கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம், சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்பத் திரும்ப வருவது ‘தவம் செய்தான், கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும், மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு முன்பே இது போலக் கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இது போன்ற தொன்மங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீதக் கற்பனையா, இல்லை உண்மையிலேயே தியானத்தில்/ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரமையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?

இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன், கிடைக்கவில்லை. இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தக் கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்கத் தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.

அன்புடன்

கோகுல்

***

அன்புள்ள கோகுல்,

சுவாரசியமான ஒரு கதையுடன் தொடங்கலாம். கார்ல் சகன் எழுதிய தொடர்பு [contact] என்ற அறிவியல்புனைகதையில் கதைநாயகி எல்லி ஓர் ஆய்வகத்தில் விண்வெளியில் வேற்றுயிர்கள் உள்ளனவா என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறாள். விண்ணில் இருந்து வரும் சமிக்ஞைகளைக் கண்காணிக்கும் கருவிகளில் ஒருநாள் ஒரு செய்தி வர ஆரம்பிக்கிறது. அச்செய்தியைப் புரிந்துகொள்கிறார்கள். அது ஒரு இயந்திரத்துக்கான வரைபடம்.

அந்த இயந்திரம் செய்யப்படுகிறது. அதில் எல்லி நுழைந்து பிரபஞ்சத்தின் காலத்துளைகள் வழியாக அதன் குறுக்காக அகாலத்தில் பயணம் செய்து பால்வழியைத்தாண்டி ஒளிவருடக்கணக்குகளுக்கு அப்பால் செல்கிறாள். அங்கே அவள் பிரபஞ்சத்தில் மிகமிக ஆரம்பத்தில் தோன்றிய உயிர்களை, அல்லது பிரக்ஞைகளை சந்திக்கிறாள். அவர்கள் பரிணாமத்தில் பற்பல படிகள் முன்னால் சென்றிருக்கிறார்கள். பல்வேறு பால்வீதிகளில் வாழ்ந்து வாழ்ந்து கைவிட்டுச்சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்கள் பிரபஞ்சத்தின் அதிபர்களாக, பிரபஞ்சத்தை மேலும் மேலும் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

அந்தப் பரிணாமத்தில் அவர்களின் அகம் விரிவடைந்து பேரறிவாகவும் ஒட்டு மொத்த பிரக்ஞையாகவும் மாறி விட்டிருக்கிறது. அதற்குமேல் உடல் தேவை இல்லை என்பதனால் உடலற்றவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்குக் காலமும் இடமும் இல்லை. தூயபிரக்ஞையாகவே அவர்களால் எல்லியின் பிரக்ஞையுடன் உரையாட முடிகிறது. ஆனால் எல்லியால் அவர்களைத் தன்னுடைய எல்லைக்குட்பட்ட பிரக்ஞையால் அறியமுடியவில்லை. அது அவளுக்குப் பெரும் தவிப்பை உருவாக்குகிறது.

ஆகவே அவர்களில் ஒருவர் அவளுக்கு ஒரு பெரிய மெய்நிகர் உலகை உருவாக்குகிறார். எல்லி சிறுவயதில் தந்தையை இழந்தவள். அவள் நினைவில் அவள் தன் தந்தையுடன் செலவிட்ட கடற்கரை இளவெயிலொளியுடன் அழியா நினைவாக இருந்துகொண்டிருக்கிறது. அந்த நினைவை அவள் பிரக்ஞையில் இருந்தே எடுத்துக்கொள்ளும் அந்த பிரபஞ்சப்படைப்பாளிகளில் ஒருவர் அந்த கடற்கரையை ‘உண்மையில்’ உருவாக்கி அந்தக் கடற்கரையில் அவளுடைய தந்தையாக ‘உண்மையாக’ வந்து அவளுடன் உரையாடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான கார்ல் சகனால் துல்லியமான அறிவியல் தகவல்களுடன் எழுதப்பட்ட இந்த நாவல் அதன் அறிவியலின் எல்லையை மீறிக் கவித்துவம் நோக்கிச் செல்லும் தருணம் இது. பொதுவாக எந்த அறிவியல் புனைகதைக்கும் இல்லாத இலக்கியத்தகுதியை இந்நாவல் அடைந்தது.

