நானக் சிங்கின் வெண் குருதி

இந்திய மொழிகளில் நவீன இலக்கியம் உருவானபோது அது சமுதாய, மதச் சீர்திருத்த்தத்தின் பொருட்டுத்தான் தொடங்கியது என்று சொல்லலாம். ஏற்கனவே வால்டர் ஸ்காட் நாவல்களை அடியொற்றி இங்கே சரித்திரத்திகில்கதைகள் உருவாகி வெற்றிபெற்றிருந்தபோதும்கூட வாசிப்பு என்பது ஒரு அறிவார்ந்த செயல்பாடு அதற்கு சமூகப்பொறுப்பு உண்டு என்ற எண்ணமெல்லாம் மேற்குறிப்பிட்ட சமூகசீர்திருத்த நூல்கள் மூலமே நிறுவப்பட்டது. அவற்றிலிருந்தே நம் யதார்த்தவாத எழுத்துக்கள் உருவாகிவந்தன – மிகச்சில வருடங்களுக்குள்ளேயே.

தமிழில் அ.மாதவையா, ராஜம் அய்யர் , கேரளத்தில் ஒ.சந்துமேனன் போன்ற சீர்திருத்த எழுத்தாளர்கள் அடிபப்டையில் கலைஞர்கள். இவர்கலின் நாவல்களை இன்றும் நாம் நாவலுக்காகவே படிக்க முடியும். பிற மொழிகளில் அப்படி நிகழவில்லை.சமூகச்செயல்பாட்டாளர்கள் புரட்சியாளர்கள் தொடக்ககால நாவல்களை எழுதினர். அவற்றில் ஓங்கிய உணர்ச்சிவசப்பட்ட குரல் மட்டுமே இருந்தது. பஞ்சாபி மொழியில் 1931ல் உருவான வெண்குருதி அத்தகைய ஒரு நாவல். இன்று இத்தகைய நாவல்களின் இயல்பை தெரிந்துகொள்ளும்பொருட்டு இதைவாசிக்கலாம்.

தொடக்க கால இந்திய நாவல்களை பெரிதும் பாதித்த படைப்பு விக்தர் யூகோவின் ‘லெ மிசரபில்ஸ்’ சுத்தானந்த பாரதியாரின் மொழிபெயர்ப்பில் இதன் சுருக்கமான வடிவம் தமிழில் வந்துள்ளது [ஏழைபடும் பாடு] ‘எங்கெல்லாம் அநீதியும் துயரமும் மானுடரைப் பீடிக்கிறதோ அங்கெல்லாம் என் நாவல் சென்று மனசாட்சியின் கதவைத் தட்டவேண்டும்’ என்று யூகோ ஆசைப்பட்டார். ஒருவகையில் அது நிறைவேறியது என்றே சொல்லவேண்டும். வெண்குருதி யூகோவின் நேரடியான பாதிப்பு உள்ள நாவல்.

சார்ல்ஸ் டிக்கன்சின் ஆலிவர் டிவிஸ்ட் போன்ற நாவல்களின் பாதிப்பும் இக்கால நாவல்களில் உண்டு. ஆனால் டிக்கன்ஸ் காட்டும் நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் இந்தியாவில் இல்லை என்பதனால் நேரடியான காட்சிப்பாதிப்பை காணமுடிவதில்லை. உக்கிரமான துன்பியல் நாடகங்களை உருவாக்குதல் என்ற அளவில் இப்பாதிப்பு காணக்கிடைக்கிறது. ஜார்ஜ் எலியட்டின் ‘சிலாஸ் மார்னர்’ நாவலின் பாதிப்பும் இதில் உள்ளது எனலாம்.

