குடி

 

என் மதிப்பிற்குரிய நண்பர் ஜீவானந்தம் அவர்கள் தமிழ்நாட்டின் சுற்றூச்சூழல் இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவர். முப்பதுவருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை பரப்புவதற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கும் கடுமையாக உழைத்துவருபவர். அதற்கும் மேல் அவர் ஒரு மருத்துவர். மயக்கவியல் நிபுணர். நலம்தா மருத்துவமனை என்ற பேரில் மதுஅடிமை மீட்பகம் ஒன்றை ஈரோட்டில் நடத்திவருகிறார்.  

அவரது மருத்துவமனையில் அமர்ந்து அவரிடம் நான் நிறைய உரையாடியதுண்டு. ஒருமுறை ஒரு லாரி ஓட்டுநர் வந்து குடியை நிறுத்தியபின்புள்ள வாழ்க்கையைப்பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். அவரது மனைவி மிக நெகிழ்ந்த நிலையில் டாக்டருக்கு நன்றி சொன்னாள். அவ்வாறு வந்துபேசுவது என்பது குடியை நிறுத்துவதில் மிக முக்கியமானது. அந்த உறுதிப்பாட்டை நீடிக்கச்செய்யும் ஒரு முயற்சி அது. 

அவர் போனபின் டாக்டர் சொன்னார், ‘அவரைக் கவனித்தீர்களா , கையில் உயர்தர வாட்ச் அணிந்திருக்கிறார்.நல்ல சட்டை. மனைவி கழுத்தில் தங்கச்சங்கிலி. குடியை நிறுத்தி  ஒருவருடம் ஆகவில்லை. பொருளாதார நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது”. எபப்டி?” என்றேன் ஆச்சரியமாக.

 குடிப்பவர்களின் குடும்பங்கள் மிகமிகக் குறைவான வருவாயில் வாழக்கற்றுக் கொண்டிருக்கின்றன…என்றார் டாக்டர். தினம் முந்நூறு ரூபாய் சம்பாதிப்பவர் ஐம்பது ரூபாய்கூட குடும்பத்துக்குக் கொடுப்பதில்லை. அந்த சிறு தொகையில் அனைத்துத்தேவைகளையும் ஒடுக்கிக் கொண்டு அந்த குழந்தைகளை மனைவி வளர்க்கிறாள். சட்டென்று குடியை குடும்பத்தலைவர் விடும்போது கிட்டத்தட்ட முக்கால்பங்கு சம்பளம் மிச்சமாகிவிடுகிறது. சிலநாட்களிலேயே குடும்பம் மேலேறிவிடுகிறது.

 குடி ஒரு பண்பாட்டு அம்சமோ ஒரு வாழ்க்கைமுறையோ கேளிக்கையோ ஒன்றுமல்ல, அது ஒருவகை நோய் மட்டுமே. நோயாக மட்டுமே அதைக் கண்டு அதற்கு சிகிழ்ச்சை அளித்து குணப்படுத்துவதே தேவையான செயலாகும். பெரும்பாலான குடிகாரர்கள் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். சட்டென்று உடல் அதற்குப் பழகிவிடுகிறது. அந்தப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்துகிறது. அந்த பழக்கத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் மனிதர்கள். உடல்உளைச்சல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை. அந்த நியாயங்களுக்குள் சென்று விவாதிப்பதில் பொருளே இல்லை. நோயை குணப்படுத்துவதே தேவை

 மேலும் சமீபத்திய ஆய்வுகளின்படி குடியடிமைத்தனம் என்பது சர்க்கரைநோய் போலவே பாரம்பரியத்தன்மை கொண்டதும் கூட. அடிமையாகும் தன்மை மூளைக்கு மரபாகவே கிடைக்கிறது. அதாவது ஒருவர் அடிமையாவதற்கான மூளையமைப்புடன் இருக்கிறார். குடியைக் கண்டடைந்ததும் உடனே அடிமையாக ஆகிவிடுகிறார். அதைக் கட்டுப்படுத்துவது அவர் கையில் இல்லை. 

