கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

காஞ்சிரம்பற்றிய கட்டுரை, சிறுவயதில் கேட்ட திரைப்படப் பாடலை நினைவூட்டியது. கவிஞர் கண்ணதாசனின் தத்துவப் பாடல்ஒன்றின் இடையில் காஞ்சிரம் பற்றி ஒரு வரி உண்டு. (படம்: படித்தால் மட்டும் போதுமா? பாடல்: ஓஹோஹோ மனிதர்களே)

அழுகிப் போனால் காய்கறிகூட சமையலுக்காகாது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது

காஞ்சிரம் பற்றிய விளக்கம் வெகுநாட்களுக்குப் பின்னர் தற்செயலாக உங்கள் இணையதளத்தின் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி.

கல்யாணராமன்

வணக்கம் குரு.,

 

                 குமரியில் திருவள்ளுவர் (அய்யன்னார்!) சிலையை நிர்மாணித்த வை.கணபதி ஸ்தபதி பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் முன்பு மகாபலிபுரம் சிற்ப கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். பிறகு “மயன்” போன்ற ஆராய்சிகளில் ஈடுபட்டு,சில நூலகளை வெளியிட்டார் என்று என் நண்பர் ஒருவர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அவர் கல்லூரி பணியில் இருக்கும் போதே சில சிற்பக்கலை சம்பந்தபட்ட நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நூல்களின் பெயர்கள் நினைவில் இல்லை, வாசித்ததும் கிடையாது!
கனடா,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெரும்பான்மையான ஆலயங்களை நிர்மாணித்து இருக்கிறார். அவருடைய நூல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரியவில்லை. (தகவலுக்காக)

 


பணிவன்புடன் மகிழவன்.,

 

 

அன்புள்ள ஜெ.மோ!!
         
உயிர்மையில்(மார்ச்)தங்கள் வசனத்திற்கு சாரு நிவேதிதா தெரிவித்த பாராட்டுக்கள் கண்டு வியந்தேன்.சிந்து பைரவி திரைப்படத்தில் சுஹாசினியின் பாட்டுக்கு எல்லோரும் கை தட்டிய பின் சிவக்குமார் வேண்டாவெறுப்பாகக் கை தட்டுவார்.அது போல் உணர்ந்தேன்.உங்களுக்குக் கிடைத்த பாராட்டு தவிர்க்க இயலாதது.ஸ்லம்டாக்கை விமரிசித்த நீங்கள் அதை விட அதிகமாக நம் நாட்டின் இருண்ட பக்கங்களைச் சித்தரித்திருக்கிறீர்கள்என்கிறாரே சாரு? தங்கள் மறுமொழி வேண்டுகிறேன்

 

ராமானுஜம்

வள்ளியூர்

 

அன்புள்ள ராமானுஜம் அவர்களுக்கு,

 

ஸ்லம் டாக் மில்லியனருக்கும் நான் கடவுளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஒன்றே. நான் கடவுளில் வருபவர்கள் தன்மானமும் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்ட மனிதர்கள். அவர்கள் தங்கள் சுயபெருமிதத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் நடுவே வாழ்ந்தவன் என்றமுறையில் அவர்கள் தங்கள் உலகுக்குள் தங்களுக்கான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று கண்டு அதை எழுதியிருக்கிறேன். அது வழிப்போக்கனுடைய உதாசீனமான பார்வை அல்ல. ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் மது பண்ட்டார்க்கரின் டிராஃபிக் சிக்னல் போன்ற படங்களில் அடித்தள மக்களைப்பற்றிய மேல்தட்டு நோக்குதான் தெரிகிறது. ஸ்லம்டாக் மில்லீயனரைவிட டிராஃபிக் சிக்னல் இன்னும் மோசம். அதில் எல்லா பிச்சைக்காரர்களும் மோசடிக்காரர்களாகவே காட்டப்படுகிறார்கள்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

 வணக்கம்.  .

 

டிசம்பர் மாதம் நீங்கள் எழுதிய “விலக்கப்பட்டவர்கள்” கட்டுரை  கண்ட பிறகு என்னில் தோன்றிய ஒரு சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கருதுகிறேன்.  நேரமிருப்பின் தயவு செய்து கூறுங்கள்.

 

1. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர் எனும் பகவதி கோவிலில் வழிபடுவது நம் தமிழகத்து கண்ணகியா ?
   
