வரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்

ஜெ,

வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்
கட்டுரையில் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது என்று உள்ளது இது சரியா ,இல்லை இப்படி இருக்க வேண்டுமா ? “சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைத் தனிநிகழ்வுகளைக் கொண்டு ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது”

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது– என்பதே சரியானது. நீங்கள் சொல்வது நேர்மாறானது. மொமுக்லியானோ சொல்வதை இன்னும் எளிமையாக வரலாற்றுக்கு என ஒரு குறிப்பிட்ட இயக்கமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டியதில்லை எனப் புரிந்துகொள்ளலாம்

நான் கொடுத்திருந்த உதாரணம் நேர் எதிரான புரிதலை அளிக்கிறதா என்ன? இஸ்லாமிய மன்னர்கள் இந்து ஆலயங்களைக் கொள்ளையடித்தார்கள். அதேபோல இந்து மன்னர்கள் இந்து ஆலயங்களையும் கொள்ளையடித்தார்கள். ஆகவே மன்னர்கள் ஆலயங்களைக் கொள்ளையடிப்பது ஒரு வரலாற்றுப் போக்கு. அது இந்தியவரலாற்றில் எப்போதும் உள்ளது. காஷ்மீரமன்னன் ஸ்ரீஹர்ஷனின் செயல் அதில் ஒன்று– இப்படி விளக்கப்படுவதையே நான் சுட்டிக்காட்டினேன்.

மார்க்ஸியர்கள் வழக்கமாகச் செய்வதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையை அடிப்படையாகக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராய்வது. அதை வரலாற்றுவாத நோக்கு என்று சொல்லலாம். அந்த முறை இன்றைய வரலாற்றாய்வில் முக்கியத்துவமிழக்கிறது என்கிறார் மொமுக்லியானோ.

ஒரு தனிப்பட்ட வரலாற்று நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம். ராஜராஜசோழன் சேரபாண்டியர்களை வென்று அழித்து மும்முடிச்சோழனாக முடிசூட்டிக்கொண்டான் என்ற வரலாற்று நிகழ்வு. இது எப்படி எந்தச் சூழலில் நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது, அதற்கான வரலாற்றுப் பின்னணி என்ன என்றெல்லாம் ஆராயலாம். அது வரலாற்றாய்வின் வழி.

ஆனால் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை ஒரு கருத்தாக்கமாக சுருக்கிக் கொண்டு மார்க்ஸியர் இதை விளக்க முயல்வார்கள். அந்த விளக்கத்துக்காக வரலாற்றாய்வை நிகழ்த்துவார்கள். அதுவே வரலாற்றுவாத அணுகுமுறை.

அவர்கள் இப்படிச் சொல்லலாம். தமிழ்ச்சமூகத்தில் முதலில் பழங்குடித்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் மற்றவர்களை வென்று சிற்றரசர்களாக [பாரி ஓரி முதலிய சிறுகுடி மன்னர்களாக] ஆனார்கள். அந்தச் சிற்றரசர்களை வென்று மூன்று பெருமன்னர்கள் உருவானார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போராடினார்கள். மூவரில் ஒரு மன்னன் மற்றவர்களை வென்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருந்தான். சிறியவற்றை வலியது வென்று வென்று ஒன்று மட்டுமே எஞ்சுகிறது. பிரமிடின் நுனி நோக்கிச் செல்வது போன்ற சமூக வளர்ச்சி இது.

இவ்வாறு பல்லாயிரம் சிறு ஆட்சியாளர்கள் கடைசியில் ஒரு சக்ரவர்த்தியாக ஆகக்கூடிய ஒரு பரிணாமப்போக்கு தமிழகவரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஒட்டுமொத்தச் செயல்பாடுதான். பழங்குடிமரபு நிலப்பிரபுத்துவம் நோக்கிச் சென்று பேரரசாக ஆகும் பரிணாமம் இது. ராஜராஜன் மும்முடி சோழனாக ஆனது அந்தப்போக்கில் ஒரு நிகழ்ச்சி.– இவ்வாறு மார்க்ஸியர் சொல்லக்கூடும்.

இந்தவகையான ஆய்வு சென்ற ஐம்பதாண்டுகளில் நிறையவே நிகழ்ந்துள்ளது. இந்திய வரலாற்றைப்பற்றிய பிரிட்டிஷ் வரலாற்றாய்வுகளில் இந்த ஆய்வுமுறை எப்போதும் இருந்து வந்துள்ளது. உதாரணமாக ’இந்தியப்பண்பாடு பெண்மைத்தன்மை கொண்டது, அது எப்போதும் ஆக்ரமிப்புகளை ஏற்றுத் தன்வயப்படுத்த மட்டுமே முயல்கிறது, ஆக்ரமிப்புகளை நிகழ்த்துவதோ அல்லது ஆக்ரமிப்புகளை எதிர்ப்பதோ இல்லை’ என்பது போன்ற ஊகங்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியவரலாற்றின் ஒட்டுமொத்த இயக்கமுறையாக இதை சொல்லியபின்பு கஜினியின் படையெடுப்பையோ, கிளைவின் வெற்றியையோ இதைக்கொண்டு விளக்குவார்கள்

இந்த அணுகுமுறை வரலாற்றை அந்த வரலாற்றாசிரியரின் முன்முடிவை நோக்கிக் குறுக்கக்கூடியதாக இருக்கிறது. அவர் தனக்கு வசதியான தகவல்களை மட்டுமே பார்க்கவும், அவற்றைக்கொண்டு தனக்குப் பிடித்த வரலாற்று வரைவை உருவாக்கிக்கொள்ளவும் வழிசெய்கிறது.