சொல்லொணா துயரங்கள் வழியாகச் கடந்துசெல்லும் வாழ்க்கைச்சித்திரம், வறுமைக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளான குழந்தைகள், பாலியல் சுரண்டலுக்கு ஆளாகி அனாதைகளான பெண்கள், இவற்றை ஊடுருவி எழும் இலட்சியவாதத்தின் வீரியம் ஆகியவற்றின் கலவையே யூகோ. வெண்குருதியும் இந்த மூலப்பொருட்களினாலானதுதான். வெண்குருதியின் சாயல் கொண்ட இன்னொரு புகழ்பெற்ற ஆக்கம் பி.கேசவதேவ் எழுதிய ‘ ஓடையிலிருந்து!’ [ஓடையில்நிந்நு]

வெண்குருதி பச்சன் சிங் என்ற இலட்சியவாதியை கதாநாயகனாகக் கொண்டது. சீரழிந்து சோம்பிக்கிடக்கும் மதம், அநீதியே உருவான சமூக அமைப்பு, மூடநம்பிக்கைகள், தேசிய அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக சலிக்காமல் போராடும் இத்தகைய கதாநாயகனை நாம் சீர்திருத்த நாவல்களிலும் முற்போக்கு நாவல்களிலும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். பச்சான் சிங் காதலிக்கும் சுந்தரி ரோடூ என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாடோடியால் எடுத்து வளர்க்கப்பட்ட பெண். குழந்தையாக அவள் இருக்கும்போதே அவளுடைய அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்டாள். நாடோடி ரோடுவாலும் அவர் குரங்காலும் வளர்க்கப்பட்டாள்.

பச்சன் சிங் ·பாங் அருந்துமிடமாகச் சீரழிந்துகிடக்கும் குருத்வாராவை சீர்திருத்துகிறான். அதனால் குருத்துவாராவின் அப்போதைய பூசாரியான பெரியவரிடமும் அவருக்கு உதவிசெய்யும் ரௌடியும் திருடனுமான பால சிங்கிடமும் அவன் மோத நேர்கிறது. அவர்கள் சிறைசெல்கிறார்கள். தொடர்ந்து பாலா சிங் அச்சன் சிங்க்குக்கு தீரா விரோதியாகிறான்

பச்சன் சிங்கின் தூண்டுதலால் கியானி குருத்துவாராவில் நடத்தும் கல்வி நிலையத்தில் சுந்தரி கல்விகற்கிறாள். அதற்கு ஊரில் பலத்த எதிர்ப்பு உருவாகிறது. ஊரரால் தாக்கப்பட்ட சுந்தரி காயம் அடைந்து பச்சன் சிங்கால் காப்பாற்றப்படுகிறாள். விடுதியில் தங்கும் அவள் அங்கே கல்வி கற்று ‘அனல் கக்கும்’ எழுத்தாளராகவும் கவிஞராகவும் மாறுகிறாள். அவளை மணம்செய்ய பாலா சிங் முயன்று பலவிதமான சதிகளில் ஈடுபடுகிறான்.

சுந்தரியின் அன்னை குர்தேயியின் சோகக்கதையுடன்தான் நாவல் தொடங்குகிறது. அவள் ஒரு இந்து விதவை. குடும்பத்தினரால் உதறப்படுகிறாள். அடைக்கலம் தேடி அலைகையில் பண்டித ராதாகிருஷ்ணன் என்ற வைதீகர் அவளை தாரா சந்த் என்பவனுக்கு விற்றுவிடுகிறார். அவன் அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு ஓடிவிட அனாதையாகும் குர்தேயி தெருவில் குழந்தையைவிட்டுவிட்டு தற்கொலைசெய்யச் செல்கிறாள். அக்குழந்தைதான் சுந்தரி

தன் அன்னையை சுந்தரி பேகம் ஜான் என்ற முஸ்லீம் நாட்டியக்காரியாகக் காண்கிராள். அன்னையும் மகலும் ஒன்றுசேர்கிறார்கள். மனக்கொதிப்படையும் பேகம் ஜான் அன்றிரவே பண்டித ராதாகிருஷ்ணனை கொன்றுவிடுகிறாள். கொலைப்பழி பச்சன் சிங் மேல் விழுகிரது. அவன் தூக்கிலிடப்படுகிறான். மனம் உடைந்த சுந்தரி கஞ்சாபோதையில் தூங்கும் பாலா சிங் மற்றும் கும்பலை தீவைத்துக் கொல்கிறாள். தன் தந்தை தாராசிங்கை சந்திக்க ஆணாக மாறுவேடத்தில் சுந்தரி வருகிறாள். ஷாம்தாஸ் வேறு பெயரில் தாரா சந்துக்கு அவள் எழுதிய வெண்குருதி என்ற நாவலை வாசித்துக் காட்டுகிறாள். தாராசிங் தன்னை வெளிப்படுத்தும்போது தந்தையைக்கொல்ல சுந்தஹ்ரியால் முடியவில்லை. அவள் திரும்பிச் செல்கிறால். நாவல் அவரிடமே தங்கிவிடுகிறது

