விதிமுள்

 

 அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிறது. கன்னத்தில் ஒரு பெரிய கட்டி. அதைப்பார்க்க வந்த உள்ளூர் மருத்துவரிடம் அழகான சின்ன மகளை காட்டி பிள்ளைக்கும் கன்னத்தில் கால் ரூபாய் அளவுக்கு தழும்பு இருக்கிறது. என்ன பிரச்சினை என்று பாருங்கள்என்று சொல்கிறாள் அம்மா. மருத்துவர் பார்த்துவிட்டு அது தொழுநோய் என்று சொல்கிறார். ஆரம்பநிலைதான். ஆனால் குணப்படுத்திவிடலாம்என்று சொல்கிறார். அம்மா அழுகிறாள். பொம்பிளைப்பிள்ளைக்கு இபப்டி வந்துட்டுதேஎன்கிறாள். ஆனால் சிகிழ்ச்சை அவ்வளவுதான்

 

அப்பாவுக்கே சிகிழ்ச்சை மந்திரவாதம், நாட்டுவைத்தியம் என்ற அளவில்தான் நடக்கிறது. பசுவெண்னையும் வேப்பிலைக்கொழுந்தும்தான் மருந்து. தானாகவே நோய் குணமாகிறது. கொஞ்சநாள் கழிந்து அம்மா பெண்ணை மீண்டும் மருத்துவ முகாமுக்குக் கூட்டிச்செல்கிறாள். ஊசியால் குத்திப்பார்த்து வலிக்கிறதா என்று டாக்டர் கேட்கிறார். குத்தினதே தெரியல்லைஎன்று பெண் சொல்கிறாள். நாலுகிலோமீட்டர் அப்பால் உள்ள மருத்துவ மனைக்கு  வாரம் தோறும் மருந்து வாங்க டாக்டர் சொல்கிறார். கொஞ்சநாள் மருந்து வாங்குகிறார்கள். அதுவும் அவ்வளவுதான்

 

 

பின்னர் கொஞ்சவருடங்கள் கழித்து காலில் ஒரு முள்குத்துகிறது. அந்தப்புண் ஆறாமல் சீழ்கட்டி குழிப்புண்ணாகிறது. நடமாட்டமே இல்லாமல் ஆகிய பிறகுதான் மீண்டும் மருத்துவ சிகிழ்ச்சைக்குச் செல்கிறார்கள். அது முற்றிய தொழுநோய் என்று தெரிகிறது. அரும்பனூர் என்னும் ஊரில் புதுப்பட்டி என்னும் இடத்தில் கிறித்தவதேவாலயத்தால் நடத்தப்படும் தொழுநோய் மருத்துவமனை இருக்கிறது. அங்கே கொண்டுசென்று காட்டுகிறார்கள். அங்கேயே தங்கி ஐந்து வருடம் சிகிழ்ச்சை செய்ய வேண்டும் என்று சொல்லபடுகிறது.

 

அங்கே திசைமாறுகிறது முத்துமீனாளின் வாழ்க்கை. சாதாரணமாக மற்ற பெண்கள் செல்லாத பாதைகள் வழியாக வலிகள், அவமானங்கள், தனிமை வழியாக ஒரு தீவிரமான பயணம். இருபது வருடங்களுக்குப் பின் இன்று அந்த வாழ்க்கையை முள்என்ற பேரில் சிறிய தன் வரலாற்று நூலாக எழுதியிருக்கிறார் முத்துமீனாள். பெண்களின் தன்வரலாறுகள் தமிழில் மிகமிகக் குறைவே. அவற்றிலும் துணிச்சலும் நேர்மையுமாக எழுதப்பட்டவை அதனினும் அரிது. அவற்றில் ஒன்று இந்நூல்.

