நன்றி, முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம்.டி.எம்,

மன்னிக்கவும், நிறைய தவித்துப்போய்விட்டீர்கள். இரண்டுநாட்களாக இங்கே ஒருநாளுக்கு இரண்டுமணிநேரம் கூட மின்சாரம் இல்லை. மின்சாரம் அலைபாய்ந்து என்னுடைய கணினி மடிக்கணினி இரண்டுக்குமே மின்னேற்றி பழுதாகிவிட்டது. பணம்செலவுசெய்து வாங்கி எழுதுகிறேன்.

நீங்கள் நாகர்கோயில்காரர் என்று இப்போதுதான் தெரிகிறது. முன்னரே ஊகித்திருக்கவேண்டும்.

நீங்கள் சொன்னது சரிதான். உங்கள் பதிலில் நான் சொன்னவற்றுக்கான பதில் ஏதும் இல்லை. பாரதியின் மெய்யியல் சாரம் என்ன என்று விவாதிப்பதாக இருந்தால் நான் அதைத் தனியாகச் செய்திருப்பேன். பாரதி ஒரு நல்ல கவிஞரா, பாரதி கவிதைகள் எப்படிப்பட்டவை என்பதெல்லாம் நம் விவாதமாக இருக்கவில்லை.

உலக அளவில், இந்திய அளவில், தமிழ் மரபில் பிற கவிஞர்கள் மீது பாரதிக்கு இருக்கும் முதன்மையைச் சுட்டுவதற்காக மகாகவி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. எந்த அளவுக்கு அந்தப் பட்டம் செல்லுபடியாகும் என்பதுதான் என்னுடைய விவாதம். பாரதி ஆத்மார்த்தமான கவிஞர், மெய்யியல்சார்ந்த பரிதவிப்பை அல்லது கொந்தளிப்பைக் கவிதையாக்கியவர் என்பது அதற்கான பதில் என எனக்குப் படவில்லை.

நான் பேசிக்கொண்டிருந்தது மகாகவி என்கிற ஒட்டுமொத்த ஒப்பீட்டு அடையாளம் பற்றி. நீங்கள் பேசிக்கொண்டிருப்பது பாரதியின் தனியடையாளம் பற்றி.

எலியட்டையும் பாரதியையும் நீங்கள் ஒப்பிட்டிருந்தீர்கள். எந்த ஒரு நல்லகவிஞனையும் இன்னொரு கவிஞனுடன் ஒப்பிடலாமென்ற அளவில் அது ஏற்கத்தக்கதே. எலியட்டின் குரலும் அழகியலும் முற்றிலும் வேறுவகையானவை. எலியட் தன் முன் வந்துவிழுந்த உலகஇலக்கியத்தில் இருந்து உடைசல்களைப் பொறுக்கி உடைந்துகிடக்கும் தன்னுடைய அகஉலகத்தை அமைக்கிறார். பாரதி தன் முன்மரபின் நீட்சியாக நிலைகொள்கிறார்.

நீங்கள் சொல்லும் இந்தக்கவிதையைவிடத் தீவிரமாகவே இந்த அகம்நோக்கிய கொந்தளிப்பாகவும் அமைதலாகவும் ஆகும் கவிதைகள் என்றே நான் மழை, பிழைத்த தென்னந்தோப்பு போன்ற கவிதைகளைச் சுட்டியிருந்தேன். என்னுடைய விவாதம் பாரதி ஆத்மார்த்தமான அக எழுச்சி கைகூடிய கவிதைகளை எழுதினாரா இல்லையா என்பதே அல்ல. நான் பாரதியின் கனலை அறியும் பல கவிதைகள் உள்ளன.

நான் சொல்லிக்கொண்டிருந்தது மகாகவி என்ற முதன்மைப்பட்டத்தைப்பற்றி. அது பாரதியின் பெருவாரியான பிரச்சாரக்கவிதைகளுக்கும் தோத்திரப்பாடல்களுக்கும் அளிக்கும் மிகையான அடையாளத்தைப்பற்றி. இன்றைய வாசிப்பில் பாரதியை ஒரு யதார்த்த தளத்தில் நிறுத்திப் பேசுவதைப்பற்றி.