இந்த உச்சகட்டம் மிக முக்கியமான ஒரு சாத்தியப்புள்ளியைத் தொட்டுக்காட்டுகிறது. காலத்தின், பிரபஞ்சத்தின், ஆற்றலின், பிரபஞ்சக்கருத்தின் முடிவின்மையைச் சந்திக்க நேரும் மானுடப்பிரக்ஞை எவ்வாறு அதை உள்வாங்க முடியும்? எந்த அளவுக்கு அதைத் தன் பிரக்ஞையால் அள்ள முடியும்? எந்த அளவுக்கு அதை வெளிப்படுத்த முடியும்?

மனிதப்பிரக்ஞை என்பது மனித உடலில் இருந்து விடுபட முடியாதது. விடுபடும் என்றுகொண்டாலும்கூட அது ஓர் உச்சநிலையில் மட்டுமே சாத்தியம். நாம் நம் இருப்பை நம் உடலைக்கொண்டே உணர்கிறோம். அதுவே நம்முடைய சாத்தியங்களின் எல்லை. மானுட உடல் கால-இடத்தில் அமைந்திருப்பது. ஆகவே நம் அகம் என்பது நாம் நம் உடலின் புலன்கள் மூலம் உணரும் தூலஅறிதலின் நுண்வடிவமாகவே உள்ளது. படிமங்களாலும் மொழியுருவகங்களாலும்தான் நாம் நம் அகத்தை உணரமுடிகிறது, வெளிப்படுத்த முடிகிறது. அகால இருப்பு, தூலமே அற்ற நுண் இருப்பு என்பது சாதாரணமாக நம் அறிதல்களுக்கு அப்பாலுள்ளது.

எல்லியின் அறிதலின் எல்லையும் அதுதான். அவளால் அவளுடைய உடல்சார்ந்த இருப்பைவிட்டு வெளியே பிரக்ஞையைக் கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகவே அந்த பிரபஞ்ச பிரக்ஞைகளை அவளால் உள்வாங்க முடியவில்லை. அதனால் அவர்கள் கனிந்து இறங்கி வந்து, அவளுடைய எல்லைக்குள் நுழைந்து, தங்களை அவளுக்காக உருவாக்கிக் காட்டுகிறார்கள்.

அந்த பிரபஞ்ச ஆளுமைகளை ஒரு வசதிக்காகக் கடவுள்கள் என உருவகித்துக்கொண்டால் கார்ல் சாகன் காட்டும் இந்நிகழ்வு அப்படியே எந்த ஒரு இந்து தொன்மத்துக்கும் சமானமானதாக ஆகிவிடுகிறதல்லவா? வேறு வழியே இல்லை, இந்நாவலின் உச்சத்தை இப்படி மட்டுமே சித்தரிக்கமுடியும்.

இன்னொரு வழி உள்ளது . எல்லி அவளுடைய உடல்சார் இருப்பை உதறி பிரபஞ்ச பிரக்ஞையாக அவளே மாறி அவர்களைச் சந்திக்கமுடியும்.

அதாவது கடவுள் மனிதனாக வேண்டும். அல்லது மனிதன் கடவுளாகவேண்டும். அந்த இருவழிகளிலும் இந்து புராணமரபு கடவுளை சந்திக்கும் தருணத்தை எழுதியிருக்கிறது. புராணம் எழுதிய ரிஷி எப்படி அதைச் சொல்ல முயல்கிறாரோ அதைத்தான் நவீன வானியலறிஞரும் முயல்கிறார்.

