வட்டார வழக்கு

நகைச்சுவை

1

 

வட்டார வழக்கு பலசமயம் கொச்சைப்பேச்சு என்று எண்ணப்படுகிறது. இதுபிழை. ஒரு தனிமனிதன் மொழியை சிதைத்துப்பேசினால் அது கொச்சை, ஒரு பகுதியின் மக்கள் முழுக்க அவ்வாறு பேசுவார்களென்றால் அது வட்டார வழக்கு. வட்டார வழக்கு என்பது ஒருவட்டாரத்து மக்களின் பண்பாட்டு அடையாளமாக அவ்வட்டார வழக்கைப் பேசாத அவ்வட்டாரத்தவர்களால் முன்வைக்கப்படுகிறது.வட்டாரவழக்குக்கு பெரும் பண்பாட்டு முக்கியத்துவம் உண்டு. ஒரு வட்டாரம் பிற வட்டாரங்களும் தன்னைப்போன்றே பிற்பட்டவைதான் என்ற தன்னம்பிக்கையை அடைய அந்தப் பிறபகுதிகளின் வட்டாரவழக்குகள் உதவுகின்றன.

ஒருபகுதியின் இயல்பான உறுப்பினரால் இயல்பானதாகவும் அங்கே வரும் பிறரால் விபரீதமாகவும் ஒரேசமயம் உணரப்படும் வட்டாரவழக்கே சிறந்த வட்டார வழக்காகும். குமரிமாவட்டம், நெல்லைமாவட்டம் முதலியவை அவ்வகையில் சிறப்பான வட்டார வழக்குகள் உள்ள பகுதிகள். இத்தகைய வட்டார வழக்கின் சிறப்பு என்னவென்றால் அவற்றைப் பேசும் மக்கள் தாங்கள் பேசுவதே தூயதமிழ் என்றும் பிற எல்லாம் தமிழின் மரூஉக்களே என்றும் ஆணித்தரமாக நம்புவதேயாகும். எம்பளதை எண்பது என்று சொல்பவர்களை நோக்கித் தஞ்சாவூர்க்காரர்கள் நகைப்பர்கள். திண்ணவேலியை திருநெல்வேலி என்று சொல்லும் அன்னியர் மொழிவளமில்லாதவர்கள் என்பது நெல்லையின் நம்பிக்கை.

வட்டார வழக்கில் இரு கூறுகள் உண்டு. பொதுமொழியில் உள்ள சொற்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியின் வெயில் மழை காற்று பட்டு வேற்றுருக்கொள்வது முதல்கூறு. இங்கே என்ற செம்மொழிச் சொல்லானது இஞ்ச என்றும் இங்கிண என்றும் இங்கிட்டு என்றும் இங்கிட்டுகூடி என்றும் இஞ்சால இஞ்சினிக்குள்ள என்றும் வழங்கப்படுவதைக் காணலாம். முனைவர் பட்டம் பெற்றவர்களும் மேடைப்பேச்சாளர்களும் இங்கே என்றும் சொல்வதுண்டு. அதை அவர்களின் தனி வட்டாரவழக்காகக் கொள்ளலாம் என்று வட்டார வழக்கியலாளர் தே.லூர்து சொன்னதாக ஒரு வதந்தி உண்டு.

இரண்டாவது கூறு, ஒரு பகுதிக்கு உரிய தனிச் சொற்கள். ‘அம்மிங்கிரு’ என்ற குமரிமாவட்டச் சொல்லாட்சியானது அம்மையார் என்பதைக் குறிக்கிறது. நீக்கம்பு [காலரா] நல்லப்பம் [முதன்முதலாக] முதலிய பலநூறு சொற்களும் குமரி வட்டாரவழக்கில் உள்ளன. செம்மொழிச் சொல்லானது ஒரு பகுதியில் மட்டும் தெரியாத்தனமாகப் பயன்படுத்தப்படுமென்றால் அதுவும் வட்டார வழக்கே ஆகும். உதாரணம், குமரி வட்டார வழக்கில் ‘செம்மே செய் கேட்டியாலே’. செம்மை என்பது செம்மொழிச்சொல்.

