அனல் காற்று – கடிதங்கள்

ன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே.உங்களின் அனல் காற்று அடித்த உக்கிரத்திலிருந்து விடுபட்டவுடன் இதை எழுதுகிறேன்

 

அருமையான குறுநாவல்.ஒரு வேலை நீங்கள் முன்னுரையில் இது சினிமாவுக்கு என பாலு மகேந்திரா விடம் கொடுத்தது என கூறாமல் இருந்திருந்தால் -15 ஆம்  அத்தியாயம் பற்றிய இந்த விமர்சனங்கள் வந்திருக்காதோ என தோன்றுகிறது.

 

எல்லோரும் இது குறித்து பாராட்டி எழுதிய பிறகு நான் பாராட்டுவது என்பது சம்பிரதாயமாக இருக்கும் என்பதனால் இத்துடன் முடிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

 

குமார்.

 

8888

 

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

 வணக்கம்.

 

தங்களின் அனல் காற்று படித்தேன். ஆனந்த் அண்ணாமலையின் கடிதமும் அதற்கான தங்களின் பதிலும் சிறப்பாக இருந்தது.

 

கதை என்பது ஒரு அன்றாட வாழ்க்கையைப்போல்தான் இருக்கவேண்டும் என்றால் அதற்கு பக்கத்துவீட்டு ஜன்னலை ட்டிப்பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். கதை அன்றாட வாழ்க்கை அல்ல. அது கதாசிரியன் ஒரு கருத்தை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் ஒரு ஊடகம். சம்பவங்களை அதற்கேற்ப கதாசிரியன் அமைத்துக்கொள்கிறான். கதாசிரியனின்  திறமையினால் கருத்து எதேச்சையாக வெளிப்படுவதுபோல் நமக்கு தெரிகிறது. அண்ணாமலை போல் மிகவும் நுணுகி ஆராய்ந்தால் இதைப்போன்ற தற்செயல்கள் இன்னமும் கண்டு பிடிக்கலாம்தான். உதாரணத்திற்கு கதாநாயகனின் அப்பாவின் வாழ்க்கை, சுசி வந்திருக்கும் குறுகிய காலத்தில் அவர் மரணமடைவது, சுசியின் சாமர்த்தியம்(இடுகாட்டில் ) சண்டைக்குபின் ஒரே இரவில் அவன் அம்மா தெளிவடைவது, சுசிக்கு உடனே கிடைக்கும் விமான சீட்டு, அவன் தங்கி இருக்கும் பாண்டிச்சேரி விடுதியை அவ்வளவு விரைவாக கண்டுபிடிப்பது, சுசியின் அம்மா சந்திராவை ஒரு கேள்விகூட கேட்காமல் விட்டுவிடுவது போன்றவை,

 

இவற்றையெல்லாம் விளக்கி எழுதினால் அது ஒரு நாவலாய் விரிந்துவிடும் என நினைக்கிறேன். அத்துடன் அனல்காற்றின்(காமத்தின்) சீற்றத்தை அது மறைத்துவிடும். இங்கே  காமக் கொந்தளிப்புகளும் அலைகழிப்புகளும் காட்டுவதற்கே கதை உள்ளது அதற்கான  இயங்குதளமே கதை.

 

ஒரு அறிவியல் ஆய்வுக்கட்டுரையின் நோக்கம் அறிவியலை வெளிப்படுத்தல் மட்டுமே. நல்ல மொழிதிறன் தேவைதான்.  ஆனால் சிக்கலான கணித சமன்பாடுகளை எழுதும்போது சீரிய மொழிநடை தடங்கலாய் இருந்தால் அதை தவிர்ப்பதே நலம். சிலசமயம்  அவற்றில் மொழியே இருக்காது வெறும் குறியீடுகள் தான்.

 

இக்கதை ஒரு ஆய்வுக்கட்டுரை.

