அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப் பற்றி அதிகமாகப் பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்ல பாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது. ஆனால் அதுதான் இயல்பான நிலை என்று தெரிந்துகொள்ள ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறேன்.
அன்று இப்படி இல்லை. முகப்பில் சிமிட்டி வளைவும் “திருவதிகை ஆதீனம்” என்ற எழுத்துக்களும் இல்லை. ஆலமரம் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அன்று வந்து நுழைந்தபோது இது அளித்த பிரமிப்பை இப்போது தரவில்லை. ஜடையை அவிழ்த்துப்போட்ட கிழ ராட்சசி போல பயமுறுத்தும் கம்பீரம். ஆனால் பாத்திகள் எல்லைவகுத்த முற்றமும் விழுதுகளினூடே அமைக்கப்பட்ட சாய்வு பெஞ்சுகளும் சூழலையே மாற்றியமைத்துவிட்டன. அன்று மடத்தின் முன் நிச்சிந்தையாக பசுக்கள் படுத்து மென்று கொண்டிருக்கும், இப்போது ஒரு கார் நிற்கிறது.
உள்ளே அறிமுகமான முகங்கள்தாம். பண்டாரங்கள் என்னை அடையாளம் காணவில்லை. அவர்களுக்கு என் கைகூப்புதல் பிடிக்கவில்லை. கைகூப்புதலில்தான் எத்தனை வகை. வேறு எது புரியாவிட்டாலும் இது புரிந்துவிடும் சாமியார்களுக்கு. அன்றும் கைகூப்பினேன், கண்ணில்கண்ட முதல் பண்டாரத்திடம். அவர் ஆசியளித்துப் போய்விட்டார். எனக்கோ பசி. நிற்கவே முடியவில்லை. அறைக்குளிருந்த யுவபண்டாரத்தை ஒருவன் குப்புற விழுந்து தெண்டனிடுவதைக் கண்டேன். நானும் உட்புறத்தை அடைந்து அதுபோலவே செய்தேன். “யார்?” என்றார். பெயரைச் சொன்னேன். “ஊர்?” “விலாசம்?” என்றெல்லாம் விசாரித்தார். சொல்லமனமில்லை, ஒரு நாடோடி, மகாசன்னிதானத்தைப் பார்க்கவேண்டும் என்றேன். முகம் கடுகடுப்படைய குரு மகாசன்னிதானத்தைப் பார்ப்பது அத்தனை சுலபமல்ல என்றார்.
கலங்கிப் போய்விட்டேன். “அவருடைய புத்தகங்களைப் படித்தவன், ரொம்பதூரம் தாண்டி வந்திருக்கிறேன்” என்றேன். புறக்கணிப்பான முகபாவத்துடன் கண்களைக் கணக்குப் புத்தகத்தின்மீது பதியவைத்துக் கொண்டார். பரிதாபமாக நின்றேன். சற்று கழித்து ஏறிட்டுப் பார்த்தார்.
“சாப்பிட்டாயா?” என்றார்.
“இல்லை” என்றேன்.
“முத்து” என்றார், வந்த மொட்டைக் கிழவனாரிடம் “கிரஹஸ்தர் சாப்பாடு ஒன்று” என்றார். சாமி கிருகத்தைத் துறந்து வந்தவன்தான் நானும் என்று சொல்லியிருக்கலாம். ஆடிப்போயிருப்பார். நடுத்தரவீட்டு சமையல் பாத்திரங்கள் போல சிலநூறு சொற்களை வைத்துதான் அவரது தலையே இயங்கியது எனப் பிற்பாடுதான் அறிந்தேன். அப்போது ஞானநிதிக்குக் காவல் வைத்த பூதம் போலத்தான் இருந்தார்.
இப்போது வேலையில் இருக்கிறேன் என்பதில் முத்துவுக்கு மகாசந்தோஷம்.
சமையற்கார அப்பையர் “கலியாணமாகிவிட்டதா?” என்று கேட்டார்.
“பெண்தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“லட்சுமி போல ஒன்றைப் பார்த்துப் பிடித்துக் கொண்டுவரவேண்டியதுதானே?” என்றார் அப்பையர்.
“முட்டுமா என்றுதான் பயம்” என்றேன்.
“பழைய பைத்தியம் தெளியவில்லை போலிருக்கிறதே” என்று சிரித்தார்.
மடத்துச் சோற்றுக்கு மாற்றமே இல்லை. கீரைக்குழம்பு, கத்தரிக்காய் வதக்கல், எண்ணையல்ல அசல் நெய். அரிசிஅப்பளம். பெரியசிவப்புப் பழம் இரண்டு.ஒரு துண்டு வெல்லம். உப்பு… பரிமாறப்பட்ட அமைப்புகூட அப்படியேதான். நாலு தலைமுறைக்குமுன்பு கூட ஏதோ ஒரு அய்யர் இப்படித்தான் பரிமாறியிருப்பார்.
மகாசன்னிதானத்தை உணவு அறையில்தான் முதல்முறையாக சந்தித்தேன். கையில் யோகதண்டு. மரத்தாலான பாதக்குறடுகள். தழையத் தழையக் காவிவேட்டி உடுத்துக் காவி போர்த்தியிருந்தார். கழுத்து முழுக்கப் பலவிதமான உருத்திராக்க மாலைகள். ஆபரணங்கள். கைகளில் கங்கணமும் காப்பும். நீண்ட நரைகலந்த தாடி. சுமையாக ஜடை முடிப்புதருக்குள் பைத்தியம் மினுங்கும் கண்கள். மிகமெல்ல நடந்தார். பின்புறம் காரியஸ்தபிள்ளை. அதாவது காறுபாறு. உதவியாளரான தொண்டர், பிற அணுக்கத் தொண்டர்கள் முதலானபரிவாரங்கள்.
