«

»


Print this Post

‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’


xadya-rangacharya.jpg.pagespeed.ic.hoEq30zGee

 

மறைந்த தஞ்சை பிரகாஷ் சொன்ன சம்பவம் இது. கொல்லூரில் இருந்து ஹாசன் நோக்கி குடும்பத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் இயல்பாக பேச்சு வளர்ந்தது. பிரகாஷ் அனேகமாக எல்லா இந்திய மொழிகளையும் பேசக் கூடியவர். அம்மனிதர் தன்னை ஓர் இலக்கியவாதி என்று அறிமுகம் செய்து கொண்டார். பெயர் ரங்காச்சாரி. பிரகாஷ் தன்னை ஒரு தமிழ் இலக்கியவாசகர் என்று சொன்னார்.

தமிழ் இலக்கியம் பற்றித் தனக்கு அதிகமாக தெரியாது என்றும், தெரிந்தது மேற்கொண்டு தெரிந்து கொள்ள ஊக்கம் தருவதாக இருக்கவில்லை என்றும் ரங்காச்சாரி தெரிவித்தார்.

“என்னென்ன நூல்களுடன் அறிமுகம்?’’ என்றார் பிரகாஷ். அப்போது பிறமொழிகளில் தமிழ்ப் படைப்பாளிகளாக அறிமுகமாகியிருந்தவர்கள் இருவர்தான். ஒருவர் அகிலன், ஞானபீடப் பரிசு மூலம். இன்னொருவர் ஜெயகாந்தன், முற்போக்கு முகாம் மூலம். ரங்காச்சாரி கூடுதலாகவே படித்திருந்தார். கல்கி, நா. பார்த்தசாரதி, அண்ணாத்துரை ஆகியோரின் பல படைப்புகளையும்.

“இவர்களுடைய படைப்புகளில் உங்கள் அதிருப்திக்குக் காரணமானது என்ன?’’ என்றார் பிரகாஷ்.

“இவர்கள் படைப்புகளில் சுய அனுபவத்தின் மூலம் வலுச் சேர்க்கப்பட்ட அந்தரங்க உண்மை ஏதும் இல்லை. சமூக, அரசியல் தளங்களில் பொதுவாக வைத்துப் பேசப்படும் விஷயங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை அறிய நான் இலக்கியத்தைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பொதுஉண்மைகள், உண்மையில் சமூக அரசியல் செயல்பாடுகள் மூலமாக, நீண்ட சமரச இயக்கம் மூலமாக, கடைந்து எடுக்கப்பட்டவையே’’ என்றார் ரங்காச்சாரி.

“அவை இலக்கியத்தில் ஏன் இருக்கக் கூடாது?’’ என்றார் பிரகாஷ்.

“காரணம், அவை இலக்கியத்தில் மிகப் பழைய விஷயங்கள் என்பதே. இலக்கியம் ஒரு அக உண்மையை தன்னிச்சையாகக் கண்டடைந்து வெளிப்படுத்துகிறது. அது சமூக அரசியல் தளங்களில் புழக்கத்துக்கு வரும்போது அங்குள்ள மாறுபட்ட இயக்க விசைகளினால் இழுப்புண்டு சமரசம் அடைந்து பொது உண்மையாகிறது. அப்போது இலக்கியத்தில் அது மிகப்பழையவிஷயமாக ஆகிவிட்டிருக்கும். இலக்கியம் சமூக அரசியல் சிந்தனைகளின் முன்னோடியாகவே இருக்க முடியும், பின்னால் செல்ல முடியாது’’ ரங்காச்சாரி சென்னார்.

அவர்கள் உரையாடியபடியே சென்றனர். ரங்காச்சாரிக்கு ஜெயகாந்தன் மீது மட்டும் ஒரு குறைந்த பட்ச மரியாதை இருந்தது. மற்றவர்களை விட மாறாக அவரிடம் சொற்களில் ஒரு நேர்மையான தீவிரம் இருப்பதாக அவர் சொன்னார்.

