«

»


Print this Post

உடல்மனம்


ஜெயமோகன் அவர்களுக்கு,

 

சில மாதங்களாகவே உடல் சோர்வும் , கை கால் நடுக்கமும் இருந்தது.பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தூக்க மயக்கம் எப்போதைக்கும். சமீபத்தில் எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்று பயம் வந்தது. நரம்பியல் மருத்துவரிடம் கான்பித்தேன்.ஏதோ கை காலில் தட்டினார்.அதிர்வுகள் தெரிகிறதா என்றார். எனக்கு எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வேலையில் நிறைய மன உளைச்சலா என்றார். உடற்பயிற்சியே இல்லை போலும் என்றார். ஆமாம் என்றேன்.

 

மாத்திரை கொடுத்தார். மிக முக்கிய மாத்திரை தூக்கத்தை போக்குவதற்கு. over brisk ஆகிவிடுவீர்கள் என்றார்.சிரித்தேன்.

எனக்கு இதற்கு மாத்திரை உண்டு என்பதே இப்போது தான் தெரிந்தது.பெரிதாக அலட்டிக்கொள்ள ன்றுமில்லை,உடற்பயிற்சி செய்யுங்கள் என்றார்.

 

ஏதோ உடல் நோயிருக்குமென்று நான் நினைத்து வந்தேன். மன உளைச்சல் கூட காரணமாகயிருக்குமென்று நான் யோசிக்கவே இல்லை.நான் பெருமாலான நேரங்களில் தேமேஎன்றுதான் இருப்பேன். மனதில் தான் அதீத உரையாடல்கள் நிகழ்ந்தபடியே இருக்கும். ஒன்று எனக்கான தேடல்கள் சார்ந்து அல்லது என் இள வயதிர்குரிய காம எண்ணங்கள் சார்ந்து.(உறுபசி சம்பத்). இதைதவிர அநேகமாக நான் சிந்திப்பதில்லை.

 

மூன்று வருடங்களுக்கு முன் பின்தொடரும் நிழலின் குரல்படித்தது எனக்கு சில பிரச்சனைகளை உருவாக்கியது. பெருங் கணவுகள் வேண்டாம்.அப்படியென்றால் ஏப்படி வாழ்வது?. யாரோ என்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தது போன்ற உணர்வு. ஏப்படி இதிலிருத்து தப்பிப்பது என்பதே என் எண்ணமாக இருந்தது.

 

விஷ்ணுபுரம் அதற்கான எந்த பதில்களையும் எனக்கு தரவில்லை. எல்லோரும் ஐதீகங்களாக மாறும் மூன்றாம் பகுதி மட்டும் உலுக்கிவிட்டது.மானுட வாழ்வின் சர்வசாதாரணத்தனம் எனக்கு அப்போது தான் உரைத்தது.அந்த நாவலில் அதற்குமேல் எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அப்போது எனக்கு அறிமுகமான மாசனோபு ,காந்தி,லேரி பேக்கர் எனக்கான வாசல்களை திறந்தன. என்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவன் இறங்கி ஒடிவிட்டான். நிம்மதியாக மூச்சு விட ஆரம்பித்தேன். அவர்கள் காட்டும் உலகம் நோக்கி கணவுகான ஆரம்பித்துவிட்டேன். மனம் எம்பி எம்பி குதிக்கிறது.உடலால் தான் தாங்க முடியவில்லை போலும்.

 

 

இங்கே வடபழனி குமரன் காலணியில் ஒருவர் வாழைப்பழ கடை வைத்திருக்கிறார்.வயதானவர்.தாடிக்காரர்.நன்றாக பேசுவார். அவரிடம் வேலைக்கு போகமுடியவில்லை,உடல் சரியில்லை என்றேன். உடல்  சோர்வாக இருக்கிறதா என்றார்.கை கால் குடைச்சல்.ஆமாம் என்றேன்.மனம்தான் காரணம்.எதிர்பார்த்த ஏதோ நடக்காதது.ஏதேயோ எதிர்ப்பார்ப்பது இதுதான் 75% காரணமென்றார்.

