மாநில உணர்வுகள்

அன்பின் ஜெ..

மிக மிக அவசரமாக ஓட வேண்டிய இரு வேலை – எனினும், இவ்வரிகளுக்கு எனது எண்ணங்களைத் தெரிவிக்க ஆசைப் படுகிறேன்.

இங்கே பேசப்படும் பிராந்திய தேசியங்கள் எல்லாமே மதம்,இனம், மொழி அடையாளம் மூலம் தேசியங்களைக் கட்டமைப்பவை. அவை தங்கள் மக்களில் பாதிப்பேரைப் பிறராகக் கட்டமைப்பவை. தமிழ்த் தேசியம் முந்நூறாண்டுகளாக இங்கே வாழும் தெலுங்கர்களையும் கன்னடர்களையும் அன்னியராக்குகிறது.கன்னடதேசியம் நூறாண்டுகளாக அங்கே வாழும் தமிழர்களையும் தெலுங்கர்களையும் அன்னியமாக்குகிறது

நிச்சயமாக, தமிழ்த் தேசியம், கன்னட தேசியம், மராட்டிய தேசியம் என்பது மறுக்கப் படவேண்டியதே.

ஆனால், கன்னடர், மராட்டியர், தமிழர் என்னும் அடையாளங்கள் இருப்பதில் என்ன பிழை? அதை அங்கீகரிக்கும் தேசியமே நமது தேவை. இன்றைய தேசியங்கள் அவ்வாறு உள்ளனவா? பிராந்திய உணர்வுகளை, அடையாளங்களை, ஒரு சம உரிமை பாவனையோடு அணுகும் தேசியங்கள் உள்ளனவா?

ஒரு சிறு அடையாளம் – ஒடிஸி என்னும் புத்தகக் கடையில் சென்று பாருங்கள் – ஆங்கிலம், இந்தி, மற்றும் பிராந்தியம் என்றே இசைத் தட்டுக்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. அதுவும் சென்னையில்.

தமிழ் தேசியம் பேசினாலே, இந்தியாவுக்கு எதிரி என்று குரல்கள் எழுகின்றன – நான் அவற்றைத் தமக்கும் ஒரு அடையாளம் வேண்டும் என்னும் நியாயமான எண்ணங்களின் அதீத வெளிப்பாடு என்று நினைக்கிறேன். என்னுடைய கணிப்பில், சீமானின் சினிமாத் துப்பாக்கிகள்தான் அவை. (நான் மத்திய இந்தியாவின் மாவோ இயக்கத்தை சொல்ல வில்லை – அவை வேறு)

இன்று பாரதிய ஜனதா மட்டுமல்ல, காங்கிரஸின், பொருளாதார மூர்க்கர்கள் (மாண்டேக் சிங் அலுவாலியாவும், மன்மோகன் சிங்கும்) – கொண்டு வரும் கொள்கைகளும், மையப் படுத்தப் பட்ட தேசியமே. அவர்களின் value added Tax – மிக மூர்க்கமான, ஆனால், நவீன முகம் கொண்ட ஒரு கொள்கையே.. முன்பு, எங்கிருந்து பொருள் விற்கப் படுகிறதோ, அந்த ஊரில் விற்பனை வரி. ஆனால், CST களையப் பட்டு, இப்போது, எங்கே பொருள் வாங்கப் படுகிறதோ – அங்கே செல்கிறது வரி. அதாவது, பீஹார் போன்ற உற்பத்தி மாநிலங்களில் இருந்து, மும்பை போன்ற நுகரும் தலங்களுக்கே வரி வருமானம் செல்லும். மிகத் துல்லியமாகத் திட்டமிடப் பட்டு நிறைவேற்றப் பட்டுள்ள, மைய நோக்கில் அமைக்கப் பட்ட ஒரு நுகரும் கலாச்சாரம்.

அதற்கடுத்தபடியாக, Goods and services tax என்று ஒன்று வரப் போகிறது – எல்லா வரிகளும், மாநில, மைய வரிகளும் ஒன்றாக்கப் பட்டு, வசூலிக்கப் பட்டு, பின் பகிர்ந்து கொள்ளப்படும் –இது வந்தால், பொருளாதாரம் 4 மடங்கு உயரும் என்று உலக, இந்திய பொருளாதாரக் கிறுக்கர்கள் கூறுகிறார்கள்.. எனில், மத்தியில் ஒரு சிறுபான்மை அரசு உட்கார்ந்து கொண்டு, மாநிலத்தில், நியாயமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மாநில அரசை, இந்த நிதி பலம் கொண்டு அசைக்க முடியும்.. கவர்னர் கொண்டு, மாநில அரசை கவிழ்க்கும் உத்தி போன்றதே இது.. this is against the basic federal structure envisaged by constitution

இந்தத் தனிநாடு, உரிமை போன்றவற்றை, அதன் அடிப்படை உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவற்றை அங்கீகரிக்கும் ஒரு தாராளமய மத்திய அரசே இன்றைய தேவை – தெலுங்கானா வேண்டும் என்றால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், கொடுக்க வேண்டியதுதானே.. மும்பையில் 24 மணி நேரமும் மின்சாரம், விதர்பாவில் 18 மணி நேரம் மின்வெட்டு, எனில், விதர்பா ஒரு தனிமாநிலம் கோருவதில் என்ன தவறு?? 60 களில் பிரிக்கப் பட்ட மொழிவாரி மாநிலங்களால், இந்தியா பிரிந்தா போய்விட்டது?