 குடிநோயைப் பொறுத்தவரை நோயாளி தனக்கு நோய் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சிகிழ்ச்சைக்கு தன்னை கொடுக்க வேண்டும். அது அதிகமாக நிகழ்வதில்லை. சமீபகாலமாக சில பண்பாட்டுச்செயல்பாட்டாளர்கள் குடியை மகத்துவப்படுத்தவும் கொண்டாடவும் முயல்கிறார்கள். அது நாகரீகத்தின் பகுதியாகவும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. வருமானத்துக்காக அரசே குடியை வளர்க்கிறது.

 இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் குடியின் பாதிப்பு மிகமிக அதிகம். பெரும்பாலும் வறுமைவாய்ப்பட்டவர்கள் வாழும் நம் நாட்டில் குடியினால் உழைப்பு குறைகிறது.  உடல்நலம் குறைகிறது. விளைவாக குடும்பத்தில்  பொருளியல் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்பேர் மனைவிகுழந்தைகளை பட்டினி போட்டுத்தான் குடிக்கமுடியும். 

குடியை ஒரு நோயாக எண்ணமுடிந்தால் அதை சிகிழ்ச்சை செய்து குணப்படுத்துவது எளிது. ஆனால் சிகிழ்ச்சை பெறுபவர்களில் மீண்டும் குடிக்குத் திரும்பாமல் இருப்பவர்கள் கால்வாசிப் பேர்தான் என்றார் டாக்டர். ஏனென்றால் குடியை நாடுபவர்களில்  பலர் குடிசார்ந்து ஓர் உலகை உருவாக்கி வைத்திருப்பார்கள். நெடுங்காலம் வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வமே இருப்பதில்லை. சட்டென்று குடியை நிறுத்தும்போது  ஒரு வெற்றிடம் உருவாகி வருகிறது. அந்த வெற்றிடத்தை அவர்கள் வேறுசெயல்பாடுகள் மூலம் நிரப்பிக்கொள்ளாவிட்டால் குடி அதை மீண்டும் கைப்பற்றும்.

 தமிழ்நாட்டில் குடி ஒரு பெரும் சமூகச்சிக்கலாக நெடுங்காலம் முதலே இருந்து வருகிறது. தெருவில் கள்ளுண்டு பிதற்றும் குடிமகன்களை நாம் மணிமேகலையிலேயே காண்கிறோம். ஏழை மக்கள்தான் எப்போதும் குடிக்கு அடிமைகள். அவர்களின் அடிமைத்தனத்துக்கு குடியே காரணமாக இருக்கிறது. தலித் சிந்தனையாளரான ரவிக்குமார் இதைச் சுட்டிக்காட்டுகிறார். எப்போதும் கள்ளுக்கடை தலித் வாழ்விடங்களில் இருக்கிறது, அதை விற்றுக்கொழிப்பவர்கள் வேறு சாதியினர். பெரும்பாலும் அச்சாதியினரே குடியைப் போற்றிப்புகழ்கிறார்கள்.

 தமிழ்நாட்டு மீனவர்கள் குடியால் விலங்கிடப்பட்டவர்கள். அவர்களின் பொருளியலை அழித்து நாசம் செய்வதே குடிதான். அவர்களிடம் மூலதனம்சேராமல் மீன்சார்ந்த தொழில்கள் முழுக்க பிறர் கையில் இருப்பதற்கும் அதுவே காரணம். கடலை நம்பியே வாழும் மீனவர் கரையில் உணரும் வெறுமையை குடி நிரப்புகிறது. குடியை கைவிட்ட மீனவர்கள் அசாதாரணமான பொருளியல் வளர்ச்சியை அடைந்தும் இருக்கிறார்கள்.

