்ற (உண்மையான பிராமணனா நான் என்று எனக்கு தெரியாது ) முறையில் என்னால் உறுதிபடக் கூறமுடியும் இன்றும் எங்கள் வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தப்பாடல்களுக்குத்தான் முன்னுரிமை உள்ளது.தெய்வத்திற்கு அடுத்தபடியாக (ஏன் சில சமயங்களில் மேலாகவே ) போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களில் பெரும்பான்மையோர் அந்தணர்களே அல்ல என்பது தாங்களும் அறிந்ததே.இந்தக்கால சூழ்நிலையில், தாங்கள் தான் பெரிய அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு இந்து மதத்தை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில்,நீங்கள் ஒருவர் மட்டும் தனி ஆளாக நின்று விளக்கம் அளிப்பதற்கு உங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நன்றி கூறுகிறேன்.தொடரட்டும் உங்கள் பணி என்றும்.

என்றும் அன்புடன்,
அ.சேஷகிரி

அன்புள்ள சேஷகிரி

ஆம், நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இந்துக்களிலேயே ஒருசாராருக்கு சம்ஸ்கிருத மோகம் காரணமாகத் தமிழ்மீது இளக்காரம் இருந்தது என்பதையும் மறுக்கமுடியாது. அறியாமையின் விளைவான அந்தக் கூற்றுக்களே அந்த அவதூறுகள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன இல்லையா?

ஜெ

ஜெ,

சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல.

கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார்.

சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். நான் சொல்கிற இந்தக் கருத்துகளை மறுத்துச் சொல்கிற தெளிவு யாருக்காவது உண்டா? உண்டு என்றால் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.(http://www.thamilworld.com/forum/index.php?showtopic=595)

இது உண்மையோ இல்லையோ ஆனால் சமஸ்கிருதம் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.

கருணாநிதி ஒரு விகடன் பேட்டியில் அவர் தந்தைக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று கூறுகிறார்.

சமஸ்கிருதத்துக்குத் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏற்பட்டது போன்ற தற்கால உதாரணம் கர்னாடக இசை. முற்காலத்தில் அனைத்து மக்களும் பாடிய ரசித்த கர்னாடக இசை இப்போது 95% பிராமணர்களால் செய்யப்படுகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் கர்நாடக இசை பிராமண இசை அதற்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரச்சாரம் ஆரம்பித்து விடும்.

ராஜேஷ் கோவிந்தராஜன்

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம் ,

தங்களின் ,சமஸ்க்ருதம் ,ஹிந்து மதம் பதில் மிகத் தெளிவாக இருந்தது . பொதுமை மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பெரும்பாலும் சாதியைத் தாண்டிப் பேசுவது மிகவும் குறைவு என நானும் பலமுறை கண்டிருக்கிறேன் .எங்கள் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான திருமணங்கள் பிராமணர்களை வைத்து நடந்து வந்தது .கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தமிழ்க் குழுக்கள் பிராமண எதிர்ப்புப் பிரசாரத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்தினார்கள் . தற்பொழுது பல திருமணங்கள் தெய்வத் தீந்தமிழ் முறைப்படி என்று அழைப்பிதழில் போடுவது அதிகரித்து வருகிறது. தெய்வத் தீந்தமிழ் முறை என்று திருமண முறை இருந்ததா .தாங்கள் விளக்க வேண்டும் .

என் சொந்த அனுபவம் , எங்கள் பகுதியில் பிரபலமான செஞ்சேரிமலை மந்தரகிரி வேலாயுதசாமி திருக்கோவில், இங்கு பிராமணர்களால் பூஜை செய்யப்படுகிறது .கோவிலில் ஓதப்படும் சமஸ்க்ருத மந்த்ரங்கள் புரியாவிட்டாலும் கூட மனதில் தன்னை மறந்த நிலையை நான் பலமுறை உணர்ந்துள்ளேன் .நண்பர்களும் இதுபோல உணர்ந்துள்ளார்கள் .இறைவனை வழிபட மொழி ஒரு காரணம் அல்ல என்பது என் எண்ணம் .மேலும் பிராமணர்களை வைத்து சடங்கு என்பது அவரவர்களுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் இருப்பதால் செய்கிறார்கள் .பிராமணர்களிலேய பிராமணர் என்பதற்காக யாரையும் அழைப்பதில்லை .அவர் நன்றாக பூஜை மற்றும் யாகங்களை நடத்துகிறாரா பார்த்து என்று அவரவர் வசதிக்கேற்ப அழைக்கிறார்கள் என நான் எண்ணுகிறேன்.தாங்கள் இது பற்றியும் விளக்க வேண்டும்.பிழை இருந்தால் மன்னிக்கவும் .

சி.மாணிக்கம் மந்த்ராசலம் ,
செஞ்சேரிமலை.

அன்புள்ள மாணிக்கம் அவர்களுக்கு,

தமிழகமெங்கும் இன்று பல சாதியினர் தங்கள் திருமணங்களையும் சடங்குகளையும் பிராமணர்களைக்கொண்டு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் எல்லா சாதிக்கும் அவர்களுக்குரிய புரோகிதர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது இல்லை. சடங்குகள் மனித வாழ்க்கைக்குத் தேவையாகின்றன. அச்சடங்குகளை முறையாகச்செய்பவர்கள் லௌகீக வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்களாக ஆகிறார்கள். அந்த பிராமணர் அவருக்கு தட்சிணை அளித்து சடங்குக்கு அழைப்பவர் மேல் கருத்தியல்செல்வாக்கு செலுத்துகிறார் என்பதெல்லாம் அபத்தம்.

இந்த வகையான வாதங்களெல்லாம் ஒரு பத்தாயிரம் பேருக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வெளியே இந்துக்கள் அவர்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அதே பாணியில் காலத்துக்கேற்ற மாறுதல்களுடன் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கூச்சல்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் உரையாடல்புள்ளிகளே இல்லை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். தங்கள் பதிவுகளை ஓராண்டுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். சிறப்பாக இருக்கிறது,
கடைசியாக நீங்கள் செல்வம் அவர்களுக்கு கொடுத்த விரிவான விளக்கம் அருமையாக இருந்தது.

ராமகிருஷ்ணன் டி எஸ்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நன்றி

சொல்லிச்சொல்லி சில பதில்கள் எனக்கே தெளிவாக உள்ளன போலும்

ஜெ

அன்பின் ஜெ…

என்னுடைய மின்னஞ்சலை மதித்துத் தங்கள் பதிலை வலைத்தளத்தில் இட்டமைக்கு நன்றி.

மிக விரிவானதொரு விளக்கம். இன்னும் நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் நீங்களே கட்டுரையில் கூறியுள்ளபடி இன்னும் நிறைய விடயங்களைத் தெரிந்து கொண்டு பின்பு உங்களிடம் அவை குறித்து கேட்கிறேன்.

மேலும் இத்தகைய விவாதங்களை நான் கருத்துப் பரிமாற்றமாகவே பார்க்கிறேன். வெற்றி / தோல்வியாக அல்ல என்பதையும் கூற ஆசைப்படுகிறேன்..

இது எல்லாவற்றையும் விட.. மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் எளியேனாகிய என் கேள்விகளை மதித்து உங்கள் கருத்துகளை வெளியிட்ட அந்த ஜனநாயகம் மிகவும் பிடித்திருந்தது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

மீண்டும் நன்றி

முந்தைய கட்டுரைதமிழர்மேளம்
அடுத்த கட்டுரைஇன்றைய புராணங்கள்