 

  அன்புடன்

த.துரைவேல்

 

 

 

அன்புள்ள துரைவேல் அவர்களுக்கு

 

அனல்காற்று போன்ற ஒரு கதையைப்பற்றி விதவிதமான கருத்துக்கள் வருவது இயல்பே. ஏனென்றால் அது அரசியல் தத்துவம் போன்றவற்றைச் சார்ந்தது அல்ல. மானுட உறவுகளைப் பற்றியது. மானுட உறவுகள் முடிவில்லாத விந்தைச்சுழற்சி உள்ளவை. அதில் சிக்கி அலைக்கழியாத சிலரே இருக்க முடியும். அவ்வனுபவங்கலில் இருந்து அவர்கள் கற்றுக்கோண்ட பாடமும் இந்த நாவலின் சாரமும் பொருந்துகிறதா என்று பார்க்கிறார்கள், அவ்வளவுதான்

 

முன்பு ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். செக்காட்டும் வாணியரின் மனைவி செக்கில் குனிந்து ஏதோ செய்தபோது அவள் தலைமுடி செக்குமாட்டின் நுகத்துடன் மாட்டிக்கொண்டுவிட்டது. எடுக்கமுடியவில்லை. செக்குமாடு சுற்றிச் சுற்று வந்தது. அதனுடன் அவளும் சுற்றிச் சிற்றி வந்தாள். அவளது அலறல் கேட்டு மாடு இன்னும் வேகமாக சென்றதாம்.

 

அதைப்போலவே உறவுகள்

 

ஜெ

 

888

 

அன்புள்ள ஜெ…சார்,

 

அனல் காற்று பற்றிய கடிதங்களை வாசித்தேன்.

 

எந்த ஒரு படைப்பும் அது ஆரம்பிக்கபட்டு, படைப்பாளிக்கு திருப்தி ஏற்படும்போது முடிக்கப்படுவதுடன் அதன் காரண , காரியங்களும் முடிவடைந்து விடுகின்றன.

 

பல்வேறு ரசிகர்கள் அவர்களின் வெவ்வேறு நோக்கோடு அதனை ரசிக்கும்போதும், விமர்சனம் செய்யும்போதும் அந்த படைப்புக்கு ஏற்படும் பலவிதமான பரிணாமங்கள் வியப்பைத் தருகின்றன. 

 

அப்போது அந்த படைப்பு எடுக்கும் விஸ்வ ரூபம் விந்தையிலும் விந்தை.


இளம்பரிதி

 

 

அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு

 

ஏதேனும் ஒருவகையில் உறவுகளின் கனலை உணராத மனிதர்கள் குறைவாகவே இருப்பார்கள். அந்த அனலில் தகித்து வெந்து உருகி சட்டென்று கனவிலிருந்து விழித்துக்கொள்வது போல எழுந்து உண்மையிலேயே நடந்ததா, எனக்கா என்று பிரமித்திருப்போம். எப்படி உருவாகிறது அந்தக் கனல்?

 

மானுட கொந்தளிப்புகளின் அடிப்படைகள் காமம்-குரோதம்-மோகம் என்கிறது நம் மரபு. அதில் முதலாவது காமமே. அதிலிருந்து தொடர்பவையே பிற இரண்டும். வம்ச விருத்திக்காக இயற்கை அளித்தது அந்த வரம். மானுட உடலில் ஒரு அழியா ஆணையாக அது பொறிக்கப்பட்டிருக்கிறது.

 

எல்லா விலங்குகளையும் போலவே மானுடனுக்கும் காமம் மிக எளியது. மிக நேரடியானது. ஆனால் அது நம் அகங்காரத்துடன் இணைந்துகொள்கிறது. நெருப்புடன் எண்ணை போல. நம் இருப்பை, நம் முக்கியத்துவத்தை, நம் அதிகாரத்தை நாம் காமத்தினூடாக நிறுவ முயலும்போதுதான் காமம் விஸ்வரூபம் கொள்கிறது. நம் உடலில் உள்ள ஒரு சிறிய மரபணுக்கட்டளை நம்மை ஆட்டிவைக்கும் கொடூரமான தெய்வமாக ஆகிவிடுகிறது.

 

அகங்காரத்தில் இருந்து விடுபட்ட காமம் தூய விலங்கின்பமாக ஆகிவிடலாம். அதையே மேலைநாட்டு கலைஞர்கள் பல முன்வைக்கிறார்கள். காமம் குறித்து நிறையவே எழுதியவரான ஹென்றி மில்லர் அதைத்தான் ஒட்டுமொத்தமாகச் சொல்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நெக்ஸஸ், பிளெக்ஸஸ், டிராப்பிக் ஆ·ப் கான்ஸர் போன்ற நாவல்களின் சாராம்சம் அதுவே. தூய காமம் என்னும் மகத்தான விடுதலை!