வரலாறு பல்வேறு இயக்கவிசைகளால் பல்வேறு வகையான முரண்பாடுகளையும் சமன்பாடுகளையும் அடைந்தபடி நிகழ்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு சாராம்சமான இயக்கமுறையை உருவகித்துக்கொள்வது அதன் பன்முகப்பட்ட சிக்கலான இயக்கத்தை எளிமைப்படுத்தவே வழிவகுக்கும்.

இன்றைய ஆய்வாளன் அதற்குப்பதிலாக எல்லாவகையான தகவல்களையும் கருத்தில்கொள்ளவும் எல்லாவகையான சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்கவும் தயாராக இருக்கவேண்டும். வரலாற்றை அதற்கேற்ப எளிய மைய ஓட்டம் மட்டுமாக சுருக்காமல் பல சரடுகள் பின்னி ஊடாடிச் செல்லும் ஒரு நெசவாகப் பார்க்கமுயலவேண்டும்.

ராஜராஜன் முடிசூட்டிக்கொண்ட நிகழ்ச்சியை வரலாற்றின் ஒரு புள்ளியாக எடுத்துக்கொண்டால் அது வரலாற்றில் உள்ள ஒரு இயக்கமுறையின் வெளிப்பாடு அல்ல. பலநூறு காரணங்கள் அதற்கிருக்கலாம். பண்பாட்டுக் காரணங்கள், பொருளியல் காரணங்கள், தனிப்பட்ட உளவியல் காரணங்கள், ஏன் தற்செயல்கள்கூட இருக்கலாம். பலவகையில் அதை விளக்கவும் முடியலாம். அந்த எல்லா சாத்தியங்களையும் நோக்கி வரலாற்றை விரியச்செய்வதே இன்றைய வரலாற்றெழுத்து கொண்டுள்ள பணி.

ஒரு சிறப்பான மாதிரியை முன்வைத்துப் பேசவேண்டும் என்பதற்காகவே ராஜராஜன் மும்முடிச்சோழனாக முடிசூட்டிய நிகழ்ச்சியையும் அதற்கான மார்க்ஸிய விளக்கமுறையையும் உதாரணமாகச் சொன்னேன். ஏனென்றால் அது அதன் எல்லைக்குள் மிக முக்கியமான ஒரு பார்வையே. நடைமுறையில் இதைவிட சல்லிசான நிலையில்தான் நம் வரலாற்றாய்வுகள் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, ஒட்டுமொத்தத் தமிழக வரலாறே வைதீகம் தமிழ்ப்பண்பாட்டை வென்றதன் கதை மட்டுமே என்று பார்ப்பவர்களே இங்குள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள். நாலாவது வரியில் ‘பார்ப்பனியம்’ என ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ் வரலாற்றின் எந்த ஒரு தனி நிகழ்வையும் அந்த ஒரே ஒரு இயங்குமுறையைக் கொண்டே விளக்குவார்கள். ராஜராஜன் மும்முடிச்சோழனாக முடிசூட்டியதை பார்ப்பனியச் சதி என்றும் பார்ப்பனியத்தின் உச்சகட்ட வெற்றி என்றும் தமிழக வரலாற்று நூல்கள் பலவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்தவகை ஆய்வுமுறைகள் காலாவதியாவதை மொமுக்லியானோவின் அந்த வரி சுட்டுகிறது.

இங்கே ஒரு விளக்கம், அப்படியானால் வரலாற்றுக்கான மார்க்ஸிய விளக்கம் காலாவதியாகிவிட்டதா? இல்லை என்றே நினைக்கிறேன். மொமுக்லியானோ அதைச் சொல்லவுமில்லை. அவர் மார்க்ஸிய நோக்கின் எதிரி அல்ல. அந்த நோக்கு அரசியல்கோட்பாடு சார்ந்தது, அரசியல் தளத்தில் மதிப்பு கொண்டது. அது வரலாற்றாய்வு அல்ல, வரலாற்றின்மீதான அரசியல் விளக்கம் என்று சொல்லலாம். வரலாற்றாய்வு அவ்வகை அரசியல் முன்முடிவுகளில் இருந்து விடுபட்டுப் பன்மைத்தன்மை உடைய அணுகுமுறை கொண்டிருக்கவேண்டும் என்பதே மொமுக்லியானோவின் தரப்பு.

வரலாற்றை ஒட்டுமொத்தமாக எல்லாச் சிக்கல்களையும் கருத்தில்கொண்டு ஒரு பண்பாட்டுப் பரிணாமமாகவும் பொருளியல் பரிணாமமாகவும் விளக்கும் நவீன வரலாற்றெழுத்தை அவர் முன்வைக்கிறார். வரலாற்றுக்கு ஏதேனும் ஒரு வரைவை, pattern ஐ உருவாக்க முயல்வதை நிராகரிக்கிறார்

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 3, 2011

முந்தைய கட்டுரைஇந்தோனேசியா பயணம் கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70