இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்

அன்பின் ஜெ.

சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன்.

“சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்” என்கிறீர்கள்.

இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் ‘அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு ஏன், இன்றும் கூட சில இந்துக் கோவில்களில் எல்லா சாதியினரும் நுழைய முடியாது. ஆக மதத்தில், சாதியில் பிரிவினையைக் கடைப்பிடிக்கும் இந்து மதம் மொழியில் மட்டும் பொதுமையை எப்படிக் கடைப்பிடிக்கும் ?

’மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன’ என்கிறீர்கள் .சமஸ்கிருதம் அவ்வளவு நல்ல மொழியாக இருந்தால் ஏன் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடிய ஆறுமுகசாமி அய்யா அடி வாங்கினார். சமஸ்கிருதம் தேவ பாஷையாகவும் ,தமிழ் நீச பாஷையாகவும் ஆனது எப்படி?

அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல’ என்கிறீர்கள்.

பிறகு ஏன் அந்த மொழி மற்றவர்களால் பேசவோ, புழங்கவோ படவில்லை. பிராமணர் அல்லாதார் வேதம் கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற ஸ்லோகம் எதற்கு?

பின்வரும் இன்றைய நிஜமான நிலை மாறுபட்டதாக இருக்கிறதே ஏன் ?

1. அனைத்துக் கோவில்களிலும் சமஸ்கிருதம் தான் முதன்மை மொழி. தமிழில் போனால் போகிறது என்று சில பாடல்களைப் பாடுகிறார்கள்.

2. பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர் ஆக்கும் எண்ணம் இன்று வரை நிறைவேறவில்லை. அவர்கள் இந்தத் தொழிலைக் கற்று விட்டு இன்று சும்மா இருக்கின்றனர்.

3. திருமணம், காதுகுத்து, புதுமனை புகும் விழா எனத் தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளும் பிராமணர்களால், நமக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில்தான் நடத்தப்படுகின்றன[ இதற்கு நானும் விதி விலக்கு இல்லை]

4. எந்தக் கோவில்களில் கூட்டம் வருகிறதோ அங்கு உள்ள சாமிகளுக்கு மட்டும் ஸ்லோகங்கள் உருவாக்கப்பட்டு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது.உ.ம் …திருப்பதி, சபரிமலை, திருச்செந்தூர்…..

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏகப்பட்ட சிறுதெய்வங்கள் பலபேருக்குக் குலதெய்வங்களாக உள்ளன. ஆனால் சமஸ்கிருதத்தின் கருணைப் பார்வை அந்த தெய்வங்களுக்கு எல்லாம் ஏன் கிடைக்க வில்லை?

மேலே உள்ள கருத்துக்களில் ஏதேனும் பிழை இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

என்னுடைய இந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு

அன்புடன்

செல்வம்

அன்புள்ள செல்வம்,

மன்னிக்கவும், நான் ஏற்கனவே விரிவாக எழுதிய குறிப்புகளில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் உள்ளன. அவற்றை கவனிக்காமல் மீண்டும் அதே கேள்விகளையே கேட்கிறீர்கள். இந்த வகையான கவனக்குறைவு உங்களிடம் இருப்பதில்இருந்தே உங்களுடைய மேலே சொல்லப்பட்ட எல்லா வினாக்களும் வந்துள்ளன. அவை பொதுவாக சூழலில் இருந்து வந்தடைந்த மனப்பதிவுகளே ஒழிய கொஞ்சமேனும் ஆராய்ந்து நோக்கப்பட்டவை அல்ல.

இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள். பத்ரிநாத் முதல் கன்யாகுமரி வரை பல்வேறு இனம்சார்ந்த, மொழி சார்ந்த,சாதி சார்ந்த கோடிக்கணக்கான மக்களால் இந்துமதவழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்ற கண்கூடான உண்மையையாவது மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வேறுபடுவதையும் மறுக்கமாட்டீர்கள்.