இந்திய ஞானிகளின் இறையுணர்ச்சியை மேலைநாட்டு அறிவியலாளர்கள் அவர்களின் நிரூபணவாத அறிவியல் நோக்குடன் ஆராய்ந்து நிறையவே எழுதியிருக்கிறார்கள். தியானம் போன்றவை தொடர்ச்சியான தனிமை மூலமும், செயலின்மை மூலமும் கடுமையான சலிப்புணர்ச்சியை உருவாக்கிக்கொண்டு அடையப்படும் பிரமைக்காட்சிகள் என்பதே அவர்கள் பொதுவாகச் சொல்லும் விளக்கமாக இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு இலக்கியவாசகனும் அன்றாடம் அடையும் சாதாரண இலக்கிய அனுபவத்தை அந்த அறிவியல் மூலம் அவர்கள் விளக்கும்போதே அது எந்த அளவுக்கு அபத்தமானதாகவும் போதாததாகவும் இருக்கிறது என நாம் உணர்கிறோம். அவர்களே பத்து வருடத்துக்கு ஒருமுறை ஒரு விளக்கத்தை மறுத்து அடுத்த விளக்கத்தை முன்வைக்கவும் செய்கிறார்கள். பிரபஞ்ச அனுபவம் போன்ற ஒன்றை எப்படி அவர்கள் தங்கள் தர்க்கங்கள் மூலம் விளக்கிவிடமுடியும்?

எல்லி அவளுடைய பிரபஞ்சப் பயணம் முடித்து திரும்பி வருகிறாள். அவள் பலப்பல ஒளிவருடங்கள் பயணம் செய்து வந்திருக்கிறாள். ஆனால் எல்லாப் பதிவுகளும் அழிந்துவிட்டிருக்கின்றன. காரணம் இந்த உலகின் எளிய தொழில்நுட்பத்தால் அந்தப் பயணத்தைப் பதிவுசெய்ய முடியாது. அவள் இயந்திரத்துக்குள் இருந்த காலம் பூமியின் கணக்குப்படி இருபது நிமிடங்கள். அவள் சொன்னதை எவருமே நம்பவில்லை. அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக, ஒரு மெல்லிய புன்னகையாக அவளில் தங்கிப்போன ஒன்றாக அந்த ஞானம் எஞ்சுகிறது.

அதுதான் ஞானிகளின் நிலை. அவர்கள் எப்படி அந்த அலகிலா அறிதலை உள்வாங்கிக்கொள்ளமுடியும்? ஒன்று தங்கள் அறிதலின் எல்லைக்குள் அதைக் கொண்டுவந்து அள்ளிக்கொள்ள முடியும். அதாவது தங்களுக்குள் இருக்கும் படிமங்களால் அதைத் தனக்கென அறிந்து கொள்ளமுடியும். அல்லது தங்கள் சுயத்தை முழுமையாக அழித்துக்கொண்டு அதுமட்டுமாக ஆகி அதை அறிய முடியும். அந்த இருவகை அறிதல்களையுமே இந்திய மதங்களில் நாம் காணலாம். பலசமயம் அருகருகே காணலாம். ஏராளமான பாடல்களில் அவ்விரு அறிதல்களுமே ஊடும்பாவுமாகப் பின்னி வெளிப்படுவதைக் காணலாம்.

புத்தரின் கதையில்கூட அவர் அடைந்த உச்ச அனுபவம் தூய அறிதலாக, தன்னை இழந்து அதுவாக ஆகி விரித்துக்கொள்ளும் நிலையாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதுவரையிலான பயணம் எல்லாமே உருவகங்களின் தரிசனங்களகவே இருக்கிறது. அவர் தன் தியானத்தில் மாரனை நேரில் காண்கிறார்.