செம்மொழிச் சொற்களைத் தனிப்பொருள் கொடுத்து வட்டாரவழக்காக ஆக்குவதும் உண்டு. மயிர் என்றால் செம்மொழியில் முடி. முடி என்றால் மகுடம். மகுடம் என்றால் நெல்லைவழக்கில் ஒருவகை மேளம். குடம் போலிருக்கும். மேளம் என்றால் குமரிவட்டார வழக்கில் களேபரம். களேபரம் என்றால் சம்ஸ்கிருதத்தில் கூந்தல். கூந்தல் என்றால் குமரி வட்டாரவழக்கில் ஆடிமாத மழைமூட்டம். ஆனால் நெல்லையில் அதற்குப் பனைநுங்கு என்று பெயர்…

நுங்குதல் என்றால் குமரியில் அடிபின்னுதல். பின்னுவது என்றால் மையத்தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்று மதுரை வழக்கு என்றால் குமரிமாவட்டத்தில் மூட்டம்போடுதல் அது. அந்த முடையை இங்கே முட்டு என்பார்கள். அதை முழங்கால் முட்டு என்று நெல்லைக்குமேல் புரிந்துகொள்வார்கள். மொழிகளுக்குள் நுழைந்தவனால் பிறகு பேசவே முடியாது. வர்ம வைத்தியனால் அடிக்க முடியாது என்பது போல– உடம்பெங்கும் வர்மம்தான் தெரியும்.

குமரிவழக்கில் மயிர் என்றால் அந்தரங்க முடி. மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமானைப்பற்றிக் குறள்விளக்கம் அளிக்கையில் குமரிமண்ணின் தமிழாசிரியர் ஒருவர் அந்நிலையில் மறைப்பு இல்லாததனால் வெட்கம் தாங்க முடியாமல்தான் கவரிமான் உயிர்துறக்கிறது என்ற நுண்பொருள் அளித்து அக்குறளின் பொருட்செறிவைப் பொருத்தமுள்ளதாக ஆக்கினார் என்பது வரலாறு.

வட்டாரம் என்பது வட்டாரங்களின் தொகுப்பு. அதேபோல வட்டாரவழக்கும் வட்டாரவழக்குகளின் தொகுப்பே. சாதி சார்ந்து மதம் சார்ந்து ஊர் சார்ந்து வட்டாரவழக்கு மாறுபடுகிறது. பெருமாள்முருகனின் கொங்கு வட்டார வழக்ககராதியை ஒருவர் கொங்குவேளாள வட்டார வழக்ககராதி என்று சொன்னார். வட்டார வழக்ககராதிக்குள் சாதிக்கு உள்பிரிவுகள் அளிக்கலாம். இட ஒதுக்கீடு கூடத் தேவைப்படும்.

குமரிமாவட்ட ஆசாரிமார் ‘ஓவியமாட்டுல்ல இருக்கு’ என்றால் கந்தரகோலமாக என்று பொருள். அவர்கள் நவீன ஓவியத்தை உத்தேசிக்கிறார்கள் என்று ஆய்வு. கோலமா இருக்கு என்றால் சீராக என்று பொருள். சீரு என்றால் நிலைமை. ”இருக்கப்பட்ட சீரைப்பாத்தா கீரைச்சோறுக்கு முட்டு” என்று சொலவடை. ஆசாரிமார் ‘வைப்பு’ என்று சொன்னால் நிலைநாட்டுதல். புலையர் வைப்பு என்று சொன்னால் குழந்தை உற்பத்தி.

உடம்பெங்கும் இதயத்துடிப்பு ஓடினாலும் மணிக்கட்டில் நாடித்துடிப்பு பார்ப்பதுபோல வட்டாரவழக்கு என்பது வசைகளில் சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறது. அதில் நுண்ணிய பொருள்வேறுபாடுகளைப் பார்ப்பவர்கள் வட்டாரவழக்கு என்பது சிந்தனையில்லாதவர்களால் உருவாக்கப்படுவதென ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

பூதஉடல், புகழுடல், சூட்சும உடல், காரண உடல், ஒளியுடல் என உடல் பலவகை என்பது யோகமரபு. ‘வசையுடல்’ என்று ஒரு உடல் பண்பாட்டில் உருவகிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உடலுறுப்புக்கும் நல்லவார்த்தையிலும் கெட்டவார்த்தையிலும் பெயர் உண்டு. முழு உடலே அவ்வாறு நல்ல உடல் கெட்ட உடல் என இரண்டாகப் பிரிவுபட்டிருக்கிறது. நம் எதிரிகள் நம் பெற்றோரின் கெட்ட உடலை அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.