 சுனாமிக்குப்பின்னர் கடலோரப்பகுதியில் குடி உச்சத்துக்குச் சென்றது. சுனாமி நிவாரணப்பணிகளுக்காக கடற்கரையில் பணியாற்றிய சேசுசபை அருட்பணியாளரான ·பிரான்ஸிஸ் செயபதி அடிகள் இந்தப்பிரச்சினையை கூர்ந்து கவனித்தபின் குடிக்கு எதிரான ஓர் மக்கள் இயக்கத்தை கடற்கரையில் உருவாக்க முயன்றார். அந்த இயக்கம் கத்தோலிக்க சபையின் உதவியுடன் இன்று பல்வேறு கிளைகளாக பரவி பெரிய அளவில் பணியாற்றி வருகிறது

 பணி. ·பிரான்ஸிஸ் .செயபதி அடிகள் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளுக்கு நன்றாக அறிமுகமானவர். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி நாட்டாரியல் துறை தலைவராக அவர் இருந்த நாட்களில் அக்கல்லூரி இலக்கியவாதிகளுக்குரிய மையமாக இருந்துள்ளது. நாட்டாரியலில் ஒரு பெரிய விழிப்புணர்வை உருவாக்க அவரால் முடிந்தது. அயோத்திதாசர் சிந்தனைகள் உட்பட பல முக்கியமான நூல்களை அத்துறை வெளியிட்டது.

 நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிழல் உலக நிதர்சனம்என்ற பேரில் 2006 டிசம்பர் 7,8,9 தேதிகளில் ஜெயபதி அடிகள் முயற்சியால் நடத்தப்பட்ட கருத்தரங்கு இத்துறையில் ஒரு முக்கியமான முயற்சி. குடிகுறித்த பண்பாட்டுத்தகவல்களை தொகுப்பதற்கும் அதைப்பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி வைப்பதற்கும் இது முகாந்தரமாக அமைந்தது. அந்த அரங்கில் மூன்று நாட்களில் ஆறு அமர்வுகளிலாக 24 கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை தொகுத்து குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்என்ற பேரில் ஒரு நூலாக ஆக்கியிருக்கிறார்கள் முனைவர் அ.கா.பெருமாள் மற்றும் சின்னச்சாமி.

 இந்த நூல் குடிக்கு எதிரான ஒரு பிரச்சார நூல் அல்ல. குடிகுறித்த பலகோணங்களிலான ஒரு விவாதநூலே. இந்நூலில் உள்ள குடியும் குடிசார்ந்த எண்ணங்களும்என்ற நாஞ்சில்நாடனின் புகழ்பெற்ற கட்டுரை உண்மையில் அளவோடு குடிப்பது நல்லது என்றே வாதிடுகிறது. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்றுஎன்று அது குடியை வர்ணிக்கிறது. குடி என்பது அறப்பிரச்சினை அல்ல, ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. ஒழுக்கம் சார்புநிலைகொண்டது என்று வாதிடுகிறார் நாஞ்சில்நாடன்.

 குடியின் பொருளியல் தீமைகள் குறித்த கருத்துக்களுக்கு எதிராக கள்போன்ற விலைகுறைவான மதுவை ஊக்குவிக்கவேண்டும் என்று நாஞ்சில்நாடன் வாதிடுகிறார். பொருளியல் இழப்பு என்பது உழைப்புநேரம் இழப்பது, கவனம் சிதைவது ஆகியவற்றுடனும் தொடர்புடையது என்பதை அவர் கருத்தில் கொள்வதில்லை.

 காவல் உயரதிகாரியும் கவிஞருமான சின்னச்சாமி குடிதொடர்பான சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் எப்படி ஒரு சமூகத்தீமையாக அதை ஒழிப்பதில் தடையாக உள்ளன என்று சொல்கிறார். தொல்காலம் முதல் நம் நாடில் மது உருவாக்கம் -குடி போன்றவற்றில் இருந்து வந்த சமூக நடைமுறைகளையும் ஒழுகக்நெறிகளையும் விரிவாக ஆராயும் இக்கட்டுரை எப்போதுமே குடியைப்பற்றிய பார்வையில் ஒரு குழப்பமானநிலையே சமூகத்தில் இருந்து வந்துள்ளது என்றும் அதை ஓர் உயர் ஒழுக்க நெறியாக மட்டுமே சமூகம் கண்டுவந்துள்ளது, சமூகச்சிக்கலாக அல்ல என்று சொல்கிறார்

பிரான்ஸிஸ் ஜெயபதி அவர்களின் கட்டுரை மருத்துவ நோக்கில் குடி என்பது எப்படி ஒரு நோயாகவே கருதப்படுகிறது என்பதை மிக விரிவாக ஆராய்கிறது.  கடற்கரைச் சமூகத்தில் 65 சதவீதம் ஆண்கள் குடிகாரர்கள் அவர்களில் 40 சதவீதம்பேர் குடியடிமைகள் என்று சொல்கிறார் ·பிரான்ஸிஸ் ஜெயபதி.

