கதைநிலம்

சமீபத்தில் மூன்று நூல்கள் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் வெளிவந்திருக்கின்றன. அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்‘, யுவன் சந்திரசேகரின் மணல் கேணிமற்றும் நான் எழுதிய நிகழ்தல்‘ .மூன்றுமே உயிர்மை பதிப்பக வெளியீடுகள். அ. முத்துலிங்கம் அவரது நூலை நாவல் என்கிறார். யுவன் சந்திரசேகர் அவரது நூலை குறுங்கதைகள் என்கிறார். என்னுடைய நூல் அனுபவக்கட்டுரைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மூன்று நூல்களுமே ஒரு நூலாசிரியர் தன்னுடைய சொந்த வாழ்க்கையனுபவங்களை புனைவின் அமைப்புக்குள் கொண்டு வந்து தனித்தனி துளிகளாக எழுதிசேர்த்தவை போல் உள்ளன.

 

இந்தவடிவம் நவீனப் புனைகதையின் ஒரு புதிய சாத்தியக்கூறை காட்டுகிறது. யதார்த்தத்தை தொகுப்பதற்கு மட்டுமே புனைவை பயன்படுத்தி எழுதப்படும் எழுத்து. கட்டுரை-தன்வரலாறு-கதை என்னும் வடிவ எல்லைகளை அழித்துக்கொண்ட எழுத்து. தன்னை நேரடியாக முன்வைத்து அப்பட்டமாக பேசி அதேசமயம் தன் அடியில் ஆழ்பிரதியை தக்கவைத்துக் கொள்ளும் எழுத்து. நேரடியானது என்னும் பாவனையில் பேசும் மறைமுகமான எழுத்து இது.

 

யுவன் சந்திரசேகர் எழுதிய மணல்கேணி அவரது வழக்கமான கதாபாத்திரங்கள் அடங்கியது. கிருஷ்ணன், அவரது மனைவி பத்மினி, அவர்களின் இரு குழந்தைகள், நண்பன் சுகவனம், வழிகாட்டியும் நண்பருமான இஸ்மாயீல், கிருஷ்ணனின் அப்பா, அம்மா, அண்ணா அண்ணிகள். மற்றும் கிருஷ்ணன் பணியாற்றும் வங்கி, அவனது இலக்கிய முயற்சிகள், அவனுடைய சிகரெட் பழக்கம்…. எல்லாமே நேரடியாக யுவன் சந்திரசேகரின் வாழ்க்கையின் கூறுகளே. கிருஷ்ணனும் யுவன் சந்திரசேகரும் ஒன்றுதான் என்பதில் எந்த ஐயத்தையும் யுவன் சந்திரசேகர் விட்டுவைப்பதில்லை. பெயர்கள் மட்டுமே மாறுகின்றன.

 

அவரது எல்லா கதைகளிலும் தொடர்ந்து வரும் கதைசொல்லியான கிருஷ்ணன் உண்மையில் ஒரு கதாபாத்திரம் அல்ல, ஒரு பெயர்தான். நான் என்பதற்குப் பதிலாக கிருஷ்ணன் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணன் புனகதைக் கதாபாத்திரங்களைப்போல துல்லியமாக எல்லை வகுக்கப்பட்ட குணச்சித்திரம் கொண்டவன் அல்ல. அவனுடைய பாத்திரம் இந்த புனைவெழுத்தின் ஆசிரியன் என்பதனால் அவனை இந்த ஒட்டுமொத்தப் புனைவெழுத்தை வைத்தே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

 

கிருஷ்ணன் மனிதர்களை வேடிக்கை பார்ப்பவன், தனிமையானவன், அந்ததனிமையுனர்வில் ஒரு நகைச்சுவை உனர்வை வைத்துக்கோண்டிருப்பவன், பொதுவாக மானுட மேன்மைகள் மேல் மெல்லிய அவநம்பிக்கை கொண்டவன், ஆகவே மானுடமேன்மைகளை சந்திக்க நேரும்போது கண்கலங்கிவிடுபவன். வாழும் வாழ்க்கையை தனக்குள் தொடர்ந்து கலைத்து அடுக்கிக் கொண்டிருப்பவன். உலகையே தன்னை மையமாக்கி அறியும் சுயமுனைப்புள்ளவன்.

