மாபெரும் பயணம்

பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கடியும் உண்டு .தூக்கம் வராமல் பிசுக்கு படிந்த மெத்தை மீது படுத்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான். தூக்கம் வராத ந்டு இரவுகளில் சிந்தனைகள் மிகவும் பயமுறுத்துகின்றன .வழக்கமாக நாம் தூங்கிய பிறகு உடலில் இருந்து கிளம்பி இரவில் உலாவும் நாமறியாத ஏதோ பேய் ஒன்றை விழித்திருப்பதனால் கண்டுவிட நேர்வது போல . அரை மயக்கம் கூடிவந்த போது திடாரென்று ராணுவம் நடந்துசெல்லும் ஒலி கேட்டது.இரும்பு அடிப்பாகமுள்ள எண்ணற்ற பூட்ஸுகள் ம்ண்ணை மிதித்து மிதித்துச் சென்றன . அவன் தன் உடம்பு உதறி உதறி நடுங்குவதை உணர்ந்தான் .மூச்சுதிணறியது.என்னென்னவோ அபத்த சிந்தனைகள் ,அபத்தம் என்று நன்கு அறிந்திருந்தபோதும் கூட அவனை பதற அடித்தபடி கடந்து சென்றன.எந்த ராணுவம் அது ?இந்திய ராணுவமா ?இலங்கை ராணுவமா ? …களநடையொலி நெருங்கி வந்தது.பிறகு அது அவன் மீது ஏறியது , பூட்ஸ்கால்கள் மார்பில் நடந்து நடந்து சென்றன .அவ்வளவு கனமாக , நிதானமான தாளத்துடன் ‘ ‘ சார் !சார்! சார்! ‘ ‘ என்று குழறிய குரலில் கெஞ்சியபடி விழித்துக் கொண்டான் . வாயிலிருந்து வழிந்த எச்சிலைத் துடைத்துக் கொண்டு, அறையை ஒன்றும் புரியாமல் பார்ந்தான். மெல்ல நினைவு வந்ததும் அந்த ஒலி வேறுபட்டது.வெட்கத்துடன் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான், ஒரு மணியாகியிருந்தது.இந்த நேரத்தில் என்ன ஓசை ?

மறுகணம் அவன் வியப்பாக எண்ணிக்கொண்டான், அவனுக்கு போலீஸ் ஞாபகமே வரவில்லை. ஒருகாலத்தில் சாதாரணமான காலடியோசை, கதவுதட்டும் ஓசை கூட அவனுக்கு போலீஸின் ஞாபகத்தைதான் ஏற்படுத்தும். அனேகமாக ஒவ்வொரு நாளும் அவனை தட்டியெழுப்பும் கைத்தடியின் அடியை கனவில் வாங்கியபடித்தான் விழித்தெழுந்திருக்கிறான் .இன்று வெகுதூரம் வந்துவிட்டிருக்கிறான்,எல்லாம் வேறு எவருடையவோ நினைவுகளாக மாறித்தெரியும் அளவுக்கு . கனவில் கூட அவை வராத அளவுக்கு . அவனுக்கு அந்த விடுதலையுணர்வு கூடவே எப்போதும் போல பெருமூச்சையும் கிளர்த்தியது

எழுந்து பால்கனிக்கு வந்து உளுத்த கைப்பிடியை பற்றியபடி நின்று கீழே பார்ந்தான் .லாரியொன்றின் அடியில் விளக்கொளி தெரிந்தது. அப்பால் சாலையில் நல்ல இருட்டில் கருமை கொந்தளிப்பது போல அசைவுகள் ,ஓசை. கண் சற்று கூர்ந்த போது பச்சை மின்மினிக் கூட்டம் போல கண்கள் தெரிந்தன.பிறகு களைத்து சீறும் மூச்சுக்கள்.

