அன்புள்ள ஜெ
இரண்டாவது பதிவுகளில் ஜெயமோகனின் வழக்கமான சமநிலை (equillibrium)காணப்படவில்லை. அவர் கருத்தை விட்டு ஆளைத் தாக்குவதாகத்தான் எனக்குத்தெரிகிறது. உதாரணத்துக்கு ஒன்று – “கூடவே பகவத் கீதைபற்றி. நான் பகவத்கீதைபற்றி என்ன எழுதியிருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது. அதுஅவருக்குக் கடினம் என்றால் வாய்திறக்காமலிருக்கும் நிதானமும் இல்லை.போகிறபோக்கில் ஒரு வரி. இதைச்சொல்ல எதற்குப் பின்நவீனத்துவ ஃபார்முலா?நெல்லையப்பர் தேரடியில் எம்.டி.முத்துக்குமாரசாமி சின்னவயசில் கேட்ட திகபேச்சாளரே போதுமே. பின் நவீனத்துவமே ஆனாலும் நமக்கு கோட் சூட் போட்ட தி.க குஞ்சுதான் அமையுமா என்ன?”
ஜெயமோகன் தளம்தானா என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துவிட்டது.”எம்டிஎம்மின் விமர்சன தளம்” பதிவு முழுவதும் இந்த மாதிரி தொனியில் நிறையஇருக்கிறது. சாதாரணமாக ஜெயமோகன் தன ஸ்டைலில் விவாதிக்கும் பதிவாகத்தெரியவில்லை, ஒரு ஆங்காரமும் கோபமும் பத்திக்குப் பத்தி தெரிகிறது.
வழக்கமாக தரவுகளைக் கொடுப்பவர் ஜெயமோகன். இந்த முறை எதையும் காணவில்லை.இந்தப் பதிவு பாரதியாரைப் பற்றி எம்டிஎம் மறுத்ததைத் தாண்டி எம்டிஎம்சொன்ன பல கருத்துகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் என்ன சொன்னார் என்றுதான்தெரியவில்லை. போன மேற்கோளையே எடுத்துக் கொள்ளுங்கள். பகவத் கீதை பற்றி எம்டிஎம் என்ன அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டார்? அவரது பாரதியார்பதிவில் நிச்சயமாக எதுவும் இல்லை. “நாம்தான் பகவத் கீதையைப்படித்துக்கொண்டு, வியாபார கழிசடை சினிமாவிற்குக் கதை எழுதிக்கொண்டு,நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம் தட்டிக்கொண்டுஉட்கார்ந்திருக்கிறோமே நாம் எப்படி மயிலை வேணு மூலமாக குணங்குடிமஸ்தானின் பாடல்கள் எதிர்க்கலாச்சாரத்தன்மை பெற்றன என்றுஅறியப்போகிறோம்?” இது மட்டும்தானா?
அது இந்தப் பதிவில் –http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_08.html –
இடம் பெறும் ஒரு வரி. இதை உங்களைத்தான் குறிப்பிட்டு சொன்னதாக எடுத்துக்கொள்வது எப்படி? ஒரு வேளை எம்டிஎம்முக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்புகாரணமாக உள்குத்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் புரிந்து
கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் நீங்கள் benefit of doubtகொடுப்பீர்கள், நேரடியாக சொல்லாததைப் பொருட்படுத்தாமல் புறம் தள்ளுவீர்கள்என்பதுதான் என் அனுபவம். (நேரடியாகத் திட்டினாலே புறம் தள்ளுவதைப் பல முறைபார்த்திருக்கிறேன்.) இது over-reaction ஆகத் தெரிகிறது. இந்தப் பதிவு பாரதியார் மறுப்புக்கு முன்னால் எழுதப்பட்டது என்பதைக் கவனித்தீர்களாதெரியவில்லை.
