ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு.
ஆகவே ஞாயிறு மதியம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை மணிக்குக் கண்விழித்தால் ஒரு விசித்திரமான மனநிலை அமைகிறது. உலகம் மிகமிக மெல்ல நிகழ்ந்துகொண்டிருப்பதாகவும் மனம் மிகமெல்ல அதை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தோன்றும். ஆகவே உலகின் ஒவ்வொரு சிறு அணுவும் கண்ணில் படுகின்றன. ஒவ்வொரு சிறு ஒலியும் கேட்கின்றன.
உலகம் என்பது படுத்திருக்கும் அறைச்சன்னலுக்கு வெளியே தெரியும் தென்னைமரத்து ஓலைகளும் அவற்றினூடாக ஒளிரும் வானமும் மாமர இலைகளும் மட்டும்தான். தென்னை தூக்கமயக்கத்தில் மெல்ல தோகையை அசைக்கிறது. தூங்கும் பூமியின் மூச்சு போல சீராக காற்று சென்று கொண்டிருக்கும் ஒலி. அதனுடன் இணைந்ததாக குயிலின் ஓசை. கூஉ க்க்கூஉ. மீண்டும் மீண்டும்.
அது ஒரு அழைப்பு போல. பின்னர் அது வற்புறுத்தலாகிறது. பின்பு மன்றாட்டாக.கூஉ க்க்கூஉ. பறவைகளின் ஒலிகளில் குயிலின் ஒலி மட்டுமே இனியதிலும் இனியதென கவிமரபால் கொண்டாடப்படுகிறது. அது உண்மையல்ல. உண்மையில் குயிலைவிட இனிய பல பறவைக்குரல்கள் உண்டு. புல்புல்கள், சிட்டுக்குருவிகள் போன்ற பல பறவைகள் இனிய மெல்லிய ஒலிகளை எழுப்புகின்றன.
குயில் குரலில் அப்படி என்ன இனிமை என்பவர்கள் உண்டு. கேரள பறவை ஆய்வாளரான வி.டி.இந்துசூடன் அவரது ‘கேரளத்தில் பறவைகள்’ என்ற அழகிய நூலில் குயிலின் குரலை கவிஞர்கள் பாடிப்பரவுவதைப்பற்றி வேடிக்கையாக எழுதியிருக்கிறார். ‘செவியைத்துளைக்கும் குயிலின் குரலில் என்ன அப்படி இனிமை?’ என்று கேட்கும் இந்துசூடன் ‘யாரோ ஒரு பழங்காலக் கவிஞன் அதை ஏதோ ஒருமனநிலையில் கேட்டு அது இனியது என்று எழுதிவிட்டான், பிறகவிஞர்கள் அதை ஒரு மரபாகக் கொண்டுசெல்கிறார்கள், அவர்கள் குயிலின் குரலை கேட்டிருக்கவே மாட்டார்கள்’ என்று சொல்கிறார்.
என் வீட்டில் குயிலின் குரலைக் கேட்காமல் வாழமுடியாது. காலை முழுக்க அணில்கலின் கிச் கிச் ஒலியும் மதியம் குயிலோசையும் கேட்டுக்கொண்டே இருக்கும். பக்கத்து நிலத்தின் நிழல்பரப்பி நிற்கும் தென்னைகளுக்குள் குயில்கள் இருக்கின்றன. குயிலின் குரலை மதியம் — பகல் தூக்கத்தின் மயக்கத்தில் – கேட்கும்போது என்னென்ன எண்ணங்கள். விசித்திரமான ஓர் ஏக்கம்.