ஏறத்தாழ ஹாசனை நெருங்கிய போதுதான் பிரகாஷ் பேச ஆரம்பித்தார். அது அவரது இயல்பு. ஒன்று, வெகு நேரம் எதிர்தரப்பின் பேச்சை கேட்ட பிறகே அவருக்கு சூடு ஏறும். பேச ஆரம்பித்தால் நான்குபேர் பிடித்தால்தான் நிறுத்தமுடியும். இன்னொன்று பிரகாஷ் தனக்குத் தெரிந்த விஷயங்களை சீராகச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். பேச்சு வாக்கில் உதிரும் விஷயங்களில் இருந்துதான் அவரது அறிவின் விரிவு நமக்குப் புரியும். அது நம்மை மேலும் வியப்பிலாழ்த்தும். இரண்டாவது சந்திப்பில் அவர் தற்செயலாகச் சொன்ன ஒரு குறிப்பில் இருந்துதான் அவருக்கு மலையாள இலக்கியம் அகமும் புறமும் துப்புரவாக பரிச்சயம் என நான் அறிய நேர்ந்தது.

பிரகாஷ் ரங்காச்சாரியிடம் அவர் எழுதிய `முதலில்லாததும் முடிவில்லாததும்’ என்ற நாவலை படித்திருப்பதாகச் சொன்னார். ரங்காச்சாரி அயர்ந்து போய்விட்டார். அவர் கன்னடத்திலேயேகூட பிரபலமானவரல்ல, அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டவருமல்ல. அந்நாவலைப் பற்றிய தன் அவதானிப்புகளை பிரகாஷ் சொல்லியபடியே சென்றார். இரண்டு மனித மனங்கள், அவை எத்தனை நெருக்கமானவையாக இருப்பினும், ஏதோ ஒரு சிறு புள்ளியில் மட்டும்தான் பரஸ்பரம் கண்டடைய முடியும், உறவாட முடியும். மற்ற தருணங்களிலெல்லாம் ஒரு மனம் மற்ற மனதை வெறுமே சுற்றி வருகிறது, உரசிச் செல்கிறது; அத்தோடு சரி. ஒரு ஆண் மனமும் பெண் மனமும் தங்கள் சந்திப்புப் புள்ளியைக் கண்டடைவது வரை தொடர்ந்து உழல்வதையும் சந்திப்பதையும் கூறும் நாவல் அது. மொத்த நாவலையும் இச்சிறிய இடத்திற்குள் வைத்து நிகழ்த்தி முடித்துவிடும். கதாசிரியரின் துணிவும் ஆற்றலும் வியப்புக்குரியவை. ஆனால் ஓர் அழகிய எல்லையில் நாவல் தன்னை நிறுத்தி விடுகிறது. அதுவே அதன் குறை.

”என்ன?’’ என்றார் ரங்காச்சாரி.

”ஒரு கூழாங்கல் இன்னொன்றுடன் உரசும் சம்பவத்தைச் சொன்னாலும் கூட பிரபஞ்ச இயக்கம் தரும் பெருவியப்பை அதில் காட்டிவிட கவிஞனால் முடியவேண்டும். உங்கள் நாவல் மானுடஉறவின் கதை மட்டுமே. `உறவு’ என்ற ஆன்மிக பிரச்சினையின் கதை அல்ல’’.

ஹாசன் வந்து விட்டது. பிரமித்து அமர்ந்திருந்த ரங்காச்சாரி பெட்டிபடுக்கையுடன் இறங்கும் பிரகாஷிடம் அவருக்கு முக்கியமாகப்படும் தமிழ் படைப்பாளிகள் யார் என்றார்.

”மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, கு. அழகிரிசாமி, வண்ணநிலவன்…’’ என்றார் பிரகாஷ். அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.

”இவர்கள் மிக முக்கியமான படைப்பாளிகளாக இருக்க வேண்டும். கன்னடத்தில் அவர்கள் விரைவில் வந்து சேர்ந்தால் நல்லது’’ ரங்காச்சாரி சொன்னார்.

