நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது

உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள் தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப் பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது.

நீங்கள் இந்து மதம் பற்றிக் கூறும்போது கோவிலில் பிராமணர்கள் ஓதும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. இது எப்படி வந்தது. எல்லா தெய்வங்களும் நாட்டார் தெய்வங்களாகத்தான் ஆரம்பித்தது என்றால் இந்த ஸ்லோகங்கள் எப்படிப் பிறந்தது? இது ஏதோ அறிவு பூர்வமான விஷயம் போலத் தோன்றுகிறது. ஏன் இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது? தமிழில் எதுவும் இல்லை.

இந்த சைவம் அசைவம் என்ற பிரிவு ஜாதியை சார்ந்து வந்ததா இல்லை மதத்தை வைத்து வந்ததா? அனைத்து நாட்டார் தெய்வங்களுக்கும் புலால் படைக்கிறார்கள் என்றால் எல்லோரும் ஒரு காலத்தில் அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்போது இவர்கள் சைவமாக மாறினார்கள்?

ஒருவேளை இதற்கான பதிலை நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தால் அதற்கான சுட்டியை மட்டும் அனுப்பவும்.

நன்றி
அருள்

அன்புள்ள அருள்,

நன்றி.

பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.

தமிழில் எப்போது நமக்கு எழுதப்பட்ட நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போதே சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கையும் அறிகிறோம். இந்தியாவில் தமிழல்லாத எல்லா மொழிகளும் சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கால் இன்றைய வடிவம் பெற்றவைதான். சம்ஸ்கிருதமில்லாமல் செயல்பட முடியாதவையும்கூட. அந்த செல்வாக்கால் அவை அடிமைப்படவோ அழியவோ இல்லை, மாறாக வளமும் வளர்ச்சியுமே பெற்றுள்ளன. பிரம்மாண்டமான ஒரு செவ்வியல் மரபையும் மாபெரும் சொற்களஞ்சியத்தையும் அவை சம்ஸ்கிருதம் வழியாகப் பெற்றன.

இந்த செல்வாக்கு என்பது ஓர் உரையாடலின் விளைவே. சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்தியமொழிகள் பெற்றுக்கொண்டவை அனைத்துமே பிற வட்டாரமொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் பெற்றுக்கொண்டவைதான். சம்ஸ்கிருதத்துக்கு சொற்களை, இலக்கியத்தைக் கொடுக்காத எந்த மொழியும் நம்மிடம் இல்லை. சம்ஸ்கிருதம் வழியாக இந்திய வட்டாரமொழிகள் ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்தன என்பதே உண்மை

இதை இங்கே வந்த ஆங்கிலேய சிந்தனையாளர்கள் ஒரு ஆதிக்கம் என்று கதை விட்டு அதை நம்பும் [ அல்லது நம்பி வாழும் ] அறிவுஜீவிப்பட்டாளம் ஒன்றையும் உருவாக்கி விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அசல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த எளிமைப்படுத்தலை நிராகரிக்கிறார்கள்.

பலமொழிகள் புழங்கும் எந்த ஒரு சமூகச் சூழலிலும் பல்வேறு வரலாற்றுக்காரணங்களால் ஏதாவது ஒருமொழி இணைப்பு மொழியாக மெல்லமெல்ல உருவாகிறது. பெரும்பாலும் பிறமொழிகளில் இருந்து சொற்களை எடுத்துக்கொண்டு வளர்வதற்குரிய விரிவான இலக்கண அமைப்பை உருவாக்கிக் கொண்ட மொழிகளே அவ்வாறு ஆகின்றன. அல்லது அதிகமாக இடப்பெயர்ச்சி செய்யும் மக்களின் மொழிகள்.

உதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நேபாள மொழி பொதுவான இணைப்பு மொழியாக ஆகியிருப்பதை அங்கே சென்றபோது காணமுடிந்தது. நேபாள மொழியில் பழங்குடிமொழியின் சொற்கள் கலந்து அது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. முக்கியமான காரணம் நேபாள வணிகர்களே வடகிழக்கு மாநிலத்தின் மலைக்கிராமங்கள் தோறும் செல்லும் வணிகர்கள் என்பதுதான்.

இவ்வாறு உருவாகும் இணைப்புமொழி ஆரம்பத்தில் அவை ஒரு இனம் அல்லது நிலத்தின் மொழியாக இருக்கும். ஆனால் வளர்ச்சிப்போக்கில் அவை அந்த அடையாளங்களையும் எல்லைகளையும் மீறி விரிந்துவிடும். எந்தக் குழுவுக்கும் இடத்துக்கும் உரிமை கொண்டாட முடியாததாக ஆகிவிடும். அதன் மொழிக்களஞ்சியமே பலநூறு மொழிகளில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் உலகமொழியாக ஆனது அவ்வாறுதான்.