ஒரு பிரபஞ்ச அனுபவத்தை ஒரு மெய்ஞானி முருகனாக, பெருமாளாக, ஏசுவாக ’நேரில்’ காண்பதை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அந்த வடிவங்கள் இங்கே உள்ள மதமரபால் அவர் ஆழ்மனத்தில் மிகச்சிறிய வயதிலேயே நடப்பட்டவை. அவரது கற்பனையால், தியானத்தால், நீரூற்றி வளர்க்கப்பட்டவை. அவர் அவ்வடிவங்கள் வழியாகவே சென்றார் என்றால் உச்சகணத்தில் பிரபஞ்ச அனுபவம் அவருக்கு மிக அந்தரங்கமான அந்த வடிவத்தை அடைகிறது.

அதாவது அந்த வடிவங்களைக் குவளையாகக் கொண்டு அவர் அந்தக் கடலை அள்ளுகிறார். அந்த அனுபவம் தன்னை அவ்வடிவங்கள் மூலம் அவருக்குள் நிகழ்த்திக்கொள்கிறது. எல்லிக்கு நிகழ்ந்தது போல. அவரால் அதை அந்தப் படிமங்கள் அல்லது உருவகங்கள் வழியாக வெளிப்படுத்த முடியலாம்.

அலகிலா வெளியாக அந்தப் பிரபஞ்ச அனுபவத்தை உணர்பவர் தன்னை முழுமையாக இழக்கிறார். அவரால் தன்னிலையை உணர முடிவதில்லை. நாராயணகுரு சொல்வதுபோல ‘அறிவும் அறிபவனும் அறிதலும் அறிபடுபொருளும் ஒன்றேயாகும் நிலை’ அது. உப்புபொம்மை கடலை அறிதல் போல என ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். அந்த அனுபவத்தை அவர் தத்துவார்த்தமாக ஓர் எல்லைவரை விளக்கலாம். ஒருவேளை ஒரு தகுதியான மாணவனுக்குக் கொஞ்சம் புரியவைக்கவும் கூடும்.

பிரமை அல்லது மனப்பிறழ்வுக்காட்சி அல்லது சுயஏமாற்று என்றெல்லாம் இந்தப் பேரனுபவத்தை முத்திரை குத்திவிட்டு செல்லலாம்தான். அதைத் தங்கள் நிரூபணவாத அறிவியல் மீது முடிவிலா நம்பிக்கை கொண்ட வெள்ளையர் சிலர் செய்வதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் அது அறிய விரும்புபவனின் வழி அல்ல. அது நிராகரிக்க விரும்புவனின் வழி.

அந்தப் பேரனுபவத்தைப் பெற்றவர்கள் என அறியப்படுபம் ஞானிகள் எவரும் பிரமைக்கும், மனப்பிறழ்வுக்கும், மெய்யனுபவத்துக்கும் வேறுபாடு சொல்லத்தெரியாத அசடுகளோ மனநோயாளிகளோ எத்தர்களோ ஆக இருக்கவில்லை. நம்மில் மிகச்சிறந்த அறிவியலாளர்களை விட தெளிவான தர்க்கம் கொண்டவர்களாக, நம்மில் மிகச்சிறந்த கவிஞர்களை விட துல்லியமான கற்பனை கொண்டவர்களாக, நாம் ஒவ்வொருவரையும் விட தெளிந்த நடைமுறைப் பிரக்ஞை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தத்துவநூல்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள். சர்வசாதாரணமான லௌகீக விஷயங்களில்கூட மிக நுட்பமான நடைமுறைத் தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் அடைந்த அந்த அனுபவம் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை அறியமுடியாதவர்களின் பிடியில் இருந்து ஒவ்வொருமுறையும் நழுவிக்கொண்டிருக்கிறது. அந்தப் பிரபஞ்ச அனுபவம் என்ன? அதை என்னால் சொல்லமுடியாது. நான் அதை அறிந்தவனல்ல. ஆனால் நான் முழு உறுதியுடன் சொல்கிறேன், அந்த அனுபவம் மானுட சாத்தியமென்பதை நான் என் சொந்த அனுபவத்தால் அறிவேன்.