 

அதாவது கிருஷ்ணன் கதைக்குள் ஒரு பாத்திரம்., அத்துடன் கதையை உருவாக்குபவனும் அவனே. ஆக இருதளத்திலும் அவனது ஆளுமை உருவாகிவருகிறது. இக்காரணத்தால் கிருஷ்ணன் சிதறிப்பரந்து கிடக்கிறான். மாறாக எப்போதும் கிருஷ்ண பார்வையிலேயெ சித்தரிக்கப்படுவதனல் பத்மினி தெளிவான கதாபாத்திரமாக இருக்கிறாள். துணிச்சலானவள். முடிவுகள் எடுக்கக் கூடியவள். கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் தாயாகவும் இருந்து அவனைத் தாங்குவதுடன் அவனுடைய நல்ல தோழியாகவும் இருக்கிறாள். அவளை கிருஷ்ணன் ஆராதிக்கிறான்

 

இஸ்மாயீல் அதேபோல துல்லியமாகச் செதுக்கப்பட்டு வரும் இன்னொரு கதாபாத்திரம். அறிவுஜீவி. அத்துடன் அறிவுஜீவி என்ற தோரணையும் கொண்டவர்.  எதையும் தத்துவப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. ஆகவே பேசிப்பேசி ஒன்றை அதன் அருவ நிலை நோக்கிக் கொண்டுசெல்கிறார். அதன்பின் அதை ஒரு சூத்திரமாக ஆக்குகிறார். பெரும்பாலும் அருவநிலையில் உள்ள சூத்திரங்கள் சற்றே அபத்தச்சுவையுடன் இருக்கும். கவித்துவம் மூலமே அவை நிலைகொள்ளும். அந்த இடத்தை அடைந்ததும் இஸ்மாயீல் அந்த உரையாடலை நகைச்சுவையாக மாற்றி விலகிக் கொள்கிறார்

 

கிருஷ்ணனின் அப்பா இன்னொரு தெளிவான கதாபாத்திரம். சிறு ஊரில் ஓட்டல் வைத்திருக்கிறார். பெரிய குடும்பத்தை வைத்துக்கொண்டு பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டாலும் முதியவயதில் பிறந்த கடைசி மகனாகிய கிருஷ்ணனுடன் ஆன்மீகமான ஒரு நெருக்கம் கொண்டிருக்கிறார். அவனுக்கு அவர் சொல்லும் கதைகள் வழியாக அவன் நெஞ்சில் அவர் வாழ்கிறார். மகோதரம் என்னும் நோய் வந்து வயிறு வீங்கி இறக்கிறார்

 

இம்மூன்று கதாபாத்திரங்களும் துல்லியமானவையாக இருப்பதற்கு என்ன காரணம்? இம்மூன்றிலும் புனைவின் அம்சம் வலுவாக உள்ளது என்பதே. பத்மினியை கிருஷ்ணனின் காமமும் காதலும் புனைவாக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. அப்பா கிருஷ்ணனின் நினைவில் இருந்து புனைவுடன் மீள்கிறார். இஸ்மாயீல் கிருஷ்ணனின் ஆதர்ச பிம்பமும்கூட.

 

இந்த புனைவம்சம் குறைவான கதாபாத்திரங்கள் துல்லியத்தன்மையும் உள்சிக்கலும் இல்லாதவையாக , சொல்லப்படும் நபர்களாக மட்டும் இருக்கிறார்கள். சிலசமயம் தெளிவான முகங்கள். சிலசமயம் வெறும் குரல்கள். சிலசமயம் ஒற்றைப்படையான சித்திரங்கள். இந்த குறுங்கதைத்தொகுப்பை புனைவம்சம் கூடிய கதைகள் புனைவம்சம் இல்லாத கதைகள் என்று இரண்டாக பிரித்துவிட முடியும். புனைவம்சமே கதைகளுக்கு மையத்தையும் கூர்மையையும் அகவிரிவையும் அளிக்கிறது என்பதை அப்போது காணலாம்.

 

இந்த நூலின் அமைப்பு என்பது நூற்றியிரு குறுங்கதைகளின் தொகுப்பு. சுய அனுபவத்தின் ஒரு துளியையே ஒரு குறுங்கதை என்று யுவன் சந்திரசேகர் முன்வைக்கிறார். இக்கதைகள் அனைத்துக்குமே நினைவுகூரல்என்ற அம்சம் உள்ளது. முதல் கதை அப்பாவின் மரணச்செய்தியை கேட்க நேர்ந்த தருணத்தின் சித்திரம். அது கிருஷ்ணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அவனுக்கு உலகத்தில் ஆதரவாகவும் நெருக்கமாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. அவரது மரணம் கிருஷ்ணனின் சின்னஞ்சிறு உலகை நிராதரவான ஒன்றாக ஆக்குகிறது.