 

உடற்பயிற்சி செய்யுங்கள் , நான் சொன்னவற்றை யோசியுங்கள், எல்லாம் சரியாகிவிடுமென்றார். நான் அந்தக் கோணத்தில் அப்போது தான் யோசிக்க ஆரம்பித்தேன். டாக்டரிடம் சென்ற போது இதையேத்தான் சொன்னார்.

 

நன்றி,

ச.சர்வோத்தமன்.

 

 

 

அன்புள்ள சர்வோத்தமன்,

 

பல காரணங்களால் சற்று தாமதம். இப்போது உடல்நலமடைந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

என் அப்பாவின் தூரத்துச் சொந்தமான அண்ணா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அக்கால ஆயுர்வேத மருத்துவர்களில் ஒருசாரார் தீவிரமான நாத்திகர்களாக இருப்பார்கள் –சார்வாக,தார்க்கிக முறைகளைச் சேர்ந்தவர்கள். பெரியப்பாவும் அப்படித்தான். ஆனால் மருத்துவம் பார்ப்பதற்கு முன்னர் நோயாளியின் ஜாதகம் பார்ப்பார். காரணம் அப்படி தொன்றுதொட்டே ஒரு மரபு இருக்கிறது, அது பயனும் அளிக்கிறது என்பார். அதில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும். விசித்திரமான முரண்பாடுகள் கொண்ட கூரிய மனிதராக இருந்தார்.

 

அக்கால வழமைப்படி காலணாதான் காணிக்கையாகக் கிடைக்கும்.  திருவிதாங்கூரில் பண்டுகாலத்தில் மகாராஜா மருத்துவர்களுக்கு அன்பளிப்பாக நிலங்கள் கொடுத்து இலவச மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் அதற்கு பழகிப்போயிருந்தார்கள். பிற்பாடு வைத்தியர்கள்  அதை நம்பி வாழ ஆரம்பித்த காலகட்டத்திலும் மக்கள் மனம் மாறவில்லை. ஐம்பது பைசாவுக்குமேல் தட்சிணை கொடுக்க மாட்டார்கள். ஆகவே மெல்ல மெல்ல ஆயுர்வேதம் குடும்பத்திலிருந்தே மறைந்தது.

 

அவரது பல அவதானிப்புகளை நான் கூடவே இருந்து கவனித்திருக்கிறேன். ஒருமுறை ஒருவர் வந்து பேசிக் கொண்டிருந்தார். காமராஜுக்கு கடும் வசை. சரி நாயரிசம் பேசுகிறாரா என்றால் எம்.என் கோவிந்தன் நாயர் முதல் ஜே.ஹேமச்சந்திரன் வரை அனைவருக்கும் வசைமாரி. சட்டம் , அரசு , பண்பாடு, விழுமியங்கள், குடும்பம், உறவுகள், கடவுள் எல்லாவற்றையும் அவநம்பிக்கையுடன் நிராகரித்தார்.

 

அவர் பெரிய படிப்பாளி. எங்களூரில் கோயில்களில் புராணம் படிப்பதில் அவரே முக்கியமானவர். சம்ஸ்கிருதம்,தமிழ்,மலையாளம் அறிந்தவர். ஆகவே அவரது பேச்சு முழுக்க முழுக்க தர்க்கபூர்வமானதாக இருந்தது. ஏராளமான மேற்கோள்கள். ஏராளமான சொலாட்சிகள்.ஆரம்பத்தில் அவர் மிக உணர்ச்சிகரமாக தன் எண்ணங்களைச் சொன்னார். மெல்லமெல்ல அந்த எண்ணங்களை அற்ற் ஒரு கருத்துத் தரப்பாக ஆக்கிக் கொண்டார். பிறகு பேசிப்பேசி ஒரு முழுக் கோட்பாடாக ஆக்கிக்கொண்டார்.

 

அவரது கோட்பாடு இதுதான். ஊழிக்காலம் என்பது ஒரே நாளில் வருவதில்லை. வயோதிகத்தில் மரணம் நிகழ்ந்தாலும் அதற்கான காரணமாக அமையும் நோயின் விதை ஒரு குழந்தை கருப்பைக்குள்ளே உருவாகும்போது –பார்த்திவப்பரமாணு கருப்பைக்குள் நான்!என உணரும் கணத்திலேயே — உருவாகிவிடுகிறது. அதைப்போல் மனித இனமே அழியும் ஊழிக்கால அழிவின் விதை மனித இனத்தின் கருப்பைக்குள் இருந்தது. அது மனிதனின் இன்பத்துக்கான விழைவு, சக மனிதன் மேல் வெறுப்பை உருவாக்கிக்கொள்ளும் தன்மை, மற்றும் பேராசை ஆகியவை. அவற்றை ரிஷிகள் காமம் க்ரோதம் மோகம் என்று வகுத்தார்கள்.