அந்த கோவில் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சிலை சிலப்பதிகாரம் கோவலனா” ?

 

2.மருமக்கத்தாயம் என்றால் என்ன ? அது இப்பொழுதும் நடைமுறையில் உள்ளதா  ?

 

3. பாலக்காடு மாவட்டத்தில் “வள்ளுவநாடு தாலுக்கா” ஒன்று உள்ளதே, அதற்கும் திருவள்ளுவருக்கும் தொடர்பு உண்டா ?

 

இது போல் இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றனகொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறேன்தொந்தரவாக இல்லாவிட்டால் விளக்கம்   தாருங்கள். நன்றி ! வணக்கம் !

 

வாழ்த்துக்கள்.

 

அன்புடன்

 

K.குப்பன்

சிங்கப்பூர்

 

 

அன்புள்ள குப்பன்

,

 

1. கொடுங்கல்லூர் கோயில் சேரன் செங்குடுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயில் என்பதை ஏறத்தாழ ஆய்வாளர்கள் உறுதிசெய்கிறார்கள். அந்த ஊரின் பெயர் வஞ்சி. அருகே இருக்கும் தொன்மையான சிவன் கோயிலின் பெயர் திருவஞ்சைக்குளம். அருகே இருக்கும் சுடுகாட்டுநிலத்தின் பெயர் மாக்கோதை புரம். அந்தக்கோயில் பின்னர் கொற்றவை கோயிலாகவும்  அதன்பின் துர்க்கை கோயிலாகவும் உருமாற்றம் பெற்றது.

 

முதலில் கோயில் இருந்த இடம் இப்போது கோயில்  இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது. அங்கே உள்ள கோயில் அழிந்துவிட்டது. ஆனாலும் தொன்மத்தில் அதுதான் கோயில். ஆகவே திருவிழாக்கள் அங்கேயே தொடங்கப்படுகின்றன. இப்போதும் கொடுங்கல்லூர் தேவி மகாமங்கலை என்றே அழைக்கப்படுகிறாள் — சேரன் செங்குட்டுவன் நிறுவிய கண்னகி மங்கலமடந்தை என்பதனால்.

 

தமிழர்கள் சென்று வணங்கியாக வேண்டிய ஆலயம் அது. நான் அக்கோயிலைப்பற்றி முனைவர் பி.வி. சந்திரன் எழுதிய நூலை கொட்ங்கோளூர் கண்ணகி என்ற பேரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன் — தமிழினி வெளியீடு. என் கொற்றவை நாவலிலும் வாசிக்கலாம்

 

2 மருமக்கத்தாயம் என்றால் சொத்துரிமை பெண்களுக்கு மட்டும் உள்ள ஒரு முறை. தாய்வழிச்சமூகத்தில் இருந்து உருவானது. ஆண்களுக்கு சொத்து இல்லை. பெண்களுக்கும் பெண்களின் குழந்தைகளுக்குமே சொத்து வரும். பெண்களின் சகோதரர் குடும்பத்தின் ஆண்மகன். அவருக்குப்பின் அவரது மூத்த தங்கையின் மூத்த மகன். ஆகவே இது மருமக்கள்தாயம் என்று அழைக்கப்பட்டது. கேரள மன்னர்கல்ள் இறந்தால் சகோதரி மகநே வாரிசாவார்

 

நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம் என்ற நூலில் இதைப்பற்றி கவிமணி எழுதியிருக்கிறார். அ.கா;.பெருமாள் உரையுடன் இந்நூல் காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது

 

3. வள்ளுவர் என்பது ஒரு சாதி. அது சோதிடம் பார்க்கும் , கல்வி கற்பிக்கும் சாதி. திருவள்ளுவர் அச்சாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். வள்ளுவநாடு என்பது ஒரு மாவட்டம். பழங்காலம் முதலே அப்படி அழைக்கப்படுகிறது . 

 

ஜெ     

 

 

காஞ்சிரம்

கொற்றவை

சோழர்கலை

தென்னிந்தியக் கோயில்கள்

கைதோநி

முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

சிற்பங்கள்:கடிதங்கள்

விலக்கப்பட்டவர்கள்:கடிதங்கள்

விலக்கப்பட்டவர்கள்  

முந்தைய கட்டுரைகவிஞர் சி.மணி :அஞ்சலி
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா பயணம்