சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னார், தமிழில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய வெளிப்படைப்பாளிகள் மூவர் என. மாப்பசான், கார்க்கி, காண்டேகர். மாப்பசான் புதுமைப்பித்தன், கு.ப.ரா போன்ற ஆரம்பகால நவீனத்துவப் படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தார். ரகுநாதன் ஜெயகாந்தன் முதலியவர்களின் முற்போகு எழுத்துக்களுக்கு கார்க்கி. காண்டேகர் நம்முடைய லட்சியவாத எழுத்துக்களுக்கு.
மராட்டிய எழுத்தாளரான வி.எஸ்.காண்டேகர் தமிழில் பெற்ற மாபெரும் வெற்றி மிக விரிவான ஆய்வுக்குரிய ஒன்றாகும். அவருக்கு ஆஸ்தான மொழிபெயர்ப்பாளராக ஆழ்ந்த புலமையும் மொழியாளுமையும் அயரா உழைப்பும் கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ அமைந்தார். காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியாயின பிறகே மூலமொழியில் வெளியாயின. தமிழில் காண்டேகரின் நூல்களுக்கு மிக அதிகமான வாசகர்கள் உருவாகி ஐம்பது அறுபதுகளில் அவர் இங்கே ஒரு நட்சத்திரமாக எண்ணப்பட்டார். உயர்ந்த இலட்சிய நோக்குள்ள கதாபாத்திரங்கள், இலட்சியவாதக் கருத்துக்கள் மண்டிய நடை, உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றாலானவை காண்டேகரின் படைப்புகள்.
”கையில் ஒரு பென்சில் இல்லாம அவரோட நாவல்களை யாரும் படிக்க மாட்டாங்க. அப்ப்பப பொன்மொழிகளை அண்டர்லைன் பண்ணணுமே.” சுந்தர ராமசாமி சொன்னார். ‘வாழ்க்கை என்பது…’ எனத்தொடங்கி பொன்மொழிக்குவியல்களாக எழுதக்கூடிய தமிழ் எழுத்துமுறை காண்டேகரில் உதயமாயிற்று. அதற்கு மு.வரதராசனார், நா.பார்த்தசாரதி, அகிலன் என வாரிசுகள் பல. இப்போது எஸ்.ராமகிருஷ்ணன் பிரபல இதழ்களில் எழுதும் கட்டுரைகளிலும் கதைகளிலும்கூட அம்முறைதான் கடைப்பிடிக்கப் படுகிறது. படைப்புகளை ஒட்டி கற்பனைசெய்யவோ சிந்திக்கவோ பயிற்சி பெறாத வாசகர்களுக்கான எழுத்து இது. ஆழமான உயர்ந்த விஷயங்களை படிக்கிறோம் என்ற எண்ணம் இதன் மூலம் வாசக மனதில் உருவாகிறது.
காண்டேகரின் இந்த இலட்சியப் பிரச்சார அம்சங்கள் இல்லாத அவரது நாவல் யயாதி. இதன்பொருட்டு அவர் ஞானபீடப்பரிசும் பெற்றார். இது மகாபாரதக் கதையை ஒட்டி எழுதப்பட்ட ஒரு இதிகாச நாவல்.
*
ஒருமுறை சாகித்ய அக்காதமி செயலராக இருந்த பேராசிரியர் இந்திரநாத் சௌதுரி இந்திய மொழிகளில் மகாபாரத நாவல்கள் எவளவு எழுதப்பட்டுள்ளன என்று விரிவாக விளக்கிப்பேசினார். இந்தியாவின் காவிய மரபில் கணிசமான படைப்புகள் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்தவை. காளிதாசனின் சாகுந்தலம் முதல் நமது நளவெண்பா வரை உதாரணமாகச் சொல்லலாம். நவீன இலக்கியத்தின் தொடக்கத்தில் கவிஞர்கள் மீண்டும் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்தனர். பாரதியின் பாஞ்சாலி சபதம் குமாரன் ஆசானின் ‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ உதாரணம். குறிப்பாக சீதை இக்கால கவிதைகளில் பெரும் இடத்தை வகிக்கிறாள்
உரைநடை இலக்கியம் தொடங்கி நாவல்கள் எழுதப்பட்டதுமே மீண்டும் மகாபாரதம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம்.வி.வெங்கட் ராமின் ‘நித்யகன்னி’ புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்றவை உதாரணம். [விரிவான நோக்கில் ராமாயணத்தையும் மகாபாரதத்தின் பகுதியாகக் கொள்வது மரபு] இந்திய மொழிகளில் ஏறத்தாழ 300 மகாபாரத நாவல்கள் உள்ளன என்று பட்டியலிட்ட இந்திரநாத் சௌதுரி இவற்றில் அதிகமாக பேசப்பட்டது கர்ணனின் கதையே என்றார். பி.கெ.பாலகிருஷ்ணனின் மலையாளநாவலான ‘இனி நான் உறங்கலாமா?” [தமிழாக்கம் ஆ.மாதவன்.சாகித்ய அக்காதமி பிரசுரம்] எஸ்.எல்.பைரப்பாவின் கன்னட நாவலான ‘பருவம்’ [தமிழாக்கம் பாவண்ணன்.சாகித்ய அக்காதமி பிரசுரம்] ஆகியவை தமிழில் கிடைக்கும் கர்ணனைப்பற்றிய நாவல்களில் முக்கியமானவை.
