எலியட்-எம்டிஎம்-எதிர்வினை

அன்புள்ள எம்.டி.எம்,


எதிர்வினை கண்டேன்

நரைத்தகிருதா இருக்கட்டும், ரசனை விமர்சனத்தின் ஒரு பகுதி. கரிபூசிய தலைமயிரென்பது கட்டுடைப்பு விமர்சனத்தின் அடையாளம். ஒரு வேறுபாடு தேவைதானே?

தமிழ் மலையாளம் கன்னடம் மூன்றுமொழிகளிலும் எலியட் மொழியாக்கம் வழியாகவே பாதிப்பைச் செலுத்தினார். தமிழில் 1958ல் தேவராஜன் என்பவர் பாழ்நிலத்தை வசனமாக மொழியாக்கம் செய்தார். அந்த வரிகளைப் பலர் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். தேவதேவன் அந்த மொழியாக்கத்தால் பாதிப்படைந்தவர். அப்பாஸ் போன்றவர்கள் பிரம்மராஜன் மொழியாக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் என்பதுடன் அந்த மொழிபெயர்ப்பு நடையையும் எடுத்துக்கொண்டவர்கள்.அவர்கள் ஆங்கிலக்கல்வி பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலக் கவிதையை அவர்கள் வாசித்திருகக்வே வாய்ப்பில்லை

கன்னடத்திலும் மலையாளத்திலும் பாழ்நிலத்தின் நல்லமொழியாக்கங்கள் ஆரம்பத்திலேயே வெளிவந்து அவைதான் விரிவாகவே வாசிக்கப்பட்டன. அந்தக் கவிதையின் பேசுபொருள் ஒருவகை செல்வாக்கை செலுத்தியது.அந்தக்கவிதை அளித்த வடிவம் அதைவிட பாதிப்பைச் செலுத்தியது. ஆகவே தகவல்களைத் திருத்திக்கொள்ளவும்.

’இரண்டும் வெவ்வேறு முறைமைகள்,ஒன்றின் செயல்முறையை மற்றதில் எதிர்பார்க்கவோ, கலந்துகட்டி அடித்துவிடவோ முடியாது’ நானும் அதையே சொல்கிறேன். ரசனை விமர்சனத்தின் வழிமுறைகளை விமர்சிப்பதைவிட்டுவிட்டு அதன் வாசிப்புக்குமேலதிகமாக வாசித்துக்காட்டுங்கள் என்கிறேன்

textual விமர்சனத்தின்படி மொத்த பாரதி கவிதைகளையும் நான் வரிவரியாக வாசித்து விமர்சனம் செய்ய அறைகூவுகிறீர்கள். மன்னிக்கவும் அந்த அளவுக்கு அவகாசம் இல்லை. ஆனால் என்னுடைய விவாதத்தில் பாரதியின் நல்ல கவிதைகள் என நான் நினைக்கும் இரு கவிதைகளை வரிக்குவரி வாசித்து அவற்றின் பின்னணி, சூழலுடன் இணைத்து விமர்சித்திருக்கிறேன். ரசனை விமர்சனத்தின் எல்லை அதுவே. அதற்குமேல் வாசகனே வாசிக்கவேண்டுமென்றே அது எதிர்பார்க்கும்.

கருத்தியல்யந்திரம் என்பது உங்கள் கலைச்சொல். நான் அதைப் பயன்படுத்துவதில்லை. அதை உங்கள் விமர்சனத்தைச் சுட்டிக்காட்டவே பயன்படுத்தினேன். பாரதியை மகாகவியாக ஆக்கிய சூழலை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அப்படி அல்ல என்று சொல்லக்கூடிய தேவையை உருவாக்கும் இன்றைய சூழலை என் கட்டுரையில் விரிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக வாசித்துப்பார்க்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஎட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
அடுத்த கட்டுரையானை- கடிதம்