ஏனென்றால் குயிலின் குரலுக்குள் ஒரு கேள்வி உள்ளது. ஒவ்வொரு பறவையின் குரலுக்கும் ஒரு தொனி. சிட்டுகுருவிகள் ‘ஹை’ என்று துள்ளுகின்றன. ஆந்தை ‘ஏய்’ என்று அதட்டுகிறது. காக்கை சம்ஸ்கிருதத்தில் ‘ஏன்?’ என்று துணுக்குறுகிறது. ஆனால் குயில் மன்றாடுகிறது. ‘நீயா?’ என்கிறது ”நீதானே?” மீண்டும் ”நீயா?” மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அத்தனை பிடிவாதமான தீராத மன்றாட்டை நாம் வேறு எந்தப்பறவையிலும் கேட்க முடிவதில்லை. பதில் பெறாத ஏக்கம் ததும்பும் அந்த குரல்தான் கவிஞனை அதனுடன் நெருங்கச்செய்கிறது. அவனும் பதில்பெறாத பாடகன் அல்லவா? குயிலின் குரல் செவிக்குப் பழகிய நாம் கடந்துசென்றுவிடுகிறோம். குழந்தைகள் குயிலின் கேள்வியின் சோகத்தால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் உடனே பதிலுக்கு ”கூஉ ” என்று குரல் கொடுக்கின்றன. வேறு எந்தப்பறவையும் அப்படி பதில் பெறுவதில்லை.
ஆனால் குயில் தேடும் பதில் அது அல்ல. நாம் குயில் சொல்வதையே திருப்பிச் சொல்கிறோம் ”நீயா? என்கிறோம். மீண்டும் ”நீதானா?” என்கிறோம். குயில் செவிகொடுக்கிறது. ஓரிருமுறை கேட்டுப்பார்க்கிறது. பின்பு பறந்து சென்றுவிடுகிறது. தன் தாபம் கேலிசெய்யபப்ட்டதாக உணருமோ என்னவோ?
அது போன பின்பும் குழந்தை கூவிப்பார்க்கிறது. கூ.. நீயா? பதில் இல்லை. பதில் இல்லாத மரக்கூட்டங்களைப் பார்த்து எதிர்பார்ப்புடன் மீண்டும் மீண்டும் ”நீயா?” என்கிறது குழந்தை. எரிச்சலுடன் ”நீதானா” என்கிறது. மரக்கூட்டங்கள் மௌனமாக மூச்சுவிடுகின்றன.
அஜிதனும் சைதன்யாவும். வந்து மேலே விழுந்து புரண்டு உலுக்கி என்னை எழுப்பினார்கள். அதிலும் அறடி உயரமான அஜிதன் மேலே வந்து உட்கார்ந்தால் மூச்சுதிணறுகிறது. எழுந்து குளித்ததும் வழக்கமான மாலைநடைக்குச் செல்லலாம் என்றார்கள். அஜிதன் அவனது தூரநோக்கியை எடுத்துக்கொண்டான். அது இல்லாமல் அவன் வெளியே செல்வதில்லை. எந்நேரமும் பறவைகளுக்காக காத்திருக்கும் கண்கள்.
பாறையடி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வெயில்சரிந்துவிட்டாலும் நல்ல வெப்பம். மலைகள் மேல் கானல் அலையடித்தது. எங்கும் குயிலின் குரலே கேட்டுக்கொண்டிருந்தது. ”ஏண்டா எங்க பாத்தாலும் குயிலா கேக்குது?”என்றேன். ”கோடைகாலத்திலே குயில் அதிகமாக்கூவும் அப்பா” என்றான் ”இதான் அதோட இனப்பெருக்க காலம்… மார்ச் முதல் ஆகஸ்ட் வரை…ஆகஸ்டிலே நமக்கு இங்க நல்ல மழைங்கிறதனால மழைக்காலத்திலேயும் குயில் கூவும் ”
‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்ற நூலை நினைவு கூர்ந்தேன். மா.கிருஷ்ணன் எழுதி தியடோர் பாஸ்கரன் தொகுத்த கட்டுரைகள். இயற்கை குறித்த நுண்ணிய தகவல்கள் எளிய மொழியில் சொல்லப்பட்ட அபூர்வமான நூல் அது. அதன் வழியாகத்தன் அஜிதனுக்கு பறவைகள், மிருகங்கள், செடிகள் பற்றிய ஆர்வமே வந்தது.