 டார்டர் என்னும் ஆங்கில மருத்துவர் 1880ல் இரு பெரும் நூல்களை எழுதினார்.  நியூயார்க்கைச்சேர்ந்த டாக்டர் சில்க்வர்த் [William Duncan Silkworth]என்பவரும் குடி ஒரு நோய்தான் என்று வாதிட்டார். அவரால் குணமான பில் வில்சன் என்பவரே பின்னர் குடிக்கு எதிரான ஆல்ககாலிக் ஆனானிமஸ் என்னும் அமைப்பை உருவாக்கினார்

                                                                              சில்க்வர்த்

 குடி ஓர் அறப்பிரச்சினை அல்ல. ஒழுக்கக்கேள்வி அல்ல. புலனடக்கம் சார்ந்தது அல்ல. குடிகாரர் உண்மையில் ஒரு நோயாளி. அவருக்கு  தேவை அறிவுரையோ புறக்கணிப்போ அல்ல. பிற நோய்களைப்போல அதற்கும் மருத்துவ உதவிதான் தேவை என்றார்கள் இவர்கள். மெல்ல மெல்ல அமெரிக்க மருத்துவக் கௌன்ஸில் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது. குடியை ஒரு நோயாக நிர்ணயம் செய்வதற்கான விதிகளை அது இரண்டாண்டுக்கால விவாதத்துக்குப் பின் உருவாக்கிக்கொண்டது.

 மதுஅடிமைத்தனம் என்பது உளவியல் சார்ந்தது. ஆனால் அதற்கான காரணம் முழுக்கமுழுக்க உடல்சார்ந்தது. ஒருமணிநேரத்தில் 60 மிலி ஆல்ககால் குடிக்கும்போது கல்லீரல் அதை செரிக்கிறது. அது அசிடால் டிஹைட்ரேடாக மாறி அசிட்டிக் அமிலமும் நீருமாக உருவெடுத்து வெளியேறிவிடுகிறது. ஆல்ககால் அதற்குமேல் உள்ளே செல்லும்போது உடலில் அது  பரவி போதையை உருவாக்குகிறது.

 இது சாதாரண மனிதனுக்கு. குடிநோயாளிக்கு மாறாக உள்ளே செல்லும் மது நேரடியாக மூளைக்கே சென்று விடுகிறது. அவனது கல்லீரல் எதையுமே பிரித்துக்கொள்வதில்லை. அவன் மூளையில் டெட்ரோ ஹைட்ரோடைஸோ குயிலோன் [TIQ] என்ற வேதிப்பொருளாக அது மாறுகிறது. இது குடிநோயாளிக்கு மட்டும்தான் இப்படி ஆகிறது. இந்த வேதிப்பொருள் உருவாகும்போது மூளையில் இருக்கும் சுரப்பிகள் வேலைசெய்வதை நிறுத்திவிடுகின்றன. அச்சுரப்பிகள் உருவாக்கும் என்ஸைம் மூலம் நிகழும் வேலைகளை எல்லாம் TIQ வே செய்ய ஆரம்பிக்கிறது.அதனால் அந்த மனிதனின் செயல்பாடுகள் முழுக்க சிதைந்துவிடுகின்றன .

 அச்சுரப்பிகள் மெல்ல மெல்ல வேலையை குறைத்துக்கொள்வதனால் அவன் மூளை செயல்படுவதற்கு எப்போதுமே TIQ தேவையாகிறது. தூங்குவதற்கும் மலம் கழிப்பதற்கும் சிந்திப்பதற்கும் எல்லாம் TIQ தேவையாகிறது. இந்நிலையில் அவன் எத்தனை விரும்பினாலும், அவனை யார் எபப்டி கட்டாயப்படுத்தினாலும், அவனால் குடியை நிறுத்திவிட முடியாது.