கட்டில்போல ஒன்று மூலையில் கிடந்தது. கொசுவலை போல அதைமூடியபடி மரச்சட்டங்களில் திரை தொங்கியது. அதற்குள்ளாகவே அங்கு உணவு பரிமாறப்பட்டிருந்தது. சன்னிதானம் உள்ளே போய் அமர்ந்ததும் திரைகள் மூடப்பட்டன. பழைய கட்டிடமானதனால் அரையிருட்டு வெளியே. உள்ளே சன்னிதானம் முழு இருட்டில்தான் உணவு உண்கிறது. துறவிகள் அமர்ந்த வரிசைக்கு மிகவும் தள்ளித்தான் கிருஹஸ்தர் வரிசை. என்னையும் சேர்த்து எட்டுபேர். மணை உயரமாக இருந்தது. கால்களை மடக்கி அமர சிரமப்பட்டேன். சக குடும்பிகள் யாரிவன் என்பது போலப் பார்த்தார்கள். குருமகா சன்னிதானம் சாப்பிட்டு முடித்துக் கிளம்பியது. சப்பென்றிருந்த உணவை நான் அப்போதும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. சன்னிதானம் என்னைக் கவனித்து தயங்கி நின்றது. நான் உருட்டிய கவளத்தை என்ன செய்வதென்றறியாமல் தவித்தேன். வேட்டியை மார்பில் கட்டியிருந்த காறுபாறு குனிந்து வாய்பொத்தி ஏதோ சொன்னார். சன்னிதானம் சிம்மபாணியில் தலையாட்டியது. மீண்டும் என்னைப் பார்த்துவிட்டு புல்டோசர் போல நடந்து சென்றது.
சாயந்தரம் எனக்கு அழைப்பு வந்தது. சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட தரையும் பூதாகரமான தாழும், பித்தளையிலான சிற்ப அலங்காரங்கள் கொண்ட பெரிய கதவுகளும், தாழ்ந்த அலங்கார உத்தரங்கள் கொண்ட கூரையும், உடைய பெரியமரத்தாலான அறையின் மத்தியில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் குருமகா சன்னிதானம் உட்கார்ந்திருந்தது. குரல்கேட்கும் தூரத்தில் என்னை உட்காரப் பணித்தது.
எனக்கு அவரது தோற்றமும் தோரணையும் ஒருவிதமான பிரமிப்பை அளித்தபோதும் கூட ஏதோ உள்ளூர உறுத்திக் கொண்டிருந்தது. அவருடைய கால்களைத் தற்செயலாகப் பார்த்தவன் அதிர்ந்து போனேன். யானைக்கால். தனியொரு உடல்போல அது முன்னால் தூக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த நடையின் ரகசியம் புரிந்தது. உடனே இலேசான சீழ்வாடை என் நாசியை அடைந்தது. அந்தக் கால் பெரிய துணிப்பொட்டலம் போல இருந்தது, ஈரம் வேறு.
பெயரைக் கேட்டார், சொன்னேன். “நிஜப்பெயர்தானே?” எனக்குக் கோபம் வந்து ஏதும் பதில் சொல்லவில்லை.
“பரீட்சையில் தோற்றுவிட்டாயா?”
“இல்லை”
“பின்னே?”
அதற்கும் மெளனம் சாதித்தேன்.
“அப்பா அம்மாவுடன் சண்டையா?”
“இல்லை”
“என்னிடம் கூற முடியாத ஏதாவதா?” என்றார்.
விரல்பட்ட அட்டைப்பூச்சி போலக் கூசிக்குறுகினேன். அவர் கண்களைப் பார்த்தேன். பைத்தியச்சிரிப்பு. சோதிக்கிறாரா என்ன?
“என்னால் படிக்க முடியவில்லை”
“என்ன படிக்கிறாய்?”
“பி காம், ஆனால் முடிக்கவில்லை, விட்டு விட்டேன்”
“வீட்டுக்குப் போ. எடுத்த காரியத்தை முடிக்கவேண்டுமல்லவா?”
“எனக்கு ஆர்வமில்லை”
“பின்னே?” என்றபடி துருவிப் பார்த்தார்.
தலைகுனிந்தேன். குழம்பியவனாக அவரைப் பார்த்தேன். என் நிலைமை பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த சொற்றொடர்கள் எல்லாமே பொருத்தம் இல்லாதவையாகப் பட்டது. மனசால் துழாவினேன். அவர் என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.
சட்டென்று என் மூளை மின்னியது. முளைத்த வார்த்தைகளைக் கோர்த்து “எனக்கு எல்லாரையும்போல வாழ விருப்பம் இல்லை” என்றேன்.
அவர் புருவங்கள் சுருங்கின “அப்படியென்றால்?”
“எல்லாரும் பொய் சொல்கிறார்கள், பணம்தான் எல்லாருக்கும் பெரிதாக இருக்கிறது. எல்லாரும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கிறார்கள். எங்கள் புரபஸர்கள் கூட பரஸ்பரம் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.”
அவர் இலேசாக சிரித்தார் “நீ மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கவேண்டும்?”
“எனக்குப் பிடிக்கவில்லை”
“நீ உன்னை ஓர் அபூர்வப்பிறவி என்று எண்ணுகிறாய். எல்லாருக்கும் அதுதான் எண்ணம். உலகில் பிரச்சினையே அதுதான், அகம்”
சன்னிதானம் மிக்க மகிழ்வோடு என்னை சீடனாக ஏற்றுகொள்வார் என எண்ணியிருந்தேன். எனக்கு பீதிகிளம்பியது. “என்னை யாருக்குமே பிடிக்கவில்லை …எவருமே என்னைப் புரிந்துகொள்ளவில்லை எல்லாருக்கும் என் மீது ஏளனம்”
“உன்னில் சில விசேஷமான திறமைகள் இருக்கலாம், அதற்காக நீயே உலகின் மையம் என எண்ணிக் கொள்ளவேண்டியதில்லை”
“நான் அப்படி எண்ணவில்லை”
“சரி” என்றார் சிந்தித்தபடி. “உன் அம்மா அப்பா இப்போது என்ன நிலையில் இருப்பார்கள் தெரியுமா?”
என் மனம் அடைத்தது. தலைகுனிந்தேன்.
“திரும்பிப்போ அதுதான் நல்லது.”