பாரதியின் மெய்யியலைப்பற்றி என்றால் அவரது கவிதைகளை ஒட்டி நான் பேச இன்னும் எவ்வளவோ தூரம் உள்ளது. இந்த விவாதத்தின் தொடக்கத்தையே பாரதி தமிழ்நவீனத்துவத்தின் தொடக்கமாக, உரைநடையின் முதற்புள்ளியாக அவரது சாதனைகளை எல்லாம் முன்வைத்துவிட்டுத்தான் பேச ஆரம்பித்தேன். உங்களுக்கு ஸ்க்ரீன்ஷாட் எடுத்தளிக்கப்பட்ட பக்கங்களிலும் அதையே பேசியிருக்கிறேன். பாரதிக்கு முன் நான் பெருங்கவிஞர் என நினைப்பவர் எட்டு நூற்றாண்டுக்கு முன்னாலிருப்பவர் என்பதை மறக்கவேண்டியதில்லை.

இருபதாண்டுகளுக்கும் மேலாக என் தர்க்கத்தாலும் உள்ளுணர்வாலும் எனக்கு மரபிலிருந்து வந்துசேர்ந்த மெய்யியலை இன்மைவரை உடைத்து அதன் அடியற்ற இருளைத்தாண்டிச் சென்றுகொண்டிருப்பதை என் ஆக்கங்களை வாசிக்கும் வாசகன் அறியக்கூடும். எங்காவது நான் என் அகத்தை உறுதிப்படுத்திக்கொண்டேனென்றால் எழுதுவதை நிறுத்திவிடுவேன். அது நிகழக்கூடுமென விழைகிறேன்.

ஆகவேதான் எளிமையான வரையறைகளை விளக்கங்களை நான் தர்க்கத்தால் தாண்டிச்செல்கிறேன். முப்பால்மணி எழுதி நீங்கள் கொடுத்திருக்கும் பகுதி அப்படிப்பட்டது. அன்று மாயாவாதத்தைத் தாண்டிச்சென்ற இந்திய நவவேதாந்த அலை என ஒன்றிருந்தது என்பதையே அறியாமல் அந்த மாற்றம் பாரதியில் மட்டும் நிகழ்ந்தது என்று எழுதியிருக்கிறார். அப்படி எழுதும் தமிழாசிரியர்மரபு ஒன்று உண்டு.

பாரதி அதற்கப்பால் அடைந்தது, அவரது கவிதைகளில் வெளிப்படுவது, வேறொன்று. அது யோகி அறியும் இருளும் கவிஞன் அறியும் மொழியின் மெல்லிய ஒளியும் கலந்த ஒரு சிறு பாதை. அந்தப் பருவத்திலேயே பாரதி அவரது மகத்தான கவிதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அவரது மிகச்சிறந்த வாசகனாக நான் தேடுவது அத்தகைய கவிதைகளையே.

என்னுடைய இன்று என்பதில் நேற்று இல்லை என்பதை நீங்கள் அறியமுடியாது. ஆகவேதான் நீங்கள் அதை வரலாறு வரலாறு என்கிறீர்கள். வரலாறு எனக்கு ஒரு நொடியின் பக்கவாட்டு விரிவே. இன்று இங்கே எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்த அகால நொடியில் என் சடைமீது கம்பனும் கதேயும் தாந்தேயும் காளிதாசனும் வியாசனும் என்று நூறு ஆகாயகங்கைகள் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நடுவே பாரதி என்னவாகிறான் என்றுதான் நான் பார்க்கிறேன்.

மீண்டும் ஒருமுறை சந்திப்போம். ஒரு கோப்பை டீ முடிவுறுவதேயில்லை என்பதும் ஜென் மொழிதான்.

ஜெ

முந்தைய கட்டுரைபாரதி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமகாகவி விவாதம்