பொள்ளாச்சியில் இருந்து எர்ணாகுளத்துக்கு போகும் அடிமாட்டு மந்தைகள் . சில வருடம் முன்பு கேரளத்தில் ஒருவகை காய்ச்சல் பரவியபோது இது தான் காரணம் என்று தினசரிகள் பக்கம் பக்கமாக எழுதின . தினம் அரை லட்சம் மாடுகள் வரை வந்து சேர்வதாக கணக்கு. ஆந்திரா ,கர்நாடகா ,தமிழ்நாடு அனைத்துபகுதிகளில் இருந்தும் வரும் பலிகளுக்கு பொள்ளாச்சி தான் ஒரே வாசல். ந்ின்று கொண்டே இருந்தான் , ஓசை முடியவேயில்லை .எத்தனை இருக்கும், பத்தாயிரத்துக்குக் குறையாது. கடலோசை போல ஒரு கண்மூடிய கணம் பிரமை தந்தது. பிறகு ஓய்ந்தது. மெளன வெறுமையில் சூட்சும ஒலி மண்டைக்குள் பின்னும் தொடர்ந்தது.

பொள்ளாச்சி சந்தை முதல் எர்ணாகுளம் வரையிலான சாலை தலைமறைவு வாழ்வுக்கு ஏற்றது என்று முன்பே தோழர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். சொல்லப்போனால் சுதந்திரபோராட்ட காலத்திலேயே அது கண்டடையப்பட்டு விட்டது. ராவ்ஜி நான்கு வருடம் அச்சாலையிலேயே பெண்டுலம் மாதிரி அப்போது வாழ்ந்திருக்கிறார்.பிறகு புரட்சி இயக்கத்தை உருவாக்கிய பிறகும் அவரது வாழ்வு அங்குதான் பெரும்பாலும் நடந்துள்ளது. புதிய முகங்கள் சற்றும் ஆர்வமெழுப்பாத , கவனிக்கப்படாத அம்ம்ாதிரி ஒரு சூழல் பாம்பே தாணே சாலையில்தான் உண்டு என்பார். ஆனால் கடைசியில் அங்குதான் கண்டுபிடிக்கபட்டார்.மோதலில் சுடப்பட்டார். அதற்கு காரணம் உண்மையில் சாலையல்ல . சாலையோர விபச்சாரி அம்மிணியின் மகளுடன் அவருக்கு ஏற்பட்ட உறவு. அவரது பையில் அவனது விலாசம் இருந்தது . அவனை போலீஸ் ஆலுவாவில் வைத்து கைது செய்து …

மேற்கொண்டு யோசிக்க மறுத்து மூளை கிரீச்சிட்டது . திரும்பச் சென்று படுத்துக் கொண்டான் . மெத்தையின் அழுக்கு நாற்றம் இம்முறை ஆறுதலாக இருந்தது ,மனித உடலின் வாடைபோல. யாரோ ஒருவர் கூட இருப்பது போல…அவன் தன் மனதைப்பற்றி யோசித்தான். நடந்த எதையும் யோசிக்க அது உடன்படுவதேயில்லை . எல்லா பதிவுகளையும் வலுக்கட்டயமாக கலந்து தெளிவற்றதாக அடித்து விட்டது . அதே சமயம் தன்னை காஷ்மீர் போராளியாகவும் , இலங்கைப் புரட்சியாளனாகவும் சித்தரித்து பகற்கனவுகளில் ஆழ்கிறது… காமம் கூட அதனுடன் கலந்தே வரமுடியும் . போராளியின் தீவிரத்தை காதலிக்கும் அழகிகள் ,பயத்தின் நிழலில் உறவு. சுயபோகம் செய்யும்போது ஒருமுறை தோன்றியது

காமமல்ல, வன்முறைதான் தன்னில் உணர்ச்சியை கிளர்த்துகிறது என்று …

இன்றிரவு தூக்கமில்லை . தூக்கம் கலைந்து விட்டால் பிறகு மீட்பேயில்லை. நல்லவேளை நான் யாரையும் கொல்லவில்லை .செத்தவனின் பார்வை இரவுகளில் இமைக்காது தொடர கோபாலன் தற்கொலை செய்துகொண்டான். கவிதை எழுதுபவன் . அவனுடன் தான் இதே பொள்ளாச்சி எர்ணாகுளம் சாலையில் முதல் முறை நடந்தான் . உருக்கள் சுழித்தோடும் நதிக்கு இடம் விட்டு இருளில் ஒதுங்கிநின்றார்கள் ….