தியானத்தின் இரண்டாம் படிகளில் அந்த உச்ச அனுபவத்தின் சிதறலனுபவங்கள் பலவற்றை அடைவோம். பலசமயம் அவை எதிர்மறையானவை. மிகத்துல்லியமான மெய்யனுபவங்கள் அவை. நம் எல்லாப் புலன்களும் உண்மையாகவே அபாரமான, பயங்கரமான பல வடிவங்களை அறியும். நம் முன் நம்மருகே அவை ‘உண்மையிலேயே’ இருக்கும்.

அவை என்ன? பிரமைகள் என எளிதாகச் சொல்லிவிடலாம். மனப்பிறழ்வு என்று விளக்கலாம். ஆனால் அந்த அனுபவத்தை அறிந்தவனுக்குத் தெரியும் அவை பிரமைகளோ பிறழ்வோ அல்ல என. அவன் மிகத்தெளிவாக மிக சமநிலையுடன் இருப்பதை அவன் அறிவான். நித்யா அதை The Projection என்று சொல்வார். நம்முள் உள்ள, நம்மைச்சுற்றி உள்ள ஒரு விஷயம் தன்னை அந்த வடிவில் வெளிப்படுத்திக்கொள்கிறது. ஒரு மரக்கிளையை அசைத்துக் காற்று தன்னைக் காட்டிக்கொள்வதுபோல.

அந்தத் தூலவடிவம் நம்முடைய ஆழ்மனதில் எங்கோ உள்ளது. நமக்கு நம் மரபு தருவது. நம் அனுபவங்கள் மூலம் நாம் திரட்டி உள்ளே வைத்திருப்பது. நாம் அறியும் அந்த அருவமான அகக்கூறு தன்னிச்சையாக அந்தத் தூலவடிவத்தை அந்தக் கணத்தில் எடுத்துக்கொண்டு, தன்னைக் காட்டுகிறது, அவ்வளவுதான். அவ்வாறு நூற்றுக்கணக்கான அகநிகழ்வுகள் தன்னை வெளிப்படுத்தும் அந்த கட்டம் தியானத்தில் மிக ஆபத்தானது. சரியான வழிகளினூடாகக் கடந்துசெல்லவேண்டியது.

ஹரி சிங்கமுகமூடியுடன் தன் தங்கை முன் வருகிறான். தங்கை பயந்து அலறுகிறாள். ஹரி முகமூடியை அகற்றியதும் தங்கை சிரிக்கிறாள். ராமகிருஷ்ணர் சொன்ன உதாரணக்கதை இது. அந்த சிதறும் பிம்பப் பெருவெளியை ஒற்றை பிம்பமாகத் தொகுத்துக்கொள்ள இங்கே அவர் வழிகாட்டுகிறார். எல்லா வடிவங்களும் ஒன்றின் முகங்களே என உணர்வதே ராமகிருஷ்ணர் அளிக்கும் நெறி. அது ஓர் உச்சநிலை அறிதல்.

புராணங்களில் ‘தவம் செய்து கடவுளைக் கண்டான்’ என மிக எளிதாக அந்த அறிதலே சொல்லப்பட்டுள்ளது. புராணங்களைப்பொறுத்தவரை ஓர் உண்மை உள்ளது, அவற்றில் மிக எளிதாக எது சொல்லப்படுகிறதோ எது மிக அடிக்கடி வருகிறதோ அதுவே மிக முக்கியமானது, மிகமிக நுட்பமானது.

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Nov 10, 2011

ஆன்மீகம் தேவையா?

நான் இந்துவா?

தத்துவம் தியானம்-கடிதம்

யோகம்,ஞானம்

யோகம் ஒருகடிதம்

ஆன்மீகம் போலி ஆன்மீகம்

தியானம்

தியானம் ஒரு கடிதம்

பொம்மையும் சிலையும்

ஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரை’சயன்டிஸ்ட்!’