 

கருப்பைக்குள்ளேயே குழந்தை வாயில் விரல்விடுகிறது. இரட்டைக்குழந்தைகள் ஒன்றை ஒன்று உதைக்கின்றன. கருப்பைக்குழந்தை கருவுக்குள் இடம் போதாமல் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆம், காமமும் குரோதமும் மோகமும் மனிதனின் அடிப்படை இயல்புகள். மனிதனின் விவேகம் என்பது இந்த மூன்று உணர்ச்சிகளையும் வேறு உணர்ச்சிகள் சமன்செய்வதனால் உருவாகக்கூடியது அல்ல. இவை ஒன்றுக்கொண்று மோதுவதன் மூலம் உருவாகும் செயலின்மை மட்டும்தான் அது. அதாவது ஒருவனின் காமத்தை பேராசையும் பேராசையை குரோதமும் தான் கட்டுப்படுத்த முடியும்

 

நவீன காலகட்டத்தில் காமகுரோத மோகங்கள் அவற்றின் தளங்களை விட்டு பெருகி வருகின்றன. புல்வெளியில் நிற்கும் குதிரையை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏனெறால் அதற்கு தன் கால்களின் பலம் தெரியும். புல்வெளியின் திறந்த இடம் அதை தன் கால்களை மட்டுமே உணரச்செய்கிறது. அதைப்போல நவீன நாகரீகம் காமகுரோதமோகங்களை வானம் வரை திறந்த வெளியில் விட்டுவிடுகிறது. நவீன மனிதன் அதை எத்தனை தூரம் வேண்டுமனாலும் பெருக்கிக் கொள்ளுவான். ஆகவே உலகம் அழிவது துரிதப்படுகிறது. இன்றைய பண்பாடே இதைத்தான் காட்டுகிறது.

 

இவ்வாறு அவர் தர்க்கப்படுத்திக் கொண்டே சென்றார். கூட இருந்த சிலர் சில கேள்விகளைக் கேட்டபோது அவற்றை அவர் ஊதித்தள்ளினார். அப்போது பெரியம்மா காப்பி கொண்டுவந்தார்கள். அவர் தனக்கு வேண்டியதில்லை வயிறு புளித்து இருக்கிறது என்றார். பெரியப்பா அவர் கையை பிடித்து நாடி பார்த்தார். வாயை ஊதச்சொன்னார். பின்னர் ஒரு லேகியத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுங்கள் என்றார்.

 

அவர் கிளம்பிச் சென்றபின் பெரியப்பா அந்த கோட்பாட்டுக்கு பித்தசூன்யதர்சனம்என்றார். அதற்கான மருந்தாக கடுக்காய் அமையும் என்றார். நான் என்ன என்றேன். அவரது  வாயை முகந்ந்து பார்த்தேன். அவருக்கு கொஞ்ச நாட்களாகவே மலச்சிக்கல். மலச்சிக்கல் மெல்ல மெல்ல உடலின் எல்லா இயக்கங்களையும் பாதிக்கும். மனதையும் பாதிக்கும். சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்கும் என்றார் பெரியப்பா.

 

முதலில் அது தூக்கத்தை இல்லாமலாக்கும். அதேபோல தூக்கமின்மை மலச்சிக்கலையும் உருவாக்கும். விளைவாக செரிமானமின்மை வயிற்று எரிச்சல் உருவாகும். சிலருக்கு மூச்சுத்திணறல் மூக்கடைப்பு ஏற்படும். சிலருக்கு கண்கள் அதீதமாக கூசும். பெரும்பாலானவர்களுக்கு இவற்றின் விளைவாக கடுமையான தலைவலி உருவாகும். ஒற்றைத்தலைவலிக்கு மலச்சிக்கல் முக்கியமான காரணம் என்றார் பெரியப்பா.