“மாட்டேன்”
“பின்னே?”
“எனக்கு நிறையப் படிக்கவேண்டும் என்று ஆசை. ஊரெல்லாம் சுற்றிப் பார்க்கவேண்டும். கங்கையைப் பார்க்கவேண்டும். கங்கைக் கரையில் அலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்கவேண்டும்.”
அறைவாசலில் ஒரு இளம்பண்டாரம் தென்பட்டார். அவரைப் பார்த்ததும் சன்னிதானம் எழுந்தது “என்னால் அதிக நேரம் உட்கார்ந்திருக்கமுடியாது, காலில் தாங்கமுடியாத வலி” என்றார்
“காலில் என்ன?”
“காங்கரின் என்கிறார்கள். ஏதோ ஆணி அல்லது விஷமுள் குத்தியிருக்கலாம் என்கிறார்கள். சரியாகப் போய்விடும்”
நானும் எழுந்தேன்.
“உன் கனவின் மிச்சத்தை நான் சொல்லட்டுமா?” என்றது சன்னிதானம் விஷப் புன்னகையுடன் “கங்கைக் கரையில் உனக்கு ஒரு குரு கிடைக்கிறார், அவர் உன்னை ஒருமகாத்மாவாக ஆக்குகிறார். பிறகு நீ ஊருக்குள் வருகிறாய். ஜனங்கள்கூட்டம் கூட்டமாக உன்காலில் விழுகிறார்கள்.” தன் காலை சுட்டிக்காட்டி “அந்தக் கால் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? ஹெ ஹெ ஹெ ஹெ” முடிப்புதருக்குள் வெறியும் உற்சாகமுமாகக் கண்கள் மின்னின.
“இந்தக் காலைப் பார்த்தால் உனக்குக் குழப்பமாக இல்லையா?”
“என்ன?”
“மடாதிபதி, பெரிய பண்டிதன், ஞானி இப்படியெல்லாம் எண்ணித்தான் இங்கு வந்திருப்பாய் இல்லையா? நான் ஞானி இல்லை ரோகி என்று தெரிந்தபோது அதிர்ச்சி ஏற்படவில்லையா?”
சங்கடமாக உதவிப் பண்டாரத்தை பார்த்தேன் கழற்றிக்கொள் என்று கண்ணைக்காட்டியது அது.
“பயப்படாதே ஞானிக்கும் பேதைக்கும் ரோகம் ஒன்றுதான். ஞானிக்கு வலிகொஞ்சம் அதிகம். ஹெ ஹெ ஹெ ஹெ”
உள்ளூர ஆடிப்போய்விட்டேன். எப்படி அந்த உள்நடுக்கத்திலும் அங்கு சிலநாட்கள் தங்க முடிந்தது என்பது எனக்கு இப்போதும் வியப்புதான். பெரிய புராதனமான மரக்கட்டிடம் அது. சதா உளுத்து உதிர்ந்து கொண்டிருந்தது. எங்கும் மண்போல உளுப்பல் குவிந்து கிடந்தது. அறைகளில் அரைமணிநேரம் கூட அசையாமல் அமர முடியாது. உத்தரம் உளுத்து உதிரும் மரத்தூள் உடம்பை மூடிவிடும். மரத்தில் துளைத்து குடியேறிய புழுக்களில் கிரீச்சிடல் விடாது ஒலிக்கும்.
பகலில் வண்டுகள் மெளனத்தை அதிரச்செய்தபடி ரீங்கரித்து வட்டமிட்டுப் பறந்தன. குளவிகளும் வேட்டுவாளிகளும் இஷ்டத்துக்கு இருந்தன. புழுப்பூச்சிகளின் பெரியதோர் உலகமே இருந்தது. இதுதவிர இரவு பகல் எந்நேரமும் எலிகள் கீச் கீச் என்று ஒலித்தபடி மச்சுமீது தடதடத்து ஓடின. கட்டிடத்தில் பாதிப்பங்கு அறைகள் புழக்கமில்லாது மூடிக்கிடந்தன. அந்த அறைகளின் நாடித்துடிப்பு போல அங்கிருந்து வவ்வால் சிறகடிப்பு கேட்டது. அங்கு வந்துபோகும் மனிதர்கள் கூட இக உலகத்துக்குத் தொடர்பற்ற சரித்திரகாலக் கதாபாத்திரங்கள் போலிருந்தார்கள்.
அங்கு தங்கியிருந்த நாட்களில் அனேகமாக தினமும் சன்னிதானத்தை சந்தித்தேன். பெரும்பாலும் சுவடி அறையில். மடத்தின் மேற்கு மூலையில் கிட்டத்தட்ட ஒரு நிலவறைபோல இருந்தது அது. அதற்குள் முழுக்க சுவடிகள் பெட்டி பெட்டியாக நிரம்பியிருந்தன. ஒரு மதியம் தான் நான் முதல்முறையாக அங்கு அழைக்கப்பட்டேன். உள்ளே குத்து விளக்கு எரிந்தது. சன்னிதானம் நடுநாயகமாக ஸ்டூல் மீது அமர்ந்து ஏதோ சுவடியை பரிசோதித்துக் கொண்டிருந்தது அவரது நிழல் சுவரில் பெரிதாக விழுந்திருந்தது. அங்கு தூசுமணமே பிரதானமாக இருந்தது. சுவடிகள் செல்லரித்தும் சிதைந்தும் குப்பைபோலக் குவிந்துகிடந்தன.
சன்னிதானம் என்னிடம் “உட்கார்“ என்றது. தயங்கினேன், தரைமுழுக்கக் கரையான்கள் பிலுபிலுவென அலைந்தன. தூசு படலமாகப் படிந்திருந்தது. “பரவாயில்லை உட்கார் ஏட்டுச் சுவடிகளின் தூசுதானே? போகப் போக இதைப்போல மணம் வேறு ஏதும் இல்லை என்று எண்ண ஆரம்பித்து விடுவாய். உனக்குத் தெரியுமா தூசு இல்லாத புத்தகமோ சுவடியோ படித்தால் படிக்கும் போதையே எனக்கு வருவது இல்லை.”