ஆண்குறி பெண்குறி போன்ற நல்லவார்த்தைகளுக்குரிய கெட்டவார்த்தைகளை நாம் அறிவோம். இவற்றில் பகல்குறி இரவுக்குறி என இரண்டு உண்டா என தொல்காப்பிய அடிப்படையில் இலக்கண ஆய்வு ஒன்றை செம்மொழி உயராய்வர் ஒருவர் மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ‘ஆற்றுவெள்ளம் நேற்றுவரத் தோற்றுதே குறி’ என்ற பள்ளுப்பாடலை அவர் விரிவாக விளக்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாராம். கை கால் கண் போன்றவற்றுக்குக் கெட்ட வார்த்தைகள் இல்லையென்பதனால் கெட்ட வார்த்தைகளுடன் அவை உசிதமான முறையில் இணைக்கப்படுகின்றன.

வட்டார வழக்கு மிகமுக்கியமான பொருளியல் உற்பத்தி என்பதை பலர் அறிவதில்லை. ஃபோர்டு ஃபௌண்டேஷன் முதலிய அமைப்புகள் வட்டாரவழக்கைப் பயிர்செய்வதற்கும் சேமிப்பதற்கும் அளிக்கும் நிதியுதவி நாட்டின் முக்கியமான நிதியாதாரமாகும். நாட்டாரியல் என்னும் துறையே வட்டார வழக்கை நம்பி இருக்கிறது என்றால் மிகையல்ல.

ஒரு விஷயத்தை வட்டார வழக்கில் சொன்னால் அது நாட்டாரியல் என்பது முனைவர்  அ.கா.பெருமாள் அவர்கள் சொன்ன வரையறை. ஆகவேதான் டிவிஎஸ்-50 பயனர் கையேட்டை ஈத்தாமொழி வட்டாரவழக்கில் சொன்ன மெக்கானிக் ஞானவறுவேல் அவர்களின் கூற்றை அ.கா.பெருமாள் நாலரை மணிநேரம் ஒலிநாடாவில் பதிசெய்து தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் துறையின் சேமிப்புக்கு அளித்தார்.

வட்டார வழக்கை எல்லை வரையறை செய்வதில் ஆய்வாளர் நடுவே ஆழமான விவாதம் நிகழ்ந்து வருகிறது. மனைவியர் கணவனை அழைக்கும் வட்டார வழக்குச் சொற்களை சேகரித்த ஞா.ஸ்டீபன் அவர்கள் இஞ்சேருங்க, ஏங்க, ஏனுங்க, யானுங்க, பாருங்க, இவியளே, கேட்டேளா போன்ற நானூறுக்கும் மேற்பட்ட சொற்களைப் பட்டியல் போட்டிருக்கிறார். அவற்றில் ‘ம்க்கும்’ போன்ற கனைப்பொலிகளையும் அவர் சேர்த்திருப்பது முறையல்ல என்று ஆய்வாளர் மாற்கு கருத்து தெரிவித்தார். ஆனால் ஆ!.சிவசுப்ரமணியம் அவர்கள் ஒவ்வொரு அழைப்புக்குப் பின்னரும் வழக்கு உறுதியாக நடக்குமென்பதனால் இச்சொற்கள் கண்டிப்பாக வட்டார வழக்குச்சொற்களே என்று சொன்னார்.

வட்டார வழக்கு இலக்கியத்திற்குப் பெரிதும் உதவுவது. படைப்பில் மண்ணின் மணம் வருவதற்கு ஒருபிடி வட்டாரவழக்கைத் தூவினால் போதும் என்பது நாவலுலகின் கோட்பாடு. வட்டார வழக்கைப் பேசுவதைவிட வாசிப்பது எளிது. வாசிப்பதை விட எழுதுவது எளிது. எழுதுவதை விட ஆய்வுசெய்து மிக எளிது.