ஏன் மகாபாரதம் மீண்டும் மீண்டும் ஆக்கப்படுகிறது? மகாபாரதம் தர்மம், அதர்மம் என்றால் என்ன என்பதை விவாதிக்கும் நூல். ‘தர்மசாஸ்திரங்களின் தாய்’ என அது சொல்லப்படுகிறது. நம் பொதுப்பிரக்ஞையில் அது ஊறிபோயிருக்கிறது. அன்றாடவாழ்க்கையில் தர்ம -அதர்ம விவாதத்துக்கு இந்தியாவெங்கும் மகாபாரதக் கதாபாத்திரங்களும் நிகழ்ச்சிகளுமே இந்நிமிடம்வரை உதாரணமாகக் கருதப்படுகின்றன.காரணம் நம் பௌராணிக மரபாலும் நாட்டார் மரபாலும் மகாபாரதக் கதை மீண்டும் மீண்டும் கூறப்பட்டு பொதுமனதில் மிக அழுத்தமாகப் பதிவுபெற்றிருக்கிறது. மகாபாரதத்தின் எல்லா அம்சங்களும் நம் கலாச்சாரத்தில் ஆழ்படிமங்களாக உள்ளன.
இந்நிலையில் தர்ம -அதர்மங்களை மீண்டும் பேசி நிறுவவோ மறுபரிசீலனைசெய்யவோ விரும்பும் ஆசிரியர்களுக்கு மகாபாரதம் மிக அழுத்தமான படிமங்களின் தொகையை அளிக்கிறது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்ற எண்ணத்தை ஒரு மகாபாரதக் கதாபாத்திரம் சொல்லும்போது அதற்கு ஒரு காலாதீத அழுத்தம் விழுகிறது. தர்ம ரூபனான ராமன் ஏன் பெண்ணுக்குமட்டும் நீதி செய்யவில்லை என்ற குமாரனாசானின் சீதையின் கேள்வி மதிப்பிடுகளை மறுபரிசீலனை செய்கிறது. தனிமனிதனின் அடையாலம் மற்றும் தர்மசங்கடம் பற்றிய சிந்தனைகள் இங்கே வேரூன்றியபோது கர்ணன் பேருருவம் பெற்றான். பி.கெ.பாலகிருஷ்ணனின் நாவல் ஒரு இருத்தலிய படைப்பாகவே கருதப்படுகிறது.
மகாபாரதத்தை அடிப்படை மதிப்பிடுகளை பரிசீலனை செய்வதற்காக மறு ஆக்கம் செய்யும்போதே அது அந்த மாகாவியத்துக்கு நியாயம் செய்வதாக ஆகிறது. மாறாக வியாசனின் காலகட்டத்து அரசியல் ஒழுக்க மதிப்பிடுகளை விமரிசிக்க அதைப் பயன்படுத்துவதென்பது மிக மேலோட்டமான செயலாகும். காரணம் வியாசனே இந்த விமரிசங்களையெல்லாம் உட்பொதிந்துதான் தன் காப்பியத்தை உருவாக்கியுள்ளான். எந்தக் குரலையும் மழுப்பாத பெரும்பார்வை கொண்டவன் அவன். அதில் அரசநீதியும் காட்டாளனின் நியாயமும் ஆண்மையின் அறமும் ஒடுக்கப்பட்ட பெண்மையின் நியாயமும் வைதீக விழுமியங்களும் சார்வாகனின் குரலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. ஒன்றை மட்டும் மேலோங்கச்செய்து உள்சிக்கல் நிரம்பிய மகாபாரதத்தை தட்டையாக்குவதையே இத்தகைய படைப்புகள் செய்கின்றன.