நான் கல்லறைக்குள் புதையுண்டவனாக உணர்ந்தேன். தலைக்குமேல் நூற்றாண்டுகள் தாண்டிச் சென்று விட்டன.
குருமகாசன்னிதானம் தலையைச் சொறிந்தபடி ஒரு ஏட்டைப் புரட்டியது. திடீரென்று என்னிடம் “சிவஞானபோதத்துக்கு எத்தனை உரைகள்?” என்று கேட்டது. விழித்தேன். பிறகு நினைவு கூர்ந்தேன். தீட்சிதர் உரை மட்டுமே எனக்குத் தெரியும். முதல்பத்துப் பக்கம் படித்திருக்கிறேன். பதி பசுவை பாதிக்கும் விஷயங்கள் என்னைக் குழப்பிவிட்டமையால் மேற்கொண்டு படிக்கும் தைரியம் வரவில்லை அப்போது. அதை அவரிடம் கூறினேன்.
“இங்கே மொத்தம் இருபத்தேழு வித்தியாசமான உரைகள் இருக்கின்றன. சங்கீத சாஸ்திரம், வைத்தியவிளக்கம், சைவ சித்தாந்தம், இலக்கணம் இலக்கியம் என்று ஒரு பத்தாயிரம் கிரந்தங்களாவது இருக்கும்.அதில் பாதியைப் பிறர் கண்ணால் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.”
எனக்கு மனம் அதிர்ந்தது “எல்லாமே செல்லரித்துப் போய்விடுமே” என்று ஏங்கினேன்.
“ஆமாம்” என்று பெருமூச்சு விட்டார்.
“எவ்வளவு புத்தகங்கள்!”
“உனக்கு இந்த அறையையே அப்படியே விழுங்கிவிடவேண்டுமென தோன்றுகிறதல்லவா?”
“ராமபாணம் அதிர்ஷ்டம் செய்த ஜென்மம்!”
“கவிதை! ஹெ ஹெ ஹெ! கவிதை! “
அந்த மாற்றம் என்னைக் குலைநடுங்கச் செய்தது. அந்தச் சிரிப்பை சித்த சுவாதீனமுள்ள ஒருமனம் எழுப்பமுடியாது. பார்வையை விலக்கி வெளியேறும் வழியை கவலையுடன் ஒரு முறை கவனித்துக் கொண்டேன்.
“வெட்கப்படாதே. கவிதை நன்றாகவே இருக்கிறது. கவிதை எழுது ஆனால் கவிதையும் சன்யாசமும் ஒருபோதும் சேர்ந்து போகாது”
“ஏன்?”
“அது வேறு, இது வேறு. அது கனவு இது யதார்த்தம். உன்னைக் கண்டால் கண்வாசிரமத்து சகுந்தலை போலிருக்கிறது.”
புன்னகை புரிந்தேன்.
“காமத்தைக் கண்டு ரொம்ப பயப்படுகிறாய் இல்லையா?”
“கடவுளே” என்றேன் உள்ளுக்குள்.
“கவிதை எழுதுகிறவனெல்லாம் அப்படித்தான். ஒன்று நாய் மாதிரி நக்கி அலைவான்கள், அல்லது பயந்து சாகிறது. எனக்குக் கவிதையும் பிடிக்காது, கவிஞர்களையும் பிடிக்காது. என்னுடைய குருமகாசன்னிதானத்துக்கும் அப்படித்தான்.”
“உங்கள் குருவா?”
“ஆமாம். பெரியபண்டிதர். என்னுடைய பன்னிரண்டாவது வயதில் இதை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது நானும் உன்னைப்போலவே ஆசைப்பட்டேன்.” சன்னிதானம் பெருமூச்சு விட்டார். “ஆனால் நான் உன்னைப் போலக் கனவு காணும் ஆசாமி இல்லை. கனவு காண்பவன் யதார்த்தத்தை பயப்படுவான். பாதியில் விட்டுவிட்டு ஓடுவான். நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?”
“குருமகா சன்னிதானம் இந்த அறையைக் காட்டினார்”
“ஆமாம் காட்டினார். ஒன்று இரண்டு அல்ல முப்பது வருடம் இந்த சுவடிகளைப் படித்து ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பிரதி எடுத்திருக்கிறேன். என் குருமகா சன்னிதானம் பெரிய அறிவாளி. யோகி என்று சொல்ல மாட்டேன். அவரோடு பாதி கிரந்தங்கள் போய்விட்டன, நான் படிப்பதற்கு முன்பே”
“முக்கியமானவற்றை மட்டும் தேர்வு செய்து பிரதியெடுத்து வைக்கலாமே?”
“வாசித்தவர்தானே சொல்லமுடியும் எது முக்கியம் என்று? அப்புறம் இந்த உரை வியாக்கியானங்கள்…. குரு மகா சன்னிதானம் கற்றதெல்லாம் வீணாகப் போயிற்றே என்று உருகியபடிதான் சமாதியானார்”
குருமகாசன்னிதானம் சுவடிக்கட்டை வீசியது “அப்புறம் எனக்கு சந்தேகங்கள் வர ஆரம்பித்தன. எந்தக் கருத்து எந்த கிரந்தத்தில் என்று. அதற்கு எதிர்க்கருத்து எந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று. இங்கு விலாவரியான அடுக்கு இல்லை பார். ஆத்திரத்தில் ஒன்றைத் தேடினால் ஒன்பது கிரந்தங்கள் கலைந்து போகும். நானும் ராப்பகலாக ஒப்பிட்டு ஆராய்ந்து வருடங்களை செலவிட்டிருக்கிறேன். கடைசியில் பார்த்தால் இப்போது இதற்குள் உருப்படியாய் ஒரு கிரந்தம் கூட இல்லை. எல்லாம் கூடிக்கலந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல்… இனி இதிலிருந்து ஒரு கிரந்தத்தை முழுசாக எடுப்பது மிகவும் கஷ்டம். எந்தச் சுவடி எந்த நூலுக்குரியது என்று எப்படித் தெரியும்? என்னால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். நான் இங்கே வந்தால் அழுதபடிதான் திரும்பிப்போவேன். திருமந்திரம் எடுத்தால் நடுவே மதங்க சாஸ்திரம். எப்படியிருக்கும் மனசுக்கு? நீயே சொல்லு. ஆனால் என்னால் இங்கு தினமும் வராமலும் இருக்க முடியாது. இந்தத் தூசு மணம்தான் என் வாழ்வில் பெரிய சந்தோஷம்.” பண்டார சன்னிதி பெருமூச்சுவிட்டது. “ஆத்திரத்தில் சிலசமயம் எல்லாவற்றையும் போட்டுக் கொளுத்திவிடலாம் என்றுகூட பற்றிக் கொண்டுவரும்.”