 

பின்னர் எல்லா கதைகளிலும் நாம் காணும் கிருஷ்ணன் கைவிடப்பட்டு கூட்டத்தில் தத்தளிப்பவனாகவே இருக்கிறான். நெடுநாள் கழித்து பத்மினியிடம்தான் அவன் நெருக்கத்தையும் அடைக்கலத்தையும் உணர்கிறான். தன் தத்தளிப்பினூடாக அவன் மனிதர்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறான். அந்த சித்திரங்களை அவன் தொகுத்து புரிந்துகொள்ள முயல்கிறான். இந்நூலும் அப்படிப்பட்டட ஒரு முயற்சிதான்

 

இரண்டாம் கதையில் கிருஷ்ணன் அப்பா சொன்ன மகாபாரதக் கதைகளை நினைவுகூர்வது முக்கியமானது. வாழ்க்கையை கதைகளாகப் பார்க்கும் பார்வையை அப்பா அவனுக்கு அளித்துவிட்டார். மகாபாரதக்கதைகளின் ஊடாக தன் மனைவி மற்றும் உறவினர் குறித்த உண்மைக்கதைகளையும் கலந்து விடுபவர் அப்பா. அவ்வாறாக கிருஷ்ணன் வாழ்க்கையை எதிர்கொள்ள கதை என்னும் கருவியை அடைகிறான். அதிகாரத்தையும் அதீதத் திறமையையும் அடைய முடியாத எளிய மனிதனாகிய அவனுக்கு கதைகள் ஒரு பெரும் வசதியை அளிக்கின்றன. வாழ்க்கையை ஒடித்து சுருட்டி தன் கதைகளுக்குள் அடைக்கும்போது அதை வென்றுவிட்ட நிறைவை அவன் அடைகிறான்.

 

ஆகவே கதைகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான எல்லைக்கோட்டை அவன் அழித்துக்கொள்கிறான். யுவன் சந்திரசேகர் கிருஷ்ணனாக உருமாறுவதன் ரகசியம் இதுதான். கிருஷ்ணன் ஒரு கதைமனிதன்.  ஆகவே அவனால் கதையுலகுக்குள் எளிதாக நுழைய முடிகிறது. கதைகளில் கிருஷ்ணன் செய்யக்கூடாத எதுவுமே இல்லை. வாழ்க்கை உள்ளங்கை ரேகை போல தெரிகிறது.

 

வாழ்க்கை அறிமுகமாகும் முன்னரே மரணம் கிருஷ்ணனுக்கு அறிமுகமாகிவிடுகிறது. அப்பாவின் மரணம் முதல் திறப்பு. பாம்பு வடிவில் அவர்கள் வீட்டுக்குள் மரணம் வந்துகொண்டே இருக்கிறது. அப்பனும் இதேபோல பாம்பு கடிச்சுத்தான் செத்தான். அம்பத்துமூணுவருஷம் கழிச்சு புள்ளையும் பாம்புகடிச்சுத்தான் செத்திருக்கான். அவனை தூக்கிவிட்ட நான் இவனையும் தூக்கிவிட வந்திருக்கேன். சில்லறை பாக்கியமாஎன்று சுடுகாட்டில் அழும் கிழவர் சட்டென்று மரணத்தில் அளவிடமுடியாத மர்மவெளியை அவனுக்குக் காட்டிவிடுகிறார். அதன் பிறகு லட்சுமிப்பசுவின் பிரசவம் வழியாக அதற்கு இணையான மர்மமாக பிறப்பு.

 

அதன்பின் கிருஷ்ணன் காண்பதெல்லாம் மானுட உறவுகள். உறவுகள் வழியாக மனிதன் போட்டுக்கொள்ளும் விதவிதமான வேடங்களின் மாயங்கள். இந்தக்கதைகளில் எல்லாமே உறவுகளில் திடீரென்று தெரியவரும் விசித்திரமான மர்மங்களின் தருணத்தைச் சுட்டிகாட்டி நின்றுவிடுகிறார் யுவன் சந்திரசேகர். மனிதமனத்தின் உச்சமும் சிறுமையும் மாறி மாறி மின்னலடித்து மறையும்வெளி அது

 

