பங்கர் ராய்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

எனக்கு அனுப்பப்பட்ட ஒரு சுட்டியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய கல்வி அமைப்பின் குறைபாடுகளைப் பற்றியும், தற்போதைய கல்வி அமைப்புகள் எப்படி முழுதும் வணிகரீதியாக செயல்படுகின்றன என்பதும் உங்கள் வலைப்பக்கங்கள் அதிகம் விவாதித்திருக்கின்றன . பொறுப்பில்லாத ஆசிரியர்கள், அரசியல்மயமாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், இருக்கும் இயற்கையான திறமைகளையும், மழுங்கடிக்கப்பட்டு பட்டதாரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர் பட்டாளம், இவை நாட்டுப்புறங்களில் பரம்பரையாக இருந்துவரும் நுட்பமான திறமைகளையும், வழி வழி வந்த கைவேலைகளையும் , நுண் கலைகளையும் , மரபு வழி வைத்திய முறைகளையும், வரும் தலைமுறைகளுக்கு தெரியாமல் அழிந்துவிடச் செய்கின்றன .

ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்விமுறை பற்றிய உங்கள் கருத்துக்கள் நம் பாரம்பரியக் கற்பித்தல்களை அடுத்த தலைமுறைக்கு ஓரளவு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருந்தது என்பதாக இருந்தது.
இந்தச் சுட்டியின் ‘பங்கர் ராய்’ என்பவரின் கல்வி முயற்சியை உண்மையிலேயே ஒரு சிறந்த முன்னுதாரணமாக நான் காண்கிறேன்.

இது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

இது போன்ற முயற்சிகள் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டால் அதற்கான ஆதரவு எப்படி இருக்கும்? அத்தகைய முயற்சிகள் கொச்சைப்படுத்தப்படும் வாய்ப்புகளைப் பற்றி?

http://www.ted.com/talks/bunker_roy.html?awesm=on.ted.com_9sle

அன்புடன்,
சங்கரநாராயணன்

பங்கர் ராய்

[பங்கர் ராய்]

அன்புள்ள சங்கர நாராயணன்,

ஓர் உரையாடலில் ஜெயகாந்தன் சொன்னார், ’காந்தியம் இந்தியமண்ணில் மணலில் விதைபோலக் கலந்திருக்கிறது . எங்கெல்லாம் சிறு முயற்சியின் ஈரம் படிகிறதோ அங்கெல்லாம் காந்தியம் முளைத்தெழும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார். கொஞ்சம் கவனித்தால் நம் கிராமங்கள் அனைத்திலுமே ஒரு காந்தியைக் காணமுடியும்’

பங்கர் ராய் நவகாந்தியவாதிகளில் ஒருவர். காந்தியக் கல்வி என்ற கருதுகோளின் நடைமுறை வடிவம் அவர். காந்தியக்கல்விக்கொள்கை மூன்று அடிப்படைகள் கொண்டது.1. கல்வி,நடைமுறைத்தன்மை கொண்டதாக, அன்றாடவாழ்க்கையில் பயன் தருவதாக இருக்கவேண்டும். புறவாழ்க்கையின் ஓர் அம்சமாக அது இருக்கவேண்டும். வாழ்க்கையிலிருந்து மாணவர்களைத் தனித்து விடுவதாக இருக்கலாகாது 2. விழுமியங்களை மாணவர்களுக்கு அளிக்கவேண்டும். வெறும் தகவலறிவை, தொழில்நுட்பத்தை அளிப்பதாக இருக்கக்கூடாது . ஒட்டுமொத்த ஆளுமைப்பயிற்சியாக இருக்கவேண்டும் 3. ஆசிரியர் மாணவர் என்ற அந்தரங்கமான பகிர்வுக்கு இடமிருக்கவேண்டும்

காந்தியக்கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த வாழ்க்கையைச் செலவிட்டவர் பங்கர் ராய். பிரபல சமூக சேவகியும் தகவல் உரிமைக்கான போராளியும் லோக்பால் மசோதாவுக்கான முன்வரைவை உருவாக்கியவருமான அருணா ராய் இவரது மனைவி.

நீங்கள் சொல்வது உண்மை. தமிழகத்தில் காந்தியவாதிகளைப்பற்றிய ஆழமான அவநம்பிக்கையை இங்குள்ள திராவிட இயக்கம் உருவாக்கியிருக்கிறது. திராவிடசிந்தனை அடிப்படையில் இலட்சியவாதத்துக்கு எதிரானது , நடைமுறையில் சுயநலத்தையே சார்ந்தது. ஆகவே அது தமிழக சிந்தனையில் எல்லாவகையான நல்ல முயற்சிகளையும் எள்ளி நகையாடும் மொண்ணைத்தனத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. ஊழல்செய்பவர்களை உள்ளூர வழிபடுபவர்களே இங்கே அதிகம். காந்தி முதல் அண்ணா ஹசாரே வரையிலானவர்களை வசைபாடும், எள்ளி நகையாடும் மனங்கள் இங்கே இவ்வளவு இருப்பதற்கான காரணம் இதுவே

ஆனால் காந்தியம் அந்த எதிர்ப்புக்கும் அவதூறுக்கும் அவமதிப்புக்கும் அஞ்சுவதாக இருக்காது. அடிப்படையில் காந்தியம் அத்தகைய எதிர்நிலைகளைத் தனக்குரிய உரமாக எடுத்துக்கொண்டு வளர்வது. இங்கும் காந்தியவாதிகள் தங்கள் இயல்பான அர்ப்பணிப்புடன் பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் — கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதிகள்போல

பங்கர் ராய் பற்றி விரிவாக எப்போதாவது எழுதவேண்டும் என நினைத்திருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅதிரம்பாக்கம் – ஒரு தொல்லியல் புரட்சி