“புதிய பண்டாரங்களிடம் சொல்லக் கூடாதோ?”
“எவனுக்கு மண்டை இருக்கிறது? சோற்றுக்கு வழியில்லாதவனெல்லாம் இங்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள். சின்னவரிடம் காட்டினேன் அவருக்கு இதெல்லாம் ஏதோ அசிங்கமான இடம் போலத் தோன்றுகிறது, மூக்கைப் பிடித்தபடி வருகிறார். இங்கிருந்துதான் மடம் முழுக்க சிதல் பரவுகிறதாம், பெரிய கண்டுபிடிப்பு! கட்டிடம் பழைய கட்டிடம். மட்காமலிருக்குமா? அகண்ட சக்தியின் பசியடங்காத உதரமல்லவா இந்த பூமி? அதில் பாறைகூட மட்கும் தெரியுமா? உனக்குக் கல்லூரியிலே என்ன பாடம்?”
“பி காம்” என்றேன். அவருடைய கண்கள் என்னை உள்ளூர நடுங்கச் செய்தன. தனி அறை. கொன்று போட்டால் கூடக் கேட்பாரில்லை. எப்படி வெளியேறுவது? அதே சமயம் அவருடைய பேச்சு அடிக்கடி என் மூளையை சொடுக்கியது. அந்தப் போதை என்னை மீள விரும்பாதபடி இழுத்தது.
“அப்படியென்றால்?” என்றார்.
“கணக்கெழுத்து”
“அடாடா அதுதான் ஓடிவந்துவிட்டாயா?”
“ஆமாம்” என்றேன், என் தவிப்பு அதிகரித்தது.
“நிறைய படிப்பாயோ?”
“கொஞ்சம்”
“என்னென்ன?”
“கவிதைகள், அப்புறம் விவேகானந்தர்”
“விவேகானந்தனா? அவன் யோகியோ ஞானியோ இல்லை. அறிவாளி, பேசத்தெரிந்தவன். விற்கத்தெரிந்தவன்..”
“ஏன்!” என்றேன் கோபத்துடன், அதே சமயம் விவாதம் செய்து பயனில்லை என்றது என் உள்மனம்.
“அவன் சைவத்தையும் வைணவத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்கிறான்? இரண்டும் வெவேறு வழிகள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறான்? அவனுக்கு மக்கள் ஆதரவு தேவை. அதற்காக அரசியல் பேசுகிறான்”
“இரண்டும் ஹிந்து மதம்தானே?”
“ஹிந்து மதமா? ஹெ ஹெ ஹெ ஹெ அப்படி ஒரு மதம் உண்டா? நான் கேள்விப்பட்டதே இல்லையே? ஹெ ஹெ ஹெஹெ இதோபார், ஒப்பிட்டால் ஒரே மதம் தான் சரியான மதம் அது சைவ மதம். விவேகானந்தன் உண்மையை உணர முடியாத வெறும் பண்டிதன்.”
“அப்படியானால் ஞானி யார்?”
“அசாதாரண மனிதர்களிலே இரண்டு வகைதான். யோகியும் அறிவாளியும். பயத்தை வென்றவன் யோகி. மண்ணில் எவனுமே ஞானி இல்லை.”
“எப்படி?”
“மனிதனுக்கு மனிதத்தன்மை என்ற ஒன்றும் உடம்பு என்ற ஒன்றும் அவ்வுடம்பின் உறுப்புகளான பொறிகளும் அவை தரும் அறிவும் உள்ளவரை ஞானம் என்பது முழுமையடையவே முடியாது. தன் உடம்பே சகலத்துக்கும் அளவுகோல் எவனுக்கும். பெருவெளிக்கு முன் உடம்பு என்பது அற்பத்திற்கும் அற்பம். அப்படியிருக்க முழுமை ஞானமாவது உலக்கையாவது. நான் இதைப்பற்றியெல்லாம் ஏராளமாக யோசித்திருக்கிறேன், அப்புறம் விட்டுவிட்டேன். அகண்ட வடிவமான சத்தியம் மனிதப்பிரக்ஞையின் வடிவத்துக்கு ஒருபோதும் மாறாது. உனக்கு ஆங்கிலம் தெரியுமா?”
“கொஞ்சம்..”
“ஆங்கிலத்திலே நிறையப் படிக்கும்படியான புத்தகங்கள் உள்ளனவா?”
“எதற்கு சைவம்தானே சிகரம்?”
சட்டென்று குருமகா சன்னிதானம் கோபம் கொண்டார் “ஆமாம் சந்தேகமா உனக்கு? ஆங்கிலேய ஞானம் பூரணமல்ல என்று நிரூபித்துக் காட்டத்தான் அதைப் படிக்கவேண்டுமென்று சொல்கிறேன். நீ இந்த சுவடிகளை எடுத்துக் கொள்.”
“எதற்கு?”
“வெந்நீர் போட்டுக் குளிக்க முட்டாள்!”
நான் வயிறு ஜில்லிட எழப் போனேன்.
குருமகா சன்னிதானத்தின் நெற்றி நரம்பு அசைந்தது ஒரு கணத்தில் சமாதானமாகி “பயப்படாதே” என்றார். “எனக்கு மனநிலை சரியில்லை என்றுபயப்படுகிறாய் அல்லவா?”
