ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம்,

பதில் கண்டேன்

நீங்கள் எனக்களிக்க விரும்பும் தோற்றத்தைப்பார்த்தால் என்னை ’மகாகவி’ பாரதியாராக ஆக்க நினைப்பதுபோல உள்ளது. ஆனால் கைகால்கள் கட்டிப் பக்கவாட்டில் கிடத்தப்பட்டு, கிடுக்கிப்பிடியால் கதறக்கதறக் கட்டுடைக்கப்பட்டு, decanonioze செய்யப்பட்டமையால் எந்தவித முதன்மையிடமும் இல்லாமல் சும்மா ஒரு இதுக்காக மகாகவி பட்டத்தைச் சுமந்துகொண்டிருக்கும் பாரதி. அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆகவே கண்களில் அந்தப் பேதமையை மட்டும் நீக்கி விடுங்கள். மற்றபடி மீசை வளர்த்துக்கொள்கிறேன்.

diachronic அணுகுமுறைதான் என்னுடையதென நான் முன்னரே சொல்லிவிட்டேன். இலக்கியப்பிரதியை, வாசிப்பை வரலாற்றில் வைத்துப்பார்ப்பது ரசனை விமர்சனத்தின் முக்கியமான ஒரு வழிமுறை. ஏனெனில் வரலாற்றையும் முதற்பேரிலக்கியத்தையும் பிரிக்கமுடியாது. வரலாற்றுத்தன்மை [historicity ] அல்லது வரலாற்றுவாதம் [ Historicism] வழியாகவே முதற்பேரிலக்கியம் உருவாக்கப்பட முடியும். ஆகவே ஆனந்தவர்தனன் அல்லது அரிஸ்டாடில் எல்லாரையும் உள்ளிட்டே நான் பேசுவேன். அதற்கு கொஞ்சம் விரிவான சித்திரத்தையும் அளித்தாகவேண்டும். நீங்களே கூட ரசனைவிமர்சனத்தை வரலாற்றில்வைத்துப்பார்க்க தொல்காப்பியத்தில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது இல்லையா? அதற்காக நீங்கள் எலியட் பற்றிப் பேசுவதற்குப் போட்டியாக நான் காளிதாசனை ஆரம்பிக்கமாட்டேன், பயப்படாதீர்கள்.

ஆனால் வரலாற்றை நேற்றைய யதார்த்தம் என்றில்லாமல் இன்று நாம் கட்டமைக்கும் தேர்வுகளால் ஆனது அது என்றெல்லாம் விவாதிக்க ரசனைவிமர்சனத்தில் இடமிருக்கிறது. வரலாற்றைப் புனைவுக்குள் ஒரு மொழிபாக மட்டுமே அணுக அதற்குள் வாய்ப்புள்ளது.

synchronic அணுகுமுறை எனக்கு எதற்கு? நான் கொண்டுள்ள ரசனைவிமர்சனம் அந்தச்செயல்பாட்டை வாசகனின் அகத்துக்குள் நிகழும் அந்தரங்கமான நிகழ்வு என்று மட்டுமே சொல்லும். அதைப் புறவயமாக நிகழ்த்தவோ விளக்கவோ முடியாது. சமகாலத்தின் சொற்களனில் பல்லாயிரம் அர்த்தப்படுத்தலின் சாத்தியங்களின் வழியாக நிகழும் அதில் ஏதேனும் ஒரு புள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கே ஒரு வாசிப்பை நிகழ்த்தி அந்தப் பிரதியை synchronic அணுகுமுறைக்கு ஆளாக்கிவிட்டோம் என்று சொல்வது வெறும் தர்க்கப்பயிற்சி மட்டுமே. அதன்மூலம் வாசிப்பின் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. வறட்டு விவாதமாக, உயிரற்ற குறியியல் பகுப்பாய்வாக வாசிப்பு ஆகிறது. ஆகவே அதை நீங்கள்தான் செய்யவேண்டும்.

என் அணுகுமுறை என்பது வாசிப்பில் புறவயமாக எதையெல்லாம் விவாதிக்கமுடியுமோ அவற்றை மட்டுமே விவாதித்துவிட்டு வாசிப்பை முழுக்கமுழுக்க வாசகனுக்கே விட்டுவிடுவது என்பதை முன்னரே சொல்லிவிட்டேன். உங்கள் கட்டுடைப்புவாசிப்புக்கும் அதற்குமுள்ள முக்கியமான வேறுபாடே அதுதான். ’வாசிப்பை ஜனநாயகப்படுத்தி வாசிப்பின் அனுபவம் எப்படி அமைப்பாக்கம் பெறுகிறது என்று பார்க்கச் சொல்லும்’ உங்கள் கட்டுடைப்பு விமர்சனம் கட்டுடைப்பாளனாகிய விமர்சகனை இலக்கியப்படைப்பின் மேல் ஓர் அதிகார சக்தியாக அமரச்செய்கிறது. [பிரதி, படைப்பு என்ற இரு சொற்களையும் கவனமாகவே அர்த்ததுடன் பயன்படுத்தியிருக்கிறேன்] வாசகனின் வாசிப்பு நிகழும்புள்ளியில் சுத்தியல் கடப்பாரையுடன் அவன் அமர்ந்திருக்கிறான். வாசகனின் வாசிப்பை அவன் வடிவமைக்க முயல்கிறான். அது சாத்தியமல்ல என்று காணும்போது கூடுமானவரை திரிக்கமுயன்று வெற்றி பெறுகிறான்.

ரசனை விமர்சனம் என்பது அதன் மிகத்தீவிரநிலையில்கூட ஒரு சிபாரிசு மட்டுமே. இன்னின்ன விஷயங்களைக் கருத்தில்கொண்டு வாசி என்று அது வாசகனுக்குச் சொல்கிறது. ‘நான் ஒடைச்சுக்காட்டுவேனாம் அப்றமா நீ வாசிப்பியாம்’ என்று சொல்வதில்லை. உலக இலக்கிய வரலாற்றிலேயே விமர்சகன் இலக்கியப்படைப்பு மீது அதிகபட்ச அதிகாரத்தைச் செலுத்தியது கட்டுடைப்புவிமர்சன மரபில்தான் என்பதுதான் யதார்த்தம். நடுக்காலகட்டத்தில் மதஅமைப்புகள் இலக்கியப்படைப்புகளை உடைத்துப்பகுத்து மதஅவமதிப்பைத் தேடிச் செய்த வன்முறைக்கு நிகரானது அது. அது ஜனநாயகம் அல்ல. இலக்கியமென்ற செயல்பாடு மீது கல்வித்துறை செய்யும் ஆக்ரமிப்பு, அத்துமீறல் மட்டுமே. கட்டுடைப்புவிமர்சனம் மீது இலக்கியவாதியும் நுண்ணுணர்வுள்ள விமர்சகனும் கொண்டுள்ள ஆழ்ந்த அவமரியாதைக்கான காரணமும் அதுவே.

ஜெ

முந்தைய கட்டுரைபூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
அடுத்த கட்டுரைரசனை விமர்சனத்தின் கலைச்சொற்கள்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…