பேரா.நா.தர்மராஜன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

 

உங்கள் கட்டுரையை வாசிக்கும் வரை நா தர்மராஜன் அவர்களின் மறு பக்கங்களைப்பற்றிய எந்த சித்திரமும் என் மனதில் இல்லை. நான் அவரது மொழியாக்கங்களை படித்திருக்கிறேன். இன்னும் என்ன முக்கியம் என்றால் நான் என் P.U.C. படிப்பை RDM கல்லூரி சிவகங்கையில்தான் முடித்தேன். அங்கே எனக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த ஆசிரியர் பேராசிரியர் தர்மராஜனேதான்.

 

ராஜ சுந்தற்றாஜன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

நா.தர்மராஜன் அவர்களைப்பற்றிய உங்கள் கட்டுரை சோவியத் நூல்கள் கிடைத்த அந்த பொற்காலத்தைப்பற்றிய நினைவுகூர்தலாகவும் இருந்தது. நீங்கல் சொன்ன அந்த தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் புத்தகம் எனக்கு மிகவும் முக்கியமானது. அதுதான் என் வாசிப்பையே மாற்றியது. பத்தாம் வகுப்பு எழுதிவிட்டு கோடைவிடுமுறைக்கு திருச்சுழியில் என் மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது  அவரது அலமாராவில் அந்த அழகான புத்தகத்தைப் பார்த்தேன். அத்தனை அழகான ஒரு புத்தகத்தை நான் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அதில் நான் வாசித்த இவான் இலியிச்சின் மரணம் என்ற சிறுகதை என்னை உலுக்கி விட்டது. அது வரை நான் வாசித்ததெல்லாம் ராஜேஷ்ச்குமார் வகையறாதான். அத்துடன் பாலகுமாரன் கதைகள். ஸ்டெல்லாபுரூஸ் கதைகள். அவையெல்லாமே வெறும் கற்பனை என்ற என்ணத்தை உருவாக்கி விட்டது அந்தக் கதை. வாழ்க்கையைப் பற்றி நான் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்ததே அந்தக் குறுநாவலை வாசித்த பிறகுதான். அதன் மூலம் நான் மேலும் சிறுகதைகளையும் நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கை இன்றைய வடிவத்தை அடைவதற்கு அந்த புத்தகம் அளித்த உதவியை நான் மறக்க முடியாது. பேராசிரியர் அவர்களுக்கு என்னுடைய நன்றி

 

ஹரிராஜன் சிவகுமார்

 

 

[மொழியாக்கம்]

 

அன்புள்ள ஜெ சார்,

 

பேராசிரியர் நா.தர்மராஜனைப்பற்றி தாங்கள் எழுதிய கட்டுரையினை சாதாரணமாக ஆரம்பித்தாலும் எனக்கு அது ரொம்ப பழைய நினைவுகளுக்கு கொண்டுசென்றது. அதிலும் ஓவியன் இகோரின் கதை, பேரழகி வசீலிசா ஆகிய இரண்டு புஸ்தகங்களும் என் மனசுக்குள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. என் சின்னவயசில் கிராமத்தில் படிக்கக் கிடைப்பதெல்லாம் ராணி தேவி இம்மாத்ரியான பத்திரிகைகள்தான். அதன் பிறகு நான் சிவசங்கரி வாசந்தி ஆகியோரின் நாவல்களில் பைத்தியமாகிக் கிடந்தேன். முன்னெல்லாம் ஒருகாலத்தில் சிவசங்கரியை நேரிலே சந்திக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணீயிருந்தேன்.

 

அப்போதுதான் நான் என் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போனேன். அப்போது அவளுக்கு பள்ளியில் பரிசாகக் கிடைத்த பேரழகி வசீலிசா என்ற புஸ்தகத்தின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நான் அந்த புஸ்தகத்தை ஆசையாக படித்தேன். அது குழந்தைகளுக்கான கதை. நான் அப்போதெல்லாம் பிளஸ்டு முடித்திருந்தேன். ஆனாலும் எனக்கு அந்த புஸ்தகங்கள் மிகவும் பிடித்திருந்தன. அந்த புஸ்தகத்தை கையிலிருந்து கீழே வைக்கவே மனதில்லை. எந்த அளவுக்கு படித்திருப்பேன் என்றே சொல்ல முடியாது. கிழியக்கிழிய படிப்பது என்பார்களே அது மாதிரி. அந்த புஸ்தகத்தில் உள்ள படங்களை நான் எம்பிராய்டரி செய்து மாட்டியிருந்தன்.