மிகவும் வியப்பளித்தது எம் டி எம் விலகினார் என்று வருத்தம் தெரிவித்தபதிவுதான். அப்படி நான் இணையத்தில் எதையும் படிக்கவில்லை. சரிதெரிந்தவர்கள், ஃபோனில் பேசி இருப்பார்கள், ஈமெயில், எஸ்எம்எஸ் ஏதாவது
அனுப்பி இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். இன்று எம்டிஎம் நான் விலகினேனா, எப்போது என்று கேட்டு எழுதி இருக்கிறார்
ஆர்வி
அன்புள்ள ஆர்வி,
இந்த விவாதத்தை நீங்கள் எந்த அளவுக்குப் பின்தொடர்கிறீர்கள் என்று தெரியவில்லை. எப்படியானாலும் நீங்கள் நினைப்பதைவிட இதன் உள்ளுறைகள் அதிகம்.
சிந்தனைத்தளத்தில் செயல்படும் ஒருவன் எதிர்த்தரப்பை கவனமாகவே தேர்வுசெய்யவேண்டும். என்னைப்பற்றி இணையத்திலும் இதழ்களிலும் பக்கம்பக்கமாக என்னென்னவோ எழுதப்பட்டுள்ளன. வசைகள் அவதூறுகள் கொஞ்சம் எதிர்விமர்சனங்கள். பெரும்பாலானவற்றை நான் வாசிப்பதே இல்லை. வாசிக்கும் விமர்சனங்களில் இருந்துகூட எதிர்வினையாற்றத் தக்க ஒருவரைக் கண்டுகொள்ளவில்லை.
எம்.டி.முத்துக்குமாரசாமியை நானேதான் தேர்வுசெய்தேன். அதற்கான காரணங்களையும் சொல்கிறேன். அவர் என்ன சொல்கிறாரோ அந்தத் தளத்தில் தமிழில் அவர் ஒரு முதன்மை அறிஞர். தனக்கென ஒரு மொழிநடை கொண்டவர். நினைப்பதைச் சொல்ல மொழித்திறன் அமையாத ஒருவர் எதையும் யோசிப்பதே இல்லை, பிரதிபலிக்கத்தான் செய்கிறார் என்பது என் எண்ணம். முக்கியமானது, அவரால் புனைவிலக்கியத்தின் உள்ளோட்டங்களைப் புரிந்துகொள்ளமுடியும். அவர் தொடர்ந்து எழுதினாரென்றால் கவிதையும் அங்கதமும் சந்திக்கும் ஒரு புள்ளியைத் தொடக்கூடியவர்- ப.சிங்காரம் போல. இன்று நம்மில் பலர் பின்நவீனத்துவப் பகடி என நினைத்துக்கொண்டிருக்கும் குப்பைகளை ஒதுக்க ஒரு முகாந்திரமாக அமையும் படைப்புகளை அவரால் அளிக்கமுடியும் என நினைக்கிறேன்.
நம்மூரில் கோட்பாடு பேசுபவர்கள் கொஞ்சம்கூட உணர்ந்துகொள்ளாத விஷயம் படைப்பியக்கம். அவர்களுக்குக் கருத்துக்கள்தான் இலக்கியப்படைப்பு. ஒரு துண்டுப்பிரசுரத்துக்கும் கவிதைக்கும் வேறுபாடுண்டு என்பதை அ.மார்க்ஸ் புரிந்துகொண்டிருப்பதற்கான தடயம் இதுவரை அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறதா? அரிசிச்சோறுதான் உலகிலேயே சிறந்த உணவு என நம்புகிறவன் கோதுமையை விரும்பிச்சாப்பிடுவதாகக் கனவுகண்டு புரியாமல் திகைப்பதுபோன்ற சிக்கல்கள் கொண்டது புனைவெழுத்து. அதை இவர்களுக்கு விரித்துரைக்க முடியாது. எம்.டி.முத்துக்குமாரசாமியின் நாடகங்களை வைத்து அவரால் அதைப் புரிந்துகொள்ளமுடியும் என நான் நினைக்கிறேன்.