பள்ளியில் தினமும் ரசம்சோறும் ஊறுகாயும் கொண்டுவரும் முருகானந்தம் சிலநாட்கள் அபூர்வமாக வகைவகையான டிபனும் கறிகளும் பலகாரங்களும் கொண்டு வருகிறான். தினமும் தனியாக அமர்ந்து சாப்பிடுபவன் அன்றுமட்டும் எல்லாருடனும் வந்து அமர்ந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிடுவான். எளிமையான நெசவாளர் குடும்பம் அது. பின்னர் ஒருமுறை கிருஷ்ணன் காணநேர்கிறது. ஒரு கல்யாணத்தில் ஒரு மனிதரை போட்டு அடிக்கிறார்கள். கல்யாணத்திற்கு வந்து லட்டு,வடை, பொங்கல் என்று திருடி பையில் எடுத்துக்கொண்டு போகமுயன்றிருக்கிறார். அது முருகானந்தத்தின் அப்பா.

 

அடுத்தக்கதையில் இன்னொரு முகம். திரைப்பட இயக்குநர் ஆகிய நண்பனின் கதை. சம்பந்தம் எடுத்த தங்கச்சிப்பூஎன்ற படம் வெள்ளிவிழா. அதில் தங்கையை குண்டர்கள் கடத்திச்சென்று பம்பாய் தாராவியில் வைத்து கெடுத்து விபச்சாரியாக ஆக்கிவிடுகிறார்கள். அவளை அரும்பாடுபட்டு தேடிக் கண்டடைகிறான் கதாநாயகன். வெற்றிகரமாக சம்பந்தம் உலவும் நாட்களில் சம்பந்தத்தின் தங்கை தீக்குளித்து இறக்கிறாள். காரணம் தெரியவில்லை. ஆனால் பிறகு தெரிகிறது, சம்பந்தம் தினத்தந்தியில் கொடுத்த பேட்டியில் தங்கச்சிப்பூ தன் சொந்த வாழ்க்கைக்கதை என்று சொல்லியிருக்கிறான்.

 

ஒன்றில் உறவின் உருக்கமான ஒரு தருணம். தன் பிள்ளைக்கு சுவையான உணவளிப்பதற்காக திருடும் அந்த மனிதரின் சித்திரம். அவர் அடிபடும்போதுகூட சிதறும் சாப்பாட்டை சேர்ப்பதிலேயே கவனமாக இருக்கிறார். அடுத்த கதையில் தன்முனைப்புக்காக உறவுகளையே  சிதைக்கும் ஒரு மனித மனத்தின் சித்திரம். மாறி மாறி இந்த அலைகள் வழியாகச் செல்கிறது இந்த நூல்.

 

அனுபவங்களில் ஏதேனும் சாராம்சம் இருக்கிறதா என்று தேடிச்செல்கிறது யுவன் சந்திரசேகரின் கவனம். ஒன்றில் இருக்கும் சாராம்சம் இன்னொன்றில் மறுக்கப்படுகிறது. ஒருமுறை கற்றுக்கொண்ட பாடம் மீண்டும் பயன்படுவதில்லை. அத்தனை அனுபவங்கள் வழியாகவும் ஓடு ஒரு பொதுச்சரடு இருக்குமா என்று கதைகள் வழியாகவே தேடிச்செல்லும் மனமே இந்தக் கதைகளின் சாராம்சம் என்று சொல்லலாம்.

 

யுவன் சந்திரசேகர் கதைகளை சொல்கிறார். சாதாரன உரையாடல் அளவுக்குமேல் அவற்றில் சித்தரிப்பின் நுட்பம் கைகூடுவதில்லை. பெரும்பாலான கதைமாந்தரும் கதைக்களமும் காட்சிப்படுத்தப்படுவதில்லை. மன உணர்வுகளைச் சொல்லும் சவாலை எதிர்கொள்வதேயில்லை. ஆகவே புனைவுகள் நமக்களிக்கும் உள்ளே சென்று வாழ்ந்தஅனுபவத்தை இக்கதைகள் நமக்கு அளிப்பதில்லை. கதைகளை நாம் ஒருவர் வாயிலிருந்து தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

 

ஆனால் யுவன் சந்திரசேகரால் கதைகளுக்குள் ஒலிக்கும் குரல்களை துல்லியமாக கொண்டுவந்துவிட முடிகிறது. திரௌபதி சேலையை அர்ச்சுனன் புடிச்சு இளுக்கறான் .அவங்கண்ணன் பீஸ்மரு இளு நல்லா புடிச்சு இளு அப்பத்தான் அந்தக்களுதைக்குப் புத்திவரும்ணாரு. சபையிலே அத்தனெ ஆம்புளைங்க முன்னாடி அவளை அம்மணாக்கிரணும்னு பாக்குறாய்ங்கெ. கடவுள் இல்லாமலா போனாரு? கஸ்டத்தே குடுக்கிற மாதிரி குடுப்பாரு. அப்றம் தானா வெலக்கிகிருவாரு…என ஒலிக்கும் ஒரு குரல் அதற்கான முகத்தோடு எளிமையாக நம் மனதில் உருவாகிவிடுகிறது.