 இந்த TIQ வுக்கு மாற்றாக பல வேதிப்பொருட்களை மருத்துவர்கள் உருவாக்கிப்பார்த்தார்கள். ஆனால் அவையும் TIQ செய்யும் அதே வேலையை மட்டுமே செய்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே குடிநோய்க்கு மருந்தே இல்லை. குடிநோயின் விளைவுகளுக்கு மட்டுமே மருந்து உண்டு, குடி என்னும் நோய்க்கு அல்ல என்கிறா பிரான்ஸிஸ் ஜெயபதி.

 குடிக்கு சிகிழ்ச்சை என்பது பழக்கவியல் சிகிழ்ச்சை மட்டுமே. சென்னையில் உள்ள குடிக்கென்றே இருக்கும் மருத்துவமனையான டி.டி.கெ.சென்டர் அந்த முறையையே கடைப்பிடிக்கிறது. அது குடிநோயாளியின் மன அமைப்பு, சூழல், சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவனை குடிக்கு எதிராக திருப்புவதையே முதலில் செய்கிறது.

 குடிநோய் சிகிழ்ச்சைக்கு முதல்தேவை தன்னைக் குடிகாரன் என்றும், குடி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஒத்துக்கொள்ளுதல் என்று கூறும் பிரான்ஸிஸ் ஜெயபதி அவர்கள் குடிநோய் சிகிழ்ச்சைக்கு முக்கியமான வழி தொடர்ந்து குடிநோயாளியை கண்காணித்தல்தான் என்கிறார். பலவருடங்கள் கழித்துக்கூட குணமான குடிநோயாளி மீண்டும் திரும்பிவிடக்கூடும். ஆகவே தொடர்ச்சியான கண்காணிப்புடன் விரிவான பண்பாட்டு மாற்று அமைப்பும் அதற்கு தேவையாகிறது.  மொத்தத்தில் குடியை நிறுத்துவது என்பது எளிய செயலல்ல என்று சொல்லும் பிரான்ஸிஸ் ஜெயபதி குடிக்கு எதிரான மனத்தடையை சமூகம் உருவாக்கி குடியை தொடங்காமல் இருக்கச்செய்வதே சிறந்த வழி என்கிறார்.

 இதே கோனத்தில் இன்னொரு விரிவான கட்டுரை குடிநோய் மருத்துவ மையங்களின் சிகிழ்ச்சைமுறைகள்என்ற தலைப்பில் ச·பி எழுதியிருப்பது Alcoholic addiction போன்ற கலைச்சொற்களுக்குப் பதிலாக இப்போது குடியை பிற நிலைத்தபழக்கங்களில் ஒன்றாகக் கருதி Substance Dependence என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள் என்கிறார். Myth and Mental Illness என்ற நூலை எழுதிய தாமஸ் சாஸ் என்பவர் குடிநோய் சிகிழ்ச்சையை உளவியலின் தளத்துக்குள் கொண்டுவந்த முன்னோடி என்று ச·பி குறிப்பிடுகிறார்

 

 காந்திய சிந்தனையில் குடி குறித்த கருத்துக்கள் எப்படி உருவாயின என்பதை காந்தியவாதியான தே.வேலப்பனின் கட்டுரை விரிவாகச் சொல்கிறது. காந்தி குடிக்கு எதிரான தன் தீவிரமான கருத்துக்களை மதத்தின் ஒழுக்கவியலில் இருந்து பெற்றுக்கொண்டவரல்ல. அவர் ஓர் நடைமுறைவாதி. குடி எப்படி உடலையும் மனதையும் அடிமைப்படுத்துகிறது என்ற நேரடி அனுபவங்கள் மூலமே அவர் தன் எண்ணங்களை அடைந்தார்.