வட்டாரவழக்கில் சில இலக்கணங்கள் உள்ளன. ஈற்றொலிகள், இணைப்பொலிகள், திரிபுமுறைகள் என அவற்றைச் சொல்லலாம். மூன்றையும். ”ஈறும் தொடுப்பும் திரிபும் மூன்றும் சீராம் வழக்கென்பர் புலவோர்” என்பது இலக்கண சூத்திரம். கற்றுக்கொண்டால் நீங்களும் வட்டார வழக்கு எழுதலாம்.  வந்தேங் என்றால் மதுரை. வந்தனுங்க என்றால் கோவை. வந்தனுங்கோ என்றால் ஈரோடு. வந்துகினேன் என்றால் தருமபுரி. வந்தனான் என்றால் யாழ்ப்பாணம். இவை ஈற்றொலிகள்

”எங்கிட்டே வச்சுக்காதே” ”எங்கைலே வச்சுக்காதே” ”நம்மமேலே வச்சுக்காதே” ”நம்மளோட வச்சுக்காதே” என்னும் சொற்களைக் கவனிக்கவும். இணைப்பொலி மூலமே வட்டார மாறுபாடுகள் இங்கே உருவாக்கப்படுகின்றன. அடுத்தது திரிபுமுறை. நல்ல சொல்லை வட்டாரச்சொல்லாக ஆக்குவதெங்கனம் என்பதே இது. பெட்டி எங்கனம் பொட்டி ஆகிறதோ அது. ஒவ்வொரு வட்டாரவழக்குக்கும் அதற்கே உரிய திரிபு விதி உண்டு.

உதாரணமாகப் பெரும்பாலான வட்டார வழக்குகளில் மின்தொடர்பு விதி செயல்படுகிறது. மின்சாரம் இருபுள்ளிகள் நடுவே இருக்கும் குறைந்த தூரத்தையே தேர்வுசெய்யும். அதுபோல சொற்களின் முதல்- கடைசி என இரு புள்ளிகள் நடுவே உச்சரிப்பு அதிவேகமாக ஓடிச்செல்வதை வட்டாரவழக்கின் ஒரு விதி எனலாம். நாராயண அய்யர் என்ற சொல் நார்ணயர் என்றாவது உதாரணம். குமாரகோயில் கோர்ய்ல் என்றாகிறது.

தெரியாத சொற்களைத் தெரிந்த சொற்களின் ஒலிக்கு மாற்றிக்கொள்வது. இது அதிகமும் ஆங்கிலம் முதலிய பிறமொழிச்சொற்களில் செயல்படும் விதியாகும். கம்புட்டர் என்ற சொல் கம்பு என்பதன் சாயல் கொண்டது. ஃபோட்டோ என்ற சொல் ஆட்டம் பாட்டம் போல போட்டம் ஆக மாறுகிறது. ஆங்கிலச் சொற்களை அவற்றின் முதல் ஒலித்தோற்றத்தை அப்படியே அதன் பொருளாக எடுத்துக்கொள்வதும் உண்டு. உதாரணம் ‘அஸ்ஸால்டா போயினே இருந்தான்.’

வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம். உண்மையில் எல்லாக் காலத்திலும் தமிழர்கள் வட்டார வழக்கில் பேச அறிஞர்கள் அதைத் தமிழாக ஆக்கிக்கொண்டே இருந்தார்கள். தொல்காப்பியம் என்ப என்று சொல்வது இந்த வாய்மொழியர்களையே. என்ப என்று அஃறிணையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்

செம்மொழியர்கள் வீட்டுக்குள் மனைவியிடம் வட்டார வழக்கில் பேசிவிட்டு வாசல்தாண்டி துண்டு தோளுக்கு வந்ததும் செம்மொழிக்குச் செல்வார்கள். செம்மொழி உரைப்பொழிவின் நடுவே கட்டைக்குரலிலோ அல்லது கம்மல் குரலிலோ வட்டார வழக்கில் பேசுதல் மரபென அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வட்டார வழக்கை மட்டுமே அறிந்த பொதுமக்கள் அப்போது அதைக் கேட்டு கிண்டலாக நகைக்க வேண்டும் என்பதும் விதி.

வட்டார வழக்கு இருப்பதனால்தான் செம்மொழி சிறப்புடன் இருக்கிறது. இல்லாவிட்டால் செம்மொழியை யார் அடையாளம் காணப்போகிறார்கள்?

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் ஆகஸ் 29, 2012

 

 

முந்தைய கட்டுரைகாந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி
அடுத்த கட்டுரைவெண்முரசு விமர்சன அரங்கு சென்னை -பதிவு