361 டிகிரி

சிற்றிதழ்களுக்கான ஒரு தேவை மீண்டும் உதயமாகியிருக்கிறதா என்ன? தொடர்ச்சியாக இவ்வருடம் பல சிற்றிதழ்களைப் பார்க்கமுடிகிறது. ஏதோ ஒரு தேவை இல்லாமல் இவ்விதழ்கள் பலமுனைகளில் இருந்து வெளிவர முடியாது. அந்த தேவை என்ன?

சந்திரா

[சந்திரா ]

ஒரு வசதிக்காக மூன்றாயிரம் பிரதிகளுக்குமேல் விற்கும் இதழ்களை நடுத்தர இதழ்கள் என வகுத்துக்கொள்கிறேன். காலச்சுவடு,உயிர்மை,தீராநதி, அமிர்தா, உயிர்எழுத்து ஆகிய நான்கு மாத இதழ்கள் தொடர்ந்து வருகின்றன. வாரம் ஒன்று எனக் கொள்ளலாம். அவையெல்லாமே விரிந்த தாளில் அறுபது பக்கங்கள் வரை இடமுள்ளவை. அவற்றை நிரப்பவே இலக்கியப்படைப்புகள் போதவில்லை என்கிறார்கள். உயிரெழுத்து போன்ற இதழ்கள் பெரும்பாலும் எல்லாப் படைப்புகளையும் பிரசுரித்துவிடுகின்றன. அவற்றில் கணிசமான எழுத்துக்கள் புதியவர்களால் எழுதப்பட்டவை. பெரும்பாலும் முதிரா முயற்சிகள், அவ்வப்போது சில நல்லபடைப்புகள் வருகின்றன.

இவற்றுக்கு அப்பாலும் ஏன் சிற்றிதழ்கள் தேவையாகின்றன? நடுத்தர இதழ்களுக்கு சிலநிபந்தனைகள் உள்ளன. வாசக எண்ணிக்கை அதிகரிக்கும்போது உருவாகி வரும் கட்டாயம் அது. அவ்வாசகர்கள் முற்றிலும் அடையாளப்படுத்திக்கொள்ளாத ஓர் ஆக்கத்தை அவை பிரசுரிக்க முடியாது. அவற்றின் பக்கங்களில் ஒரு விஷயப்பகிர்வு இருந்தாகவேண்டுமென்பதனால் மிக நீளமான ஆக்கங்களை அவை பிரசுரிக்கமுடியாது. மொழிபெயர்ப்புகளை ஓரளவுக்குமேல் பிரசுரிக்கமுடியாது. அவற்றை எல்லாம் கணக்கில்கொள்ளாமல் படைப்புகளைப் பிரசுரிக்க சிற்றிதழ்கள் தேவையாகின்றனவா?

ஆனால் சிற்றிதழ்களின் உண்மையான தேவை அங்கே இல்லை. நடுத்தர இதழ்களில் உண்மையான புத்தம்புதிய இலக்கிய முயற்சிகளைப் பிரசுரிக்கமுடியாது. அந்தப் படைப்புகள் வாசகச்சூழலில் ஓரளவேனும் தங்கள் இலக்கிய இடத்தை உருவாக்கியபின்னரே பிரசுரிக்கமுடியும். ஆனால் அதுவும் நடைமுறையில் உண்மை அல்ல. கேரளத்தில் நடுத்தர இதழ்கள் பெரும் எண்ணிக்கையில் வெளிவருவதனால் சிற்றிதழ் இயக்கமே அனேகமாக இல்லை. அந்த இதழ்களுக்கு வெளியே ஒரு சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கும் எல்லா முயற்சிகளுடனும் நான் இணைந்திருக்கிறேன். ஆனால் அந்தச் சிற்றிதழ்கள் என்ன புதிய அம்சத்தை உருவாக்கினாலும் உடனே அவை எல்லாம் நடு இதழ்களால் உள்ளெடுக்கப்பட்டுவிடும். சிற்றிதழ்கள் எவையுமே தொடர்ந்து மேலெழவில்லை. தமிழிலும் அவ்வகையில் நிகழ்கிறதா என்ன?