 

இன்னொரு பாதை உள்ளது. தூய அழகனுபவமாக காமத்தை உன்னதப்படுத்திக்கொள்வது. அந்த உன்னதமாக்கலே [Sublimation] உண்மையில் நம் மரபால் முன்வைக்கப்படுவது. பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களும் , பத்தொன்பதாம் நூற்றாண்டு இலட்சியவாதச் சிந்தனையாளர்களும் கனவுகண்டது. அஜந்தாவின் பேரழகிகளை வரைந்த புத்த பிட்சுக்களின் வழி அது. அது காமம் வழியாக இன்னும் பெரிய ஒரு விடுதலைக்குச் செல்லும் பாதை.

 

காமத்தை இலக்கியம் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது என்று தோன்றும். உண்மையில் காமமாக தோன்றி நிற்கும் அகங்காரத்தைப்பற்றியே இலக்கியம் பேசுகிறது. அகங்காரம் பட்டு தீப்பிடிக்கும் மானுட உறவுகளைப் பற்றிப் பேசுகிறது

 

இந்நாவலும் அப்படித்தான்.

 

 

88

 

 

 

அன்புள்ள ஜெ

 

கனல்காற்று நாவலைப்பற்றி உங்கள் வாசகர்களின் கடிதங்களைப் பார்த்தேன். நான் அந்தக் அக்கடிதங்களைப் படித்த பிறகுதான் உண்மையில் நாவலைப் படித்தேன். உடனே எழுதவேண்டும் என்று நினைத்தேன். உங்கள் வாசகர்களில் பலர் எழுதுவதுபோல கடிதம் எழுதும் பழக்கம் உள்ளவன் அல்ல. எனக்கு தமிழ் எழுதவே வராது. இணையம் இல்லாவிட்டால் நான் தமிழில் படித்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனாலும் இதை எழுதவேண்டும் என்று தோன்றியது. 

நீங்கள் அனல் காற்றில் எழுதியதுபோன்ற அதே அனுபவங்கள் எனக்கும் என் கல்லூரிநாட்களில் நிகழ்ந்தன. ஜெ, நாம்பண்பாடு என்னும் போர்வையைப் போர்த்தி சில விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறோம். அதில் முக்கியமானது இளம் வயதில் பாலியல் ரீதியாக பெரியவர்களால் பயன்படுத்திக்கொள்ளப்படும் அனுபவம். எனக்கு இதுவரை ஐந்து பெண்களுடன் உறவு ஏற்பட்டிருக்கிறது. ஐந்தில் மூவருக்கு அவர்களின் சிறுமிப்பிராயத்திலேயே முதல் பாலியல் சுரண்டல் நிகழ்ந்துவிட்டது. நெருக்கமான சொந்தக்காரர்களால். 

இந்த விஷயத்தை ஒரு குற்றமாக நாம் காண்பதில்லை. அதை அப்படியே மறைத்துவிட்டால் நல்லது என்றே எண்ணுகிறோம்.நம் குடும்பங்களில் பெண்குழந்தைகள் இப்போது எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் மூத்த ஆண்களின் பாலியல் பசிக்கு விடப்பட்டிருக்கிறார்கள்.

 இதுதான் ஏறத்தாழ ஆண்களுக்கும். என் நண்பர்களில் இளம்வயதில் மூத்த பெண்ணுடன் உறவு உள்ளவர்கள் பலபேர். அனைவருக்குமே அது ஒரு கசப்பான அனுபவம். ஒருவன் சொன்னான், தெரியத்தனமாக போதையில் பீயைத்தின்றுவிட்டு பிறகு விழித்துக்கொண்டதுபோல ஒரு அனுபவம் அது என்று. எனக்கும் அப்படித்தான்.