”நான் குயிலைப்பாத்தே ரொம்பநாள் ஆகுதுடா” என்றேன். ”அது ரொம்ப வெட்கமான பறவை அப்பா. எப்பவும் புதருக்குள்ளேதான் இருக்கும். வெயில் அதுக்குப் பிடிக்காது…அதோட உணவும் இலைகளுக்குள்ளேயே கிடைச்சிரும். அதிகமும் கொட்டைகள் பழங்கள்தான். பிரசவத்துக்கு புரோட்டீன் வேனுமேன்னுட்டு பெண்குயில்மட்டும் கஷ்டப்பட்டு இலைகளுக்கு அடியிலே இருக்கிற புழுக்களை திங்கும்……”என்றான் அஜிதன்.
நான் ”இதை இண்டியன் குக்கூன்னு சொல்றாங்களா?” என்றேன். ”பல புஸ்தகங்களிலே அப்டி தப்பா போட்டிருக்கு. இண்டியன் குக்கூங்கிறது வேற. அதுவும் கூவும். ஆனா அது சின்னது. அது நான்-வெஜிடேரியன். புழுக்களைத்தான் அதிகம் சாப்பிடும். குயிலை ஆசியன் குயில்னுதான் சொல்றாங்க. இது இன்னமும் பெரிசு…” என்றான் அஜிதன். ”அதை குயில்னும் இதை கோகிலம்னும் சொல்றாங்கன்னு படிச்சேன்…” என்றான். Eudynamys scolopacea என்ற பறவையியல்பெயர் கோண்ட குயில் Asian Koel என்று அழைக்கப்படுகிறது.
”அங்கபார்…அந்த மஞ்சணாத்தி மரத்திலே” என்றாள் சைதன்யா. ”கொண்டா அஜி கொண்டா அஜி” சைதன்யா தூரநோக்கியை வைத்துப் பார்த்து ”ஒரு ஆண்குயில் இருக்கு…கூவிட்டிருக்கு”என்றாள். அஜிதன் வாங்கி கூர்ந்து நோக்கினான். ”அதுக்கு கொஞ்சமேலே ஒரு பெண்குயில் இருக்கு அப்பா” என்றபின் எனக்கு நீட்டினான்
நான் பதற்றத்துடன் வாங்கினேன். கொஞ்சநேரம் ஒன்றும் தெரியவில்லை. என் கண்குறைபாட்டுக்கு நிகராக தூரநோக்கியை சரிசெய்ய வேண்டியிருந்தது. ஒலிம்பிக் நிறுவனத்தின் எக்ஸ்புளோரர் ரக தூரநோக்கி அது. பத்தாம்வகுப்பு வெற்றிக்காக நான் அஜிதனுக்கு மூவாயிரம் ரூபாயில் வாங்கிக்கொடுத்தது. கைக்கடக்கமானது என்றாலும் கூரியது
மெல்ல தூரநோக்கி கூர்மை கொள்ள தெளிந்துவந்த குயிலைப்பார்த்தேன். கருவறை திறந்து மூலவிக்ரகம் தெரிவதுபோல ஒரு பரவசமும் பதற்றமும். அந்த பரவசமே அதை கொஞ்ச நேரம் பார்வையில் இருந்து மறைத்தது. மெல்ல மெல்ல சமனப்பட்டு அதைக் கவனித்தேன். காக்காவுக்கு தம்பி. கரிய நிறமான முதுகு. கொஞ்சம் தவிட்டுநிறம் கலந்திருந்ததோ என்றும் ஐயமாக இருந்தது. சிவந்த கண்கள். நுனிவளைந்த அலகு. அலகை மேலே தூக்கிப்பிளந்து, சிவந்த உள்வாய் தெரிய, எக்கி எக்கிப் பாடிக்கொண்டிருந்தது. பாடும் குயிலை நான் பார்ப்பது நாற்பத்தேழு வயதில் அதுவே முதல்முறை.
மேலே தூக்கி இன்னொரு கிளையில் மௌனமாக இருந்த பெண்குயிலைப்பார்த்தேன். கருப்பில் வெள்ளைப்புள்ளிகள் போட்ட புடவையை உடுத்தி முக்காடு போட்டுக்கொண்டு ஒரு அம்மாள் உம்மென்று அமர்ந்திருப்பது போல் இருந்தது. ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்த வேற்றுமையே ஆச்சரியமாக இருந்தது. பெண்ணுடலில் இறகுகளில் வெண்புள்ளிகள். அலகு இன்னும் கொஞ்சம் சின்னது போல. ஆனால் பெண் ஆணைவிட கொஞ்சம் பெரிது போல் இருந்தது.
