சைவ வெறுப்பா?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

சைவ சமயத்தை ஒழுகி வாழ்பவன் என்பதால் இதை எழுதிகின்றேன்.

உங்களின் போதி கதை படித்து மிக மனவேதனை அடைந்தேன். பல ஆண்டுகளாக உங்களின் கட்டுரைகளைப் படித்து வருகிறன். தினமும் உங்களின் வலைத் தளத்திற்கு ஒருமுறையாவது செல்வதுண்டு. என் நண்பர்களுக்கும் உங்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்து உள்ளேன்.

ஆனால், இந்தக் கதை என்போன்ற பலரையும் வேதனை அடைய செய்துள்ளது. உங்களின் சைவ சமய நிராகரிப்பு, சைவ நூல்களின் மீதான வெறுப்பு இந்தக் கதையின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இனி உங்களின் வலைத் தளத்திற்கு வருவதற்குக் கூச்சமாக உள்ளது. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது அது பற்றிக் கூறுகின்றேன்.

மிக வேதனையுடன்

சோமசுந்தரம்
கோயம்புத்தூர்

அன்புள்ள சோமசுந்தரம் அவர்களுக்கு,

ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை அது.

தங்களை என்றல்ல எந்த ஒரு மதத்தைச்சேர்ந்த எவரையும் வருத்தமுறச்செய்யும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. என் பணி அதுவல்ல. அதை என் எழுத்துக்களை முழுமையாக நோக்கினாலே நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.அன்றும் இன்றும் என்னை செலுத்திக் கொண்டு செல்லும் அடிப்படைத்தேடல்களே அக்கதையிலும் உள்ளன.

ஆன்மீகம்-மதம்-மத நிறுவனங்கள் போன்றவற்றை ஒன்றாக நான் நினைக்கவில்லை. அவை வேறு வேறு. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்தவை அவை. ஆன்மீகம் என்பது முழு உண்மைக்காக சமரசமற்றுத் தேடிச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பயணம். மதம் ஆன்மீகம் கண்டடைந்த விடைகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அதில் ஆன்மீகமும் உண்டு, உலகியலும் உண்டு. மத அமைப்புகள் மதத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்ட லௌகீகஅதிகார பீடங்கள். அவற்றில் குருநாதர்களும் அறிஞர்களும் இருக்கலாம். ஆனால் அந்த அமைப்பை மீறி, அந்த அமைப்பைத் தாண்டித்தான் அவர்கள் அங்கே இருக்கமுடியும்.

ஆகவே அவற்றுக்கிடையேயான உறவுகளையும் ஊடாட்டங்களையும் ஆன்மீகத்தேடல்கொண்ட எவரும் நுட்பமாகப் புரிந்துகொள்ள முயன்றபடியே இருப்பார்கள்.நானும் அதற்கான முயற்சியில் இருந்திருக்கிறேன். அந்தக்கதை அதையே சுட்டுகிறது. அந்த மூன்று தளங்களுமே அந்த கதையில் பின்னிப்பிணைந்துள்ளன.

நீங்கள் வெறும் நிறுவனவிசுவாசம் கொண்டு வாசித்திருக்கிறீர்கள். உங்கள் நோக்கில் அக்கதை ஏமாற்றத்தை அளிக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அக்கதை உங்களைப்போன்றவர்களுக்குரியதல்ல. சைவ மடங்களைத் தாண்டி, சைவ மதத்தினூடாக, சைவ மெய்ஞானத்தை அடைய முயல்பவர்களுக்கானது.

சைவ சமயத்தையோ, சைவநூல்களையோ நான் நிராகரித்ததில்லை. எந்த மதத்தையும் நூல்களையும் நிராகரித்ததில்லை. அவற்றினூடாக என் தேடலைக் கொண்டுசெல்லவே எப்போதும் முயல்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவெளியின் ஆடை
அடுத்த கட்டுரைஇரு கலைஞர்கள்