சம்ஸ்கிருதமும் அப்படிப்பட்ட மொழி. அதன் நெகிழ்வான இலக்கண அமைப்பு ஏராளமான பிற சொற்களை மட்டுமல்ல பிறமொழி வழக்குகளைக்கூட எடுத்துக்கொள்ளக்கூடியது. இரண்டாயிரம் வருடங்களாக சம்ஸ்கிருதம் எந்த இனத்துக்கும் நிலத்துக்கும் உரிய மொழி அல்ல. புராதன வேத மொழியில் இருந்து வளர்ந்து விரிந்து எல்லா இந்திய மொழிகளையும் இணைப்பதாக ஆகியது. பிறமொழிகளுடன் உரையாடி அது வளர்ந்தது. அது பிறமொழிகளைப் பாதித்து புதிய மொழிகளை உருவாக்கியது.

இன்றைய சம்ஸ்கிருதம் வழிபாட்டுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் மட்டும் உரிய மொழியாகக் கட்டமைக்கப்பட்டது. செம்மையாக செய்யப்பட்டது என்பதே சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் .

இந்துமதமும் சம்ஸ்கிருதமும் இணையாகவே வளர்ந்தவை. இந்துமதம் என்பது ஒரு மாபெரும் தொகுப்புமதம். அதன் தொகுப்புமொழியாக சம்ஸ்கிருதம் உருவெடுத்தது. நாமறியும் வரலாற்றுக்காலகட்டத்துக்கு முன்னரே இது நிகழ்ந்துவிட்டது. இந்து ஞானமரபின் எல்லாப் பிரிவுக்கும் சம்ஸ்கிருதமே மூலநூல் மொழி. ஆத்திகக் கொள்கைகளுக்கும் சரி நாத்திகக் கொள்கைகளுக்கும் சரி.

இவ்வாறு சம்ஸ்கிருதம் இணைப்புமொழியாக இருப்பதனால்தான் அது இந்து வழிபாடுகளுக்குரிய தனி மொழியாக ஆகியது. எல்லா மதங்களும் அவ்வாறு பொது வழிபாட்டுமொழி கொண்டவையே. உலகமெங்கும் அரபி மொழிதான் இஸ்லாமின் வழிபாட்டு மொழி. லத்தீன்தான் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி.

ஏனென்றால் மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல. ஆந்திரத்து பக்தர் கன்யாகுமரியில் வழிபடவேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபடவேண்டும். ஆகவேதான் ஒரு பொது வழிபாட்டுமொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது. அதை ஓர் ஆதிக்கம் என்றல்ல ஒரு மகத்தான தொகுப்புமுறை என்றே நான் நினைக்கிறேன்.

அந்தத் தொகுப்பு வன்முறைமூலம் நிலைநாட்டப்பட்டதல்ல. பற்பல நூற்றாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த நீடித்த அறிவார்ந்த விவாதம் மூலம் உருவானது. அது ஒருவழிப்பாதை அல்ல. கொண்டும் கொடுத்தும் உருவான உரையாடல். அந்த உரையாடல் மூலம்தான் இந்து மதத்தின் இன்றைய பன்மைத்தன்மை உருவானது. எதையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை உருவானது.

அந்த உரையாடலும் தொகுப்பும் நிகழ்ந்தமையால்தான் இத்தனை ஆயிரம் இனக்குழுக்களும் இவ்வளவு மொழிகளும் கொண்ட இந்த மாபெரும் நிலப்பரப்பு உலகின் பல நாடுகளில் இன்றும் நிகழ்ந்துவரும் மாபெரும் இனமோதல்கள் நிகழாது ஒரு பண்பாட்டுத்தேசியமாக இருந்தது, அரசியல் தேசியமாக நீடிக்கிறது.

இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது.

சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது.

பெரும்பாலான கேரள பகவதி கோயில்களில் இந்த சம்ஸ்கிருதமயமாக்கல் அரைநூற்றாண்டில் நிகழ்ந்தது. தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன. இந்து மதம் தன்னைத் தொகுத்துக்கொண்டு விரிவடையும் வழிமுறை இதுதான்.