ஐராவதி கார்வேயின் ‘ஒரு யுகத்தின் முடிவு’ [தமிழாக்கம் அழகியசிங்கர்] முதல் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘அரவான்’ வரையிலான ஆக்கங்கள் இத்தகையவை. இவை மகாபாரதத்தை ஒரு எளிய அரசியல் நூலாகக் கண்டு மேலோட்டமாக தேடி தங்களுக்குரிய ஒருதரப்பைக் கண்டுபிடித்து முன்வைக்கின்றன அவ்வளவுதான். இத்தகைய ஆக்கங்கள் உருவாவதற்குக் காரணம் வாழ்க்கை நுட்பங்களை கவனிக்காத அரசியல்மனம் கொண்ட ரசிகர்களுக்கு இவை புரிந்துகொள்ள எளிதாக இருக்கின்றன என்பதே.
காண்டேகரின் யயாதி மாறிவரும் வாழ்க்கைஓட்டத்தில் மாறாத ஒழுக்க நெறி என ஏதும் உண்டா, அதன் அற அடிப்படை என்ன என்று மகாபாரதத்தை வைத்து ஆராய்கிறது. அதனாலேயே அது ஒரு செவ்வியல் படைப்பு என்னும் தகுதியை அடைகிறது.
*
மகாபாரதத்தில் உள்ள யயாதியின் கதையின் விரிவான சித்தரிப்பு இந்நாவல். யயாதி, தேவயானி, சர்மிஷ்டை, புரு ஆகியோரே மாறிமாறிக்கதை சொல்வதுபோல் அமைந்துள்ளது. நகுஷமன்னனின் மகன் யயாதி. நகுஷன் தேவருலகை வென்றான். இந்திராணியை ஆசைநாயகியாக்க வேண்டுமென்று ஆசைப்படவைத்தது அந்த வெற்றித்திமிர். இந்திராணி ஒரு நிபந்தனை விதித்தாள். முனிவர்கள் சுமந்துகொண்டுவரும் பல்லக்கில் அவர் அவளிடம் வரவேண்டும். முனிவர்களைப் பல்லக்கு தூக்க வைத்தான் நகுலன். காமவெறியில் மெல்ல நடந்த அகத்தியரின் தலையை உதைத்தான். அவர் சாபமிட்டார், நகுஷனின் வம்சத்தில் எவருக்குமே மனமகிழ்ச்சி கைகூடாமலிருப்பதாக.
ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை என்ற சாபத்துடன் யயாதி பிறக்கிறான். எல்லாவகையான உலகியல் இன்பங்களையும் அடையும் இடத்திலிருக்கும் மாமன்னனின் மகன். அவன் அண்ணா யதி சிறுவயதிலேயே துறவியாகி காட்டுக்குச் சென்றுவிட்டிருக்கிறான்.யயாதியும் துறவியாகிவிடக்கூடாது என்று தாயும் தந்தையும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு அவன் தந்தை சிறுவயதிலேயே ஒரு மனநிலையை ஊட்டுகிறார் — கவிஞர்களால் இன்பங்களைப்பற்றி கற்பனைசெய்யவே முடியும் அனைத்தையும் அனுபவிப்பவன் வீரன் மட்டுமே. ஆகவே வீரனாக எவராலும் வெல்லப்படாதவனாக யயாதி வளர்கிறான்.