இந்த சிற்றிதழ்களைக் கவனிக்கையில் இவை மேலதிகமாக எதை முன்வைக்கின்றன என்ற வினா எழுகிறது. சென்னையில் இருந்து நரன்,நிலாரசிகன் இருவரையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள 361 டிகிரி என்ற சிற்றிதழ் பக்க அளவில் கனமானது. இதில் எழுதியிருக்கும் ஏறத்தாழ அனைவருமே நடு இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஒரு சிற்றிதழில் இவர்கள் எதைப் புதியதாக எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணமே முதலில் ஏற்பட்டது. நடு இதழ்கள் ‘தாங்காத’ படைப்புகள் சில இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும்.

361 டிகிரியை முதலில் பார்த்ததுமே எழுந்த எண்ணம் எண்பது,தொண்ணூறுகளில் வந்த எந்த ஒரு சிற்றிதழுடனும் இதை இயல்பாகக் கலந்துவிடலாம் என்பதுதான். பல படைப்பாளிகள் அக்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. அந்தச்சிற்றிதழ்களுக்கென்றே ஒரு வடிவ சூத்திரம் இருந்தது. இதிலும் அதுவே உள்ளது. நிறைய புதியவர்களின் கவிதைகள், சொற்றொடர்ச்சிக்கல்களுடன் மொழிபெயர்ப்புக் கவிதைகள், திருகலான செயற்கைமொழியில் சிலசிறுகதைகள், சில நிகழ்ச்சிக்குறிப்புகள், ஒன்றோ இரண்டோ கோட்பாட்டு மொழியாக்கக்கட்டுரைகள். அவ்வளவுதான். இவ்விதழில் குறைவது, நூல்மதிப்புரைகள்.

சிற்றிதழ்களின் கவிதைகள்மேல் பொதுவாக வாசகக் கவனம் எதுவும் இன்று இல்லை என்பதே உண்மை. முக்கியமான காரணம் பெரும்பாலான கவிதைகள் கவிஞருக்கென்று தனிமொழி ஏதும் இல்லாமல் பொதுவான ஒரு ஆங்கில நெடியடிக்கும் தமிழில் உள்ளன. ’நீங்கள்’ ‘உங்கள்’ போன்ற முன்னிலையில் பேசும் கவிதைகளின் சொல்லாட்சிகள் ஆங்கிலமாகவே பிரக்ஞையில் பதிகின்றன. இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நவீனக்கவிதை இந்த செயற்கை மொழியைப் பழகி இன்று இரண்டாம்தலைமுறைக்கும் வந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது.

கவிதையின் பேசுபொருட்கள் உலகமெங்கும் மாறிவிட்டிருந்தபோதிலும் கூட தமிழில் நவீனகவிதை ஓர் இயக்கமாக எழுந்த எண்பதுகளின் இருத்தலியல் கருக்களே அதிகமும் ஒலிக்கின்றன. தனிமை, உறவுகளின் வன்முறை பற்றிய வரிகளே அதிகம். ஆச்சரியமாக இன்னும்கூட அதே கடவுளைப்பற்றிய கவிதைகள்! கடவுள் சவரம் செய்கிறார் என்பதுபோல சம்பிரதாயக் கடவுளை மறுக்கும் கவிதைகள், கடவுள்-சாத்தான் என வழக்கமான இருமையை முன்வைக்கும் கவிதைகள்! எப்படி இது நிகழ்கிறதென்றே ஆச்சரியமாக இருக்கிறது.