இரவில் தான் ஓட்டிச் செல்வது. விடியும் முன்பே எர்ணாகுளம் வந்துவிடும். நல்ல இருட்டில் முன்னால் செல்லும் ஒரு பெரிய காளையின் கொம்பில் நீண்ட டயர் பந்தத்தைக் கட்டி எரிய விட்டு , அந்தக் காளையை மட்டும் கயிறுகட்டி இழுத்துச் செல்வார்கள்.மற்ற உருக்களூக்கு கண்ணுக்கெட்டிய தூரம் அந்த ஒளி தவிர வேறு ஒளியே தெரிவதில்லை .ஆகவே அவை அதை அனிச்சையாக பின் தொடர்கின்றன. கடைசியில் செல்பவை முன்பே செல்பவற்றை மட்டுமே அறிகின்றன . எப்போதாவது வழிகாட்டி மாடு தடுமாறினால் பாதையெங்கும் தடுமாறும் குளம்புச் சப்தங்களும் கனைப்புகளும் நிரம்பும்.ஒரு முறை ஒழுங்கு தவறினால் மீண்டும் அதை உருவாக்குவது எளிய விஷயமல்ல . எனவே தலைவனுக்கு முன்னால் எப்போதும் பச்சைப் புல்லும் ,பின்னால் சுழலும் சாட்டையும் இருந்துகொண்டே இருக்கும். கசாப்புக்கட்டை போல கிழக்கு விடியும் போது எர்ணாகுளம் அருகே ஒரு பெரிய ஏரிக்கரை வந்து விடும், அதுதான் தாவளம் , சில்லறைச் சந்தை.

வழியில் ஏராளமான செக்போஸ்டுகள் உண்டு. முதலில் மொத்தமாக அனுமதி தரப்படும் . கடைசியில் ஏரிக்கரையில் ஒரு ஓடுவேய்ந்த பழைய சுகாதார அலுவலகம் . அங்கு மருத்துவப் பணியாளர்கள் ,கட்டணமும் மேலதிகமும் பெற்றுக் கொண்டு காதுகளில் முத்திரை குத்துவார்கள் . கொல்லபடுவதற்கு முற்றிலும் தகுதியானது என்று . எரியும் கனலில் சிவப்பாக பழுத்துகிடக்கும் அந்த இரும்பு முத்திரைகளுக்கு பல நூற்றாண்டுப் பழக்கம் இருக்கலாம். வெள்ளைக்காரன் நிறுவிய சாவடி அது. எர்ணாகுளம் அருகே கொச்சி துறைமுகம் பிறந்த போது பரங்கி மாலுமிகளுக்காக செய்யபட்ட ஏற்பாடு . இந்த உருக்களின் மூதாதையரும் அவ்வழியெ சென்று அங்கு பலியாகியிருக்கலாம் . இன்னும் காலம் செல்லும்போது இவற்றின் ஜீன்களில் இச்செய்தி குடியேறி அவையும் சைபீரிய நாரைகளைப்போல தள்ளாமை வந்ததும் ீதானாகவே இந்த வழியே நடந்து இங்கு வர ஆரம்பிக்கலாம்.அவை காணும் பூமி அவற்றின் வாக்களிக்கப்பட்ட சொற்கம் தான். பசுமையின் அலையெழுச்சிகளே மண்ணென ஆன வெளி ..நீர்நிலைகள், புல்கறை மணக்கும் காற்று…

தமிழ்நாட்டில் இவை மேயும் பொட்டல்களை எண்ணிக்கொண்டான்.தவிட்டுநிறபூமி மெல்லச் சுழல பேருந்தின் சன்னல் வழியாக வந்து மோதும் வெங்காற்று. அங்கு இவை எப்போதும் அமைதியற்று காணப்படும் . அப்பால் ,எப்போதுமே அப்பால் , கானல் நீரும் காணாப்பசுமையும் .சற்று மேய்ந்து விட்டு தலைதூக்கி அம்பேய் என ஏங்குகிறது. ஒட்டிய வயிற்றில் விலா எலும்புகள் அசைய சில சமயம் ஒலியின்றி அதிர்கிறது. முளைகட்டியடிக்கப்பட்ட தறியில் சுற்றிச் சுற்றி வருகிறது. வட்டம்தான் எத்தனை குரூரமான வடிவம் !அது மனிதனை முழுமையாகத் தோற்கடிக்கும் முடிவின்மையின் குறியீடல்லவா ? தறியில்லையேல் காட்டுப் பசுக்களைப்போல உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்டு அவை தங்கள் பசுமையைதேடி செல்லக்கூடியதூரம் முழுக்க அங்கு அழகிய வட்டங்களாக மாறிவிடுகிறது . ஆனால் வீட்டு மாடுகள் கட்டவிழ்த்து விட்டாலும் எங்கும் போவது இல்லை. அவற்றின் அசைவுகளில் எப்போதும் நுகமோ மூக்குகயிறோ இருந்தபடியே தான் இருக்கிறது .

