எஸ்.கெ பொற்றேகாட் எழுதிய ஒரு தேசத்தின்றெ கதா[ தமிழில் ஒரு கிராமத்தின் கதை. சாகித்ய அக்காதமி. சி ஏ பாலன் மொழியாக்கம்] நூலில் ஒரு சம்பவம். இரவில் ஸ்ரீதரன் ஒரு தெருவில் நின்றிருக்கிறான். பக்கத்து பங்களாவில் இருந்து டயர் எரியும் வாசனை. அய்யோ என்று பதறினால் கூட இருந்த ரிக்ஷாக்காரர் சிரித்தபடி ”ஆகா டாக்டர் சாகிபுக்கு மூடு வரும் நேரமாச்சே என்கிறார்”
அதை அவர் விளக்குகிறார். டாக்டர் சின்னப்பையனாக இருந்தபோது முதமுதலாக உறவு வைத்துக்கொண்டது ஒரு நரிக்குறத்தியிடம். அவள் அப்போது டயரை எரித்து சமையல்செய்துகொண்டிருந்தாள். இவர் மனதில் அந்த வாசனையும் அனுபவமும் ஆழமாக தங்கிவிட்டது. பின்னாளில் கொஞ்சம் டயர் எரியும் வாசனை வந்தால் நன்றாக மூட் செட் ஆக ஆரம்பித்தது. வயதானபின் டயர் எரியும் வாடை இல்லாமல் முடியாது என்றாகிவிட்டது. அது ஒருவகை நறுமணம்.
கல்பற்றா நாராயணனின் கவிதைவரி
அனைவருக்குமே இருக்கும்
பிடித்த ஒரு துர்வாசனை
பிடித்த ஒரு அவலட்சணம்
நறுமணங்களையும் அழகையும் விட மேலானதாக
சுகா எழுதிய வாசம் கட்டுரைக்கு வாசகர் எதிர்வினையாக எழுதியது