முதலில் வெற்றியின் சுவையை அகங்காரத்தின் இன்பத்தை யயாதி வேண்டுமளவுக்கு அனுபவிக்கிறான். ”மன்னாதி மன்னர்களும் என் முன் உருண்டுபுரண்டபோதும் நான் நான் என்று கொக்கரித்த வீரர்கள் அபயம் அபயம் என்று சொல்லி வாயில் தர்ப்பையுடன் என்முன் சரண்அடைந்தபோதும் நான் ஆனந்தத்தின் உச்சியை எட்டினேன் ”
ஆனால் அந்த ஆனந்தம் நிலைக்கவில்லை. அஸ்வமேதயாகம் செய்யும் அவன் தன் அண்ணனைக் காட்டில் சந்திக்கிறான். குலசாபத்தை அறிகிறான். மன்னனாக துயரத்தில் உழல்வதைவிட மேலானது ரிஷியாக காட்டில் வாழ்வது என அவ்வாழ்வை தேர்வுசெய்தவன் யதி. அங்கே வெற்றி என்பதன் எல்லையை யயாதி காண்கிறான்’ உடல் என்பதே மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி. அதை வெல்ல ஓயாமல் பாடுபடுவதே இந்த உலகில் மனிதனின் கடமை”என கசப்புக்கனிகளை அளிக்கிறான் அண்ணன். இனிப்பு உன்னை நாவுக்கு அடிமைப்படுத்துகிறது என்கிறான். ”நாளை நீ அரசன் ஆவாய். சக்கரவர்த்தி ஆவாய். நூறு அஸ்வமேதவேள்விகள் செய்வாய். ஆனால் ஒன்றைமட்டும் மறந்துவிடாதே. – உலகை வெல்வதுபோல் மனதை வெல்வது எளிதல்ல”
ஆங்கிரீசரின் ஆசிரமத்திற்கு கல்வியின் பொருட்டு செல்லும் அவன் ரிஷியின் மாணவனாகிய கசனை சந்திக்கிறான். ”சூரியனை விடவும் இந்திரனைவிடவும் ஒளிமிக்க குதிரை என்னிடம் இருக்கிறது” என்கிறான் அவன். மனம் அக்குதிரை.’தேவர்கள் குருட்டாம்போக்கில் கேளிக்கையை வழிபடுகிறார்கள். அரக்கர்கள் குருட்டாம்போக்கில் வல்லமையை வழிபடுகிறார்கள். உலகத்தை இன்பமாக ஆக்க இருவராலும் முடியாது. ”
உலகைவென்ற தன் தந்தை நோய்ப்படுக்கையில் தளர்ந்து மரணத்தை அஞ்சி ஓலமிட்டு அழுது சாவதை யயாதி காண்கிறான். ”நன்றி கெட்டவர்களே யாராவது உங்கள் ஆயுளில் கொஞ்சத்தை எனக்குக் கொடுங்கள்!” என்று கெஞ்சுகிறான் நகுஷன். தன் வெற்றியைப் பொறித்த நாணயம் ஒன்றைக்கொண்டு வரச்சொல்லி அந்த எழுத்துக்களைப் படித்தபடிச் சாக விழைகிறான். ஆனால் அவை அவன் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை.
யயாதி காமத்தையும் பெண் உறவையும் அறியும் தருணம் அது. காமம் தன்னை ஆட்கொள்வதை அறிகிறான். முதலில் ஆர்வமும் பரபரப்பும். பின்பு அகந்தையின் நிறைவுக்காகவே காமம் என்றாகிறது. அவன் அறிந்த ஆழமான முதல் உறவு அவனுக்கு முலையூட்டிய தாதியின் மகள். அவள் யயாதியுடன் நெருங்கினாள் என்பதற்காகவே அவன் தாயால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்படுகிறாள். உறவுகளின் குரூர முகம் கண்டு யயாதி அஞ்சி நடுங்குகிறான்
தேவர்-அசுரர் போரை நிறுத்தும் பொருட்டு அசுர குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து உயிர்ப்பிக்கும் மந்திரத்தைக் கற்க கசன் பயணமாகிறான். அவன் அங்கே அசுர குருவின் மகள் தேவயானியை காதலித்து அக்காதலை பயன்படுத்தி அந்த மந்திரத்துடன் தப்புகிறான். புறக்கணிப்பின் குரோதத்துடன் இருக்கும் தேவயானி தன் தந்தை சுக்ராச்சாரியாருடன் விருஷ பர்வா என்ற அசுரமன்னனின் அரண்மனையில் தங்கியிருக்கிறாள். அரசன் மகள் சர்மிஷ்டை அவள் தோழி
சர்மிஷ்டையும் தேவயானியும் நீர்விளையாட்டு ஆடுகையில் உடைகள் மாறிப்போகின்றன. தோழியரின் சண்டை சட்டென்று வலுப்பெறுகிரது. சர்மிஷ்டை தேவயானியை ‘என் தந்தையின் தயவில் வாழும் அனாதைகள் ‘ என்று வைது ஒரு கிணற்றில் தள்ளிவிடுகிறாள். கிணற்றில் கிடக்கும் தேவயானியை அவ்வழியாக வரும் யயாதி காப்பாற்றுகிறான். அவன் தன்னை தொட்டதனால் அவனே தன் மணவாளன் என்று தேவயானி சொல்கிராள். யயாதி சம்மதிக்க நேர்கிறது. சுக்ராச்சாரியார் அவ்விஷயத்தை அறிந்து மகிழ்ந்து அதை ஆசீர்வதிக்கிறார்
ஆனால் தேவயானி சர்மிஷ்டை தன்னை அவமதித்த விஷயத்தைச் சொல்லி சுக்ராச்சாரியாரைத் தூண்டிவிடுகிறாள். சினம் கொண்ட அவரை சமாதானம் செய்ய மன்னன் தன் மகள் என்ன பிராயச்சித்தம் வேண்டுமானாலும் செய்வாள் என்கிறார். தேவயானி சர்மிஷ்டை தன் பணிப்பெண்ணாக வரவேண்டுமென்று சொல்கிறாள். வேறுவழியில்லாமல் மன்னன் சம்மதிக்கிறான். யயாதியின் மனைவியாக தேவயானியும் பணிப்பெண்ணாக சர்மிஷ்டையும் அவன் தலைநகருக்கு வருகிறார்கள்.