 ஜெ, என் அனுபவம் என்னவென்றால் எனக்கு உறவு ஏற்பட்டது என் சொந்த அத்தையிடம். என் அப்பாவின் தங்கை. என்னை சின்னவயதில் தூக்கி வளர்த்தவர். அவர் மகள்மீதுதான் எனக்கு உண்மையில் ஈடுபாடு இருந்தது. என்னையும் அவளையும் சேர்த்துப் பேசுவது குடும்பத்தில் வழக்கம். நான் அங்கேயேதான் எப்போதும் இருப்பேன். அத்தைபெண்ணும் நானும் சிலமுறை முத்தங்கள் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதைவிட முன்னால் செல்ல அவள் சம்மதிக்கவில்லை

 இது அத்தைக்குத்தெரிந்தது. அத்தை கெடுபிடிகளை ஆரம்பித்தாள். அதை சமரசம் செய்ய நான் முயன்றேன். அதற்காக அத்தையிடம் நான் நெருக்கமாக பழகினேன். ஒருமுறை குளியல் அறைக்குள் என்னை அழைத்தாள். நான் கண்ட முதல் பெண் உடல். உறவு உருவாகிவிட்டது. அந்த உறவு கிட்டத்தட்ட மூன்று வருடம் நீடித்தது. ஜெ, இதில் மர்மமான ஒரு விஷயம் உள்ளது. அதிகபட்சம் மூன்றுவருடங்கள்தான் எல்லாருக்குமே இந்தவகை உறவு நீடிக்கிறது. மூன்றுவருடம் தாண்டுவது அரிதிலும் அரிது. அனல்காற்றில்கூட அப்படித்தான் வருகிறது என நினைக்கிறேன். 

உங்கள் நாவலில் நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களும் என் வாழ்க்கையில் அப்படியே நடந்தன என்று சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்களே. எப்போதுமே அது கொந்தளிப்பான உறவுதான். நூறு நூற்றைம்பது மிஸ்டுகால் எல்லாம் சர்வ சாதாரணம். கூப்பிட்டால் எப்போதுமே சண்டைதான். கொஞ்சநேரம் கழித்து அழுகை. பிறகு மீண்டும் மிஸ்டுகால். தினமும் இதேதான்.

 நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்களில் உள்ள நுட்பம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதில் ஒன்று காமம் கொண்ட பெண்ணுக்கு வரக்கூடிய தைரியம். நமக்கு அந்த தைரியம் வரவே வராது. நீடாமங்கலம் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வைத்து அவள் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறாள். வீட்டுக்குள் மகனை வைத்துக்கொண்டு சந்திரா அருணை முத்தமிடும் காட்சி எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. ஆண்கள் அப்போது வெலவெலத்துப்போய்விடுவார்கள் என நினைக்கிறேன்.

 அதேபோல அத்தனை அதிதீவிரமான உணர்ச்சிகளுடன் இருந்து விட்டு பொது இடங்களில் ஒன்றுமே நடக்காதது போல சாதாரணமாக இருப்பதும் பெண்களுக்கு மட்டுமே உரிய திறமை. அவர்கள் மகாநடிகைகள் என்று நாம் நினைப்போம். அது நடிப்பா என்று சொல்லத்தெரியவில்லை. அத்தனை சாதாரணமாக இயல்பாக இருப்பார்கள். சந்திரா அருண் வீட்டிற்கு வந்து பேசும் இடங்கள் எல்லாம் என் கண்கள் முன் நிற்கிறது.

 அதேபோல தன் மகனின் உறவு அம்மாவுக்கு தெரியாமல் இருக்காது என்ற உண்மை. முதல்முறையாக நாம் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால் அதுவே அம்மாவுக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது. அருணின் அம்மா அதனால்தான் சுசியை வரவழைத்தார்கள். அதேபோல நாம் ஒருபெண்ணுடன் காமத்துடன் பேசினால் எந்த அளவுக்கு நடித்தாலும் நம் மனைவிக்கு தெரிந்துவிடும். நம் பார்வையும் குரலும் காட்டிக்கொடுத்துவிடும். என் மனைவி செல்போனை நான் எடுக்கும் விதமே காட்டிக்கொடுத்துவிடும் என்று சொல்லியிருக்கிறாள்

 எல்லாம் எல்லாருக்கும் தெரிந்துவிட்ட பிறகு நடக்கும் நாடகங்களை மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். சந்திரா-அருண் உறவு வெளிப்பட்ட பிறகு அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பாவனை மிக நுட்பமானது. வெடிகுண்டை வைத்துக்கொண்டு ·புட்பால் விளையாடுவது என்ற வரி கிளாசிக்.

