குற்றமும் தண்டனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து செய்யப்பட இலக்கியத் திருட்டு பற்றிய கடிதம் கண்டதும், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் நினைவுக்கு வந்து விட்டது. அந்நாவலை வாசிக்கும் முன் உங்களது பரிந்துரையையும், எஸ். ராமகிருஷ்ணனின் பரிந்துரையையும் வாசித்தேன். நீங்கள் அந்நாவலைப் பற்றிக் கொஞ்சமே குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது என் அபிப்ராயம். எஸ். ராமகிருஷ்ணன் ரஸ்கோல்நிகாஃப் காணும் அந்தக் குதிரைக்காரன் கனவை முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

எனக்குக் குற்றமும் தண்டனையும் கொடுத்த வாசிப்பனுபவம் அபாரமாக இருந்தது. எல்லாக் கதை மாந்தர்களுமே உணர்ச்சிப் பிழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஸ்கோல்நிகாஃப் அதன் உச்ச கட்டம். பல்வேறு நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழும் ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்கிறான் என்பது புதிராகவே இருக்கிறது. நாவலின் வாசிப்பனுபவம் குறித்து நான் எழுதியதைத் திரும்ப வாசிக்கும் போது பல இடங்களில் இந்தக் குழப்பமே எதிரொலிப்பதை உணர்கிறேன்.

அந்தப் பதிவு : http://jekay2ab.blogspot.com/2011/09/blog-post_24.html

எனக்கு ரஸ்கோல்நிகாஃப் எழுதிப் பத்திரிகையில் வெளியான கட்டுரை முக்கியமாகப் படுகிறது. அக்கட்டுரையில் அவன் குற்றம் பற்றியும், குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் பற்றியும் விவரிக்கிறான். ரஸ்கோல்நிகாஃபைப் பின்தொடரும் காவல்துறை அவனது அப்போதைய நடவடிக்கைகளை இந்தக் கட்டுரையோடு தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.

இருவகையான மனிதர்களைப் பற்றி அந்தக் கட்டுரையில் பேசுகிறான் ரஸ்கோல்நிகாஃப். அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குக் கைதியாகி, வாழ்வை எவ்வித எதிர்ச்செயலுமின்றி வாழ்ந்து மடிபவர்கள் ஒருவகை; தான் வாழும் காலத்திலேயே காலம் தாண்டிச் சிந்திக்கும், தங்கள் சிந்தனைகளால் எதிர்கால உலகின் அமைப்பை மாற்ற எத்தனிக்கும் மனிதர்கள் மற்றொரு வகை. சட்டம், ஒழுங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் முதல் வகை மனிதர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பெரும்பான்மை மக்கள் இவர்களே. ஆனால் ஒரு சிறுதொகையிலேயே காணப்படும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் எந்த வரையறைக்குள்ளும் தங்களை இருத்திக் கொள்ளாதவர்கள். தங்களது அரிய சிந்தனைகளை நிலைநாட்டுவதற்காகச் சட்டங்களை மீற அவர்களுக்கு இயற்கையே அனுமதி வழங்குகிறது. அவர்கள் இழைக்கும் எந்தக் குற்றமும் மானுட இனத்தின் மேன்மை கருதியே. அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவனுக்குக் கொலை செய்வதற்குக்கூட உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைக்கப்பட்டிருக்கிறது. தன்னை இந்த இரண்டாவது மனிதர்களில் ஒருவனாகவே கருதிக் கொள்வதால், ரஸ்கோல்நிகாஃப்தான் இந்தக் கொலையைப் புரிந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

அடுத்ததாக ஸ்விட்ரிகாலோஃபின் பாத்திர வடிவமைப்பு. துப்பாக்கி முனையில் டூநியாவைத் தன்னைக் காதலிக்கும்படி கேட்கிறார். டூனியா தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்ததும் அவளை விட்டு விலகி விடுகிறார். இதற்குப் பிறகான ஸ்விட்ரிகாலோஃபின் மனநிலையை தஸ்தாயெவ்ஸ்கி அற்புதமாக வர்ணித்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை நாவலின் எழுச்சி மிகுந்த இடம் இது. என்னை நெகிழச் செய்த இடமும் இதுதான்.

எனக்கு இருக்கும் ஐயங்கள் இவைதாம். ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்தான்? டூனியாதான் அவன் மனமாற்றமடைந்து சரணடையக் காரணமா?

அவள் அவனை எவ்வகையில் பாதிக்கிறாள். அந்தப் பாதிப்பை அறிந்து கொள்கிற மாதிரி சம்பவங்கள் எதுவும் அழுத்தமாகப் பதிவு செய்யபட்டிருக்கின்றவா?