 பாட்டர்சன் என்ற ஆஸ்திரேலியப் பொறியியலாளர் குடி அடிமையாக இருந்து காந்தியால் மீட்கபப்ட்டார். ஆனால் சிலவருடங்கள் கழித்து ‘;நான் மீண்டும் மதுவசமானேன்  என்று காந்திக்கு எழுதிவிட்டு மீண்டும் குடிகாரர் ஆனார். காந்திக்கு குடியின் வல்லமையைக் காட்டிய நிகழ்வு அது. குடியில் உள்ள பொருளியல் சுரண்டலை காந்தி நன்கறிந்திருந்தார். கள்ளுக்கடை ஆங்கில அரசின் மையமான சுரண்டல்களில் ஒன்று என்று உணர்ந்தபின்னரே அவர் அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்

 சங்ககாலத்தில் குடி குறித்த பதிவுகள் என்னென்ன என்று ஆராய்கிறார் நா.இராமச்சந்திரன். தொடர்ச்சியாக களப்பிரர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை இலக்கியத்தில் கள் குறித்து வரும்செய்திகளை முனைவர் அ.கா.பெருமாள் தொகுத்தளிக்கிறார். நவீன நாவல்களில் குடிகுறித்து வரும் பகுதிகள் வழியாக இலக்கியம் குடியை எப்படிக் காண்கிறது என எம்.கோபாலகிருஷ்ணன் ஆராய்கிறார். நாட்டுப்புறப் பாடல்களில் உள்ள மது குறித்த தகவல்களை முனைவர்.ஆ.தனஞ்சயன், ஞாஸ்டீபன் ஆகியோர் ஆராய்கிறார்கள்

 இதழியல்துறையில் குடிகுறித்து இருக்கும் கருத்தாக்கங்களை மணாவும் த.செ.ஞானவேலும் விவரிக்கிறார்கள். இசையில் உள்ள குடிசார்ந்த மனப்படிமங்களை அருட்பணி வின்செண்ட் பிரிட்டோ அவர்களும் நா.மம்முது அவர்களும் தொகுத்துரைக்கிறார்கள். து.ரவிக்குமார் அசுரர்களினரசியல் என்னும் கட்டுரையில் குடியின் சுரண்டலை விரித்துக்கூறுகிறார்.

 இருகட்டுரைகள் இந்நூலில் முக்கியமானவை. இஸ்லாமில் உள்ள குடி குறித்த தகவல்களைப் பெசும் எச்.ஜி.ரஸ¥லின் கட்டுரைபின்னர்  மிகவும்  சர்ச்சைக்குள்ளானது. ரசூல் மதவிலக்கம் செய்யப்பட்டு இன்றும் சட்டப்போராட்டத்தில் இருக்கிறார். ஆனால் அக்கட்டுரை அடிப்படையில் குடிக்கு எதிரான ஒன்று. செந்தீ.நடராஜன் பௌத்த சமண மதங்கள் குடிமறுப்புக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி விரிவான தகவல்களை அளிக்கிறார். தமிழகத்தில் நெடுங்காலம் குடிக்கு எதிரான அரணாக இருந்தவை அவை.

 ஐரோப்பியர் வரவுடன் குடி குறித்த கண்ணோட்டங்கள் எப்படி மாறின என்பதை விவாதிக்கும் முனைவர் ஆ.குழந்தைவேலுவின் கட்டுரையும் சட்டத்தின் பார்வையில் குடிப்பழக்கத்தை ஆராயும் எட்வர்ட் ஜேம்ஸ் சேகரனின் கட்டுரையும் பனைத்தொழிலில் குடியின் இடம் குறித்த மனோவின் கட்டுரையும் சித்தமருத்துவத்தில் குடிகுறித்த தகவல்களை அளிக்கும் த.இராஜேந்திரனின் கட்டுரையும் வேறு வேறு தளங்களில் இப்பிரச்சினையை ஆராய்கின்றன. கள்ளும் சாதியும் பிணைந்துள்ளதை காட்சன் சாமுவேலின் சிறிய கட்டுரை விவாதிக்கிறது.

 தமிழ்நாட்டில் குடியைக்குறித்த விரிவான விவாதத்தை முன்வைக்கும் முக்கியமான முதல் நூல் இது

 ————————————————————————————————

 

 குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்தொகுப்பாசிரியர்கள் அ.கா.பெருமாள், சின்னச்சாமி. தமிழினி வெளியீடு.

 

 

 சில்க்வர்த் பற்றி…

http://www.scn.org/d24/silkworth_bio.html

http://hindsfoot.org/silky.html

 http://alcoholism.about.com/

 http://www.hoboes.com/Politics/Prohibition/Notes/Alcoholism_History/

 

முந்தைய கட்டுரைஅனுபவங்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉடல்மனம்