 

முத்துமீனாளின் ஆளுமை இந்நூலில் மிக அற்புதமாக தெளிந்து வந்துள்ளது. தனித்துவம். துணிச்சல், மனம்தளராமை, கல்விமீதான ஊக்கம் என அடிப்படை இயல்புகள் கொண்டது அது. தன்னை பெண் ஆம்பிளைஎன்று அவரே சொல்லிக்கொள்கிறார். எந்த தருணத்திலும் அவர் பிறர் முன் தணிந்து போகிறவராகவோ தாழ்மை கொள்பவராகவோ இல்லை. ஒருபோதும் அவர் தன்னைத்தாக்கிய நோயின் முன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

 

அந்தப்போராட்டத்தை எளிமையான குறிப்புகள்போல சொல்லிச்செல்கிறார் முத்துமீனாள். தன் தொழுநோய் மருத்துவமனை வாழ்க்கையின் சித்திரங்களை எளிமையாக அளிக்கிறார். காலில் மாவுக்கட்டுபோட்டு ஆஸ்பத்திரியில் தன்னந்தனியாக விடப்படும் சிறுமி அங்கே மிக விரைவிலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார். அங்கே இருக்கும் வள்ளியக்கா என்னும் ஆயாவிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு செல்கிறார் அப்பா

 

இரவு உறங்கிவிட்டு காலை ஆறுமணிக்கு எழுந்து குளித்துவிட்டு வந்தேன். தலைபின்னிக்கொண்டிருந்த வள்ளியக்காவிடம் நானும் பின்னிக்கொண்டேன்என்று சாதாரணமாக அந்தசூழலில் முத்துமீனாள் இணைந்துகொள்வது சொல்லப்படுகிறது. ஒருமாதகாலம் கட்டுடன் கிடக்கிறார். பின் காலை ஊன்ற முடியவில்லை. கால் கூசுகிறது. நரம்பு பாதிக்கப்பட்டுவிட்டது, அறுவை சிகிழ்ச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

 

அங்கே ரோமன் கத்தோலிக்க சபை, தென்னிந்திய திருச்சபை  இருபிரிவைச்சேர்ந்த கிறித்தவர்களும் வருவார்கள். தென்னிந்திய திருச்சபைப்பிரிவினர் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ரோமன் கத்தோலிக்கர் அப்படிச்செய்வதில்லை. ஆகவே நான் அங்கே சென்றேன் என்று முத்துமீனாள் சொல்கிறார். அங்கே இருந்த எல்லா நோயாளிகளும் மதம் மாறினார்கள். உதவிக்காகவும் எதிர்காலத்துக்காகவும். முத்துமீனாள் மாறவில்லை.

 

அப்போது இத்தாலிநாட்டைச் சேர்ந்த கன்யாஸ்த்ரீ ஒருவர் மதுரையில் இருந்து அங்கே வருகிறார். பல குழந்தைகளை தன் செலவில் படிக்கவைக்கிறார். தொழுநோய்சேவைக்காக தன்னை அர்ப்பணம்செய்தவர். அவரை முத்துமீனாள் அம்மா என்று அழைக்கிறார். அபப்டி அழைப்பது அம்மாவுக்கும் மிகவும் பிடிக்கும். தனக்கு படிக்க ஆசை என்று சொல்லி அம்மாவின் காலில் முத்துமீனாள் விழுகிறார். அபப்டி விழக்கூடாது என்று கண்டிக்கும் அம்மா அவளை படிக்கவைக்க ஏற்பாடு செய்கிறாள்.

 

கும்பகோணத்தில் தொழுநோயாளிகளுக்கான பள்ளி ஒன்றில் சேர்ந்து முத்துமீனாள் படிப்பதற்கு அம்மா ஏற்பாடு செய்கிறாள். முன்பு படித்த பள்ளியிலிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அந்தப்பள்ளிக்குச் சென்று சேர்கிறார் முத்துமீனாள். அந்தப்பள்ளிக்கூடம் தொழுநோய் கண்ட குழந்தைகளுக்காகவும் தொழுநோயாளிகளின் பிள்ளைகளுக்காகவும் கிறித்தவ தேவாலயம் நடத்தும் உண்டு-உறைவிடப்பள்ளி. அங்குள்ள ஆசிரம வாழ்க்கையில் முத்துமீனாள் இணைகிறார்

 

கிராமத்துப்பள்ளியிலுருந்து சென்ற அங்கே சிலமாதங்கள் சரியாக படிக்கமுடியாமல் திண்டாடுகிறார். நான் ஏசுவிடம் நல்ல ஞாபகசக்திக்காவும் மதிப்பெண்களுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்என்று சொல்லும் முத்துமீனாள் கடுமையாக படித்து முதலிடத்துக்கு வந்துவிடுகிறார். படிப்பு அவருக்கு தன்னை நிலைநாட்டும் ஒரு வெளி.