“இல்லை” என்றேன் பயத்துடன்.
“வலிக்காக பெத்தடின் பயன்படுத்துகிறேன். பயப்பட வேண்டாம். நீ இவற்றைத் தொகுத்து புத்தகங்களாகப் பிரசுரம் செய்”
“ஆனால் எனக்குத் தெரியாதே, எந்தச் சுவடி எந்தப் புத்தகம் என்று?”
“உண்மைதான். அது எனக்கு மட்டும்தான் தெரியும். இவற்றைப் புத்தகமாகப் போட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். மடமும் வம்பும் வழக்கும்.. வயதான காலத்திலே இந்த உபாதை வேறு. இப்போது இப்படி வீங்கிவிட்டதனால் கொஞ்சம் பரவாயில்லை. காலையில் சீழ் எடுக்கும்போது ஒருமணிநேர இம்சை. பிறகு மெல்ல சரியாகிவிடும். அப்புறம் ராத்திரியிலேதான் வலி..”
அந்த பேச்சைத் தவிர்க்க விரும்பினேன். ஒரு சுவடிக்கட்டை எட்டி எடுத்தேன். மரப்பெட்டிக்குள் ஒரு அடுக்குக்குக் கீழே மண்.
“பாதி சுவடிகள் அப்படித்தான் இருக்கும்” என்றார்.
“செல்லரிக்காத சுவடிகளை எழுதி வைத்துவிடவேண்டும். எப்போதாவது பிரசுரிக்கலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்றேன்.
மகாசன்னிதானம் கண்கள்மின்ன “உண்மையாகவா சொல்கிறாய்?” என்றார். “நீ எழுதுவாயா?”
“எழுதுகிறேன். ஆனால் நூல்களை அடுக்கவேண்டுமே..”
“நான் என் நினைவிலிருந்துகூடக் கூற முடியும். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் நீ இங்கே இருக்கவேண்டும்.ஒரு ஆறுமாதம். போதும்…”
“எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கிறேன்”
“உன் அப்பாவின் விலாசம் சொல்லு நான் அவருக்கு எழுதுகிறேன். நான் அவருக்குக் கடிதம் போடுகிறேன். அவர் நான் சொன்னால் கேட்பார்”
“அப்பா- அப்பாவுக்கு நானே எழுதுகிறேன்..”
“சரி” என்றார் அவர். அதை முக்கியமாகக் கருதவில்லை என்று தெரிந்தது.
குத்துவிளக்கு கருகத் தொடங்கியது.
“போவோமா?” என்றார்.
குத்து விளக்கை எடுக்கப் போனேன். “வேண்டாம் அணைத்துவிடு” என்றார். ஊதினேன். திரி கருகும் மணம் சுவடிப்புழுதி மணத்தை அழித்தது.
கிளம்பும்போது நான் அவரைத் தூக்கி விடவேண்டியிருந்தது. அவருடைய பெரியகால் என்மீது பட்டது. என் உடம்பு கூச்சத்தால் சுருங்கிப் போயிற்று. அவர் அதை உணரவில்லை. தன் உடம்பின் அசிங்கம் எந்த மனிதனுக்கும் புலனாவதில்லை. நான் அன்று வெகுநேரம் குளித்தேன். இருந்தும் என் மனம் புரட்டிக் கொண்டிருந்தது. சாப்பிடும்போது வாந்தி குமுறி எழுந்தது. அவர் உருவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் சீழ்வாடை நாசியைத் தாக்கியது.
முத்துவிடம் “இப்போதைய பண்டார சன்னிதி எங்கே?” என்றேன்.
“சதா ஊர்சுற்றல்தான்” என்றார். இப்போது சென்னையிலிருக்கக் கூடுமாம். பெரிய இடத்துப் பையன்களுடன் சகவாசம். பண்டாரத்துக்கு இது சரிவருமா? “நாம் எப்படி சொல்ல முடியும்? அவராயிற்று சீடர்களாயிற்று, மடமாயிற்று”
“நீங்களும் சீடர்தானே?”
“நானா? நல்ல கதை நமக்கு சோறு கண்ட இடம் சொந்த இடம்”
“பாயாசமும் இருந்தால் சாட்சாத் கைலாசம்தான்” என்றார் அப்பையர். முத்து உற்சாகமாகத் தலையை உருட்டியபடி சிரித்தார்.
மடம் மிகவும் மாறியிருந்தது. நிறைய அறைகளை இடித்துப் புதிதாகக் கட்டியிருந்தார்கள். சிமிட்டி பூசப்பட்ட சுவர்கள். ஆனால் கதவுகள் அதே சரித்திரகாலக் களையுடன் இருந்தன. அலங்கார உத்தரங்களில் குழல்விளக்குகள். வார்னீஷ் வாடை. பிளாஸ்டிக் பக்கெட்டும் பித்தளை உத்தரணியும் என்று ஒரே குழப்பமாக இருந்தது. சுவடிகள் என்ன ஆயின என்று அப்பையரிடம் கேட்டேன். பெரிய பண்டாரம் அவற்றைத் தன்னுடன் சேர்த்து சிதையில் வைத்துவிட ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். சுவடி அறையில்தான் இப்போது மடத்தின் ஜெனரேட்டர் இருக்கிறதாம். “புது குருமகா சன்னிதானம் ஏஸி இல்லாமல் தூங்காது.”
மகாசன்னிதானத்தின் கால் அன்று மடம் முழுக்க இருப்புணர்த்தியிருந்ததாக எனக்குப்பட்டது. சீழ்வாடை நாளாக ஆக என்னை அதிகமாகத் தாக்க ஆரம்பித்தது. சோற்றில் குடிநீரில் காற்றில் சீழ்வாடை ததும்பியிருந்தது. மொத்தக் கட்டிடமே சீழ் பிடித்து அழுகிக் கொண்டிருப்பது போல இருந்தது. சன்னிதானமோ என் மீது மேலும் பிரியத்தைக் கொட்ட ஆரம்பித்தது. அவர் கேட்டுக் கொள்ளும்போதெல்லாம் அவரது படுக்கையருகே சென்று அமர்ந்து கொள்வதுதான் எனக்குப் பெரிய இம்சையாக இருந்தது.