கவிதைகள் எழுதுபவனின் அக உலகில் இருந்து வந்திருந்தால் அவற்றில் இருக்கக்கூடிய தனிப்பட்ட மொழி, தனிப்பட்ட பேசுபொருள் இரண்டும் இவற்றில் இல்லை. பெரும்பாலான தமிழ்ச்சிற்றிதழ்க் கவிதைகளை ஒன்றுடன் ஒன்று கலந்தால் எவற்றையும் எவரும் எழுதியிருக்கக்கூடும் என்றே நாம் உணர்வோம். நிறைய கவிதைகள் கொண்ட ஒரு இதழை வாசித்து முடிக்கையில் ஒரு கவிதை தனித்து நிற்பது அபூர்வமாகவே நிகழ்கிறது.

இசை

[இசை]

இந்த இதழில் என்னைக்கவர்ந்த கவிதைகள் ‘இசை’ எழுதிய மேயாத மான்.

மேயாத மான்


* மான்கள்
மிரண்டதுபோல்
ஒருபார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டுவிட்டால்
புரண்டுவிட்டாய் போ

* மொட்டைக்கருவேலத்தின் சொப்பனத்தில்
எப்போதும்
ஒருகாயாத கானகம்
அதில் ஏராளம் மான்கள்

* பொழுதுவிடிந்தது
பொற்கோழி கூவிற்று
அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள்
ஜன்னல்கம்பிகளூடே
ஓடி மறைகின்றன சில மாயமான்கள்

* சாயாத கொம்பிரண்டும்
முட்டிமுட்டிக் கொன்றிட்டான்
களிமோடம் உனக்குத்தான் சா

* சொல் ‘மகாலிங்கம்’
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு?

வழக்கமான தமிழ்ப்புதுக்கவிதைகளில் உள்ள இருத்தலியல்சார்ந்த அதிதுக்கம், பொத்தாம்பொதுவான தத்துவார்த்தம், கலகம் போன்ற பாவனைகளே இல்லாமல் மிகச்சாதாரணமான ஒன்றை நுட்பமான புன்னகையுடன் சொல்வதனாலேயே இந்தக்கவிதை எனக்குத் தனித்துத் தெரிகிறது. இன்றைய கவிதைகளுக்கே உரிய வகையில் பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகள் பகடியாக ஒன்று கலக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ’மேயாதமான்’ என்ற வரி நம் நாட்டார் நாடக மரபிலிருந்து வருவது. ‘பொழுதுவிடிந்தது பொற்கோழிகூவிற்று’ செவ்வியல் மரபிலிருந்து. பகடி இரண்டையும் ஒரே இடத்தில் இணையவைக்கிறது.

வே.பாபு, கார்த்திகைப் பாண்டியன், நிலா ரசிகன் கவிதைகள் ரசிக்கத் தக்கவை. ஆனால் அவை இந்த ஒட்டுமொத்தத்தில் இருந்து மேலெழவில்லை. பா.வெங்கடேசன் கவிதைகளும் பொதுவான தளத்தில், அவரது வழக்கமான மொழியில் இருக்கின்றன. ஆனால் மொத்த கவிதையை மீறி

‘இன்று மீண்டும் பிறந்தநாள்
பழைய மலைகள் புரண்டு
அவளுள் புதைந்தன’

என்ற வரி என்னைத் தொற்றிக்கொண்டது. விதவிதமான அர்த்தங்களுடன் என்னுடன் வந்தது. கவிஞன் மொழியில் செய்யும் விளக்கமுடியாத மாயத்தின் தடையம் இது. இந்த இதழில் நான் பெற்ற மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று இந்தவரி.

கதைகளில் இருவகை. லட்சுமி சரவணக்குமார், கவின்மலர் கதைகள் அடையப்படாதவை என்று தோன்றியது. கவின்மலர் கதைக்கு வெகுதூரம் முன்னரே ஒரு எளிய மையத்தில் நின்றுவிடுகிறார். லட்சுமி சரவணகுமாரின் கதை அதன் கருவிலேயே தவறான திறப்பைக் கொண்டுள்ளது. அகஅனுபவத்தின் முன் அப்பாவித்தனமாக நிற்பது எப்போதும் கலைக்குத் தேவையாகிறது. செயற்கையான ஒரு வடிவம் காரணமாக இக்கதை அந்த அகநிகழ்வை நம்பகமாக உருவாக்க முடியவில்லை. ஆனாலும் இரு கதைகளும் முயற்சிகள். இரு எழுத்தாளர்களுமே நான் எப்போதுமே கவனிப்பவர்கள்.