இந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான சில வழிபாட்டு முறைகளைத் தன் மையத்தில் இந்துமதம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது, அது இந்தியா முழுக்கப் பொதுமொழியாக விளங்கிய சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். அதில் என்ன பிழை? அப்படி ஒரு மையமொழி எந்த மதத்துக்குமே இருக்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது இந்துமதத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

இக்குறிப்புகளில் நான் முன்வைப்பது ஒரு விரிவான இந்திய வரலாற்றுப் பரிணாமத்தின் சித்திரத்தை. அதன் அடிப்படையில்தான் என் விளக்கங்களை அளிக்கிறேன். அது டாக்டர் அம்பேத்கர்,டி.டி.கோசாம்பி முதல் இன்று டாக்டர் ராமச்சந்திரன் வரையிலான வரலாற்றறிஞர்கள் கூறும் ஆய்வுத்தரவுகளையும் வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட, தெளிவாக விளக்கப்பட்ட, ஒரு வரலாற்றுவரைவு.

இந்து மதம் எல்லா பக்தர்களையும் சமமாக நடத்தியது, நடத்துகிறது என நான் சொல்லவில்லை. உலகில் உள்ள எந்த மதமும் அப்படி ஒரு மானுடசமத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது அல்ல. எல்லா மதங்களுமே அதன் நம்பிக்கையாளர்களிடையே தெளிவான உயர்வுதாழ்வுகளை வரையறுத்து வைத்திருந்தவைதான். இன்றுகூட எந்த மதமும் அந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக விட்டுவிடவும் இல்லை.

ஏனென்றால் மானுடவரலாற்றின் கடந்த காலத்தில் மனிதர்களெல்லாம் நடைமுறையில் சமம் என்ற சிந்தனையே இருந்ததில்லை. அந்தச்சிந்தனை ஒரு இலட்சியக்கனவாக உதித்துப் பல்வேறு சமூகப்போராட்டங்கள் வழியாக வளர்ந்து, சென்ற முந்நூறாண்டுகளுக்குள் உலகில் சில இடங்களில் சோதனை நடைமுறைக்கு வந்தது. இந்த நூறாண்டுக் காலத்தில்தான் உலகளாவிய ஒரு கருத்தாக அது ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் மானுட இனத்தில் நேர்பாதி அதை ஏற்றுக்கொண்டதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களே இன்றைய உலகில் பெரும்பான்மை என்பதை மறக்கவேண்டாம்.

இதுவரையிலான மானுடப்பண்பாட்டின் வளர்ச்சி என்பது மனிதர்களைத் திரட்டி மேல்கீழாக அடுக்கி உறுதியான சமூக அமைப்புகளை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா சமூகங்களும் அப்படி மேல்கீழ் அடுக்குகளாகக் கட்டப்பட்டவைதான். அவ்வாறு இந்தியநிலத்தில் பல்வேறு சமூகங்கள் உருவான காலகட்டத்தில் பிறந்து வந்தது இந்துமதம்.

இந்துமதம் ஒரு தொகைமதம். இந்தியப்பெருநிலத்தில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவந்த பல்லாயிரம் இனக்குழுக்கள் சாதிமுறை என்ற அமைப்புக்குள் மேல் கீழாக அடுக்கப்பட்டு இங்குள்ள சமூகமுறை உருவானது. எந்த சாதி நிலத்தையும் வணிகத்தையும் வென்றெடுத்ததோ அது மேலே சென்றது. பிற சாதிமேல் அதிகாரம் செலுத்தியது. சமூகத்தை வழிநடத்திச்சென்றது.

இவ்வாறு பல்வேறு இனக்குழுக்கள் ஒரே சமூகமாகத் தொகுக்கப்பட்டபோது அந்த இனக்குழுக்களின் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன. அவ்வாறுதான் இந்துமதம் உருவானது.

பல்வேறு வழிபாட்டுமுறைகளும் சிந்தனைகளும் ஒன்றானபோது அவற்றுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. பலநூறாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் ஒவ்வொரு வழிபாட்டுமுறையும் ஒவ்வொரு சிந்தனையும் இன்னொன்றால் பாதிக்கப்பட்டன. காலப்போக்கில் அதற்கு ஒரு மையஓட்டம் உருவாகி வந்தது. அந்த மையம் பிற அனைத்தையும் இணைக்க ஆரம்பித்தது.