 

மலச்சிக்கலால் மனம் நேரடியாகவே பாதிக்கப்படுகிறது. உடலில் இருந்து எரிச்சல் சிந்தனைக்குக் குடியேறுகிறது. எரிச்சல் எல்லா எண்ணங்களிலும் பரவுகிறது. சாதாரண ஆட்கள் அதை வெறும் உணர்ச்சிகளாக வெளிப்படுத்துவார்கள். பண்டிதர்கள் தங்கள் மனத்தை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த உணர்ச்சிகளை அவர்கள் உடனே கோட்பாடாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

 

அவரது சிக்கல் மலச்சிக்கலால் உருவான பித்தபங்கம் தான் என்று பெரியப்பா சொன்னார். பித்தத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும். அதற்கு மிகச்சிறந்த மருந்து கடுக்காய். அது மிகச்சிறந்த மலமிளக்கி. மலத்தை வெளியேற்றி பித்தத்தை அதிகரித்து உடலை நல்ல சூளையாக அது ஆக்கும். உள்ளே செல்வதெல்லாம் உள்ளேயே சாம்பலில்லாமல் எரிய ஆரம்பித்தால் உடல் இலகுவாகிவிடும். இலகுவான உடலில் சிந்தனைகள் இப்படி கனத்து தொங்காது என்றார்.

 

ஆகவேதான் அந்த தத்துவ சிந்தனைக்கு ஒட்டுமொத்தமாகவே அவர் பித்தசூன்யதரிசனம் என்று பெயரிட்டார். அதற்கு கடுக்காய் லேகியம் மருந்தாகவும் கொடுத்தார். நாளை மறுநாள் அந்தச் சிந்தனை மாறியிருக்கும் என்றார். அனைவரும் சிரித்தார்கள். எனக்குமட்டும் அது வெறும் கிண்டலாக தோன்றியது

 

ஆனால் நம்பவே முடியவில்லை, அதற்கு அடுத்த நாளே அந்தப் பண்டிதர் நேர் தலைகீழாக உச்சகட்ட உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.  எல்லா நீரும் கடலை சென்றடைகின்றன. அதுபோல எல்லா உணர்ச்சிகளும் சாந்தத்தையே சென்றடைகின்றன என்றார். எந்த உணர்ச்சி நம்மிலெ ழுந்தாலும் நம் மனதுக்குள் அதை சாந்தமாக கவனிக்கும் ஒரு மூலை உள்ளது. ஆகவே சாந்தமே மனதின் அடித்தளம். அதுதான் மேடை. பிற எட்டு மெய்ப்பாடுகளும் அந்த மேடையில் நிகழ்வனவே என்றார் — முழுக்க நேர்நிலையான தரிசனம். நான் அதை ஸ-பித்ததர்சனம் என்று எண்ணிக்கொண்டேன்.

 

நம் மனநிலைகளுக்கும் நம் சிந்தனைகளுக்கும் உடலுடன் உள்ள உறவை நாம் கவனிப்பதே இல்லை. மனம் என்பது ஒரு தூய இருப்பு என்றும் அது தனக்குள் முழுமைகொண்டு தானே இயங்கிக் கொள்கிறது என்றும் நாம் எண்ணுகிறோம். மனதுக்கு உடல் ஒரு வாகனம் கூட இல்லை என்று எண்ணுகிறோம். மனம் சார்ந்த ஒன்றுக்கு மனம் சார்ந்த காரணம் மட்டுமே இருக்க முடியும் என எண்ணுகிறோம்

 

இது உண்மையில் தூய அத்வைதத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தவறான கருத்தாகும். சுத்தாத்வைதம் பௌத்தம் சமணம் போன்ற உலகியல்  மதங்களுடனும் அவற்றின் அனைத்திருப்புவாதம் [சர்வாஸ்திவாதம்] போன்ற பொருள்முதல்வாதக் கோட்பாடுகளுடனும் விவாதித்து வளர்ந்தது. ஆகவே பொருளை எவ்வகையிலும் சாராத அதி தூய கருத்து என்னும் கருத்துருவை அது வளர்த்தெடுத்தது. மேலைச்சிந்தனையில் இமானுவேல் கான்ட் எங்கே இருக்கிறாரோ அங்கே இருக்கிறது இந்தியாவில் அத்வைதம்.