 

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது முத்துமீனாளுக்குக் காலில் அறுவை சிகிச்சைசெய்யப்படுகிறது. அதன்பின் காலில் மெழுகை ஊற்றி மாவுக்கட்டு போட்டு அதன் வளைவை நிமிர்த்துகிறார்கள். பின்பு கடுமையான பிஸியோதெரபி செய்கிறார்கள். அந்தக்காலகட்டம் முழுக்க கடுமையான வலியின் வழியாக கடந்துசெல்கிறார் முத்துமீனாள். ஆனால் அப்போதும் படிப்பை விடவில்லை. தன்னம்பிக்கை இழக்கவுமில்லை.

 

ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒருவெளிநாட்டுத்தம்பதி வந்து குழந்தைகளைப் பாக்கிறார்கள். முத்துமீனாளை தத்து எடுத்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார்கள். அவளை வெளிநாட்டுக்குக் கூட்டிச்செல்ல விரும்புகிறார்கள். பள்ளி நிர்வாகிகள் உனக்கு விருப்பமா, போகிறாயா என்று கேட்கிறார்கள். அழுதுகொண்டே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார் முத்துமீனாள். அவர்கள் முத்துமீனாளின் படிப்புச்செலவை ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.

 

எட்டாம் வகுப்பு படிக்கும்போது சோதனைசெய்து நோய் முற்றிலும் குணமாகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனாலும் அங்கே கிடைக்கும் உதவிகள் காரணமாக தொடர்ந்து அங்கேதான் முத்துமீனாள் படிக்கிறார். முத்துமீனாளைப் பார்க்கும் அனைவரும் நீ ஏன் இன்னும் மதம் மாறவில்லை?” என்று கேட்கிறார்கள். மதர் ஒருமுறை மதம் மாறுகிறாயா என்று கேட்கிறார். முடியாது என்று முத்துமீனாள் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார். அதன்பின் மதர் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் மதரின் அன்பு கொஞ்சம் கூட குறைவுபடவில்லை.

 

இளம்பருவத்தை நோக்கிய நகர்வை பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக சித்தரிக்கிறார் முத்துமீனாள். சகமாணவிகளின் ஒருபாலுறவு காதல்கதைகள் தெரிய ஆரம்பிப்பது. விபச்சாரம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது. ஒரு சிறிய பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவது. ஆனால் எந்த தருணத்திலும் அதை திடமாகவே எதிர்கொள்கிறார்.

 

இந்தப்பருவத்தில்தான் பெண் வாழ்க்கை எத்தனை துயரம் மிக்கது என்று அவர் உணர நேர்கிறது. காதலை பெற்ற தாயே முறித்தமையால் தற்கொலைசெய்துகொள்ளும் பெண். தொழுநோய் கண்டமையால் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பெண்.கணவனால் கொடுமைக்காளாகும் பெண் கள்ளக்காதலுடன் சென்று அவனிடம் நரகவேதனைப்படும் பெண் என்று சித்திரங்கள் வருகின்றன. அவை முத்துமீனாள் உலகை புரிந்துகொள்ளும் பாடங்கள்.

 

முத்துமீனாளுக்கு சோதிடம் பார்க்கும் ஒருவர் இவள் ஆணுக்குச் சமானமானவள். நல்ல மாப்பிள்ளை அமையும்என்று ஆரூடம் சொல்கிறார். முத்துமீனாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. சிலர் அவருக்கு தொழுநோய் இருந்த தகவல் தெரிந்ததும் பேசாமல் விட்டு ச்சென்று விடுகிறார்கள். ஆனால் அது அவரை பாதிக்கவில்லை. அதிக வரதட்சிணை கேட்ட ஒருவனை பிடிக்கவில்லை என்று சொல்ல அவர் தயங்கவும் இல்லை

 