ஜெகதீஷ் குமார்.
மாலத்தீவுகள்

அன்புள்ள ஜெகதீஷ் குமார்

நான் வெவ்வேறு கட்டுரைகளிலாகக் குற்றமும் தண்டனையும் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் மிக ஆரம்பகாலத்தில். ஆகவே திரும்பத்திரும்ப எழுதுவதைப் பின்னாளில் தவிர்த்துவிட்டேன். இரு மேதைகளையும் பற்றி ஒரு நூலளவில் எழுதும் எண்ணம் நெடுநாட்களாக உள்ளது.

குற்றமும் தண்டனையும் ஒரு பேரிலக்கியம். பேரிலக்கியம் அளிக்கும் அனுபவமென்பது நாம் அதுவரை உருவாக்கியிருக்கும் சிந்தனைக்கட்டுமானத்தைச் சிதறடிப்பதே. அந்தச் சிதறல்களை நாமேதான் பொறுக்கி அடுக்கி மீண்டும் நம் அகத்தைக் கட்டிக்கொள்ளவேண்டும். அதுவே அந்த பேரிலக்கியம் நமக்களிக்கும் கொடை. ஆகவே பலசமயம் பிறர் கருத்துக்களுக்குப் பெரிய மதிப்பில்லை. அவற்றை நாம் விவாதிப்பதே முக்கியமானது.

குற்றமும் தண்டனையும் நாவலில் எல்லாப் பகுதிகளுமே மையத்துக்குப் பல வகைகளில் பங்களிப்பாற்றுகின்றன. நீங்கள் குறிப்பிடும் அந்தக் கட்டுரை ரஸ்கால்நிகாபின் சிந்தனையோட்டத்தை, அவனுடைய மேல் மனதைக் காட்டுகிறது. அதில் அவன் தன் வாழ்க்கை மற்றும் செயல்களுக்கான நியாயப்படுத்தல்களை செய்துகொண்டு இருக்கிறான். அந்தத் தளத்துக்கு நேர் எதிரான அவன் ஆழ்மனமே அந்தக் கனவில் வெளிப்படுகிறது. அந்தக் கனவு அவனுடைய சிந்தனைகளுக்கு நேர் மாறாக அவனுக்குள் இருக்கும் அடிப்படையான கருணையை அன்பை வெளிப்படுத்துகிறது. அந்தக் குதிரை கொல்லப்படுவது பிற்பாடு அவன் செய்யும் கொலையைப்போலவே இருப்பதை கவனிக்கவும். அங்கே அந்தக்கொலையை மன்னிக்கமுடியாத பாவமாகவே ரஸ்கால்நிகாஃபுக்குள் உறையும் குழந்தை காண்கிறது. நாம் செய்யும் செயலை நம்ம்முள் உள்ள சிந்தனையாளன் ஒப்புக்கொள்ளலாம். நமக்குள் உள்ள குழந்தை ஒப்புக்கொள்ளுமா என்பதே முக்கியமான வினா.

இவ்வாறு நாவலின் எல்லாப் பகுதிகளையும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். நிகழ்வுகளைத் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளாதீர்கள். இன்னொரு உதாரணம், மார்மல்டோஃப் ஆற்றும் அந்த மதுக்கடைப் பிரசங்கம். அந்தக் குடிகாரனின் கண்ணீர்ப் பேச்சில் உள்ள அப்பட்டமான களங்கமற்ற வேகத்தை நாம் ஸ்விட்ரிகைலாஃபின் பேச்சுகளில் உள்ள அறிவார்ந்த கபடத்துடன் இணைத்து வாசிக்கலாம்.

ரஸ்கால்நிகாபின் போராட்டம் நான் ஏற்கனவே சொன்னதுபோல அவனுடைய உள்ளே உள்ள அறிஞனுக்கும் குழந்தைக்குமான சமர். அவனுள் உள்ள தர்க்கத்துக்கும் கருணைக்குமான விவாதம். கருணையே வெல்கிறது. ஆகவேதான் அவன் சோஃபியா மார்மல்டோவாவை நோக்கிச்சென்று மண்டியிடுகிறான். அந்த விவாதத்தில் எல்லாருமே ஏதேனும் வகையில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். டூனியாவும்தான். ஆனால் சோபியாவின் பங்கே முக்கியமானது

நாவலை உங்களுக்குள் ஒரு பெரிய சதுரங்கமாக ஆக்கிக்கொண்டு விளையாடிக்கொண்டே இருங்கள். பல வருடங்களுக்கு

வாழ்த்துக்கள்
ஜெ

முந்தைய கட்டுரைபாரதி விவாதம்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஆதமிண்டே மகன் அபு