பிறகதைகள் வெவ்வேறு வகையில் தோல்விகள். கோணங்கி, முருகபூபதி இருவரின் ஆக்கங்களையும் வெறுமே மனப்பிம்பங்களையும் மொழியையும் செயற்கையாக அளைந்துகொண்டிருக்கும் யத்தனங்கள் என்றே நான் உணர்கிறேன். கலையின் வெற்றி தோல்வி என நான் என்ன சொல்கிறேன் என ஏதேனும் வகையில் கலையை உருவாக்க, வாசிக்க முடிந்தவர்களால் புரிந்துகொள்ளமுடியும். அது வாசகனை அடைதலில் உள்ள வெற்றிதோல்வி கூட அல்ல. எழுத்தாளன் தானே உணரும் வெற்றிதோல்வி அது. வெற்றியைக் கலைஞன் அவனே உணர்ந்தால் மட்டும்போதும். மிக நுட்பமாக நல்ல வாசகனும் அதை உணர்வான்.

படைப்பைத் தன்னுள் உணர்தல் – மொழியில் நிகழ்த்திக்கொள்ளுதல் என்ற இரு புள்ளிகள் நடுவே நிகழ்ந்துகொண்டிருக்கும் விளங்கவே முடியாத பிரம்மாண்டமான தற்செயல்களின் பெருக்கை உணர்ந்த ஒருவனே இந்த வெற்றி தோல்வியை உணர முடியும். பிடிக்கநினைத்த பட்டாம்பூச்சி அதுவே கைவிரல்களில் வந்து சிறகு மடக்கி அமர்வதுபோன்றது அது.

ஒரு படைப்பைத் தன்னுள் உணர்வதில் ஆரம்பிக்கிறது எழுத்து. அதைச்சொல்ல ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனுக்கான வார்த்தை இருக்கும். தரித்தல் என அதை வண்ணதாசன் ஒருமுறை சொன்னார். conceive என்ற சொல்லின் மொழியாக்கமாக. அது தன்னிச்சையாக நிகழ்வது. அதை நிகழ்த்திக்கொள்ள ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அந்தரங்கமான வழிமுறைகள் உத்திகள் இருக்கும்.

ஒரு படைப்பை ஓர் எழுத்தாளன் எழுத ஒரே வழிதான் உள்ளது என்பார்கள். அதைக் கண்டடைந்தால் அதுவே படைப்பின் வடிவத்தை அதன் நோக்கை தீர்மானிக்கிறது. சிலசமயம் உணர்ந்த அக்கணத்திலேயே மிகச்சரியாக அதை பிடித்துவிடமுடியும். சிலசமயம் வருடங்கள் தாண்டிச்சென்றாலும் திறக்கப்படாததாக படைப்பு நெஞ்சுக்குள் கிடக்கும். சிலசமயம் வேறெதையோ செய்யப் புதியதாக அது கிளம்பி வரும். எழுத்து என்ற இயக்கத்தில் உள்ள ஆதாரமான மகிழ்ச்சி என்பதே இந்தத் தற்செயல்களை அறியும் கணங்கள்தான். படைப்பு கிடைப்பதுதான் அது. அமைதல் என அதை வண்ணதாசன் சொல்கிறார்.