நடைமுறையில் இந்தப் பல்வேறு சிந்தனைகளில் எது வலுவானதோ அது பிறவற்றை விட அதிக முக்கியத்துவம் அடைந்து மையமாக ஆவதே வழக்கம். உலகமெங்கும் பார்த்தால் அந்த வலுவான தரப்பு பிற எல்லாத் தரப்புகளையும் அழித்து இல்லாமலாக்கி வெற்றிகொண்டிருப்பதையே நாம் காணமுடியும். இந்தியாவில் அது நிகழவில்லை. மாறாகப் பிறவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு அந்த வலுவான தரப்பு வளர்ந்ததையே காண்கிறோம்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை வேதமரபு என்பதுதான் வலுவானது. ஆனால் அது பிற மரபுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவே அது இருந்தது. அனைத்தில் இருந்தும் முக்கியமான அம்சங்களை வாங்கிக்கொண்டு அது வளர்ந்தது. அந்த வளர்ச்சிப்போக்கில் வேதமரபு வேதாந்தமாகவும் பின்னர் பக்திமதங்களாகவும் மாறியது.

வைதிகமரபில் இருந்த பிரம்மம் என்ற கருத்துதான் இந்த இணைப்புப்போக்கு உருவாவதற்கான காரணம். பிரம்மம் என்பது பெயரற்ற, உருவமற்ற, எங்கும் நிறைந்த, எல்லாமாக ஆகிய ஒரு தத்துவார்த்தமான தெய்வம். அந்தத் தத்துவமாக நாம் எந்தக் கடவுளையும் காணமுடியும். கல்லையும் மண்ணையும் மிருகங்களையும் எல்லாம் பிரம்மமாக விளக்கமுடியும். உங்கள் உள்ளூர் மாரியம்மனைக்கூடத் தோத்திரங்களில் பிரம்ம சொரூபிணி [பிரம்மமே உருவெடுத்து வந்தவள்] என்றுதான் சொல்லி வழிபடுவார்கள்.

இந்தியாவெங்கும் இந்தத் தொகுப்புநிகழ்வு அன்றும் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்து மெய்ஞானம் எவரையும் மேலே கீழே என வரையறுக்கவில்லை. சமூகத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் இந்துமதத்திலும் மேலாதிக்கம் செலுத்துபவர்களாக ஆகிறார்கள். இந்துமதத்தின் ஆசாரங்களை அவர்கள் அதற்கேற்ப வரையறைசெய்துகொள்கிறார்கள்.

நூறுவருடம் முன்பு இங்கே வரலாற்றை எழுதிய வெள்ளையர் இந்துமதம்தான் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது என எழுதிவைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவ மதமாற்ற எண்ணம் கொண்டவர்கள். சென்ற நூறாண்டுக்காலத்தில் ஏராளமான வரலாற்று ஆய்வுகள் மூலம் அது பொய் என நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதிமுறையும் ஏற்றத்தாழ்வும் உருவாகி வந்த வரலாறு துல்லியமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூறுவருடமாகவே வரலாற்றை வாசிக்காத அரசியல்வாதிகளால் சொல்லப்படும் சில்லறை வரிகளே நம் மேடைகளில் உலவுகின்றன. உங்களைப்போன்றவர்கள் எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை நம்புகிறீர்கள்.

இந்து மதத்தின் மெய்ஞானம் ஏற்றத்தாழ்வை வரையறைசெய்கிறது என்றால் அதை இந்துமதத்தால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆனால் உண்மை அப்படி அல்ல . இந்துமதத்தின் அமைப்புக்குள்ளேயே எப்போதும் மேலே உள்ள சாதிகள் கீழே வருவதும் கீழே உள்ள சாதிகள் மேலே செல்வதும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதே வரலாறு. அந்த மாற்றங்களுக்கான காரணம் பொருளாதாரம் சார்ந்தது, அரசியல் சார்ந்தது. கண்டிப்பாக மதம் சார்ந்தது அல்ல