அதாவது ஒரு நாட்டார் தெய்வம் ஒரு குலக்குழுவுக்குள் ஓர் மொழிச்சூழலுக்குள் ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் வழிபடப்படும்போது அதற்கு வட்டார மொழி போதுமானதாக உள்ளது. அது உலகம் முழுக்க உள்ள அனைத்து இந்துக்களும் வழிபடும் தெய்வமாக ஆகும்போது அது சம்ஸ்கிருதம் என்ற பொதுமொழியை வழிபாட்டுமொழியாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.

இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது. இது சிக்கலான பலநூறு காரணிகள் வழியாக வரலாறு செயல்படும் முறை. நதி தன் வழியைக் கண்டுகொள்வதுபோன்றது. சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.

மேலும் அத்தகைய முயற்சிகள் எல்லாமே ஏதோ வழியில் இந்துமதம் என்ற உலகளாவிய போக்கை உடைத்து அழிக்கும் நோக்கமுள்ளவையாக உள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்தப் பொதுப்போக்கிலிருந்து ஒரு வட்டார, இனம்சார்ந்த தனிப்போக்கை வெட்டிக்கொள்வதற்காகவே அவை சொல்லப்படுகின்றன. அதற்குப்பின்னால் உள்ள நோக்கம் என்பது ஆன்மீகமோ வழிபாடோ அல்ல, அரசியல் மட்டுமே.

மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன. சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா மதக்கருத்துகளுக்கும் தமிழிலும் கன்னடத்திலும் துளுவிலும் எல்லாம் மொழியாக்க வடிவம் இருக்கும். தமிழில் இல்லாத எதுவும் சம்ஸ்கிருதத்தில் இல்லை.

நாலாயிர திவ்யப் பிரபந்தமும், தேவார திருவாசகமும் எல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு இணையான வழிபாட்டு நூல்களாகவே சைவ வைணவ மதங்களால் தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன, பாடப்படுகின்றன. ’கோயிலுக்குள் தமிழ் இல்லை’ என்பதைப்போல அபத்தமான அப்பட்டமான பொய் வேறு இல்லை. கோயிலுக்குள் செல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொய்யைக் கோயிலுக்குச் செல்பவர்கள் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் எல்லா ஆலயங்களிலும் தமிழ்த் தோத்திரங்களும் பாடல்களும் பாடப்படுகின்றன. தமிழே அறியாத ஆந்திரக் கோயில்களில் திருப்பாவை பாடப்படுகிறது.

அதாவது வழிபாட்டுமுறையின் மையம் இந்திய அளவில், உலக அளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நடைமுறைத்தேவைக்காக மட்டுமே கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருக்கலாம் என முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாலி தீவிலும் கலிஃபோர்னியாவிலும் ஒரு இந்து சக இந்துக்களுடன் இணைந்து வழிபட வழிசெய்வது அந்தப் பொது அம்சமே. காசியில் போஜ்புரியில் சிவபெருமானைத் துதிப்பதில்லை, சம்ஸ்கிருதத்தில்தான். ஆனால் அங்கே நாம் ’பொன்னார்மேனியனே’ என்று பாட எந்தத் தடையும் இல்லை.

அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல. சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.

தமிழ் சம்ஸ்கிருதம் மூலம் ஒட்டுமொத்த இந்தியமரபுடன் உரையாடி வளர்ந்துதான் இன்றைய வடிவை அடைந்தது. சம்ஸ்கிருதம் இல்லையேல் நமக்கு சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ, சீவகசிந்தாமணியோ, கம்பராமாயணமோ இல்லை. இன்று ஆங்கிலத்தையும் நான் இப்படித்தான் சொல்வேன். உலக மொழிகளில் இருந்து நமக்கு வருவதெல்லாம் ஆங்கிலம் வழியாகவே. ஆங்கிலம் இல்லையேல் பாரதியும், புதுமைப்பித்தனும் இல்லை.

இந்து தெய்வங்களைப்பற்றி , தத்துவங்களைப்பற்றி இன்று அதிகமாக எழுதப்படுவது ஆங்கிலத்திலேயே. காரணம் அதுவே இன்றைய இணைப்பு மொழி. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் அதிகமாக எழுதினார். அவரது மாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஆங்கிலத்தையே ஊடகமாகக் கொண்டார்கள். இந்து வழிபாட்டுக்குரிய மொழியாக சம்ஸ்கிருதமும் இந்து தத்துவசிந்தனைக்குரிய மொழியாக ஆங்கிலமும் இன்று திகழ்கிறது.இதுவும் இயல்பானதே என்றுதான் நினைக்கிறேன்

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2011 நவம்பர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76