சரியாகத் ’தரிக்க’ப்பட்ட ஆக்கம் சரியாக ’அமைவ’தே படைப்பின் வெற்றி என்பது. எந்த எழுத்தாளனுக்கும் அது பலநூறு கைநழுவல்கள் வழியாக தற்செயலாக, அற்புத நிகழ்வாக, பெறப்படுவதாகவே இருக்கும். படைப்பின் வெற்றி என்பது ஒருவகையில் மொழியும் எழுத்தாளனும் கொள்ளும் சரியான இசைவு. நவீன வாசிப்புசார்ந்த கொள்கைகள் வாசிப்பை எந்த அளவுக்கு மையப்படுத்தினாலும் எழுதும் தரப்பில் உள்ள இந்த நிகழ்வை அவை விளக்கிவிடமுடியாது.

அவ்வாறு எழுத்தாளன் தரப்பில் வெற்றிபெற்ற ஓர் ஆக்கமே வாசகனுக்கும் வெற்றிபெற்றது. அதை மிக எளிதாக வாசகன் உணர்ந்துகொள்ள முடியும். ஓர் எழுத்தாளன் ஒரு படைப்பில் இரண்டு பத்திகளைத் ’தன்னைமறந்து’ எழுதினான் என்று கொள்வோம். அவனுடைய கூர்ந்த வாசகர் அனைவருமே தவறாமல் அந்த இரு பத்திகளை முக்கியமானவையாகச் சுட்டிக்காட்டுவதை அவன் காண்பான். இது எழுத ஆரம்பிக்கும்பருவத்தில் எழுத்தாளனை பிரமிக்கச்செய்யும். பின்னர் அதுவே இயல்பானது என அவன் அறிந்துகொள்வான். படைப்பின் வெற்றி என்பது அவ்வாறு வாசகன் எழுத்தாளனைக் கண்டுகொள்ளும் கணம் நிகழ்வதே.

மேலே சொன்ன கதைகளில் அதற்கான முயற்சியே இல்லை. ஒரு மனப்பழக்கமாக ஒருவகையான செயற்கையான படிம மொழி பழக்கப்பட்டுவிடுகிறது. காதிலும் கருத்திலும் விழும் எல்லாவற்றையும் அந்த மொழிக்குள் திருகித்திருகி செலுத்திக்கொண்டே செல்லும் தொழில்நுட்பம் மட்டும்தான் அது. காத்திருத்தல் இல்லை, தரித்தலின் துயரமும் உவகையும் இல்லை, அமைவதன் களியாட்டமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அமர்ந்து எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் அந்த எந்திரத்தால் எழுத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

இருபதாண்டுகளாக மாற்றமே இல்லாமல் கோணங்கி இதையே சலிக்காமல்செய்து வருகிறார். மிக எளிதாக அதை அவர் தம்பி அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடிகிறது. அதுவும் அதே மாதிரி இருக்கிறது. நல்ல கலை கலைஞனின் அந்தரங்கம் சார்ந்தது. அது தற்செயலால் என்றும் அலையடித்துக்கொண்டே இருக்கும். பெரும் கலைவெற்றியை அடைந்த படைப்பாளி அடுத்த படைப்பைக் கேனத்தனமாக எழுத நேர்வதும் அதனால்தான். கலையின் தொழில்நுட்பத்தையே பிறருக்குக் கற்றுக்கொடுக்க முடியும், கலையை ஒருபோதும் கற்பிக்க முடியாது.

ஏன் இவ்வகை முயற்சியை இலக்கியமென அங்கீகரிக்க நான் மறுக்கிறேன்? உண்மையான இலக்கியம் என்பது வாழ்க்கையேதான். வாழ்க்கையைப்பற்றித் துளியாகவும் முழுமையாகவும் பேசிக்கொண்டிருக்கிறது இலக்கியம். மொழிவிளையாட்டு என்பது வாழ்க்கைபற்றி எதுவும் அறியப்படவில்லை, எதுவும் வெளிப்படுவதற்குமில்லை என்ற நிலையில் மட்டுமே உருவாகக்கூடியது.