இந்தியவரலாறெங்கும் எளிய நிலைகளில் வாழ்ந்த பல்வேறு அடித்தள சாதிகள் வரலாற்றின் ஓட்டத்தில் ராணுவபலம்பெற்று மேலாதிக்கத்தை உருவாக்கிக்கொண்டதைப் பார்க்கலாம். அவர்கள் பேரரசுகளை உருவாக்கினார்கள். இந்துமதத்தில் மேலாதிக்கம் பெற்றார்கள். சந்திரகுப்த மௌரியர் முதல் இதைக் காணலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பேராலயங்களைக் கட்டிய நாயக்கர்கள் ஆந்திராவில் உள்ள எளிய மாடுமேய்க்கும் சாதியினர்தான். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் தற்செயலாகக் குதிரை மேய்க்க ஆரம்பித்தார்கள். பெரிய ராணுவ சக்தியாக மாறிப் பேரரசுகளை உருவாக்கினார்கள். நாம் காணும் தமிழகக் கோயில் ஆசாரங்களை எல்லாம் அவர்கள்தான் தீர்மானித்தார்கள். இப்படித்தான் இந்திய வரலாறு செயல்படுகிறது.

ஆகவே இந்துமதத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் இந்துமதத்தின் மையக்கருத்துக்கள் அல்ல. அவை அந்தந்தக் காலகட்டத்து சமூக யதார்த்தங்கள் மட்டுமே. எந்த ஒரு மதமும் அதைப்பின்பற்றும் மக்களின் சமூக அமைப்பையும் நம்பிக்கைகளையும் ஒட்டித்தான் செயல்பட முடியும்.

இந்துமதத்தின் மையநூல்கள் எவை என நூற்றாண்டுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளையோ அதிகாரத்தையோ பேசக்கூடியவை அல்ல. அவை முழுக்க முழுக்கத் தத்துவநூல்கள். அவற்றையே சுருதிகள் என இந்துமதம் சொல்கிறது. அவைதான் மாற்றமில்லாதவை.

சமூக ஆசாரங்களையும் சடங்குகளையும் பேசும் நூல்களை ஸ்மிருதிகள் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. அவை காலந்தோறும் மாறக்கூடியவை. சாதிமுறையைக் கடுமையாக வரையறை செய்யும் மனு ஸ்மிருதி அவற்றில் ஒன்று. அதில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியது போல வேதங்களை பிராமணரல்லாதவர்கள் கற்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் யம ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. அவற்றில் எல்லா சாதியினரும் கண்டிப்பாக வேதங்களை ஓதியாகவேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதிகள் கூட உள்ளன. அவை மன்னர்களால் மாற்றப்பட்டு மனு ஸ்மிருதி கொண்டுவரப்பட்டது. அதாவது இவை இந்துமதத்தின் மாறாத நூல்கள் அல்ல. அவை மதநூல்களே அல்ல,ஆசார நூல்கள் மட்டுமே. மதம் அவற்றுக்குப்  பயன்படுத்தப்படுகிறது

எப்படி மன்னர்கள் மனுஸ்மிருதியைக் கொண்டுவந்தார்களோ அதே போலத்தான் ஜவகர்லால் நேரு என்ற நவீன ஆட்சியாளர் மனுஸ்மிருதிக்கு நேர் எதிரான ஹிந்து சட்டத்தைக் கொண்டுவந்தார். அதை அம்பேத்கர்ஸ்மிருதி என்று சொல்லலாம். மறைந்த சித்பவானந்தர் அப்படித்தான் சொல்வார். இந்துமதம் என்ன அம்பேத்கர்ஸ்மிருதிக்கு எதிராகக் கொந்தளித்தா எழுந்தது? ஒரு சிறு திருத்தம்கூட இல்லாமல் அது இந்த சமூகத்தால் ஏற்கப்படவில்லையா? வெறும் ஐம்பதாண்டுக்காலத்தில் இந்துமதம் அதன் ஆயிரம் வருட நடைமுறைகள் பலவற்றை முற்றிலும் தலைகீழாக்கிக்கொள்ளவில்லையா? ஏனென்றால் அது ஆசாரமே ஒழிய மதத்தின் சாராம்சம் அல்ல என எல்லாருக்கும் தெரியும்.