 

அந்த அதிதூய கருத்துமுதல்வாதமே மனம் என்னும் செயல்பாட்டை வெறும் கருத்தாகக் காண நமக்குப் பயிற்சி அளித்தது. மனத்தை உடலில் இருந்து முற்றாக பிரித்து நோக்கச் செய்தது. உடலை அருவருக்கும்- நிராகரிக்கும் சமணச் சிந்தனைகளின் ஒருபகுதியும் அதனுடன் இணைந்துகொண்டது. 

 

ஆனால் தமிழ்நாட்டுச் சித்தர் மரபு அப்படி எண்ணவில்லை. உடலை மனம் இருக்கும் ஆலயம் என்றே அது எண்ணியது. நடமாடும் கோயில்என்று திருமூலர் சொல்கிறார். உடலை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனேஎன்ற திருமூலரின் புகழ்பெற்ற பாடல் இந்த விவாதத்தை சுட்டிக்காட்டுகிறது. உடல்நிராகரிப்பில் இருந்து உடல் ஓம்புதல் நோக்கி திருமூலர் நகர்ந்து வந்ததை அப்பாடலில் காணலாம்

 

உடலை நிராகரிக்காத ஒரு சமணப்பிரிவு இருந்துள்ளது. அவர்களே மருத்துவ நூல்களை உருவாக்கினார்கள். அந்த பிரிவின் குரலாகவே திருவள்ளுவர் ஒலிக்கிறார். உடலோம்புதலை வள்ளுவர் பல குறள்களில் வலுவாக நிலைநாட்டுகிறார். அவ்வகையில் வள்ளுவரும் திருமூலரும் ஒரே மரபின் நீட்சியே.

 

நாராயணகுரு சித்தர்களுடன் சித்தராக தமிழ்நாட்டில் பல வருடக்காலம் அலைந்தவர். சித்தர்களிடமிருந்தே கற்றவர். திருவள்ளுவரையும் திருமூலரையும் கற்று அவர்களைப்பற்றி பேசியவர். குறளை மொழியாக்கம் செய்தவர். ஆகவே அவரது அத்வைதம்   தூய அத்வைத்தில் இருந்து பெரிதும் வேறுபட்டதாக இருந்தது. அது உலகநிராகரிப்பை முன்வைக்கவில்லை. அவர் உடலோம்புதலைப் பற்றி பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். அவரே ஒரு சிறந்த ஆயுர்வேத மருத்துவர். அந்த அம்சம் நாராயணகுருவின் தரிசனத்தின் அடிப்படைக்கூறு.

 

நம் சமகாலச் சிந்தனைகள் பெரும்பாலும் அந்த தூய அத்வைதத்தின் தளத்திலேயே உள்ளன. சிந்தனையை சிந்தனையே தீர்மனிக்க முடியுமென்ற அழுத்தமான எண்ணம் நமக்கு இருக்கிறது. சிந்திப்பவனுடைய உடலும் சூழலும் அதில் ஆற்றும் பங்கை நாம் மறந்துவிடுகிறோம். நீட்சேயின் மனநோயில் இருந்து அவரது சிந்தனையை முழுமையாக விலக்கிவிடுவது பெரும் பிழையே ஆகும்.

 

நாம் ஓயாது விவாதித்துக் கோட்பாடுகளாக ஆக்கிக்கொள்ளும் பல விஷயங்கள் நம் உடல் சார்ந்த பலவீனங்களின் விளைவாக இருக்கலாம். சற்று உடலை கவனித்துக்கொண்டிருந்தால் அவை நம்மிடமிருந்து விலகி மறையவும் கூடும். இப்படிச் சொல்லலாம், மேலான சிந்தனை மேலான உடல் – மனஇணைப்பில் இருந்தே வெளிவர முடியும். அந்த உருவகத்தையே நாம் ரிஷி என்றும் முனிவர் என்றும் சொல்கிறோம்.

 

உடற்பயிற்சியின்மை உடலில் உருவாக்கும் சிக்கல்களுக்கு அளவே இல்லை. முதலில் நம் தசைகள் சோம்பல் கொள்கின்றன. ஆகவே உடற்பயிற்சியை அவை மேலும் வெறுக்கின்றன. சோம்பி இருப்பதை உடல் தேர்வு செய்கிறது– மனம் அதற்கான காரணங்களை உருவாக்கி அளிக்கிறது. அரசியல் , பண்பாடு, தத்துவ தளங்களைச்சேர்ந்த பதில்களையும் கோட்பாடுகளையும்.