அந்த காலைத் துண்டித்துவிடக்கூடாதா என்று அன்றொருநாள் அப்பையரிடம் கேட்டேன். வேறு யாரிடமாவது கேட்டுத் தொலைக்காதே என்றார் அவர். ஆரம்பத்தில் கட்டைவிரலில் சிறிய ரணமாகத்தான் இருந்ததாம். சர்க்கரை வியாதிவேறு. அது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஏதாவது விஷமுள் குத்தியிருக்கலாம். கட்டைவிரலை எடுத்துவிடவேண்டும் என்றார் டாக்டர், ஆனால் சன்னிதானம் சம்மதிக்கவில்லை. கெஞ்சாத ஆள் இல்லை. பிரயோசனமில்லை.
சீழ் பரவி மேலேறியபோது ஆரம்பகட்டத்தில் அவர் போட்ட அலறலில் மடத்துச் சுவர்கள் இரவுபகல் அதிருமாம். தூங்குவதற்கு மற்றவர்கள் வேறு இடத்துக்குப் போய்விடுவார்களாம். பிறகுதான் அபினும் கஞ்சாவும் கடைசியில் பெத்தடினும் தர ஆரம்பித்தது. மட்டுமல்ல, வலியும் இம்சையும் அவருக்கும், அலறலும் கூக்குரலும் மற்றவர்களுக்கும் பழகிபோய்விட்டனவாம். “பெரிய சன்னிதானம் காலை இழக்க மறுத்துவிட்டதற்கு என காரணம் தெரியுமா?” என்று அப்பையர் என் காதில் கேட்டார். “அங்கவீனன் மடாதிபதியாக இருக்கக் கூடாது என்று சாஸ்திரம் இருக்கிறது”
அதன் பிறகு இரண்டுநாள் கழித்து நான் மடத்தை விட்டு ஓடிப்போனேன். நள்ளிரவில். பகலில் யாரும் காணாமல் போக முடிந்திருக்காது. பெரிய சன்னிதானத்திடம் விடைபெற்றுப் போவது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று. மடத்தின் முன்வாசலை நான் இரவில் ரகசியமாகத் திறந்தபோது அது கூச்சலிட்டது. என் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. இருளில் எங்கோ ஒரு பூனையின் வினோதமான உறுமல்.- அல்லது அழுகை -கேட்டபடி இருந்தது. கதவைமெல்லத் திறந்தேன். குளிர்ந்த காற்று சட்டென்று விடுதலை உணர்வை அளித்தது. மெல்ல வெளியே காலடி எடுத்து வைத்தேன். திடீரென்று அந்த உறுமல் ஒலியுடன் சில வார்த்தைகளும் கேட்டன.
சட்டென்று நான் அதை அறிந்தேன். அது சன்னிதானத்தின் குரல். கடவுளே தினம் இரவுதோறும் நான் அரைத்தூக்கத்தில் கேட்ட ஒலி இதுதானா? என் முதுகெலும்பு சொடுக்கிக் கொண்டது. அங்கே அப்படியே நின்று தவித்தேன். பண்டார சன்னிதியை சிச்ருஷை செய்தபடி அவருக்கு அன்பையும் கனிவையும் அளித்தபடி அங்கேயே தங்கினேன். அவருடைய இறுதிக் கணங்களில் உடனிருந்தேன். அவர் கண்களில் நீர் வடிய என் மடியில் தலைவைத்தவராக எனக்கு ஆசியளித்தபடி உயிர்துறந்தார். அவர் பெரிதும் விரும்பியிருந்த இறுதிக்கிரியைகளை அவருக்காக நான் ஆற்றினேன்.
அத்தனையும் ஓரிரு நொடிகளுக்குள் முடிந்து அங்கேயே நின்றிருந்தேன். அந்த முனகல் அப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. போவதா வேண்டாமா என்று நான் தடுமாறும்போது அந்த உக்கிரமான வலிக்கூச்சல் என்னை அதிரச்செய்தது. அக்கணமே அங்கிருந்து ஓடித் திறந்தவெளியை அடைந்துவிடவேண்டும் என என் மனம் கூவியது. இருட்டில் கண்மூடித்தனமாக இறங்கி ஓடினேன். முற்றத்தில் இருட்டோடு இருட்டாகப் படுத்திருந்த கரிய பசு மீது முட்டிக் கொண்டேன். விழவில்லை. அது புஸ்ஸ் என்று சீறியது. திடுக்கிட வைக்குமளவுக்கு அதன் கண்கள் மினுங்கின. அது எழ முயலவில்லை, இருட்டுக்குப் பழகிப்போன ஜீவன்…
தார்ச்சாலையை அடைந்தபின்பே என் மூச்சு திரும்ப வந்தது. திரும்பிப் பார்த்தபோது கட்டிடம் நிழலாகத் தெரிந்தது. அதன்மீது ஏறி சடைபறக்க நடனமிடும் ராட்சசி போல ஆலமரம்.
பெரியபண்டார சன்னிதி கடைசியில் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் உயிர்துறந்தார் என்று முத்து கூறினார். நரம்புகளை சீழ் எட்டிவிட்டதாம். மூளையும் தாறுமாறாகிவிட்டது. கடைசி சில மாதங்கள் உடம்பெல்லாம் ரத்தக் குழாய்கள் புடைத்து, நீலம் பாரித்து, சதைகள் முறுக்கிக் கொள்ள, இம்சையின் எல்லையில் துடித்தாராம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவில்லை. வெளியாட்கள் எவரையும் உள்ளே விடவில்லை. மடத்தின் பெயர் கெட வேறென்ன வேண்டும்?