ஷத்ரியப்பெண்ணான சர்மிஷ்டை பணிப்பெண்ணாக வந்தது யயாதிக்கும் அவன் அன்னைக்கும் ஏற்றுக்கொள்ள முடிவதாக இல்லை. அவளும் அவர்கள் மனம் கவரும் விதம் பண்புள்ளவளாக இருந்தாள். மாறாக தேவயானிக்குள் ஒரு நிறைவேறாக் காதலின் வெம்மை எரிந்தபடியே இருந்தது. மன்னனை வென்றடக்க அவள் முயன்றாள், காதலை அளிக்கவேயில்லை. யயாதியின் மனம் இயல்பாக சர்மிஷ்டையின்பால் திரும்பியது. தேவயானிக்கு இரு குழந்தைகளும் சர்மிஷ்டைக்கு இரு குழந்தைகளும் பிறக்கிறார்கள்
சர்மிஷ்டையின் மைந்தர்கள் யயாதிக்குப் பிறந்தவர்கள் என தேவயானி அறியும்போது அடங்காச்சினம் கொள்கிறாள். சுக்ராச்சாரியாருக்குத் தெரிவிக்கிறாள். அவரது சாபத்தால் யயாதி கிழவனாகிறான். சாப விடுதலையாக யாராவது விரும்பினால் அந்த முதுமையை ஏற்றுக்கொள்ளலாம் என்று சுக்ராச்சாரியார் சொல்கிறார். அரண்மனை திரும்பிய யயாதி தன் குழந்தைகளிடம் முதுமையை ஏற்று தன்னை விடுவிக்கும்படிக் கோருகிறார். யாருமே தயாராக இல்லை. கடைசிமகனும் சர்மிஷ்டையின் புதல்வனுமாகிய புரு மனமுவந்து முதுமையை ஏற்றுக்கொள்கிறான்.
யயாதி போகநுகர்ச்சியில் ஈடுபடுகிறான். ஆனால் குற்ற உணர்வில்லாமல் அதில் ஈடுபட இயல்வதில்லை. அது இன்பமல்ல துன்பமே என உணரும் அவன் புரு அடையும் மனநிறைவை காண்கிறான். குரு அங்கிரஸர் சொன்ன உண்மை அப்போதுதான் அவன் நெஞ்சில் ஒளிர்கிறது. நுகர்வதில் அல்ல தியாகத்திலேயே உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் இதுதான் யயாதியின் கதை. இக்கதையை விரிவான தகவல்களுடன் நுண்ணிய மனஓட்டச்சித்தரிப்புகளுடன் சொல்லியிருப்பதனாலேயே இந்நாவல் நம்மைக் கவர்கிறது. அலகா, முகுலிகை, தாரகை, மாதவன், பண்டிதர் போன்ற பலவிதமான துணைக் கதாபாத்திரங்களை கற்பனையில் உருவாக்கி நாவலின் கதைப்பரப்பை நிறைத்திருக்கிறார் காண்டேகர். ஆதலால் நாவல் ஓர் உயிருள்ள பரப்பாக நம்முன் விரிகிறது.