இந்த இதழிலேயே அந்த வகையான கலைவெற்றிக்கு உதாரணமாக நான் சுட்டிக்காட்டும் ஒரு கதை இருப்பது மகிழ்ச்சியளித்தது. சந்திரா எழுதிய ‘அறைக்குள் புகுந்த தனிமை’ .சென்ற மாதம் கோயில்பட்டி சென்றிருந்தபோது நான் இந்தக்கதை பற்றி தேவதச்சனிடம் பேச ஆரம்பித்ததுமே அவர் உத்வேகத்துடன் ’எக்ஸாட்லி இதே கதையைத்தான் நான் யோசிச்சிட்டிருந்தேன்’ என ஆரம்பித்தார்.

’உப்பைப்போல் வெறுமை கொண்டிருந்த உடலாக’த் தன்னை உணரும் ஒரு பெண்ணின் ஒரு நாள் இந்தக்கதை. தோழியைச் சந்திக்கச் செல்கிறாள். தோழியுடனான அவளுடைய உறவின் நுட்பமான சிலதருணங்கள் வழியாகச் செல்லும் கதை அவள் ஒரு ஆணைச் சந்திக்கும்போது புதியதாக ஆரம்பிக்கிறது. அவளை அவன் கவர முயல்கிறான். அவள் அதை அனுமதிக்கிறாள்.மெல்லிய சல்லாப பாவனைகள். ஓர் இடத்தில் ‘நான் படிக்கலை, பிராஸ்டிடியூட்டா இருக்கேன்’ என்கிறாள் பொய்யாக.

உடனே அவன் பாவனைகள் அனைத்தும் தலைகீழாகின்றன. அவன் அலட்சியமும் திமிரும் கொண்டவனாக ஆகிறான். அவள் அவனைத் தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறாள். ஏமாற்றி அவனை ஓர் அறைக்குள் மூடிவிடுகிறாள். இரவெல்லாம் அவனை அங்கே வைத்திருக்கிறாள். அவன் சட்டென்று இன்னொரு தோற்றம் கொள்கிறான். அஞ்சி நடுங்கி அழுது புலம்புகிறான். காலையில் அவள் திறந்து விடும்போது குழிந்த கண்களும் நடுங்கும் உடலுமாகக் குறுகிப்போய் வெளியேறுகிறான்.

பலதளங்களில் பலவாசிப்புகளுக்குச் சாத்தியமளிக்கும் இக்கதையை நான் சொல்லவோ விளக்கவோ போவதில்லை. நான் இதை வாசித்த இரு முக்கியமான வழிகளை மட்டும் கோடிகாட்ட விரும்புகிறேன். ஒன்று தோழியுடன் அவளுக்கிருக்கும் உறவுக்கும் ஆணுடன் இருக்கும் உறவுக்குமான வேறுபாடு. தோழியுடனான உறவு இயல்பானதாக ஆனால் சற்றே சலிப்பானதாக இருக்கிறது. அங்கே அவளுக்கு மர்மங்கள் இல்லை. ஆகவே அவள் சீண்டப்படுவதில்லை. அவள் இயல்பாக இருக்கிறாள்.

ஆனால் ஆணுடனான உறவு அவளைக் கொந்தளிக்கச் செய்கிறது. அதில் அவளுக்கு பலவகையான மர்மங்கள் உள்ளன. ஆகவே விதவிதமான சுயபாவனைகள் வழியாக அவள் அவனை அணுகுகிறாள். கொஞ்சிக்குலாவும் காதலியாக, விபச்சாரியாக, அவனைத் தண்டிக்கும் குரூரம் கொண்டவளாக. ஒருபாவனையில் இருந்து இன்னொன்றுக்கு இயல்பாகச் செல்கிறாள். எல்லா பாவனைகளுமே அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.