*

`ஸ்ரீரங்க’ வின் இயற்பெயர் ஆத்ய ரங்காச்சார்ய . அவர் அடிப்படையில் ஒரு நாடகாசிரியர். 1930 முதல் எழுதிவரும் ஸ்ரீரங்க 35 முழு நீள நாடகங்களும் 50 ஓரங்க நாடகங்களும் இயற்றியிருக்கிறார். 1963ல் மத்திய சங்கித நாடக அகாதமி விருது பெற்றவர். இதைத்தவிர 12 நாவல்களையும் எழுதியிருக்கிறார். அனைத்துமே சிறிய மனதத்துவ நாவல்கள். அவரது  `முதலில்லாததும் முடிவில்லாததும்’ [ கன்னட மூலம் அனாதி அனந்த] ஹேமா ஆனந்த தீர்த்தனின் மொழிபெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடாக தமிழில் 1991ல் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட நாவல் உலகின் முதல் நனவோடை உத்திகொண்ட நாவல்.1959ல் வெளிவந்தது இது.

இரண்டு பாகங்கள் கொண்ட சிறிய நாவல் இது. முதல் பகுதி முதலில்லாதது, இரண்டாம் பகுதி முடிவில்லாதது. முதலில்லாததும் முடிவில்லாததுமான மனித மன இயக்கத்தையே கதை நகர்வாகக் கொண்ட படைப்பு. இதன் அமைப்பு ஒரு வகையில் ஒரு அவரம் விதைபோல ஒன்றையன்று நிரப்பும் இரு பகுதிகள். முதல் பகுதி ராமண்ணாவை மையமாக்கி அவனது மன ஓட்டம் மூலம் வெளியாகிறது. இறந்து போன அவன் மனைவி சரளாவும் அவள் தங்கை குமுதாவும் பிற பாத்திரங்கள். குமுதா ராமண்னா வீட்டில்தான் இருக்கிறாள், குழந்தையை தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ள. ராமண்ணாவுக்கும் குமுதாவுக்கும் இடையே மெதுவாக உருவாகி வரும் நெருக்கத்தில் உள்ள ஒழுக்கவியல் தர்மசங்கடங்கள், போலிப் பாவனைகள், சுய ஏமாற்றுகள், ஏமாற்றவோ ஒத்திப் போடவோ முடியாத பாலியல் வேட்கை, அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட தன்னகங்காரம் ஆகியவை மறைமுகமாக விரியும் நினைவோட்டச் சரடுகளாக வெளிப்படுகின்றன.

இரண்டாம் பாகமான முடிவில்லாததில் குமுதாவிற்கு ராமண்ணாவின் குழந்தை பிறந்து விடுகிறது; மோகன். அவனை முன்னிலைப்படுத்தி மீண்டும் அவர்களுடைய உறவு பரிசீலனைக்குட்படுகிறது. ஒரு மன அவசத்தின் பொருட்டு அல்லது தேவையின் பொருட்டு உருவான உறவு அது. அதில் காதல் இல்லை. காதலில்லா உறவின் அலுப்பும் சலிப்பும் அதைவெல்ல மனம் போடும் உணர்ச்சிபாவனைகளும் இப்பகுதியில் வெளிப்படுகின்றன. முதல்பகுதியில் அவர்களை இணைக்கும் சரடாக இருப்பது சரளாவின் நினைவு. இரண்டாம் பகுதியில் மோகன் என்னும் குழந்தை.

நினைவோட்டமாக நகரும் இந்நாவலின் கதையை சொல்வது அதை மிகவும் சுருங்க வைத்துவிடும். உண்மையில் சில நிகழ்ச்சிகள் மட்டுமே கொண்டது இந்நாவல். இரு பகுதிகளும் மூன்றுவருட இடைவெளியில் நடக்கின்றன. இரண்டுமணி நேரமே நாவலின் கால அளவு .இதன் முக்கிய இவ்விரு பகுதிகளையும் நாம் மாறி மாறி நமது கற்பனைமூலம் பொருத்திப்பார்த்து இந்நாவலின் சாத்தியங்களை வளர்த்தபடியே இருக்கலாம் என்பதே. உதாரணமாக முதல் பகுதியில் குமுதாவும் ராமண்ணாவும் தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளைப் படிப்படியாகத் தாண்டி இணையும் புள்ளியை நோக்கி நகர்கையில் இரண்டாம் பகுதியில் தங்கள் இணைவுப் புள்ளியில் இருந்து வெளிநோக்கி நகர்கிறார்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான தவிர்க்கமுடியாத ஈர்ப்பை முதல்பகுதியும், தவிர்க்கமுடியாத தூரத்தை இரண்டாம் பகுதியும் முன்னிலைப்படுத்துகின்றன. இவ்வாறு தீர்க்கவே முடியாத ஒரு முரண் புதிர் இந்நாவலில் இவ்விரு பகுதிகளின் மோதல் மூலமாக உருவாகி வருகிறது.

