ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

அன்பின் ஜெயமோகன்,

நான் பா.சரவணன் – ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு கொண்ட உங்கள் புனைவுகள் மற்றும் அபுனைவுகளில் ஒரு வாசகனாய் மனஎழுச்சி கண்டிருக்கிறேன். அநேகமாக 2007 -இல் இருந்து தொடர்ந்து வாசிப்பதில், உங்கள் எழுத்துகள் வாசிப்புக்கு நேர்மையாய் இருந்துள்ளன(நேர்மறையாகவோ/ எதிர்மறையாகவோ). தங்களின் இயற்கை குறித்த பதிவுகள் எனக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

உங்கள் ஊமைச்செந்நாய் கதையைப் படித்துவிட்டு “கொன்னுட்டான்யா இந்த ஆளு” னு ஒரு வாரம் வாசிப்பின் ருசி அறிந்த நண்பர்களிடம் பேசி இருக்கிறேன். அதற்கு முன்பே உங்கள் புனைவுகளில் பல உச்சங்களைக் கண்டிருந்தாலும், தூ எனத்துப்பும் ஊமைச்செந்நாயின் உணர்வின் ஆழத்தைக் காட்டும் அந்த வரிகள் உச்சங்களின் உச்சம் என்றே நினைக்கிறேன்.

கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் (Stray Dogs) குழுவாய்ச் செயல்பட்டு வேட்டை ஆடுவதை நான் கண்டிருக்கிறேன். அவை எப்படி வேட்டை இயல்பை இழப்பதில்லையோ அதே போல் மனிதனிடம் இருந்து பெற்ற குணஇயல்புகளையும் முழுவதும் இழப்பதில்லை. மனிதர்களின் எச்சில் சோற்றைத் தின்னும் 2 -ஆம் மூன்றாம் தலைமுறை – கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் (Feral Dogs) உண்டு. ஆனால் என் உறவினர் வீட்டில் வளர்த்த நரி ஒன்று மனித எச்சில் பட்ட உணவை மிக நீண்ட நேரம் புறக்கணித்து விட்டுப் பின் வேறு வழி இல்லை எனும்போது மட்டுமே உண்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போல ஊமைச்செந்நாயும் இருவேறு குணங்களுடன் இருக்கிறான். ஒன்று தன் அடிமைப்பிறப்பு அது சார்ந்து பெற்ற குணம், கட்டற்ற ஆதிவாசிப் பின்னணியில் இருந்து பெற்ற மற்றொரு குணம். அவன் கதை முழுவதும் போராடுவதென்னவோ தற்காலிகமாகப் பெற்ற அடிமை என்ற எண்ணத்தை எதிர்த்துதான். எப்பக்கமும் சேர வழியற்ற அவன் தனித்த ஒற்றைக் கொம்பனைப் போல அலைந்தவாறே இருக்கிறான்.

மிருகங்களில் மோசமான மிருகமான மனிதப்பிறப்பு அவனைப் புற உலகில் அலைக்கழிப்பதும், கவலைகளிலேயே பெரும் கவலையான தன் அடையாளம் குறித்த கவலை அவன் அகஉலகைச் சிதைப்பதும்தான் கதையை நகர்த்துகிறது. அதில் வரும் எந்த மிருகமும் முட்டாள் இல்லை என்ற வரியில் மனிதனைத் தவிர என்றொரு பதம் சொல்லப்படாமல் கடந்து செல்கிறது.

அதே போல் துரை இன்னொரு அடிமை மட்டுமே. அவனுக்குத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது. தான் எங்கோ இருக்கும் ஒரு சமூகத்தின் அடிமை – ஒரு உயர்குடிப் பெண்ணும் தன்னை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்னும் அளவுக்கு.

எந்த ஒரு வேட்டையின் இறுதியிலும் சாவின் மூலம் மிருகம் மனிதனை வெல்கிறது. மிருகம் தன்னை வேட்டையாடும் யாரிடமும் இரக்கத்தை எதிர்பார்ப்பதில்லை. அது எதிர்பார்ப்பதெல்லாம் தான் தவிர்க்கவே முடியாத அல்லது தவிர்க்கவே விரும்பாத மரணத் தருணத்தைத்தான்.அந்த ஒரே மிருகம் முதலில் கொம்பனாகவும் பின் ஊமைச்செந்நாயாகவும், இன்னும் பல மிருகங்களாகவும் புனைவு முழுவதும் வாழ்கிறது.

செந்நாய் குறித்த குறிப்புகள் உங்கள் எழுத்தின் வெவ்வேறு இடங்களில் அதிகமும் தென்படுகின்றன. இல்லையா?

இது தவிர உங்கள் எழுத்தில் எனக்குப் பிடித்த விஷயம் இயல்பாய் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் புனைவுக்குள் இணைக்கும் உத்தி.உதாரணமாக யானை டாக்டர் கதையில் வரும் செந்நாய் பற்றிய குறிப்பு. அதை முன்னரே உங்கள் அவலாஞ்சி, பங்கித்தபால் கட்டுரையில்கூடக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

“மலையைச்சுற்றிக்கொண்டு திரும்பி காருக்கு வந்து சேர்ந்தோம். திரும்பும் வழியில் வனக்காவலர் செந்நாய் ஒன்றைக் காட்டினார். அதன் காதுகள் நுட்பமாக எங்களை நோக்கி கூர்ந்திருந்தன. சிலைபோல பார்த்தபடி நின்றது. சற்று தள்ளி இன்னொரு செந்நாய். சற்று தள்ளி இன்னொன்று. ஆனால் அவை ஓடவில்லை. ஒருவகை வியூகம் அமைப்பதுபோல இடம் மாறி மாறி நின்றன. அப்போதுதான் படுத்திருந்த இன்னொரு செந்நயைக் கண்டோம். பெரியது. ஆனால் அது எழுந்து விலகியபோது கால் ஒடிந்திருப்பது தெரிந்தது”