இப்போது உருக்கூட்டம் எத்தனைதூரம் சென்றிருக்கும் ? மனம் நொடியில் அவற்றை சென்று தொடுகிற விந்தையை எண்ணிக்கொண்டான் . ஒருமுறை அவற்றின் பின்னால் நடந்ததுண்டு , அப்போது அவசரநிலைக் காலம் . ரோந்து பலமாக இருதது . பாதைநிறைக்கும் உருக்களை மறித்து ஜீப்பை நிறுத்தி பரிசோதிக்க முடியாது.அவற்றிின் வேகம் ஆச்சரியமூட்டுவது . இருட்டில் அனிச்சையான வேகம். ஒரு மாடு வாழ்வில் எத்தனைதூரம் நடந்திருக்கும் ? அதன் கால்களில் ஒரு மீட்டர் பொருத்திப் பார்க்க வேண்டும் . தேசங்களை வலம் வரும் தூரம் . குட்டிகள் நடப்பதேயில்லை,துள்ளிகொண்டேயிருக்கின்றன . அதற்காகவே பிறந்ததுபோல. அய்யோ மறந்துவிட்டேனே என்று நினைவுகூர்ந்து மீண்டும் துள்ளல்

ஆனால் இந்த யாத்திரையில் பெரும்பலானவை வயோதிக மாடுகள் .அல்லது நோயுற்றவை . வழியில் தளர்ந்து விழும் மாடுகளை சற்று இளமையான மாடுகளுடன் சேர்த்துக் கட்டுகிறார்கள் . நடக்கும் மாடுகள் மட்டும்தான் கடைசித் தேர்வில் வென்று முத்திரையை பெறமுடியும் . சில சமயம் சில பிதாமகர்கள் இளம் தோள்களில் தொங்கி நிலம் தொடாது வந்து நிற்பதுண்டு. கூட்ட சந்தடியில் மேலுமொருமுறை இறக்க அனுமதிபெற்றுச் செல்வதும் சாதாரணமல்ல. செத்த மாட்டை ஏதும் செய்ய முடியாது.அதற்காக பயணம் நிற்க முடியாது . செத்த மாட்டை உரிமையாளன் ஆங்காரத்துடன் சாட்டையால் மாறி மாறி அடிப்பான் .ஓங்கி உதைப்பான் .பிணம் மெல்லிய புன்னகையுடன் மெல்ல அசைந்தபடி கிடக்கும் . அதை அங்கேயே விற்றுத்தள்ள வேண்டும். வாங்கிக் கொள்ள கூட்டத்துக்குப் பின்னாலேயே தோல் வியாபாரிகள் வருவார்கள். கறி எடைபோட்டு வாங்க புளியமரத்தடியில் தராசு ஏந்திய ஓட்டல்காரர்களுமுண்டு.

எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது . உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஓலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும் . பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும் . ஆள்க்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்றே ? என வினவும் .தண்ணீர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும்.அசைபோட்டுக் கொண்டு யோக மோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சுவிடும். கொம்பு தோளில் படாமல் நாசூக்காக திரும்பி பார்க்கும். நாசியில் மிளகாய்ப் பொடி ஏற்றி அவற்றை கிளப்பவேண்டும்.

ஏரிக்கரையோரம் நீர்சிகிட்சை நிபுணர்கள் உண்டு. காளை ,பசுவுக்கு பத்து ரூபாய். எருமை இனத்துக்கு இருபது. முதலில் பொட்டல்களில் காய்ந்து வரண்டு வரும் உருவுக்கு குடிக்க ஏரித் தண்ணீர் காட்டப்படுகிறது . வெறியுடன் இழுத்து அது மூச்சுத்திணற எழும் போது ஓர் உதவியாளன் அதன் முகத்தைத் தூக்கி ,வாயைத் திறந்து ,நாக்கைப் பிடித்து ஒதுக்கிக்கொள்வான். இடைவெளி வழியாக இன்னொரு உதவியாளன் குடம் குடமாக நீரை விடுவான் . நிபுணர் அதன் வயிற்றையும் விலாவையும் உரிய் முறையில் அழுத்தி இடம் செய்விப்பார்.கடைசியில் குதத்தை பற்றி சற்று பிதுக்கும்போது நீர் பீச்சிட வேண்டும்.எலும்பு புடைத்து நலிந்த விலா அப்போது மெருகேறியிருக்கும் . தோல் பளபளக்கும் . அந்த ஜென்மத்தில் குடிக்காமல் விட்ட எல்லா நீரும் உள்ளே சென்றுவிட்டிருக்கும். பீப்பாய் போல அது தள்ளாடும்