ராமண்ணாவுக்கும் குமுதாவுக்குமான உறவு உருவாகும் விதம் தூய பாலுணர்வின் வெளிப்பாடாக ஆசிரியரால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமண்ணா இல்லை என நினைத்து அவன் அறைக்குச்செல்லும் குமுதா அவன் நூலகத்தில் புத்தகம் தேடுகிறாள். அவன் அங்கே வருகிறான். தனிமையின் எழுச்சியினால் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டுவிடுகிறான். அவ்வளவுதான், அது உறவாக மாறுகிறது. இப்படி ஒரு உறவு தொடங்கும் விதத்தை வியப்புடனும் பிரமிப்புடனும் பிறகு குமுதா மீண்டும் மீண்டும் எண்ணிக் கொள்கிறாள். வேறு எப்படி ஆண்-பெண் உறவு பிறக்கும் என்ற எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது ஏற்படுகிறது.

ஸ்ரீரங்கவின் மொழி நுட்பமானது. அதை கவனித்து வாசிக்கும் வாசகன் மட்டுமே அறிய முடியும். குமுதாவிடம் மானசீகமான உறவு உருவானபிறகு சரளாவை அணுகும் ராமண்னாவின் மனநிலை பற்றிய இடம். ”பாழும் ஜென்மம் ! என்ன வாழ்க்கை1 தனக்கும் சுகம் இல்லை மற்றவர்களுக்கும் சுகம் இல்லை!” என்று கண்ணீரை தடுக்கும் பொருட்டு திரும்பிக்கொண்டு படுத்தாள் சரளா.

ராமண்னா ஒரு நிமிடம் தியானத்தில் இருப்பதைப்போல உட்கார்ந்திருந்தான். ஜன்மஜன்மாந்தரங்களின் பயிற்சியாலோ என்னவோ என்று சொல்லும்படியாக அவனுடைய கை அன்பின் குளிர் காற்றைப்போல அவள் முதுகின்மீது படிந்தது’

அன்பினால் அல்ல. ஆனால் அந்த உறவு வேரூன்றியது. யுகங்கள் பழையது, ஆதலால் அன்பே போன்ற ஒன்றை அந்த தொடுகை அளிக்கிறது!

`ஆத்ய ரங்காச்சாரியர்’ இங்கிலாந்தில் கல்வி பயின்றதனால் அவரது கன்னட நடை ஒருவித ஆங்கிலத்தன்மை உடையது என்று அங்கு குறை கூறப்படுகிறது. அவரது உளப்பகுப்பாய்வு மோகமும் இன்று கண்டிக்கப்படுகிறது. அவரது நாடகங்களோ_எவையுமே தமிழுக்கு வந்ததில்லை .அவை_ முக்கியமானவை என்று எச்.எஸ். சிவப்பிரகாஷ் (கன்னட நாடக ஆசிரியர், விமரிசகர், கவிஞர்) என்னிடம் கூறினார். ஆனால், இப்படைப்பு பலவகையிலும் தமிழுக்கு முக்கியமானது என்றுதான் கூறுவேன்.

ஹேமா ஆனந்ததீர்த்தனின் [புனைபெயர்] மொழியாக்கம் சரளமாகவும் நுட்பமாகவும் இருக்கிறது. தமிழில் ஒருகாலத்தில் கிளுகிளு எழுத்துக்காக பெயர் பெற்றிருந்த இவர் இன்று அவரது கன்னட மொழியாக்கங்களுக்காகவே நினைக்கப்படுகிறார். உண்மையில் அவருக்குப் பின்னர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு இத்தனை சிறப்பாக மொழியாக்கம் செய்யும் எவருமே அமையவில்லை.

 

[முதலில்லாததும் முடிவில்லாததும் – ஸ்ரீரங்க; தமிழில் : ஹேமா ஆனந்ததீர்த்தன்; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு]

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2007

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/224/