 

இருட்டுக்குள் இருந்து தெளிந்துவந்து மீண்டும் இருட்டுக்குள் சென்று விடும் ஏராளமான மனித முகங்களின் தொகுப்பு போலிருக்கிறது இந்த தொகுப்பு.  மூட்டில் அடிபட்டவருக்கு சிகிழ்ச்சைசெய்ய முடியாது என மறுத்துவிட்டு பொறுமையிழந்து கிருஷ்ணன் கத்தும்போது சிகிழ்ச்சைசெய்து ஊரில் தன் தங்கை இறந்துவிட்டாள், அங்கே செல்கீறேன் அதனால்தான் என்று சொன்னபின் கீப் தட் ஆங்கர்என்று முதுகில் தட்டும் டாக்டர், கையில் குச்சியுடன் வந்து கொடைக்கானலில் கிருஷ்ணனின் விதியையே சரியாகச் சோதிடம் சொல்லிவிட்டுப்போகும் குறத்தி என பலநூறு முகங்கள். அம்முகங்களே  வாழ்க்கையாக வரலாறாக காலமாக உருவம் கொள்கின்றன

 

இரண்டுவகையில் இந்நூலின் கதைகள் மையம் கொள்கின்றன என்று சொல்லலாம். புதுவீடு வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அவர்கள் வாழவேயில்லை. ஆகவே அது வெறும் கல்மண் அமைப்பாக, ஓர் இடமாக இருக்கிறது. அதில் கிருஷ்ணனால் ஒட்டவே முடியவில்லை. அது யாருடையவோ வீடு. ஆனால் பத்மினி சட்டென்று அங்கே தன்னை நிறைத்துக்கொள்கிறாள். நாம் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்திருந்தால் இங்கே இருந்திருப்போம், சரவணன் இங்கே பிறந்திருந்தால் இங்கே தொட்டில் கட்டியிருப்போம் என்று அவள் கற்பனைமூலம் சில கணங்களுக்குள் ஒரு முழு வாழ்க்கையையும் அங்கே வாழ்ந்து முடித்துவிடுகிறாள். அந்த வீடு அவளுக்கு நெருக்கமான அவள் வீடாக ஆகிவிடுகிறது.

 

கதைகளின் கடைசியில் நாற்பதைத்தாண்டிய கிருஷ்னன் கரட்டுப்பட்டிக்கு குலதெய்வ பூஜைக்காக மீண்டும் வருகிறான். வீடு இடிந்து கிடக்கிறது. நினைவுகளைத் தாங்கிய  அனைத்துமே சிதறுண்டு விட்டிருக்கின்றன. ஒன்றும் மிச்சமில்லை. அந்த மண்ணே அன்னியமாகிவிட்டது. அதுதான் இயற்கை. ஆனால் பார்த்து நிற்க அந்த வெறும் பொருட்களில் சரசரவென  கற்பனைவெள்ளமாக வாழ்க்கை ஊறி நிறைகிறது. திண்ணையில் அப்பா மகோதர வயிற்றுடன் படுத்துக் கிடக்கிறார்.

 

அந்த இறுதிக்காட்சியில் இருந்துதான் நூலின் முதல் கதை தொடங்கியிருக்கிறது என்னும்போது இந்நூலின் மனஎழுச்சியை தீண்டிவிடமுடிகிறது. நினைவுகள் வழியாக மீண்டும் மீண்டும் வாழ்வது. வாழ்ந்த வாழ்க்கையை நிரந்தரப்படுத்திக்கொள்வது. அதற்காகவே கதைகளின் வழியாக கிருஷ்ணன் மீண்டும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறான். அத்துடன் பத்மினிசெய்வது போல அவனுக்குக் கிடைத்த இந்த உலகம் என்னும் இடத்தை தன் கதைகள் மூலம் தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிறான்.

 

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

யுவன்

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் பகடையாட்டம்

 

 

 பிச்சைப்பாத்திரம்: இசைக்க மறந்த கலைஞன்

http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=32

முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனுபவங்கள்:கடிதங்கள்