அவனும் கோபாலனும் அந்த கசாப்புசாலைகளில் ஒன்றை பார்க்க விரும்பிச் சென்றிருந்தார்கள். பெரிய புளியம் கட்டையில் உதிரம் வழிய வழிய மாமிசம் செக்கச்சிவப்பாக துண்டுபட்டது, குவியலாகியது . ‘ ‘ என்ன நிறம்! ‘ ‘ என்றான் கோபாலன். அவன் கண்கள் விழித்திருந்தன. ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காக இவன் ‘ ‘கில்லட்டின் போல இருக்கிறது இல்லையா தோழர் ? ‘ ‘ என்றான். கோபாலன் அவனை அர்த்தமில்லாத விழிகளுடன் பார்த்த பிறகு திரும்பிக் கொண்டான்.

உயிருடன் உடல்வடிவில் இருக்கும்போது இருந்ததைவிட முற்றிலும் வித்தியாசமாக் இருந்தன ஒவ்வொன்றும் . ஒரு கூடையில் குவிக்கப்பட்டிருந்த காதுகள் மீன்கள் போல இருந்தன. மாடுகள் குளத்தில் குளிக்கும்போது அவை நீந்துவதைக் கண்ட நினைவு வந்தது . அவை உண்மையில் மீன்கள் தானோ , காற்றில்கூட அவை நீந்திக் கொண்டுதானே இருந்தன .கோபாலனிடம் அதை சொல்ல விரும்பினான், அது பைத்தியக்காரத் தனமான எண்ணம்தான் ,ஆனால் அதில் ஏதோ ஒரு புரிந்துகொள்ளமுடியாத ரகசியம் இருப்பதாகத் தோன்றியது . ஆனால் கோபாலன் இக உலகிலேயே இல்லை . தணல் பிரதிபலிப்பதுபோல இருந்தது அவன் முகம்

திரும்பும்போது கோபாலன் சொன்னான், ‘ ‘ கொல்றது எவ்வளவு பயங்கரமான அனுபவம் இல்லையா தோழர் ? ‘ . அவன் ‘ஆமா ‘ என்றான் .கோபாலன் அவனது சித்தாந்தப் படிப்புக்கு மேலும் தத்துவார்த்தமாக ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தான் .

‘ஆனா எல்லா உச்சகட்ட சந்தோஷத்திலயும் அந்த பயங்கரம் இருக்கு இல்லையா ? ‘ ‘ என்றான் கோபாலன் . அவன் தலையசைத்தான்.

எழுந்து சட்டையை போட்டுகொண்டு கிளம்பினான் . சாலையில் பகல்வெயில் காய்ந்த வெம்மையில் பச்சைச் சாணியின் வீச்சம் இருந்தது.அவன் அன்று கசாப்புசாலையில் பலகை மீது கண்ட முகங்களை நினைவுகூர்ந்தான். கொம்புகளின் அமைப்புக்கு ஏற்ப சாய்ந்தும் சரிந்தும் இருந்து அவை உற்று பார்த்தன . கண்களில் உயிருள்ள மாடுகளில் இல்லாத ஒரு பாவம் . கோயில் சிற்பங்களில் உள்ளது போல எதையோ சொல்ல துடித்து உறைந்தவை .மிக முக்கியமான எதையோ கடைசியில் அவை கண்டடைந்து விட்டிருக்கவேண்டும்.

அவன் தூரத்தில் விளக்கொளியை கண்டான் . அவனுக்கு நன்கு தெரிந்த ஒளிதான். கோபாலனின் நினைவு வந்தால் தளும்பும் வரை குடித்தால்தான் அவன் சிறிதேனும் தூங்க முடியும்.

***

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2001 திண்ணை இணைய இதழ் ]

முந்தைய கட்டுரைகித்தாரில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3