கடிதங்கள்

அன்புள்ள ஜெ

கடைசியில் கேட்டே விடுகிறேன். அந்த கடைசி முகம் என்ன? எந்த முகத்தை ஓர் ஆண் உயிரைக்கொடுத்தாவது பார்ப்பான்? கதையிலே எங்காவது க்ளூ இருக்கிறதா என பலமுறை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை

செம்மணி அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்

கதையில் க்ளூ இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும்

பத்தாயிரம் ரூபாய் டிடியுடன் சுயவிலாசமிட்ட கடிதம் அனுப்புபவர்களுக்கு பதில் அளிக்கப்படும்

ஜெ

அன்புள்ள ஜெ, நலமா

அகந்தொட்டு புறந்தொட்டு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டாள் ‘கொற்றவை’. இருமுறை வாசித்த பின்னும் இன்னும் வாசிக்க என்னை அழைக்கிறாள், பலமுறை என் உணர்வோடு கலந்தும் விட்டாள் நம் மூதன்னை.கடைசி முறையாக நான் அவளை வாசித்தது பெப்ரவரி 2011 இல், பிறகு என்னால் வேறு ஒரு நூலை வாசிக்கும் எண்ணத்தையே எண்ண இயலவில்லை. ஏதோ உங்களிடம் சொல்லத் தோன்றியது.

சக்திவேல் பழனிச்சாமி

அன்புள்ள சக்திவேல்

நன்றி

நானும் கொஞ்சநாள் கொற்றவை மனநிலையில் இருந்தேன். அடுத்த நாவலுக்காக இருபது திரில்லர்களை வாசித்து மனநிலையை மொழியை மாற்றிக்கொண்டேன்

ஜெ

அன்புள்ள திரு.ஜெயமோகன்

நலமா? இன்றுதான் உலோகம் நாவல் படித்து முடித்தேன். இந்த நாவல் எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் இதை த்ரில்லிங் நாவல் என்று சொல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. இது அப்படி ஒன்றும்
த்ரில்லிங்கை எனக்குத் தரவில்லை. எல்லாம் முன்கூட்டியே சரியாக ஊகிக்கும்படிதானே உள்ளது?

இப்படிக்கு
பா.மாரியப்பன்

அன்புள்ள மாரியப்பன்

சஸ்பென்ஸாக எதுவுமே இருக்கக்கூடாது என்பதனால்தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு நாவல் செல்கிறது. இது சஸ்பென்ஸ் திரில்லர் அல்ல.

வேண்டுமென்றால் சைக்காலஜிக்கல் திரில்லர் எனலாம். மனம்தான் இங்கே துப்பறியப்படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைஇந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்
அடுத்த கட்டுரைகடிதங்கள்