அப்போது அவரை ஒருவர் பெண்பார்க்க வருகிறார். அவர் எழுத்தாளர் என்கிறார்கள். பெண்பார்க்க வந்த போது முத்துமீனாள் வந்து வணக்கம் சொன்னதும் அவர் எழுந்து நின்று வணக்கம் சொன்னது அவருக்குப் பிடித்திருக்கிறது. அவரை மணக்க முத்துமீனாள் சம்மதிக்கிறார். மதுரையைச் சேர்ந்த அய்யனார்  அவரது ஆதர்ச எழுத்தாளர் சுந்தர ராமசாமி தலைமையில் முத்துமீனாளை மணம் புரிந்துகொள்கிறார். சுந்தர ராமசாமி முத்துமீனாளைப் பாராட்டிப் பேசினார். சுந்தர ராமசாமியின் ஒரு நூல் அய்யனாருக்கும் முத்துமீனாளுக்கும்தான் மர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

 

முத்துமீனாளின் முள்இங்கே முடிகிறது. அவரது காலை முள் வடிவில் வந்து குத்திய விதியை அவர் வென்று சென்றதன் கதை.

 

 

***

 

 

 

 

நான் தருமபுரியில் வேலைபார்த்தபோது மொரப்பூர் செல்வம் என்ற நணபர் இருந்தார். அவர் தொழுநோய் ஆய்வாளராக பணியாற்றினார். 1995ல் தமிழக அரசு நிதிச்சுமை குறைப்பு என்ற பேரில் தொழுநோயாளிகளைக் கண்டறியும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முழுநேர சுகாதாரப்பணியாளர்களை ரத்துசெய்தது. தொழுநோய் தமிழகத்தில் இல்லாமலாகிவிட்டது என்பதே அப்போது சொல்லப்பட்ட பதில்.  நூலகம், சுகாதாரம், ஆரம்பக்கல்வி ஆகியவற்றில் நிதியை குறைப்பதும் அர்த்தமற்ற உயர்கல்வித்துறையில் நிதியை கூட்டுவதும் நம் சோஷலிச அரசு இப்போது எடுத்துவரும் மக்கள்நல நடவடிக்கை

 

செல்வம் தன் பணியின் தேவையைப்பற்றி அப்போது சொன்னார். இன்றுவரைக்கும்கூட பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வுகளில்  குழந்தைகளிடம் தொழுநோய் கண்டுபிடிக்கபப்ட்டுக்கோண்டே இருக்கிறது. இப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிச் சிறுவர்கள், சிறுமியருக்கு ஒரு அறிவிப்பையும் தொடக்க மருந்துகளையும் கொடுத்து அவர்கள் சிகிழ்ச்சை செய்யப்பட்டார்கள் என்று எழுதி கைகழுவிவிடுகிறது நம் அரசு. தொழுநோயின் அறிகுறிகளை சுவரில் எழுதிப்போடுவதுடன் தன் கடமை முடிந்துவிடுகிறது என எண்ணிக்கொள்கிறது.

 

ஆனால் தொழுநோயாளிகள் உருவாகும் அடித்தளமக்களைப் பொறுத்தவரை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகமிகக் குறைவு. அவர்களிடம் நோய் கண்டடையப்பட்டால்கூட அது நேரடியான உபாதைகளை அளிக்காதவரை அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். காரணம் அம்மக்களில் பெரும்பகுதியினர் ஒவ்வொருநாளும் உழைத்தால்தான் வாழமுடியும் என்ற நிலை

 

தொழுநோய், காசநோய் போன்றவற்றுக்கான மருந்துகள் நெடுநாட்கள் சீராக உண்ணப்பட வேண்டும். அவற்றை அவ்வாறு கவனமாக உண்ணவும் எளிய மக்களால் முடியாது. பாதிநாள் சாப்பிட்டுவிட்டு மருந்தை கைவிட்டுவிடுவார்கள். ஆகவேதான் நோய்முறிமருந்துக்கு எதிர்ப்பை உருவாக்கிக்கொண்டு காசநோய் புது எழுச்சி பெற்றது. தொழுநோய் இப்போதும் அப்படியே தொடர்கிறது

 