அந்த பாவனைகளுக்கு ஏற்ப அவள்முன் அவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என்பதே இந்தக்கதையின் இரண்டாவது நுழைவு வழி. பெண்ணை அவள்போக்கிலேயே சென்று கொஞ்சி புகழ்ந்து வசியப்படுத்த நினைக்கும் காதலனாக இருக்கிறான். அவள் விபச்சாரி என்றதுமே அவன் வாடிக்கையாளனாக ஆகிவிடுகிறான்.வாடிக்கையாளனுக்கான எல்லா முகங்களும் வந்து விடுகிறது. அவள் உடலை விலைகொடுத்து வாங்கிய அவன் அதை உடல்மட்டுமாகவே அடைய நினைக்கிறான். ஆகவே அவள் மனதை வதைத்து ஆளுமையை அவமதிக்க முனைகிறான்

அவள் சட்டென்று தண்டிப்பவளாக ஆகிறாள். அந்தப் புரிந்துகொள்ளமுடியாமை காரணமாக அவனை தாண்டிச்செல்கிறாள். அந்நிலையில் அவனுக்கு அவளை எதிர்கொள்ள எந்த முன்னர் தயாரிக்கப்பட்ட பாவனையும் கைவசமில்லை. சட்டென்று சரணடைகிறான். மன்றாடுகிறான். தோற்றுப் பின்வாங்குகிறான். அவள் வெற்றியின் வெறுமையில் அமர்ந்திருக்கிறாள்

ஆண்-பெண் உறவின் பாவனைகளின் நடனம் இந்தக்கதை. நாம் வாழ்க்கையில் காணும் எல்லாவகையான ஆண்-பெண் உறவுகளுடன் இதைப் பொருத்தி விரித்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு தளத்திலும் நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது . இந்த உண்மையான வாழ்க்கை அம்சம்தான் கலையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சந்திராவின் இந்தக்கதையைக் கலையாக்குவதே ஆணின் மாறிமாறிச் செல்லும் நுண்பாவனைகள் பற்றிய அற்புதமான அவதானிப்புதான்.

இதை ஒருவர் மொழியை அளைந்து அடைய முடியாது. செயற்கையாக உருவாக்க முடியாது. மொழியும்வடிவமும் நிலமும்நீரும் போல. விதை விழுந்தால்மட்டுமே முளை எழமுடியும். விதை வாழ்க்கைபற்றிய ஆழ்ந்த அவதானிப்பில் இருந்து வருகிறது. அந்த அவதானிப்பு ஆராய்ச்சியாலோ ,வாசிப்பாலோ, சிந்தனையாலோ, விவாதத்தாலோ அடையப்படுவதல்ல. ஆராய்ச்சியும், வாசிப்பும், சிந்தனையும் கொண்டவர்கள் மேலோட்டமான கோட்பாடுகளையே பேசமுடியும். கலைக்கான கச்சாப்பொருள் எழுத்தாளனின் நுட்பமான ஆழ்மனம் தன்னைச்சுற்றி நிகழும் வாழ்க்கையில் இருந்து தன்னை அறியாமலேயே தொட்டு எடுக்கக்கூடிய ஒன்று.

பெரும்பாலும் அந்த அவதானிப்பை எழுத்தாளர்களால் கலைக்கு வெளியே விளக்கமுடிவதில்லை. அப்படி ஓர் அவதானிப்பு நிகழ்ந்திருப்பதை எழுதுவதற்கு முன் அந்த தூண்டுதல் வரும்போது மொத்தையாக உணரமுடியும். எழுதிமுடித்தபின்னரே அது அவருக்கே தெளிவாகிறது. அடைந்துவிட்டோம் என்ற நிறைவு, வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணம் எழுகிறது. மிகச்சரியாக வாசகன் அதை அடையவும் செய்வான். அதுவே கலையின் வெற்றி.

மீண்டும் சிற்றிதழ்கள் பற்றி. இந்தக்கதையை உயிர்மையோ காலச்சுவடோ மிக விரும்பிப் பிரசுரிக்கும் என்றே நினைக்கிறேன். அப்படியானால் எதற்காகச் சிற்றிதழ்? கலைவெற்றியை உத்தேசிக்கவே செய்யாத , செயற்கையான ‘சோதனைகளை’ப் பிரசுரிக்கவா?