ஆகவே இந்துமதத்தில் பொதுமை இல்லை என்பது போன்ற மேலோட்டமான வரிகளை விடுங்கள். எந்த மதத்திலும் இறந்த காலத்தில் பொதுமை இருந்ததில்லை. நவீன காலகட்டம் உருவாக்கிக்கொண்ட மானுடப் பொதுமை என்ற கருத்தை வேறெந்ந்த மதத்தை விடவும் எளிதாக இந்துமதம் ஏற்றுக்கொண்டதென்பதே வரலாறு. மானுடப்பொதுமை பேசிய சிந்தனையாளர்கள் கிறித்தவ மதத்துக்கு எதிராக முந்நூறாண்டுக்காலம் பல்வேறு தியாகங்களை செய்து போராடினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இஸ்லாமிடம் அப்படி போராடுவதற்கான வாய்ப்பேகூட இன்றுமில்லை என்பதை நினைவுறுங்கள்.

இந்துக்கோயில்களில் எல்லா சாதியினரும் நுழைய எந்தத் தடையும் இன்றில்லை. இன்றைக்கு எண்பத்தைந்து வருடம் முன்பு அனைவரையும் ஆலயத்துக்குள் அனுமதிப்பதற்கான, பொதுமைக்கான, குரல் இந்துமதத்தின் நாயகர்களிடமிருந்தே வந்தது. அதற்கான இயக்கத்தை காந்தியும், ஆரியசமாஜமும், ராமகிருஷ்ண இயக்கமும், நாராயணகுருவும், சகஜானந்தரும் முன்னெடுத்தபோது இந்து மதத்தில் இருந்து அப்படியொன்றும் பெரும் எதிர்ப்பு கிளம்பவுமில்லை. மிகச்சில அடிப்படைவாதிகள் எதிர்த்தனர், அவர்கள் உடனே ஓரம் கட்டப்பட்டனர். ஏனென்றால், இந்து மதத்தின் மூலநூல்கள் எவையும் மானுடப்பொதுமைக்கு எதிரானவை அல்ல. அவை மானுட ஆன்மீகத்தைப்பேசும் தத்துவ நூல்கள். அந்த மூலநூல்களைச் சுட்டிக்காட்டி நாராயணகுருவும் காந்தியும் சகஜானந்தரும் எதிர்ப்புகளை வாயடைக்கச்செய்ய முடிந்தது.

இன்று அன்னியமதத்தவர் உள்ளே நுழையத் தடை உள்ளது. அது ஓர் நடைமுறைத்தடை. இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் அல்ல, தொல்லியல்மையங்களும்கூட. ஆகவே அவை சுற்றுலாமையங்களாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது. அது வழிபாடுகளுக்குத் தடையாக இருக்கலாகாதென்ற நோக்கில் கருவறையை ஒட்டிய இடங்களில் பிற மதத்தவர்களுக்குத் தடை உள்ளது. மற்ற இடங்களில் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தத் தடையும் தேவையில்லை என்பதே என் எண்ணம். அது இந்துமதத்தின் ‘கொள்கை’ அல்ல. மிக எளிதாக நீக்கப்படக்கூடிய ஒரு நடைமுறை மட்டுமே.

இன்னும்கூட ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமான கோயில்களில் பிற சாதியினர் நுழைய அச்சாதியினர் தடை செய்கிறார்கள். குலதெய்வக் கோயில்களில் பிற குலத்தவர் நுழையத் தடை உள்ள இடங்கள் உண்டு. அவை சாதிப்பிரச்சினைகள், குலப்பிரச்சினைகள். அந்நோக்கில் அவை விவாதிக்கப்பட்டுக் களையப்படவேண்டியவை. மதுரைக்கோயிலில் தலித் நுழைய அனுமதிக்கும் இந்து மதம் உத்தப்புரத்தில் மட்டும் அனுமதிக்காதா என்ன?