 நீங்கள் எழுதியது போலவே சட்டென்று உறவு நின்று விடுகிறது. அனல்காற்று மழையாக ஆகிவிடுவதுபோலத்தான். எப்போது என்று தெரியாது. சட்டென்று நிகழ்ந்து விடும். எனக்கு உங்கள் நாவலைப் படித்தபிறகுதான் அது எப்படி எனக்கு நடந்தது  என்று புரிந்தது. அந்த இடமும் மிகச்சிறப்பு. என் அத்தை அவள் மகன் பத்தாம் வகுப்பு ஜெயித்ததும் இருவரும் பழனி போய் வந்தார்கள். அந்த நாளுக்குப்பின் அவள் என் உறவை முறித்துக்கொண்டாள். நான் கொஞ்சநாள் பித்து பிடித்து அலைந்தேன். அவளிடம் கெஞ்சினேன். மிரட்டினேன். ஆனால் அவள் பிடிவாதமாக இருந்தாள். நான் மேற்படிப்புக்கு டெல்லிபோனதும் உறவு மறைந்துவிட்டது. 

இத்தனை நுட்பமாக ஒருவர் நாவலில் எழுதியிருப்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருந்தது. உங்களிடம் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கவே என்னால் முடியாது என்று நினைத்துக்கொண்டேன். அது கிட்டத்தட்ட உங்கள் முன் நிர்வாணமாக நிற்பது போல.

 பெண்களின் இந்த தன்மைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

 

அன்புடன் 

எம்.எஸ்.

 

[சுருக்கமான தமிழாக்கம்]

 

 

அன்புள்ள எம்.எஸ் 

ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு. அதுவே எல்லா படைப்பிலக்கியவாதிகளிடமும் இருக்கும் கருவி. ஒரு சோறிலிருந்து ஒரு பானைச்சோறை உருவாக்கத்தெரியாதவன் கலைஞன் அல்ல. உறவுகள் அனைத்துமே சாராம்சமாக ஒன்றுதான் . ஒன்றை வைத்து எளிதில் இன்னொன்றைக் கற்பனைசெய்துகொள்ள முடியும். 

உங்கள் கேள்வி அபத்தமானது. காமம் சார்ந்த செயல்பாடுகளில் ஆண் பெண் இருவருக்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. பெண்களுக்கு ஆரம்ப தயக்கம் சற்று அதிகம், அவ்வளவே. மற்றபடி காமம் சார்ந்த மீறல் என்பது மனதின் அடிப்படை இயல்பு. மனிதமனத்தில் ஓயாமல் ஓடும் பகற்கனவுகளில் பெரும்பகுதி காமம் சார்ந்த அத்துமீறல்கள்தான். அவற்றை அடக்க முடியாது, உன்னதப்படுத்தியும் திசைதிருப்பியும் மேலே செல்வது மட்டுமே சாத்தியம் என்று நம் தியானமரபு சொல்கிறது. ஆனால் அதுவும் எளியவழி அல்ல.

 உள்ளே நிகழ்வது வெளியே நிகழ ஒரு தீத்துளி பெட்ரோலைச் சந்திக்கும் தருணம் மட்டும் போதும். ஆகவே மிக உறுதியான ஒழுக்கவாதியான நான், ஒருதருணத்திலும் ஒழுக்கத்தின் நெறியை விட்டு விலகாத நான், ஒருபோதும் ஒழுக்கநெறி மீறியவர்களை குற்றப்படுத்தவோ பழிக்கவோ மாட்டேன். அது தல்ஸ்தோய் கற்றுத்தந்த பாடம்

 ஏனென்றால் மனிதர்கள் மிக எளிய உயிர்கள் மட்டுமே. கணியன் பூங்குன்றன் சொன்னது போல நீர்வழிப்படூம் புணைகள்

 ஜெ

 

 அனல் காற்று:மீண்டும் கடிதங்கள்

அனல்காற்று:கடிதங்கள்

அனல்காற்று மேலும் கடிதங்கள்

அனல்காற்று:கடிதங்கள்

அனல்காற்று 1

முந்தைய கட்டுரைசங்க இலக்கிய தத்துவம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைநிலம்