அன்புள்ள ஜெயமோகன்
நலமா? ஆதாமிண்ட மகன் குறித்து நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். நல்ல மென்மையான படம். சலீம்குமார் அபாரமான ஒரு நடிகர். நானும் இது குறித்து சொல்வனத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். நான் நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லை. நீளம் கருதி எழுதியவற்றில் பலவற்றை நீக்கி விட்டிருந்தேன். நேரம் கிட்டும் பொழுது வாசிக்கவும் http://solvanam.com/?p=17106
அன்புடன்
ராஜன்
அன்புள்ள ஜெ,
இந்த விவாதம் கண்டிப்பாய் எழுதப்பட வேண்டிய ஓன்று.கிரியேசன் என்று ஒரு புத்தகம் ஆர்ட் ஆப் லிவிங்கால் வெளியிடப்பட்டது. சின்னப் புத்தகம்.ஒவ்வொரு மதங்களும் எப்படி இந்த பிரபஞ்சத் தோற்றத்தைக் கையாண்டு கொண்டிருக்கின்றனஎன்பதைப் பற்றியும் இந்து மதம் அதை எவ்வாறு மிகச் சிறந்த தொலைநோக்கோடு கொண்டு செல்கிறது என்பதைப் பற்றியும் ஆராயும் புத்தகம்.
இதை மேலும் ஆழமாக நீங்கள் செய்தால், தமிழில் எழுதப்பட்ட ஆன்மீக அறிவியலுக்கு அது ஒரு நல்ல கொடையாய் அமையலாம்.
அ) பிரபஞ்சம் பற்றிய மற்ற மதங்களின் கருத்துக்கள்
ஆ) டார்வின் கருத்துக்களின் துவக்கம்
இ) நமது மதங்களின் பிரபஞ்சம் பற்றிய கருத்துருவாக்கம்
ஈ) டார்வின் மற்றும் வளரும் அறிவியலோடு நம் மதம் இணையும்/ மாறுபடும் புள்ளிகள்
வேதாத்திரி மகரிஷி இதை ஓரளவு செய்ய முற்பட்டார். சில அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட சமர்ப்பிக்கப்பட்டன.
அப்புறம் என்னவாயிற்று என்று தெரியாது.
நல்லது.
மணி ராமலிங்கம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் பதிலுரைக்கும், அங்கீகாரத்திற்கும் மிகவும் நன்றி. உற்சாகமாக இருக்கிறது. முதலில் ஏனோ தானோ என்றுதான் ஆரம்பிதேன். கொஞ்சம் கொஞ்சமாக சமண கோவில்களின் பழமை என்னை ஈர்த்து விட்டது. அதோடு, அங்கிருக்கும் சமணர்களுக்கு (நயினார்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார்கள்) கோவிலின் வரலாறு பற்றிப் பெரும்பாலும் தெரியவில்லை. திறக்கோயில் பற்றிக் கூட அவர்கள் (தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது) அளித்த பழைய நோட்டீஸ் வைத்துதான் எழுதினோம்.
முந்தைய மெயிலில் இரண்டு திருத்தங்கள்.
“இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள்” என்பதற்கு பதில்,
“தொண்டை நாட்டு சமணர் கோயில்களுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள்” என்று இருக்க வேண்டும்.
அடுத்தது சீனாபுரம் இருப்பது ஈரோடு மாவட்டத்தில். மாற்றி எழுதி விட்டேன். மன்னிக்கவும். விடுபட்ட மேலும் மூன்று சமணர் கோவில்களைப் பற்றி இங்கே இணைத்து உள்ளேன்.
1) ponnur jain temple
2) Thiruparuthikundram (samanakanchi)
3) Ponnur hill jain temple (Acharya kund kundar)
நீங்கள் திருவண்ணாமலை செல்வதாகத் தங்கள் இணையதளத்தின் மூலம் அறிகிறேன். அங்கிருந்து திருமலை சமணக் கோவிலும் , மடமும் 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
க. சரவணகுமார்