சிதம்பரம் கோயிலில் சைவத்திருமுறைகள் குறைந்தது ஆயிரமாண்டுகளாக ஒவ்வொருநாளும் ஓதப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? என்றாவது அதைப் போய் சோதித்துப்பார்த்திருக்கிறீர்களா? நான் அழைத்துச்சென்ற ஈழத்து நண்பர்கள் அங்கே கருவறைமுன் நின்று திருப்புகழ் பாடியிருக்கிறார்கள்- பலமுறை. அங்கே இந்தியாமுழுக்க உள்ள எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல சம்ஸ்கிருதமே கருவறையின் மொழியாக இருக்கிறது, அவ்வளவுதான். இப்போது தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவெங்கும் இந்து ஆலயங்களுக்கு வழிபாடுசார்ந்த தொன்மையான நடைமுறைகள் இருக்கும். அந்த நடைமுறைகளைத் தொகுத்துள்ள நூல்களை நிகமங்கள் ஆகமங்கள் என்பது வழக்கம். தமிழகத்துக்கோயில்களில் அனேகமாக அனைத்துமே ஆகம முறைப்படி வழிபடப்படுபவை. ஆகமங்களே கோயில்களுக்கு சக்தியை அளிப்பவை என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவற்றை மாற்றுவதை அவர்கள் ஏற்பதில்லை.

சிதம்பரம் கோயில் நெடுநாட்களாகவே அதற்காக உருவாக்கப்ப்பட்ட பூசாரிக்குலங்களின் பொறுப்பில் உள்ளது. அவர்கள் ஆகமங்களை முழுமையாக நம்பி இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள். எந்தச்சடங்குகளையும் மீற அனுமதிக்காதவர்கள். ஏனென்றால் அது அவர்களின் தொழிலும் கூட. அதில் மாற்றம் என்பது அவர்கள் தொழிலை இழப்பதுதான். ஆகவேதான் கோயிலின் வழமையான சில முறைமையை மீறி ஆறுமுகச்சாமி என்பவர் தமிழில் பாட முயன்றபோது அவர் அந்த அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். அவர் தமிழில் பாடியதற்காகத் தாக்கப்படவில்லை, குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாடியதற்காகத் தாக்கப்பட்டார். அது ஒரு தொழில்போட்டி மட்டுமே. எந்தத் தொழிலிலும் அது நிகழும்.

அந்தத் தாக்குதல் இந்துமதத்தின் பக்தர்களால் நடத்தப்படவில்லை. அந்த அர்ச்சகர் முறை மாற்றப்பட்டபோது இந்துமதம் கொதித்தெழவும் இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான மாறுதல்கள் வழியாகத்தான் அது வளர்ந்து வந்தது, முன்னால் செல்கிறது. இந்துமதத்தின் எந்த ஒரு ஆசாரமும் நம்பிக்கையும் விவாதத்துக்கு திறந்து வைக்கப்பட்டதாகவே இன்றுவரை உள்ளது. அதை காலத்துக்கு ஏற்ப மாற்றுவது எப்போதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மக்களிடம் வரும் எந்த ஒரு ஆக்கபூர்வமான மனமாற்றத்தையும் இந்து மதம் தடுக்காது. ஏனென்றால் இந்துமதத்தின் மூலநூல்கள் என்பவை நெறிநூல்கள் அல்ல, தூயஞானநூல்கள் மட்டுமே. அவை இதைச்செய் இதைச்செய்யாதே என தடுக்கவில்லை. இதை இப்படி சிந்தனைசெய்து பார்க்கலாமே, இப்படி தியானிக்கலாமே என்று மட்டுமே சொல்கின்றன. நான் இந்துவாக இருப்பது இந்த சுதந்திரத்தை இந்த மதம் அளிக்கிறது என்பதனாலேயே.