விசித்திரமான திமிர் பிடித்த பெண். பிற பெண் உயிர்களுக்கு என்னென்ன பொறுப்புகள், துயரங்கள். முட்டைபோட்டு, இரைதேடி, வளர்த்து, பறக்கச் சொல்லிக்கொடுத்து, வானில் ஏற்றி விடவேண்டும். இதற்கு ஒன்றுமே கிடையாது. முட்டைபோடுவதுடன் சரி. காகம் கட்டிவைத்திருக்கும் கூட்டில் அது இல்லாதபோது போய் முட்டைபோட்டுவிட்டு வந்துவிடும். குஞ்சுகள் காக்கைக்குஞ்சுகளாக பிறந்து காக்கையம்மாவிடம் உண்டு வளர்ந்து, மெல்லமெல்ல தங்களை குயில் என்று கூவியுணர்கின்றன.
அழகான பெண்ணும் இல்லை. கம்பீரமும் இல்லை. அந்த வெள்ளைப்புள்ளி தோற்றமே எனக்குப் பிடிக்கவில்லை. உட்கார்ந்திருப்பதிலேயே ஒரு மதமதப்பு. சிறகுகளை பம்மி விரித்து கழுத்தை உப்பியபின் மீண்டும் இடுக்கிக் கொண்டது. அலகால் சிறகிடுக்கை நீவியது.கீழே அதை நோக்கி ஆண்குயில் கூவிக்கொண்டே இருந்தது. நெஞ்சே உடைந்துவிடும்படி. உள்ளூரத்தேங்கிய கடைசிச் சொட்டுப் பாடலையும் வெளியே கொட்டிவிடவேண்டும் என்பது போல. ஆனால் பெண்குயில் அதைக் கேட்பது போலவே தெரியவில்லை.
”அப்பா எவ்ளவு நேரம்..குடு”என்று சைதன்யா தூரநோக்கியை பிடுங்கினாள். அந்த அசைவில் ஆண்குயில் பறந்து சென்றது. நான் கோபமகா சைதன்யாவை பார்த்தேன். ”அது அப்டித்தான் அப்பா ரொம்ப வெட்கம் அதுக்கு”என்றான் அஜிதன். ”ஆனா அனேகமா பொம்பிளை பறக்காது…அது பேசாம உக்காந்திருக்கும்” ஆமாம் பெண் அப்படியேதான் இருந்தது. அது இருக்குமிடமே தெரியவில்லை. தூரத்திலிருந்து பார்க்கையில் ஒரு தேன்கூடு அது என்று தோன்றியது
அங்கேயே அசையாமல் நின்றுகொண்டிருந்தோம். குயில் பறந்து வந்தது. பக்கத்து பனைமீது சிறகு மடக்கி இருந்தது. பின்னர் மீண்டும் அதேமரத்தின் இன்னொரு கிளையில் வந்து அமர்ந்தது. மீண்டும் அதே துயரமும் ஏக்கமும் நிறைந்த பாடல். மீண்டும் மீண்டும். பிடிவாதமாக. அந்த ஏக்கம் இதனால்தானா?
மெல்ல நடந்துசென்றோம். மாலைமயங்க ஆரம்பித்திருந்தது. எங்கும் குயிலோசை. இன்னொரு குட்டைப்பனையின் உள்ளே ஒரு குயிலைப்பார்த்தேன். அருகே பெண் இல்லை. இருக்கலாம், கண்ணுக்குப் படவில்லை. அந்திசிவக்கையில் குயிலோசையைக் கேட்க விதவிதமான நினைவுத்துணுக்குகள் உள்ளே உருகி உருகி ஓடிக்கொண்டிருந்தன.
http://www.birding.in/birds/Cuculiformes/Cuculidae/asian_koel.htm
http://www.pbase.com/robert/image/35109699
‘மழைக்காலமும் குயிலோசையும்’. மா.கிருஷ்ணன். தொகுப்பு சு. தியடோர் பாஸ்கரன். காலச்சுவடு பிரசுரம்
[ மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009]