என் நண்பர் ஒருவர் சொன்னார் – தமிழகத்தில், மொழியால் திராவிட முன்னேற்றக் கழகம் அரசமைத்தது கண்டு, சிங்கப்பூரின் பிரதமர், அங்கு பேசப் படும் எல்லா மொழியையும் தேசிய மொழிகள் என்று அறிவித்தாராம்.. அது உண்மையோ பொய்யோ தெரியாது.. ஆனால், சரி என்று தோன்றுகிறது.. ஏன் துளுவையும், கொங்கணியையும் தேசிய மொழியாக ஒத்துக் கொண்டு, அந்தக் கலாச்சாராத்தை பேண முயலக் கூடாது? We need a paternalistic, liberal central government. Not one which says majority brute would rule.

காந்தி நேருவைத் தேர்ந்தெடுத்தது என்பது மீண்டும் மீண்டும் எனக்கு ஒரு தெய்வச் செயல் – அல்லது ஒரு கர்ம யோகியின் உள்ளுணர்வு அல்லது பாரதத்தின் நல்லூழ் என்றே படுகிறது..

பாலா

அன்புள்ள பாலா,

நான் இந்தவிஷயத்தில் எப்போதுமே ஒரு நெகிழ்வான, நடைமுறை சார்ந்த நிலைபாட்டையே விரும்புகிறேன். இதுதான் முற்போக்கு என்பதற்காக ஒரு நிலைபாடு எடுக்க விரும்பவில்லை. அதே சமயம் இதுதான் சரி என ஒரு உறுதியான கடைசி நிலைபாட்டையும் எடுக்கவிரும்பவில்லை.

இந்தியாவின் மாநிலங்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணிக்கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம். பன்மைத்தன்மையில் இருக்கும் படைப்பூக்கமும் சுதந்திரமும் வேறு எதிலும் இல்லை. பொருளியல் ரீதியான தன்னாட்சியும் பண்பாட்டுத் தனித்துவமும் கொண்டவையாக அவை இருக்கையிலேயே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகிறது. ஆகவே எந்தவகையான மையப்படுத்தும் போக்குக்கும் நான் எதிரானவனே.

இந்தியாவில் இன்னும் பற்பல மடங்கு அதிகாரப்பரவல் சாத்தியமாகவேண்டும். இன்னும் சின்ன மாநிலங்கள் வரலாம். யார் கோரினாலும் அதையெல்லாம் பரிசீலிக்கலாம். அதிகாரப்பரவலாக்கம் எந்நிலையிலும் எதிர்மறை விளைவை அளிக்காதென்றே நம்புகிறேன்

அதேசமயம் இந்தப் பன்மையாக்கம் மாநிலங்களின் மையத்திலும் தேவை. ஒரு மாநிலத்தின் மொத்த அதிகாரமும் ஒரு புள்ளியில் குவிவதையும் அதிகார மையப்படுத்தலாகவே எண்ணவேண்டும். நான் எச்சரிக்கை கொள்வது அதைச்சார்ந்தே.

மொழி,இன அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய உருவகங்கள் இந்திய மைய அரசை எதிர்ப்பவையாக இருக்கலாம். ஆனால் மாநில அளவில் அவை அதிகாரக்குவிப்பு நோக்கம் கொண்டவையாகவே உள்ளன. வட்டார அளவில் மையப்போக்கு ஒன்றை உறுதியாக நிலைநாட்டி சிறுபான்மையை வெளியே தள்ளும் இயல்பு கொண்டவை அவை. எந்த வகையிலும் சிறுபான்மையைக் கட்டமைக்கும் எந்த மையப்படுத்தல்போக்கும் தவறானதே.

நான் ஒரு உதாரண இந்தியாவாக நினைப்பது கிராம அளவில், வட்டார அளவில் நிர்வாகத்தில் சுதந்திரமும் பண்பாட்டுத் தனித்தன்மையும் கொண்ட இந்திய அமைப்பைத்தான். எவருமே சிறுபான்மையினராக உணராமலிருககக்கூடும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- அவதூறுகள்
அடுத்த கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி-கடிதம்