ஆகவே இந்துமதத்தைச்சேர்ந்த ஓர் அமைப்போ ஓர் அறிஞரோ சொல்வது இந்துமதத்தின் கூற்று எனக் கொள்வது மோசடி மட்டுமே. அப்படி எவரும் எதையும்சொல்லலாம். ஆனால் எவரும் விதி சொல்ல, கட்டுப்படுத்த அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. இந்துமதம் ஒரு அமைப்பு அல்ல. ஒரு ஞானமார்க்கம் மட்டுமே. அதில் பலநூறு வழிகள் உள்ளன. எல்லா வழிகளுமே இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாத்திக ஞானமார்க்கமும் அடக்கம். வாசித்துப்பாருங்கள்

தமிழ் நீசபாஷை என்று சொன்னது யார்? இந்துமதத்தின் எந்த நூல்? எந்த ஞானி? யாரோ எங்கோ சொன்னார்கள் என நீங்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளூர தமிழ் மீது உங்களுக்கிருக்கும் ஆழமான இழிவுணர்வே அதற்குக் காரணம். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று செவிகளில் விஷமூற்றும் வரியைச் சொன்னவர் இப்படி அவதூறுப் பிரச்சாரம்செய்பவர்களின் வழிகாட்டியான ஈ.வெ.ராதான், எந்த இந்து ஞானியும் அல்ல.

நேர்மாறாக தெய்வத்தமிழ் என வைணவர்களாலும் சிவன் காதில் அணியும் குண்டலம் என்றும் அவன் உடுக்கின் நாதத்தால் அமைக்கப்பட்டது என்றும் சைவர்களாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருடங்களாக வழிபடப்படுகிறது தமிழ். ஆயிரமாண்டுகளில் ஸ்ரீரங்கத்திலோ திருமாலிருஞ்சோலையிலோ நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் பாடப்படாத ஒருநாள் கடந்துசென்றதுண்டா? மதுரையிலோ நெல்லையிலோ திருமுறை பாடப்படாத ஒரு நாள் உண்டா? என்ன பேசுகிறீர்கள்?

நான் முந்தைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், சம்ஸ்கிருதம் என்றுமே அறிவுச்செயல்பாட்டுக்குரிய மொழிதான் என. பேசப்பட்ட புழக்கமொழி அல்ல அது. எஸ்பராண்டோ போலப் பொதுமொழியாக உருவாக்கப்பட்டது அது. அந்தக்கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், அதன் பெரும் ஆசிரியர்கள் பிராமணர்கள் அல்ல என. அது சமணர்களுக்கும் நாத்திகர்களுக்கும்கூட மூலமொழிதான் என. எதையுமே நீங்கள் கண்டுகொள்வதில்லை.

ஏன் அனைத்துக்கோயிலிலும் சம்ஸ்கிருதம் மூலமொழியாக இருக்கிறது, அதற்கான வரலாற்றுக்காரணம் என்ன என்றுதான் நான் அக்கட்டுரையில் விளக்கியிருந்தேன். என்ன காரணத்தால் பிராமணர்கள் கோயிலில் பூஜைக்கு வைக்கப்படுகிறார்கள் என விரிவாக சமூகநோக்கில்தான் ஆராயவேண்டும். திருமணம் காதுகுத்து எல்லாவற்றுக்கும் பிராமணர்கள் வருவது என்பது இன்று நீங்களாக விரும்பித் தேர்ந்தெடுப்பது. தமிழகத்தின் பெரும்பாலான சாதிகளில் அப்படி வழக்கம் இல்லை. இன்று பணம் வரும்போது அதை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

இந்துமதம் எங்கும் உங்களிடம் அப்படிச் சொல்லவில்லை. பிராமணர்கள் இந்துமதத்தின் பூசகர்கள் என்பது ஒரு வழிவழியான மரபு, அவ்வளவுதான். அது இந்துமத விதி அல்ல.காசி, ஸ்ரீசைலம் போன்ற பல பெருங்கோயில்களில் பக்தர்கள் அனைவருமே கருவறைசென்று தொட்டு பூஜை செய்யலாம் என்ற விதி ஆயிரமாண்டுகளாக உள்ளது.. இன்றும் இந்தியாவின் பெரும்பான்மையான கோயில்களில் பிராமணர்கள் பூஜைசெய்யவில்லை . பலநூறு பூசாரிக்குலங்கள் உள்ளன. பல சமூகங்கள் அவர்களுக்குள்ளாகவே பூசாரிக் குலங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சம்ஸ்கிருதம் எப்போது கருவறைக்குள் வருகிறது? ஒரு தெய்வம் குல, இன, பிராந்திய அடையாளம் விட்டுப் பெருந்தெய்வமாக ஆகும்போதுதான். அய்யா , அதைத்தானே நான் கட்டுரையிலே சொல்லியிருந்தேன். அதையே சொல்லித் திருப்பிக் கேள்வி கேட்டால் என்னய்யா செய்வேன்?