 

உடற்பயிற்சி இல்லாவிட்டால் தூக்கம் மிகவும் குறைகிறது. அதாவது ஆழ்ந்த தூக்கம் நிகழ்வதில்லை. தூக்கம் குறையும்போது அரைத்தூக்கம் அதிகரிக்கும். அரைத்தூக்கம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். காலையிலேயே உங்களுக்கு தூக்கக்கலக்கம் இருக்குமென்றால் நீங்கள் தவறான வழியில் நெடுந்தொலைவு வந்துவிட்டீர்கள் என்றே பொருள்.

 

அரைத்தூக்கம் விசித்திரமான கனவுகளை உருவாக்கும். பல கனவுகளை நாம் பின்னர் உணர்வதில்லை. அவை நம் தூக்கத்தில் நிகழ்ந்து மறதிக்குள் சென்றுவிடும். ஆனால் அந்தக் கனவுகள் உள்ளே அமர்ந்துகொண்டு நம்முடைய சிந்தனைகளை பெரிதும் நிர்ணயிக்கின்றன. ஒரு அச்சமூட்டும் கனவு நமக்கு நிகழ்ந்து நம்முள் மறைந்தால் நம் மனத்தில் அச்சம் மட்டும் எப்படியோ பரவியிருக்கும். நம் சிந்தனைகளை அச்சம் எப்போதுமே ஊடுருவி வடிவமைத்துக்கொண்டிருக்கும்.

 

உடற்பயிற்சியின்மை மலச்சிக்கலை உருவாக்கும். செரிமானமின்மை உருவாகும். அதிலிருந்து மூச்சுசிக்கல்கள் உருவாகும். தலைவலிகள் உருவாகும். அது ஒரு தொடர்செயல்பாடு. சர்க்கரை வியாதி இருந்தால் அது மிக அபாயகரமான எல்லைக்குக் கொண்டுசெல்லும்.

 

உடற்பயிற்சியை மிதமிஞ்சி செய்யவேண்டுமென சொல்லமாட்டேன். அது சிந்திப்பவர்களுக்கு எளிய செயல் அல்ல. உடற்பயிற்சிக்காக மனநேரத்தை ஒதுக்குவது சிந்திப்பவர்களுக்கு சாத்தியமே அல்ல. சிந்தித்தபடியே செய்யக்கூடிய பயிற்சியை மட்டுமே சிந்திப்பவர்கள் செய்யமுடியும். பிற உடற்பயிற்சிகளை ஆரம்ப உற்சாகத்தில் தொடங்கி விட்டு விடுவோம்

 

சிந்திப்பவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சி நடைபோவதுதான். அரைமணிநேர வேகநடையே போதுமானதுதான். எல்லா சிந்தனையாளர்களும் தீவிரமான நடையர்கள்தான். மார்க்ஸ், குரோச்சே, வால்டேர், எமர்ஸன் போன்றவர்கள் நடையின் அருமையைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அதுவே நம் உதிர ஓட்டத்தையும் எண்ண ஓட்டத்தையும் சீராக்கி விடும்.

 

உங்கள் முந்தைய கடிதங்களில் ஒருவகை சோர்வும் நிராகரிப்பும் கலந்த சிந்தனைகள் இருக்கும் என்பதை நினைவுகூர்கிறேன். அதன் ஊற்றை நீங்கள் இங்கேதான் தேடவேண்டும் என நினைக்கிறேன்.

 

ஒரு செல்வந்தர் தல்ஸ்தோயிடம் வந்தார். தனக்கு பல ஆன்மீகமான சிக்கல்கள், கேள்விகள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றை விரிவாக விளக்கினார். தல்ஸ்தோய் அவருக்கு அளித்த பதில் இது ஒருநாளைக்கு இரண்டு ரூபிள் மட்டுமே செலவழியுங்கள் –அதை உங்கள் உடலால் உழைத்துச் சம்பாதியுங்கள்

 

 

இடம் ,ஒரு கேள்வி

அரதி : கடிதங்கள்

நோய்:ஒருகடிதம்

அரதி

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/2231/