ஏழைமக்களை நேரில் சென்று கண்டு கற்பித்து கண்காணித்து நோயை ஒழிக்கவேண்டியது அவசியம். அத்துடன் தொழுநோயும் காசநோயும் பரவக்கூடியவை என்பதனால் அம்மக்களை தனி முகாம்களுக்குக் கொண்டுசென்று தங்கச்செய்து சிகிழ்ச்சை அளிப்பதும் அவசியம். அந்நிலையில் அவர்களுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். இவையெல்லாமே நம் அரசுகளால் இப்போது நிறுத்தல்செய்யப்பட்டுவிட்டன.  நோயாளிகள் இப்போது கிறித்தவசேவை நிறுவனங்களின் கருணைக்கு விடப்பட்டிருக்கிறார்கள்.

 

அந்தச் சித்திரத்தை நாம் இந்த சுயசரிதையிலும் காண்கிறோம். கிறித்தவ அமைப்பில் உள்ள உண்மையான சேவையின் மகத்தான காட்சியை நாம் இந்த நூலில் வாசிக்கலாம்.. தான் காணநேர்ந்த அமைப்பு சார்ந்த சீர்கேடுகளைச் சொல்வதில் முத்துமீனாள் எந்ததயக்கமும் காட்டவில்லை. ஆனால் கிறித்தவம் சார்ந்த சேவையுணர்வால் உந்தப்பட்டு ஏழ்மை, நோய் ஆகியவற்றுடன் போராட தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அற்புதமான மனிதர்களைச் சற்றும் மிகை இல்லாமல் முத்துமீனாள் சொல்கிறார்.

 

அந்த இத்தாலிய அம்மா. அபூர்வமான ஒரு குணச்சித்திரம். எழுத்தாளர் அல்லாததனால் அவரை விவரித்துக் கண்ணில் நிறுத்த முத்துமீனா ளால் முடியவில்லை. ஆனாலும் அவர் மறக்கமுடியாத பெண்மணி. அன்பினால் மட்டுமே இறைவனை அறிபவர். முத்துமீனாள் மதம்மாறவேண்டும் என அவர் விரும்புவது அவரது மதநம்பிக்கை. ஆனால் அவர் மறுத்துவிட்டபோது அம்மா அவரை கட்டாயப் படுத்தவில்லை. தன் அன்புக்கு அதை நிபந்தனையாக ஆக்கவுமில்லை

 

முத்துமீனாளின் ஆளுமையும் அவர் சொல்லிக்கொள்ளாமலேயே திடமாக உயர்ந்து நிற்கிறது இந்நூலில் தனக்காக ஒரு வாழ்க்கையையே உருவாக்கிக் கொடுத்தவர்களானாலும் அவர்களுக்காக தன் மதநம்பிக்கையை விட்டுவிட அவர் தயாராகவில்லை. அது நேர்மையானதல்ல என அவர் நினைக்கிறார். அன்பான இருவர் ஒரு பொன்னுலக்கு அழைத்தபோது நாட்டை விட்டுவிடவும் அவர் தயாராகவில்லை.

 

முத்துமீனாள் இன்று ஓர் இல்லத்தரசி. அன்னை. ஒரு மகன், பெயர் ஆனந்தபுத்தன். என் நண்பர் பௌத்த அய்யனாரின் துணைவி. அய்யனார் சில வருடங்கள் முன்பு பௌத்ததைத் தழுவினார். ஆனால் இந்நூலின் குறிப்பில் முத்துமீனாள் தேவகோட்டையின் புகழ்வாய்ந்த சைவ அறிஞர் மறைந்த தத்புருஷ தேசிகர் மகன் உமாபதி தேசிகர் மூலம் 1998ல் சைவ தீட்சை பெற்றார் என்கிறது. ஆம், கணவனுக்காகக்கூட முத்துமீனாள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை

 

அந்த தன்ன்னம்பிக்கைதான் இத்தனை துயரம் மிக்க வாழ்க்கையில் வழியாக கைவிளக்காக ஒளிகாட்டி அவரை இட்டுவந்திருக்கிறது

 

 

 

முள். முத்துமீனாள். ஆழிபதிப்பகம். www.aazhipublishers.com

முந்தைய கட்டுரைமார்கழியில் தேவதேவன்
அடுத்த கட்டுரைகடிதங்கள்