இதுதான் கதை. இந்த முந்நூறு பக்கங்களில் கதாபாத்திரங்களுக்கு நுட்பமான தனித்தன்மைகள் ஏதும் அளிக்கப்படவில்லை. நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மை ஒருபொருட்டாகவே கருதபப்டவில்லை. உணர்ச்சிகள் ஹரிகதை பாணியில் அள்ளிக் கொட்டப்படுகின்றன. இதை ஒர் இலக்கிய ஆக்கமென்று சொல்ல முடியாது. ஆனால் ஆர்வமூட்டும் பல அக்காலகட்டப்பதிவுகள் இந்நாவலில் உள்ளன. உதாரணமாக, சமூக அமைப்பில் மதத்தின் எத்ரிமறையான பங்களிப்பு பற்றிய எண்ணமே ஆசிரியரிடம் இல்லை. மதத்தை சீர்திருத்தி மீண்டும் தூய நிலைக்குக் கொண்டுசென்றால் சமூகம் சீர்திருந்திவிடுமென எண்ணுகிறார். பிறகு வந்த முற்போக்குவாதிகலின் கோட்பாடு என்னவென நாம் அறிவோம்.

இந்நாவலில் வரும் நீதிமன்றக்காட்சிகள் குறிப்பாக கவனிக்கப்படவேண்டியவை. ‘பெரியவர்’ நீதிமன்ரத்தில் பொய் சாட்சி சொல்லப்போய் உளறும் இடம் அப்படியே பத்மாவதி சரித்திரத்தில் வருகிறது. இந்திய மொழிகளில் ஆரம்பநாவல்களிலெல்லாம் நீதிமன்றக்காட்சிகள் முக்கியமான பங்களிப்பாற்றுகின்றன. ஆரம்பகட்ட எழுத்தாளர்களெல்லாருமே வக்கீல்கள் என்பது ஒரு காரணம்.அதைவிடவும் முக்கியமான சமூகக் காரணம் ஒன்றும் இருந்திருக்கக் கூடும். எண்ணூறுகளின் மத்தியில் நீதிமன்றங்களை பிரிட்டிஷ் அரசு அமைத்தபோது இந்தியா அதை வரவேற்ற விதம் பிரமிப்பூடுவதாக அமைந்தது என்பார்கள். கல்கத்தா நீதிமன்றத்தில் சில வருடங்களிலேயே பல்லாயிரம் வழக்குகள் வந்து குவிந்தன. சட்டபூர்வமான பொது நீதி என்பது இந்தியாவில் முன்பு இருக்கவில்லை. அது அன்றைய சீரழிந்த இந்தியாவில் ஒரு பெரும் வரமாகவே கருதப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் ஒரு நூற்றாண்டைத் தாண்டுவதற்குள்ளேயே நம் சமூகத்தின் எல்லா முரண்பாடுகளும் போலித்தனங்களும் நீதிமன்றத்தில் நாடகீயமாக வெளிப்பாடுகொள்ள ஆரம்பித்தன. நீதிமன்றம் நம் நாட்டு அன்றாடப்பேச்சுகளில் பலவிதமாக விவாதிக்கப்பட்டது. ஆகவே நீதிமன்றக் காட்சி நாடகம் நாவல் அனைத்திலும் இன்றியமையததாகிவது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களின் எல்லா இலக்கிய உத்திகளையும் ஒரே நாவலுக்குள் கையாண்டிருக்கிறார் நானக் சிங். கடிதம். நாடகீய உரையாடல்கள். நாடகீய தன்னுரை. உச்சகட்டக் காட்சிகள். அங்கதம். பொதுவாம நம் ஆரம்பகட்ட நாலல்கள் எல்லாமே ஒருவகையான கதம்ப வடிவைக் கொண்டிருக்கின்றன. மாயூரம் வேதநாயக்ம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஒரு சரியான கதைக் கலவை. காரணம் அக்கால நாவலாசிரியர்கள் தொடவேண்டிய பிரச்சினைகள் ஏராளம் என்பதே. இதற்கேற்ற வடிவமாக ‘கதையைப்பற்றிய கதை’ என்ற முறையை நானக் சிங் கையாண்டிருக்கிறார். வெண்குருதி குப்தேச்வர் என்ற சுந்தரி எழுதிய நாவல்தான்