அன்புள்ள செல்வம், உங்கள் பிரச்சினைதான் என்ன? நான் எழுதியிருந்த வினாவுக்கு பதிலாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எங்கெல்லாம் எதையெல்லாம் கேட்கின்றன என்று பாருங்கள். நீங்கள் இந்து என்கிறீர்கள். இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள், காரணம் சாதி என்கிறீர்கள், சம்ஸ்கிருதம் என்கிறீர்கள், பிராமணர் என்கிறீர்கள். எதை வலுக்கட்டாயமாக நம்ப விரும்புகிறீர்கள்? அதற்கான உளவியல் காரணம் என்ன? அந்தக் காரணத்தை இழக்கலாகாது என்பதற்காகத்தான் எழுதிய எதையுமே வாசிக்காமல், புரிந்துகொள்ளாமல் மீண்டும் கேட்கிறீர்களா?

அந்தக்காரணம் என்ன தெரியுமா? பொதுமைக்கு எதிரானவர் நீங்கள் என்பதே. உங்கள் சாதியநோக்கைத் தாண்டிச்செல்ல உங்களால் முடியவில்லை என்பதே. அதற்கான பழியைப் போட நீங்கள் இந்துமதத்தை பிராமணர்களை தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள்.

இந்த எதார்த்தத்தை நீங்கள் மானசீகமாக ஒப்புக்கொண்டால் நீங்கள் முதலில் உங்கள் சாதியின், குடும்பத்தின் உளவியலில் ஊறியுள்ள பொதுமைக்கு எதிரான அம்சங்களை நோக்கித் திரும்புவீர்கள். அதற்கான ஊற்று என்ன என்று உங்கள் இனக்குழு மனநிலையில் இருந்து கண்டுகொள்வீர்கள். அதைக்களைய உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். மதம், பிராமணர் எனப் பழிசொல்ல இடம்தேடி அலைய மாட்டீர்கள். அதுதான் தொடக்கம்.

பிராமணர்களின் சாதியுணர்ச்சி பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சாதிக்கு அப்பாற்பட்டவரா? சாதியை விட்டு விலகி விட்டீர்களா? பிராமணரல்லாதவர்களின் சாதியுணர்ச்சியைவிட பிராமணர்களின் சாதியுணர்ச்சி ஒன்றும் அதிகமில்லை. நாமெல்லாருமே ஒரே கடந்தகாலக் குட்டையில் ஊறியவர்கள்தான். அதைக் கடந்து செல்வதைப்பற்றி சிந்திப்போம். நாம் மாறினால் நம் மதமும் மாறும்.

எனக்கு முன்னால் நிற்கும் பிரச்சினை இதுதான் செல்வம். நான் பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் எழுதுவேன். அதில் எதையுமே படிக்காமல், பொருட்படுத்தாமல், முன்னர் சொன்னதையே திருப்பிச்சொல்லி எனக்குச் சுடச்சுட பதில் சொல்லிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள் பிறர். ஈவேராவின் வைக்கம் போராட்டம் முதல் இன்றைய காந்தி வரை இதுவே நிகழ்கிறது. நான் நிறுத்திக்கொள்ளும்போது என்னை ‘வாயடைக்க’ செய்துவிட்டதாகக் கொண்டாடியும் கொள்வார்கள்

அதைத்தான் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால் சரி. இல்லையேல் திருப்பி வாசியுங்கள், புரிந்துகொள்வீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் விழா
அடுத்த கட்டுரைகடிதங்கள்