சிற்றிதழ்கள் செய்யவேண்டிய பணி மிச்சமிருப்பதாகவே இச்சிற்றிதழ் எனக்குச் சொன்னது. இன்றைய இலக்கியத்தின் பிரச்சினைகள் வேறு. முக்கியமான சில அவதானிப்புகளைச் சொல்லமுடியும். நுண்ஒளிப்பதிவுக்கருவிகள், வரைகலை, நேர்கோடற்ற படத்தொகுப்பு ஆகியவற்றின் மூலம் காட்சிக்கலை படிம உருவாக்கத்தில் புதுப்புதுச் சாத்தியங்களை திறந்துவிட்டிருக்கிறது. எண்பதுகளில் கவிதைகளும் கதைகளும் படிமங்களை நம்பி செயல்பட்டன. இன்று அப்படி அல்ல. படிமம் என்ற உத்தியையே இலக்கியம் கைவிடவேண்டிய நிலை.

ஆகவே இன்று கவிதைகள் நுண்சித்தரிப்பு என்ற உத்தியை நோக்கிச் சென்றுவிட்டிருக்கின்றன. படிமங்கள் அணிகள் அற்ற வெற்றுக்கவிதை என்னும் வடிவம் பெரிதும் முயலப்படுகிறது. கலாச்சாரநினைவு என்ற பொதுவான பெருவெளியின் மர்மப்புள்ளிகளைத் தீண்டி எழுப்புவது, அவற்றைப் பின்னிப்பின்னிப் புதிய ஆக்கங்களை உருவாக்குவது என்ற வழி இன்று பெரிதாகத் திறந்திருக்கிறது. மொழிக்குள் நிறைந்திருக்கும் பண்பாட்டுநினைவுகளே இன்றைய இலக்கிய வடிவங்களின் கட்டுமானப்பொருள்களாக உள்ளன. இசை எழுதிய ’மேயாதமான்’ கவிதை அவ்வகைப்பட்ட முயற்சி.

கதைகளில் மிகநேரடியான நுண்சித்தரிப்புள்ள ஆக்கங்கள் முயலப்படுகின்றன, சந்திராவின் ‘அறைக்குள் புகுந்த தனிமை’ கதை அவ்வகையானது. பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகளை பிறஎழுத்துக்கள், வெகுஜனக்கலைகள், செய்திகள், வரலாறு ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொண்டு உருவாக்கக்கூடிய வடிவங்கள் முயலப்படுகின்றன, லட்சுமி சரவணக்குமார் ’தஞ்சை பிரகாஷும் மிஷன்தெரு ரம்பாவும்’ கதையில் அதை முயற்சி செய்திருக்கிறார். செவ்விலக்கியங்கள் திரும்ப எழுதப்படுவது, வரலாறும் செய்திகளும் புனைவாக்கப்படுவது என பல முறைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் அவை வெறு உத்திச்சோதனைகளாக அல்லாமல் வாழ்க்கையில் இருந்து கிளைத்து வாழ்க்கையை விளக்கக்கூடியவையாக ஆகும்போதே கலைமதிப்பு பெறுகின்றன.

தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் இந்தப் புதிய எல்லைகளை நோக்கிச் செல்லும் திறப்புகளை நிகழ்த்திக்கொள்ளத் தன் பக்கங்களைச் செலவிடுமென்றால் ஒரு புதிய தொடக்கம் நிகழக்கூடும். அந்த எண்ணத்தில் இச்சிற்றிதழை வரவேற்கிறேன்.


அறைக்குள் புகுந்த தனிமை
சந்திரா சிறுகதை

361 டிகிரி .சிற்றிதழ். தொடர்புக்கு 4/117 சி.வடக்குப்பட்டு,நான்காவது குறுக்குத்தெரு, கோவிளம்பாக்கம், மேடவாக்கம், சென்னை 600100

மின்னஞ்சல் [email protected]

முந்தைய கட்டுரைசாரல் விழா உரை
அடுத்த கட்டுரைராமாயணம்-கடிதங்கள்