ஒரு அனுபவம் புனைவில் எப்படி மற்றொரு அழியா வடிவத்தை அடைகிறதென்று மேல் குறிப்பிட்ட வரிகளையும், யானை டாக்டர் கதையில் வரும் செந்நாய் குறித்த வரிகளையும் சேர்த்து படித்த போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தின் ஆற்றல் இந்தப் புனைவை ஒரு உண்மை எனும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. உண்மையில் Dr.K போற்றப்பட வேண்டியவர்தான் என்றாலும், சொல்லப்பட்டது புனைவு என்பது வாசகனுக்கு தெரிய வேண்டும் இல்லையா? ஏனென்றால் அந்தப் புனைவைப் பற்றிய சில கடிதங்கள் Dr.Kயை மிஸ்டிக் மருத்துவர் எனும் அளவிற்கு எடுத்துச் சென்றுவிட்டன. ஆனால் அவர் அப்படித் தவறாக அறியப்படக்கூடாது என்றே நீங்கள் நினைப்பீர்கள் இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த மென்பொருள் தயாரிப்பு வாழ்வில் உள்ள புற & அக தேவைகள்/நெருக்கடிகளில் இருந்து என்னைப் பாதுகாப்பது இந்த வாசிப்பு மட்டுமே. தங்களுடனான ஒரு சந்திப்பில் சு.வேணுகோபாலைப் பற்றித் தெரிந்து கொண்டு படித்தேன். உண்மையில் விவசாயிகளைப் பற்றியும்/ இயற்கை பற்றியும் எழுதும் ஒரு இயல்பான எழுத்து. அதே போல் James Herriot-இன் புத்தகங்கள். சலீம் அலியின் சில புத்தகங்களைப் படித்து இருக்கிறேன். இவற்றை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

மேலும் தங்களின் புத்தக அறிமுகங்களின் மூலம் பல நல்ல படைப்புகளை வாசித்து இருக்கிறேன். தமிழில் மா.கிருஷ்ணன்,தியோடர் பாஸ்கரன், முகமது அலி தவிர்த்து இயற்கை, சூழலியல், பிற உயிரினங்கள் குறித்து எழுதி இருக்கிறார்களா? எனக்கு இயற்கை, சூழலியல், பிற உயிரினங்கள் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் சில புத்தகங்களை சொன்னால் பயனாய் இருக்கும். நன்றி.

என்றும் அன்புடன்,
பா.சரவணன்

அன்புள்ள பா.சரவணன்,

என்றுமே என்னுடைய படைப்பூக்கத்துக்கான விதையை இயற்கையில் இருந்தே எடுத்திருக்கிறேன். என்னுடைய நோக்கில் மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதிதான். அந்த விரிந்த புலத்தில் நிறுத்தாமல் நான் மனிதனை அணுகுவதில்லை. ஊமைச்செந்நாயும் அப்படியே.

செந்நாய், காட்டுநாய்களை நான் எப்போதும் கவனித்து வருகிறேன். அவற்றின் சிந்தனையும் கற்பனையும் இன்றுவரை விலங்கியல் அனுமானித்திருப்பதை விட அதிகம் என்றும், நாளை இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் வெளிவரும் என்றும் நினைக்கிறேன். அவற்றை நான் எப்போதுமே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஊமைச்செந்நாய் எளிதில் அறியமுடியாத ஆழம் உடையவன். இந்த பிரம்மாண்டமான தேசத்தின் ஆன்மா அந்த யானை. அதற்கும் துரைக்கும் நடுவே இருக்கும் தொடர்பான ஊமைச்செந்நாயின் அகத்தை வரையறை செய்யாமலேயே கதையில் விட்டுவிட்டேன். ஏனென்றால் அதை என்னாலேயே முழுமையாக சொல்லிவிடமுடியாது.

புனைவு எப்போதுமே சாரமான உண்மையை முன்வைக்கக்கூடியது. அதற்காகப் புறவய உண்மையை அது வளைக்கிறது. அதற்கான உரிமை புனைவெழுத்தாளனுக்கு உண்டு. வாசகன் அதிலிருந்து பெற வேண்டியது அந்த சாராம்சமான உண்மையையே. புனைவின் தகவல்களை அல்ல. ஊமைச்செந்நாய் யானைடாக்டரை மிஸ்டிக் என்று காட்டவில்லை. உண்மையிலேயே டாக்டர் கெ பைரன் மீது பேரன்பு கொண்டவர். அந்த எல்லைக்குள்ளேயே அவர் காட்டப்படுகிறார்.

தமிழில் இயற்கை மற்றும் மிருகங்கள் பற்றி மிகமிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. நான் வாசித்தவரை பொருட்படுத்தக்கூடிய எழுத்து மா.கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன் எழுதியவை. மா.கிருஷ்ணன்கூட பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதினார். பழங்குடிகளைப்பற்றி என்றால் ஃபிலோ இருதயநாத் எழுதிய பழைய கட்டுரைகள் சுவாரசியமானவை. தமிழில் இயற்கைபற்றிய எழுத்துக்கு வாசிப்புத்தளமே இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைஓராயிரம் கண்கள் கொண்டு
அடுத்த கட்டுரைரீங்கா ஆனந்த் திருமணம்