அதிரம்பாக்கம் – ஒரு தொல்லியல் புரட்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் தொல்லியல் துறையில் நடந்த ஒரு முக்கியமான ஆய்வைத் தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். சென்னையில் சர்மா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சாந்தி பாப்பு மற்றும் குழுவினரும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அதிரம்பாக்கத்தில் நடத்திய விரிவான ஆய்வில், அங்கு இருக்கும் கொற்றள்ளயாறு பள்ளத்தாக்கில் 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருந்ததைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது உலகத் தொல்லியலில் ஒரு புரட்சி என்றே வருணிக்கப்படுகிறது.

இந்த ஆய்வுக் கட்டுரை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சயின்ஸ் (உலக அளவில் அறிவியல் ஆய்விதழ்களில் இரண்டாவது) ஆய்விதழில் வெளிவந்து இருக்கிறது. அதே இதழில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை முன் வைத்து இன்னொரு கட்டுரையும் வெளிவந்து இருக்கிறது. அதில், அதிரம்பாக்கம் ஆய்வின் மூலம், பல தொல்லியல் புதிர்கள் (குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து சீனாவிற்குக் கற்கால நாகரிகம் போன விதம்) விடுபடுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாகப் பழமை வாய்ந்த கற்கால நாகரிகம் நம்முடையதே என்பதும் இதில் தெளிவாகிறது. இதை பற்றி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece).

அனைத்துக் கட்டுரைகளையும் இங்கு இணைத்து உள்ளேன்.
நன்றி.

தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.

athirampaakkam

[அதிரம்பாக்கம் அகழ்விடம்]

அன்புள்ள சரவணக்குமார்

நன்றி.

ஏற்கனவே ஒரு விவாதத்தில் அ.கா.பெருமாள் அதிரம்பாக்கம் பற்றி சொன்னார். ஆனால் உங்கள் சுட்டிகள் மற்றும் கட்டுரைகள் வழியாக விரிவாகவே அறிந்துகொண்டேன். ஒருவகையில் ஆச்சரியமாகவும் ஒருவகையில் ஆச்சரியத்துக்கிடமில்லாமலும் இருக்கிறது. நல்ல மழைவளமும் வெயிலும் கொண்ட நம் நிலம் ஆதிமனிதன் உருவான இடமாக இருப்பது மிக இயல்பானதே.

தமிழகத்தின் மானுட வரலாறு வெவ்வேறு தனித்தனிப் புள்ளிகளாகத் தெரிந்துகொண்டே இருக்கிறது. கற்காலக் கருவிகள், குகை ஓவியங்கள், ஆதிச்சநல்லூர் மற்றும் மகேந்திரமங்கலம் அகழ்வாதாரங்கள் என. அவற்றை அர்த்தபூர்வமாக இணைத்து ஒரு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கும் சிந்தனை வீச்சு இன்று நமக்கில்லை. வரும்காலத்தில் ஆய்வுகள் மூலம் இன்னும் பல திறப்புகள் நிகழலாம். புள்ளிகள் கோலமாகலாம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உண்மைதான். அப்படிப்பட்ட சிந்தனை நம்மிடம் தற்போது இல்லை. அதோடு நம்முடைய தொல்லியல் துறையின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணையதளத்திற்கு (http://www.tnarch.gov.in)சென்று பாருங்கள். கொடுமை. பல ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களின் எளிய வரலாறு கூடப் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில கோவில்களுக்கு வெளியே மட்டும் ஒப்பிற்கு ஒரு தகவல் பலகை இருந்து வந்தது. தற்போது அது கூட இல்லை.

ஆதிச்சநல்லூர் சென்றபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சாலைக்கு இருபுறமும் தொல்லியல் துறை பலகை மட்டுமே இருக்கிறது. ஒரு தகவல் பலகை செய்ய அவ்வளவு செலவாகுமா அல்லது போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லையோ தெரியவில்லை. அது மட்டுமில்லாமல், ஒரு தனியார் நிறுவனம்(http://www.sharmaheritage.com/) உலகத் தரமான ஆய்வு செய்ய முடியும் என்றால் ஏன் அரசுத்துறையினரால் முடியாமல் போனது?

தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.

ஆதிச்சநல்லூர் சிதம்பரம்

முந்தைய கட்டுரைபங்கர் ராய்
அடுத்த கட்டுரைஅறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்