 

அதன்பின் எங்கே சோவியத் ரஷ்யா புஸ்தகம் கிடைத்தாலு, வாசித்துவிடுவேன். ஏராளமான நல்ல புஸ்தகங்களை வாசித்தேன். டால்ஸ்டாய் கதைகளை வாசித்தேன். அப்போது அந்தக்கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. பெண்களைப்பற்றி தப்பாக எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அலக்ஸாண்டர் குப்ரின் என்பவர் எழுதிய செம்மணி வளையல் என்ற புஸ்தகத்தில் உள்ள கதைகள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அதில் உள்ள எல்லா கதைகளும் கவிதைகள் போல இருக்கும். இவான் துக்ககனீவ் என்பவரின் கதைகளையும் படித்தேன். மூன்று காதல்கதைகள் என்று பெயர். அந்தப் பெயர் ஒருமாதிரி இருக்கிறது என்று நான் அதற்கு அட்டை போட்டு வாசித்தது ஞபகத்தில் இருக்கிறது.

 

நா.தர்மராஜன் சார் மொழிபெயர்த்த என்ன புஸ்தகங்களை வாசித்தேன் என்று தெரியவில்லை. மொழிபெயர்ப்பாளரின் பெயர்களை எல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை. அப்புரம் அதை பர்ப்பதும் கிடையாது. ஆனால் கண்டிப்பாக நிறைய புஸ்தகங்களை படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

 

இப்படியெல்லாம்தான் நான் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே குறிப்புகள் அப்புறம் புளிமரத்தின் கதை. ஜானகிராமனின் கொட்டுமேளம் என்ற சிறுகதைத்தொகுப்பு அழகிரிசாமி எழுதிய அன்பளிப்பு என்ற கதைத்தொகுப்பு இதெல்லாம் எனக்கு அப்போது பெரிய ஆச்சரியத்தை அளித்த கதைகள். அதேபோல வண்னநிலவனின் தர்மம் என்ற தொகுப்பு. வண்ணதாசனின் தோட்டத்துக்கு வெளியே சில பூக்கள் என்ற தொகுப்பு

 

அதற்கும் பிறகு மும்பைக்கு வந்தேன். கல்யாணமாகிவிட்டது. அதன்பிறகுதான் நான் நாஞ்சில்நாடனின் தலைகீழ் விகிதங்கள் படித்தேன். உங்களுடைய ரப்பர் நாவலை முதலில் வாசித்தேன். அதன்பிறகு மண் என்ற புஸ்தகம். அதன் அட்டையில் ஒரு இலையின் அப்டம் இருக்கும். அதில் உள்ள நிழலாட்டம் என்ற குறுநாவல் எனக்கு பெரிய பிரமையை கொடுத்தது. அதன்பிறகுதான் நான் உங்களுடைய தீவிர வாசகியும் ரசிகையும் ஆனேன்

 

என்னென்னமோ எழுதிவிட்டேன். நிறைய வாசிக்க வேண்டும் போல இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தினால் இப்போது வாசிப்பது குறைவு என்றாலும் உங்கள் புஸ்தகங்கள் எல்லாவற்றையும் வாசித்தேன். கொற்றவை மட்டும் கொஞ்சம் கூட புரியவில்லை. சோவியத் ரஷ்யாவில் இருந்து மொழிபெயர்ப்பு செய்த நா.தர்மராஜன் போன்ற பெரியவர்கள் என்னைப்போல பலருக்குக் கண்ணைத்திறந்து விட்டிருக்கிறார்கள். பேராசிரியர் நா.தர்மராஜன் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று காமாட்சி அம்மனை பிராத்தனை செய்கிறேன்

 

லலிதா சிவராம்

 

 

பேரா.நா.தர்மராஜன்

மொழியாக்கம்:கடிதங்கள்

மொழியாக்கம்:கடிதங்கள்

இலக்கியம்,அரசியல்:கடிதங்கள்

இந்திய இலக்கியம்:கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைகெ.பாலமுருகன்
அடுத்த கட்டுரைகுடும்ப எழுத்தாளர்