தேவதேவன் மகள் திருமணம்

மூன்று நாட்கள் சென்னையில் இருந்தபின் ரயிலில் திருச்சிக்குச் சென்றிறங்கினேன். அருண் ஓட்டலில் அலெக்ஸ் அறைபோட்டிருந்தார். ஆனால் அவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். ஓட்டல் அறையில் காலை எட்டு மணிவரைக்கும் நன்றாகத் தூங்கினேன். அலெக்ஸ் வந்துதான் என்னை எழுப்பினார். நானும் அலெக்ஸும் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம்.

பொதுவாக எனக்குத் தஞ்சை, திருச்சி வட்டாரத்தில் இருந்து வாசகர்கடிதங்களே வருவதில்லை. சென்னையை விட்டால் கொங்குவட்டாரம்தான். அதன்பின் தேனி,பெரியகுளம் வட்டாரம். ஆகவே பிற ஊர்களைப்போல என்னைப்பார்க்க எவரும் வரவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை. காலையில் நன்றாகத்தூங்கியது உற்சாகமாக இருந்தது. அலெக்ஸுடன் நெடுநாட்களுக்குப்பின்னர் விரிவாகப்பேசமுடிந்தது. பல மொழியாக்கத் திட்டங்கள்.நாலிலே ஒன்றிரண்டு பலித்தாலே நல்ல விஷயம்தான்.

மாலையில் அருண் ஓட்டலில் கூட்டம். வழக்கம்போல ஆரம்பிக்கும்போது கால்வாசிப்பேர். முடியும்போது அரங்கு நிறைந்து வழிந்தது. ஐந்துமணி என அறிவிக்கப்பட்டிருக்கும் கூட்டத்துக்கு ஏழு மணிக்கு வருபவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு வெட்டி மேடையுரைகளுக்குப் பழகிச் சலித்துவிட்டிருக்கிறார்கள் போல.

மேடையில் வழக்கம்போல ஸ்டாலின் ராஜாங்கம் மிகச்சிறப்பாகப் பேசினார். விரிவான தகவலறிவும் அவற்றைச் சிக்கலற்ற மொழியில் முன்வைக்கும் நடையும் உண்மையான உணர்ச்சிகரமும் அவரது பலங்கள். தமிழ் மேடைப்பேச்சுக்கான எந்த விதமான செயற்கைபாவனைகளும் இல்லை. தமிழ்ச்சூழலின் இன்றைய மிகச்சிறந்த இளம் அறிவுஜீவிகளில் ஒருவராக எழுந்து வருகிறார்.மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். காலச்சுவடில் அதிகமாக எழுதிவருகிறார்.

கூட்டத்துக்குக் கோவையில் இருந்து அரங்கசாமியும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் மதுரை நண்பர் ரவியும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இரவே கிளம்பிப் பாண்டிச்சேரிக்குச் சென்றோம். பொதுவாக இரவுகளில் காரில் பயணம் செய்வதில்லை. ஆனால் அபூர்வமாகச் செய்யும் பயணங்கள் எப்போதுமே உற்சாகமான உரையாடலாகவே அமைகின்றன. அன்றும்தான். அரங்காவைத் தூங்கவிடாமலிருக்கச் செய்ய வேடிக்கையாகப் பேசியாக வேண்டிய கட்டாயம்.

பாண்டிச்சேரிக்கு விடிகாலை மூன்றுமணிக்குச் சென்று சேர்ந்தோம். அதிகாலை ஆறுமணிக்கு தேவதேவனின் மகள் அம்மு என்கிற அமிர்தா பிரீதத்துக்கும் கட்டிடவரைவாளரான செந்திலுக்கும் திருமணம். செந்தில் கவிஞரும் கூட. அமிர்தாவை சிறுமியாக இருக்கும்போதே தெரியும். எங்கள் ஊட்டி கவியரங்குகளில் நெடுங்காலம் முன் சிறுபெண்ணாக வந்து கலந்துகொண்டிருக்கிறார். திருமணம் வழக்கமான முறையில் அல்லாமல் புதுமையாக நிகழ்ந்தது

முக்கியமான விஷயம் திருமண மண்டபம் இல்லை. பாண்டியை ஒட்டிய கடலோரத்தில் ஹாலிவுட் என்ற கடலோரக் குடியிருப்பு வளாகத்தில் கடற்கரையில் நிகழ்ந்தது. மணல்மேல் விரிப்பு போட்டு நாற்காலிகள். ஒரு சிறிய திறந்த மேடை. ஆகவே வெயில் எழுவதற்குள்ளேயே நேரம் தீர்மானித்திருந்தார்கள்.

இரண்டு மணிநேரத்தூக்கத்தை அவசரமாகக் கலைத்துக்கொண்டு வழிகேட்டு ஹாலிவுட் சென்றுசேர்ந்தோம். ஏற்கனவே இருபதுபேர்வரை வந்திருந்தார்கள். வசந்தகுமார், சூத்ரதாரி[ எம்.கோபாலகிருஷ்ணன்],க. மோகனரங்கன், இளங்கோ கல்லானை,செல்வ புவியரசன், கரு ஆறுமுகத்தமிழன் என தமிழினி கோஷ்டி ஒன்று முந்தையநாளே சிதம்பரம் சீர்காழி என சுற்றிவிட்டு வந்திருந்தது. கண்மணி குணசேகரன் விருத்தாசலத்தில் இருந்து வந்திருந்தார்.