நாவலில் தேவயானி சர்மிஷ்டை இரு கதாபாத்திரங்களும் புராணமாந்தர் என்னும் நிலைவிட்டு நாம் அறியும் பெண்களாக நுண்ணிய உளச்சித்தரிப்பு மூலம் உருவாகியிருப்பது இந்நாவலை முக்கியமாக ஆக்குகுகிறது. தேவயானியிடம் உள்ளது தாழ்வுணர்ச்சி அதன் விளைவான அகம்பாவமும் தோரணையும். உலகையே தன் காலடியில் விழவைக்கவேண்டுமென்ற வேகம். அதற்காக அவள் கொள்ளும் துடிப்பே அவள் கணவனையும் குழந்தைகளையும் எல்லாம் அவளிடமிருந்து பிரித்து விடுகிறது என உணர்வதில்லை. நிறைவேறாத அந்த காதலின் கனல் இறுதிக்கணம் வரை அவள் நெஞ்சில் அணைவதேயில்லை. எதிர்மறைக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்படும் தேவயானிக்குள் ஏமாற்றப்படும் அறியாப்பெண் ஒருத்தியை வாசகன் காணச்செய்கிறார் ஆசிரியர்.
அதேபோல் தேவயானியை வெல்வதற்காகவே யயாதியை வெற்றிகொள்ளும் சர்மிஷ்டையின் உள்ளூர ஓடும் பெண்மைக்குரிய விஷத்தையும் காண்டேகர் காட்டாமலில்லை. யயாதி வேண்டுவது ஓர் அடைக்கலம். காதலோ காமமோ துணையோகூட அல்ல என்று சட்டென்று அவள் புரிந்துகொள்கிறாள். அதை அவனுக்கு அளித்து அவனைத் தன் கருப்பை நோக்கி இழுத்துக் கொள்கிறாள்.
மூவகை புருஷார்த்தங்களில் அர்த்தம் காமம் மூலம் நகர்ந்து தர்மத்தை அடையும் யயாதியின் கதை இது. யயாதியின் தத்தளிப்புகள் பதற்றங்கள் கூரிய சொற்றொடர்கள் மூலம் காட்டப்பட்டுள்ளன. அவனை வாசகன் மிக அந்தரங்கமாக, தன் காமமோகம் கொண்ட ஆழ்மனதைக் கொண்டு, பின்தொடர முடிவதனாலேயே அந்த எதிர்மறைக் கதாபாத்திரம் இத்தகைய ஒரு செவ்வியல் நாவலை நிறுவும் வல்லமைகொண்டதாக ஆகிறது.
இந்நாவலின் அழகு காண்டேகரின் சரளமாகச் செல்லும் நடையிலும் வர்ணனைகளில் உள்ள காவியத்தன்மையிலும் உள்ளது என்றாலும் காண்டேகரின் வல்லமை வெளிபப்டுவது பெண்களின் மன ஓட்டங்கள் சுயபாவனைகள் தளுக்குகள் ஆகியவற்ரைச் சித்தரிக்கும் இடத்தில்தான். இதன் சல்லாபக்காட்சிகள் மென்மையும் கவற்சியும் கொண்டவை. காண்டேகர் மிக வெற்றிகரமான ஓர் எழுத்தாளராக இருந்தமைக்கு இதுவே காரணமாக இருக்கக் கூடும்.
ஆனால் அவரை இலக்கியவாதியாக ஆக்குவது அதனுள் ஓடும் உண்மையின் விஷநீல நரம்பையும் அவர் சொல்லிவிடுவதனால்தான். நகுஷன் இறந்து துக்கம் அனுஷ்டிக்கும் போதே தந்தையைக் கொண்டு அணையிட யயாதி முனையும்போது அம்மா கூர்மையாக இடைமறிக்கிறார். ”வேறு எந்த ஆணையிட்டாவது சொல். உன் தக்கப்பனார் வீரர். இந்திரனையே வென்றவர், ஆனால் அவர் என்னிடம் ஆணையிட்டுச்சொன்ன எதையுமே நிறைவேற்றவில்லை. என்னுடைய அந்த துன்பம்….” அப்பாவும் அம்மாவும் வாழ்ந்த இலட்சிய வாழ்க்கை ஒரு நாடகம் என அக்கணம் அறிகிறான் யயாதி. இருபெண்களின் அகங்கார மோதலின் பகடைதான் என அவன் மனம் சொன்னபடியேதான் இருக்கிறது. விதியின் பகடை என உணரும்வரை.
யயாதி காமத்திற்கும் ஒழுக்கத்திற்குமான மாபெரும் ஊசலாட்டத்தைச் சொல்லும் பேரிலக்கியம்.
[யயாதி. வி.எஸ்.காண்டேகr. தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மங்கள நூலகம் வெளியீடு]
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2007
கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் இருந்து.