உலக இலக்கியத்தில் எழுத்தாளனைப்பற்றிய எழுத்துக்கள் அதிகம். அதற்கான காரணம் என்ன? எழுத்தாளர்கள் தங்களைப்பற்றி அதிகமாக எண்ணிக் கொண்டிருப்பதும் தங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதுமா? அவர்களுக்கு நன்கு தெரிந்த மனிதர்கள் எழுத்தாளர்கல் என்பதுதானா? அது ஒருவகை அகங்கார வெளிப்பாடா?

அப்படிப் பார்த்தால் எழுத்தாளனின் எழுத்துவாழ்க்கை பற்றிய நாவல்கள் குறைவே என்று காணலாம். எழுத்தாளனின் அக வாழ்க்கை பற்றிய நாவல்களே அதிகமாகக் கிடைகின்றன. எழுத்தாளன் ஒரு கலைஞன் என்பதனால் அவனுடைய அகம் உணர்ச்சிக் கொந்தளிப்பும் நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்ததாக இருக்கும் என்று கருதி இந்த முக்கியத்துவம் அவனுக்கு அளிக்கப்படுகிறது போலும். பொதுவாகவே இலக்கியத்தில், அதிலும் கற்பனாவாத இலக்கியத்தில், கலைஞர்களே அதிகமாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ‘ஓவியனோ பாடகனோ ஆக இல்லாவிட்டால் எப்படிக் காதலிப்பது?’ என்று மோலியேரின் ஒரு கதாபாத்திரம் துணுக்குறுகிறது.

ஆனால் அதைவிடமுக்கியமான ஒரு காரணம் உண்டு. எழுத்தாலன் கதைசொல்லி என்பதே அது. தனக்கு நிகழ்வதை தானே சொல்லத் தகுதி கொண்டவன் அவனல்லாமல் வேறு யார்? தன் வரலாறு கூறுபவனாக எழுத்தாளன் வரும்போது ஆசிரியனுக்கு கதையை எந்த நுட்பம் வரைக்கும் எடுத்துச்செல்லும் சுதந்திரம் கிடைக்கிறது.வேறு யாரையும் அதற்கிணையாக நம்ப முடியாது

மேலும் சொல்வதற்கும் நிகழ்வதற்கும் நடுவே உள்ள இடைவெளியையும் எழுத்தாளனின் அனுபவம் அவனுடைய எழுத்து என்ற இரு முனைகல் மூலம் இலக்கியத்தில் சிறப்பாகக் காட்டிவிடலாம். ஓர் உத்தியாக எழுத்தாளனின் எழுத்தையே நாவலுக்குள் கொண்டுவருவதன் சிறப்பு இது. பின் நவீனத்துவ நாவல்கள் பல இந்த உத்தியை வெற்றிகரமாகக் கடைப்பிடித்துள்ளன. அவற்றில் ஆசிரியன் உள்ளே வராத ஆக்கங்கள் குறைவே.

பஞ்சாபி நாவலான வெண்குருதி கற்பனாவாத காரணத்தினாலேயே எழுத்தாளனை மையக் கதாபாத்திரமாக்கியுள்ளது. உக்கிரமான உணர்ச்சிகள் கொண்ட , அலைந்து திரியும் மனிதனாக எழுத்தாளனையல்லாமல் வேறு யாரை கற்பனைசெய்ய முடியும்? அதுவும் குறிப்பாக கவிஞனை! இதன் வடிவில் பிற்கால மீபுனைகதை [மெட்டா·பிக்ஷன்] களுக்கு உரிய வடிவம் இருப்பது ஆர்வமூட்டக்கூடியது

[வெண் குருதி நானக் சிங் தமிழாக்கம் துளசி ஜெயராமன் .நேஷனல் புக் டிரஸ்ட் ]

முந்தைய கட்டுரைஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’
அடுத்த கட்டுரைபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்