கடவுளின் உருவம்-கடிதம்

திரு ஜெயமோகன்

கடவுளை நேரில் காணுதல் ” படித்தேன். இது குறித்து என் அனுபவத்திலும், நான சமீபத்தில் படித்தவற்றில் சிலவற்றிலும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு சிறு வயது முதலே உள்ள திக்கு வாய்க்குறைபாட்டைப் போக்கிக் கொள்ள இருபது வருடம் முன்பு ஒரு உளவியல் சிகிச்சை நிபுணரிடம் பயிற்சி எடுத்தேன். அதில் ஒரு முக்கியமான பயிற்சி மகாரத்தை ” ம் ம் ம் ” என்று இழுத்து ஒரு மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுவது. (இரண்டாம் தடவை அவர் ஓமுக்கு மாறிவிட்டார் ). ஏறக்குறைய இருபது நிமிடம் கழித்து உச்சரிப்பு தானாகவே நின்றுவிடும் அளவுக்கு அந்த த்வனி நம்முள் நிறைந்து விடும். அப்போது அவர் என்னுடைய இரத்த அழுத்தத்தை அளந்தார். நாடித் துடிப்பையும் அளந்தார். அழுத்தம் 55 -30 . நாடி 40 இருந்திருக்கலாம்.

எனக்கு தியான அனுபவம் அப்போதே உண்டு. அங்கே உள்ளவர்கள் அனைவரிலும் என்னுடையதே குறைந்த அழுத்த அளவு. மிகவும் ஆழ்ந்த நேரங்களில் அது இன்னும் குறையும் என்று அவர் கூறினார். அப்படிப்பட்ட நேரங்களில் மிக ஆழ்ந்த ஒரு ஓய்வு நுழையும், தளர்வும் கிடைக்கும் என்றார். பிறகு அதில் இருந்து நானாக ஊகித்தது இதுதான். ஒரு கட்டத்தில் இரத்த அழுத்தம் பூஜ்யமாகி விடும். நாடி துடிக்காது. இதயம் நின்று விடும். (அதனால் மூச்சும் அதன் தேவை இன்றி நின்று விடும் ) ஆனாலும் பூரண பிரக்ஞை இருக்கும். ஹட யோகத்தின் கேவல கும்பகத்திற்கு ஒப்பானதொரு நிலையாக இதை நான் கருதுகிறேன். இதன் இன்னும் ஆழ்ந்த நிலையை சமாதி எனலாம் என ஊகிக்கிறேன். இந்த விஷயங்களை அனைவரும் பரிசோதித்துப் பார்க்கலாம்.

அந்த நிலைகளில் உடல் இயக்கம் அற்று விடுவதால், உணவு தேவை இராது. புராணங்களில் ஆண்டுக் கணக்கில் தவம் செய்தார் என்று சொல்வதை அன்று தான் நம்ப ஆரம்பித்தேன்.

கோகுலின் கடிதத்தில் தியானத்தில் உருவக் காட்சிகளைக் காண்பது பற்றி ஒரு கேள்வி இருந்தது. என் விளக்கம் இது. சைவ , வைணவ, வைதீக உபாசனைகளின் அடிப்படையே இதுதான். முதலில் மனத்தைக் குவிக்க ஒரு உருவம் தேவைப்படும். ஆனால் இதை ஒரு சைவ சித்தாந்தி வெறியோடு மறுத்தார்.

இந்த நிலையில் நான ” கண்ணாடிகள் இல்லாமல் தெளிந்த பார்வை ” என்ற ஒரு பயிற்சி நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் ஆசிரியர் வில்லியம் பேட்ஸ் படிப்பவரால் ஒரு சிறு கரும் புள்ளியை எந்நேரமும் மனத்திரையில் நிலை நிறுத்த முயன்றால் அற்புதமான கண் நோக்கு சாத்தியம் என்கிறார். இதில் முழு வெற்றி பெற்றவர் மனதை மிக நெகிழ்வாக வைத்துள்ளார் என கூறுகிறார். (ஏறக்குறைய ஹட யோகத்தின் திராடகம்). அந்த நூலில் சாராம்சமே நெகிழ்ந்த மனது உள்ளவரால் மட்டுமே தெளிவான் பார்வை பெற முடியும் என்பது. பல கோணங்களில் இந்த உண்மையை விளக்கியுள்ளார். ஐம்பது வருடத்துக்கு முந்திய இந்த நூல் இன்னும் விரும்பிப் படிக்கப் படுகிறது.

சுவாமி சிவானந்தர் இன்னொரு விளக்கம் தருகிறார். மனதில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பிம்பத்தை உங்களால் ஒரு சிலையிலோ, படத்திலோ கண்டது போல நிலை நிறுத்த முடியும் போது நீங்கள் சித்திகளை அடையத் தகுதி பெறுகிறீர்கள் ; உங்கள் மனம் உச்சகட்டக் குவிதலை அடைந்து விட்டது. உங்களால் உங்கள் புலன்களை அடக்க முடியும். இந்த நேரத்தில் உங்கள் பிராணன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வடிவு எடுத்து உயிருள்ள பிம்பமாகக் காட்டும். இது உயர்நிலைக் காட்சி அல்ல என்றாலும் தியான முன்னேற்றத்தின் படியே. சைவ , வைணவர்கள் பாவ பக்தியோடு செய்வதால் இது போன்ற காட்சிகளால் அவர்கள் உருவங்கள் கருவிகளே என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

தியானத்தில் (உருவ உபாசகர்கள் ) காணும் காட்சி பொய் அல்ல. அவர்கள் மட்டில் அது உயர்நிலை.

வேங்கடசுப்ரமணியன்

முந்தைய கட்டுரைஎம்.எஃப்.ஹுசெய்ன்
அடுத்த கட்டுரைகாந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்