தூத்துக்குடியில் இருந்து தேவதேவனின் இளவயது நண்பரும் புரவலருமான முத்துப்பாண்டி வந்திருந்தார். நீண்டநாள் கழித்து எழுத்தாளர் மோகனனை சந்தித்தேன். ராஜசுந்தர ராஜன் தேவதேவனின் இளவயது நண்பர். மாற்றப்படாத வீடு போன்ற ஆரம்பகால தேவதேவன் கவிதைகள் முத்துப்பாண்டி பண உதவியுடன் ராஜசுந்தரராஜன் அட்டை வரைய வெளிவந்திருக்கும். தேவதேவனின் நண்பரான காஞ்சனை சீனிவாசனும் அவரது துணைவி குட்டிரேவதியும் வந்திருந்தனர். மாப்பிள்ளை செந்திலின் நண்பர்கள் வந்திருந்தார்கள்.

ஏழுமணிக்கு மணவிழா ஆரம்பித்தபோது வெயில் வந்து விட்டது. ஆனால் பளிச்சென்ற இதமான வெயில். காலை நேரத்தில் அப்படி ஒரு கடற்கரையில் இருந்ததே அழகாக இருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம். சமீபத்தில் அப்படி ஒரு உற்சாகமான நண்பர் சந்திப்பே நிகழ்ந்ததில்லை.

தேவதேவன் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொலைந்துபோனவரைப்போலத்தான் இருப்பார். அப்போதும் அப்படித்தான் தென்பட்டார். திருமணத்தில் பழைய நலுங்கு போன்ற சடங்குகளுக்குப் பதிலாகப் புதியதாக சடங்குகள். வண்ணக்கூழாங்கற்கள் பல பெட்டிகளில் இருந்தன. அவற்றை எடுத்து ஒரு கண்ணாடிப் பூந்தொட்டிக்குள் போடவேண்டும். அவை மணமக்களால் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படுமாம். எடுத்து அட்சதையாக வீசி விடப்போகிறார்கள் என்று ஒருவர் பயந்தார்.

எல்லாருக்கும் ஹைட்ரஜன் பலூன்கள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும்போது சுதந்திரத்தின் சின்னமாக அவற்றைப் பறக்கவிடும்படி நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர் அ.முத்துகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தன் கனத்த குரலில் மணமக்களை அறிமுகம் செய்து வைத்து நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் விளக்கி அவர்தான் நடத்திவைத்தார். “அண்ணா இவரு முற்போக்குப் புரோகிதரா” என ஒரு நண்பர் என் காதில் கேட்டார். அதற்கேற்ப முத்துகிருஷ்ணன் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்பதை வேறு சொற்களில் சொல்ல மங்கலம் முழங்க தாலிகட்டப்பட்டது.

அதன்பின் மணமக்கள் சேர்ந்து ஓர் ஓவியத்தை வரைந்தார்கள். இருவருக்கும் கொஞ்சம் கைநடுங்கியிருக்கும், திருமணம்தானே. கோட்டுப்படம்தான். வாழ்க்கைமூலம் வண்ணம் சேர்ப்பார்கள் போல.

அருகே இருந்த ஒரு அட்டையில் விருந்தினர் கையெழுத்திட்டார்கள். அதையும் நினைவுச்சின்னமாகப் பாதுகாப்பார்கள். திருமணத்தின் உண்மையான நினைவுச்சின்னங்களான இரு சுட்டிப்பிள்ளைகள் வந்து அவற்றை உடைத்தும் கிழித்தும் எறிய வேண்டுமென வாழ்த்தி நானும் கையெழுத்திட்டேன்.

மணமக்களை வாழ்த்திப் பலர் பேசினார்கள். வாழ்த்திப் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன் கடைசியில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார். அம்முவை அவர் கைக்குழந்தையாகத் தூக்கியிருக்கிறார். உண்மையில் ஒரு குழந்தையை நாம் குழந்தையல்லாமல் ஆக்கிக்கொள்ள முயல்வதே இல்லை. முடிந்தவரை ஒத்திப்போடுகிறோம். ஒருகட்டத்தில் இப்படி வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்வது அழகான தருணம்.

கண்மணி வழக்கமான உற்சாகத்துடன் பாடிப் பேசினார். நான் ‘ஓரிரு சொற்கள்’ பேசினேன். என் ஆதர்சக் கவிஞரும் ஆதர்ச மனிதருமான தேவதேவனின் மகள் திருமணம் எனக்கு ஓர் அபூர்வ நிகழ்ச்சி என்றேன். விருந்தினரில் ஒருவர் ’என்னது பையனின் மாமனாரும் கவிஞரா?’ என ஆச்சரியப்பட்டார் என நண்பர் சொன்னார்

அந்தப்பக்கம் திறந்தவெளியில் ஷாமியானா போட்டு உணவு. காலைநேரத்துக்கு ஏற்ப இனிமையான நல்ல உணவு. பாண்டிச்சேரியில் சைவ உணவெல்லாம் இவ்வளவு சிறப்பாக சமைக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

ஒரு திருமணத்துக்கான சம்பிரதாயம் ஏதும் இல்லாத ஆனால் திருமணநிகழ்ச்சிக்கான எல்லா நிறைவும் குதூகலமும் கைகூடிய ஒரு விழா. இதைப்போன்ற புதியபாணித் திருமணங்களைப் பிறரும் முயலலாம். ஆனால் தேவதேவனைப்போலவே அவரது மருமகனும் இலக்கியவாதியாக, உறவினர்சூழலில் பேக்கு எனப் பெயர் வாங்கியவராக இருப்பதனால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. பெரும்பாலான திருமணங்கள் உறவினர்களால் உறவினர்களுக்காக நடத்தப்படுபவை.

பதினொரு மணி வாக்கில் தேவதேவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.

தேவதேவனின் இணையதளம்

முந்தைய கட்டுரைபூமணியின் புது நாவல்
அடுத்த கட்டுரைஅறம் விழா