இத்தனை வருடம் சிந்தித்து எழுதி வந்த இந்தப்பரிணாமத்தில் என்னை நானே மதிப்பிட்டுக்கொள்ள, என் எழுத்துக்களை மறுபரிசீலனை செய்ய எனக்கு ஒரு மறுதரப்பு தேவையாகிறது. ஆகவேதான் இந்த விவாதத்தை நடத்துகிறேன். அவரை மாற்றவோ வெல்லவோ அல்ல. நான் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கும் ரசனை விமர்சன மரபும் சரி அவர் கொண்டிருக்கும் மொழியியல் ஆய்வுமரபும் சரி முற்றிலும் மாறுபட்ட இரு தளங்களைச் சேர்ந்தவை. அவற்றுக்கிடையேயான விவாதம் எங்குமே முடிவுக்கும் வந்ததில்லை.
இந்த விவாதத்தை ஆரம்பிக்கும்போது முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருந்தன. தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக என் மீது சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. என் கருத்துக்கள், படைப்புக்கள் எவற்றையுமே பொருட்படுத்தாமல் என்னைத் தங்களுக்கு வசதியான எதிரியாகக் கட்டமைத்துக்கொள்ளும் நோக்குடன் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் அவை. அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதனால் அவற்றுடன் விவாதிப்பதில் எனக்கு பயனேதும் இல்லை.
அந்தச் சித்தரிப்புகளின் நாசூக்கான வடிவத்தையே எம்.டி.முத்துக்குமாரசாமி அவரது குறிப்புகளில் சொல்லியிருந்தார். உதாரணமாக, இந்தியதேசியம் பற்றிய அவரது வரி. இந்தியதேசியம், சந்தைப்பொருளியல், ரசனைவிமர்சனம் மூன்றையும் ஒரேசொற்றொடரில் ஏற்றி அவர் சொன்னதன் அடிப்படையான தர்க்கப்பிழையை சாதாரணமாக சிந்திக்கும் எவரும் அறியமுடியும். நான் அதைத் தெளிவாக உடைத்துத் தனித்தனி வாதங்களாக ஆக்கி பதில் சொல்கிறேன்.
அதில் உள்ள உட்குறிப்பு ஆபத்தானது. நான் இந்தியதேசியத்தை முன்வைக்கிறேன், இந்தியதேசியம் இறந்தகாலபுனிதங்களில் கட்டமைக்கப்பட்டது, இறந்தகாலம் இந்து அடிப்படைவாதத்தால் ஆனது, ஆகவே நான் இந்து அடிப்படைவாதி, இந்து அடிப்படைவாதத்தை இலக்கிய அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன் , அதனடிப்படையில் எல்லாப் பிற பண்பாட்டுக்கூறுகளையும் அழிக்கநினைக்கிறேன் — இவ்வாறு இதைக் கட்டி எழுப்பிக்கொண்டே சென்று ‘அடப்பாவி குஜராத்திலே பச்சப்புள்ளைய கொன்னவன்தானே நீயி? ’ என்ற வகையில் முடிக்கமுடியும். தீராநதி விவாதத்தில் இதை இப்படியே அ.மார்க்ஸ் செய்ததை நினைவூட்டுகிறேன். இந்தியதேசிய உருவகம் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்ட முற்போக்கான ஒன்றாக இருக்கமுடியும் என்றோ இந்துமரபுக்குள் எதிர்ப்போக்குகள் உண்டு என்றோ அ.மார்க்ஸிடம் சொல்லிப் புரியவைக்கமுடியுமா என்ன?
இங்கே, அந்தவகையான எல்லா சம்பந்தமில்லாத முத்திரைகளையும் விவாதங்களையும் முதலிலேயே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆகவேதான் ஒன்றுவிடாமல் அனைத்துக்கும் விளக்கம் அளித்து விவாதக்களத்தைக் குறிப்பாக ஆக்கினேன். அது திட்டவட்டமாக நிறுவப்படவேண்டும் என்பதற்காகவே அழுத்தியும் வேகமாகவும் சொன்னேன். அதில் கோபம் ஏதும் இல்லை. கோபம் இருந்தால் அது எம்.டி.முத்துக்குமாரசாமி மீதும் இல்லை. என்னுடைய மொத்த சிந்தனையையே சல்லிசாக ஆக்குபவர்கள்மீதுதான்.