பெரிய பண்டார சன்னிதி படுத்து உயிர்விட்ட டென்னிஸ் மேஜை போல விரிந்த பழங்கால மரக்கட்டிலைப் பார்த்தேன். கொசுவலை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
பிசுக்கு படிந்த கரிய மரச்சாமான்கள் நிரம்பிய பழைய அறை, அங்குதான் கடைசியாக நான் பெரிய சன்னிதானத்தைப் பார்த்தேன், கெளபீனதாரியாகப் படுத்திருந்தது. தலையணைமீது அந்தக் கால் வைக்கப்பட்டிருந்தது. மெலிந்த தேமல் படர்ந்த உடல். சடை தலையணைமீது பரவிக்கிடந்தது. உடம்பு அடிக்கடி வலியால் முறுக்கி நெளிந்தது. நான் வெகுநேரம் நிற்க வேண்டியிருந்தது. பின்பு வலியின் தீவிரத்தில் உதடுகளை அழுந்தக் கடித்தபடி பண்டாரம் என்னை பார்த்தது. பார்த்தபடியே படுத்திருந்தது.
“எதற்குக் கூப்பிட்டார்கள்?”
“ஒன்றுமில்லை” என்றபடி பெருமூச்சு விட்டார். “நீ போய்விடாதே…”
“சரி” என்றேன்.
“இங்கேயே இரு அதிகம் போனால் இனி இரண்டு மாதம், அதற்குள் நான் போய்விடுவேன்”
எனக்கு பயமாக இருந்தது, நான் ஒன்றும் கூறவில்லை அவர் “என்னை இங்கு எவருக்குமே பிடிக்கவில்லை. அன்பு என்பது இங்கு யாருக்குமே தெரியாது. என்னைத் தூக்கிச் சாத்தக் காத்திருக்கிறார்கள்” என்றார்.
நான் நின்று தவித்தேன். என் மனம் உருகிக் கொண்டிருந்தது “நீ இங்கு வந்தது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? ஆனால் நீ புத்திசாலி. புத்திசாலியால் யாரையுமே நேசிக்கமுடியாது. நீமட்டும் சின்னப் பையனாக இருந்தாயென்றால் எத்தனை நன்றாக இருக்கும்! போகரிலே ஒரு லேகியம் சொல்லியிருக்கிறது. முதிர்ச்சியே இல்லாமல் பண்ணிவிடுமாம். அதை சற்று அதிகமாகவே உனக்குத் தந்து சின்னப்பையனாகப் பண்ணிவிடுவேன்..” தத்தளித்த கண்கள் என்மீது படிந்திருந்தன. பித்து தெளியும் கண்கள். என் மனசுக்குள் பரிதாபமும் அருவருப்பும் திகட்டித் திகட்டி வந்தன.
“அன்றைக்கு நீங்கள் ஓடிப் போனீர்கள் என்று தெரிந்ததும் பெரியச்சாமி அழுதார்” என்றார் முத்து. என் மனம் திடுக்கிட்டது. –நான் அதைவிட அதிகமாகவே எதிர்பார்த்தேன் என்றாலும்கூட! சன்னிதானத்தின் மரணத்தைப் பேப்பரில் வாசித்த நாள்முதல் எனக்குள் குடியேறியிருந்த குற்றவுணர்வு தான் அது. ஆனால் அதைப் பிறர் கூறிக்கேட்டபோது ஓங்கி அறையப்பட்டதுபோல உணர்ந்தேன்.
“சிறிய சன்னிதானம் எப்படி?”
“இருக்கு அழுகப்போவது கால் இல்லை”
நான் உள்ளூர பயந்து வந்தது சரிதான். நான் இன்னமும் அவிசுவாசி கூட ஆகவில்லை. அப்படி நம்ப முயன்று கொண்டிருக்கிறேன். விசுவாசத்தை ஊட்டக்கூடியதாக எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இல்லாவிடில் என் மனம் ஏன் துடிக்க வேண்டும்?
விடைபெற்ற போது அப்பையர் வாசல்வரை வந்தார். சிரித்தபடி முகமன் சொன்னார். சீக்கிரமே கலியாணம் செய்துகொள்ளும்படிக் கோரினார். பிறகும் ஏதோ பேசவிரும்புவது போலிருந்தது அவரது முகம்.
“வரட்டுமா” என்றேன், கேளுங்கள் என்ற பொருளில் புன்னகைத்தபடி.
“தம்பியிடம் ஒன்று கேட்கவேண்டும், தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது”
“சொல்லுங்கள்” என்றேன். என் முகம் மாறுதல் அடையத் தொடங்கியிருக்கவேண்டும்.
“அன்றைக்கு ஏன் பயந்து ஓடினீர்கள்?”
நான் யோசித்து “மரணத்தைக் கண்டு பயந்துதான்..” என்றேன்.
அப்பையருக்கு அந்த பதில் திருப்தியைத் தந்திருக்க வேண்டும். “வாங்க” என்றார் அன்புடன்.
விடைபெற்று சாலையில் சற்று தூரம் நடந்தபின்பு திரும்பிப் பார்த்தேன். அப்பையர் அங்கேதான் நின்றிருந்தார். ராட்சசி இப்போதும் மடத்தை அணைத்திருந்தாள்- கைகளாலும் சடைகளாலும்.
நான் பயந்தது மரணத்தை அல்ல. அன்று பெரிய சன்னிதானத்திடம் காலைமுறிக்க சம்மதித்திருக்கலாமே என்றேன். மடாதிபதி ஸ்தானம் போனால் நாய்படாத பாடுபட்டு சாகவேண்டியிருக்கும், ஈமக்கிரியைகள்கூட யாரும் செய்யமாட்டார்கள், அதற்கு இந்த இம்சையே மேல் என்றார். மூச்சிரைத்தபடி கம்மி உடைந்த குரலில் “காலை முறித்துவிட நான் சம்மதிப்பேன் என்று அவன் எண்ணியிருக்கலாம், ஊராரின் பின்பலமும் இருக்கிற தைரியம் அவனுக்கு. விஷம் வைத்துவிட்டான். பாவி! படுபாவி!” என்று விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். “யார்?” என்றேன் குரல் நடுங்க. “சின்ன சன்னிதானம்தான் வேறுயார்?” என்றது பண்டார சன்னிதி.
***