தனிப்பட்டமுறையில் தாக்குதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஃபோர்ட் ஃபவுண்டேஷன் பற்றிய குறிப்பு தனிப்பட்ட தாக்குதல் அல்ல. எம்.டி.முத்துக்குமாரசாமி இன்ஃபோசிஸில் வேலைபார்த்திருந்தால் அது வேறு விஷயம். ஃபோர்டு ஃபவுண்டேஷன் உலகம் முழுக்க ஒரு கருத்தியலைப் பரப்பக்கூடிய நோக்கம் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. ஏகாதிபத்திய அரசியல் உள்ளுறை கொண்டது. இந்தியாவிலும் பர்மாவிலும் பிரிவினைக் கருத்தியல்களுக்குப்பின்னால் அதன் நிதியுதவித்திட்டங்கள் உள்ளன. நாட்டார்கலை, பழங்குடிப்பண்பாடு மீதான அதன் ஆர்வம் உள்நோக்கம் கொண்டது
சமீபத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருந்ததிராய் வைத்த முதன்மைக்குற்றச்சாட்டே அவர் ஃபோர்டு பவுண்டேஷனுடன் தொடர்புள்ளவர் என்பதுதான் என்பதை நினைவுகூர்வீர்கள். அவரால் அதை நிரூபிக்க முடியவில்லை. மக்சசே விருது அளிக்கும் நிறுவனத்திற்கு ஃபோர்டு ஃபவுண்டேஷன் உதவியிருக்கிறது என்று மட்டுமே சொல்லமுடிந்தது. அவர் அதை நிரூபித்திருந்தால் அது கண்டிப்பாகப் பெரிய குற்றம்தான்
எம்.டி.முத்துக்குமாரசாமி ஃபோர்டு பவுண்டேஷனில் வெறுமே வேலைபார்க்கவில்லை. அதன் ஆலோசகராக அதன் பணிகளைத் திட்டமிட்டு நடத்தியவர், அதன் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவர். அந்நிலையில் இது ஒரு கருத்துக்களின் ethics சார்ந்த பிரச்சினையாக ஆகிவிடுகிறது. இலக்கியம்பற்றி, அமைப்புவாதம் பற்றி அவர் பேசுவதில் அதற்கு இடமில்லை . ஆனால் இந்தியதேசியம் பற்றிய இறுதிக்கூற்றாக ஒன்றை ஒருவர் பொதுவெளியில் முன்வைக்கும்போது அவரது அந்தப்பின்னணி முக்கியமானது.
காலையில் நான் எழுந்ததுமே எம்.டி.முத்துக்குமாரசாமி விவாதத்தில் இருந்து விலகிவிட்டார் என்ற வகையில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள். உண்மையில் எனக்கு அது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் விவாதத்தின் மூலம் பயனடையப்போவது நான்தான் என நான் அறிவேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் பற்றிய கூற்றை அவர் தற்காத்து வாதிடுவார் என நினைத்தேன். ஏனென்றால் அது ஒரு முக்கியமான விவாதப்பொருள். வருத்தப்பட்டு விலகுவாரென நினைக்கவில்லை. ஆகவேதான் என் விளக்கத்தை அளித்தேன்
இந்த விவாதத்தை வறண்ட மொழியில் வெறும் கோட்பாட்டு விமர்சனமாக ஆக்க விரும்பவில்லை. அப்படியென்றால் தமிழவனை அல்லவா தேர்வுசெய்திருப்பேன். நக்கலும் கேலியுமாகவே எம்.டி.முத்துக்குமாரசாமி என்னைப்பற்றி எழுத ஆரம்பித்தார் . அதுவே அவரது இயல்பு. அவ்வாறு எழுதும்போதே அவர் எம்.டி.எம். அதையே நானும் தொடர்ந்தேன். இத்தகைய விவாதங்களில் அதுவும் உலகமெங்கும் உள்ள வழக்கம்தான். கடைசியில் நல்ல நாலைந்து சொற்றொடர்களை இருவரும் உருவாக்கியிருந்தால் சரி.
இப்போது எம்.டி.முத்துக்குமாரசாமி நான் விவாதிக்கநினைக்கும் புள்ளிக்கே வந்துவிட்டார். அது மகிழ்ச்சிதான் அளிக்கிறது.
ஜெ