ஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’

புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியானநேரத்தில் வேலைக்குபோய் அதேபோலவே திரும்பும் மனித யந்திரமான சுப்பையா பிள்ளையின் வாழ்க்கையின் அர்த்தமின்மையை துணுக்குறச்செய்யும்படி சொன்ன கதை அது. அசாதாரணமானவர்களே இலக்கியநாயகர்களாகமுடியும் என்ற மரபார்ந்த நம்பிக்கையை தாண்டி எந்தவிதமான தனித்துவமும் இல்லாதவரும் கோடிகளில் ஒருவருமான ஓர் ‘அற்ப ஜீவி ‘யின் வாழ்க்கையைச் சொன்னதன்மூலம் அதன்பின்னால் உருவாகிவந்த யதார்த்தவாதத்துக்கும் நவீனத்துவத்திற்கும் வாசல்திறந்த கதைகளில் ஒன்று அது.

சுப்பையாபிள்ளையின் வாழ்க்கையில் உள்ள இயந்திரகதியை சொல்லும் கதையாகவே அதை கணிசமான வாசகர்கள் கவனித்திருப்பார்கள். ஆனால் மிகச்சில சொற்களில் புதுமைப்பித்தன் அந்த அற்பஜீவிக்குள் கொந்தளிக்கும் பகற்கனவுகளின் ஓர் உலகத்தை சொல்லிச்சென்றிருப்பார். அது அக்கதைக்கு அபாரமான ஓர் ஆழத்தை அளிப்பதைக் காணலாம். ரயிலில் சுப்பையாபிள்ளையின் முன் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி வந்து அமர்கிறாள். அவளை நுட்பமாகக் கவனிக்கும் சுப்பையாபிள்ளையின் ஆண்விழிகள் மூலம் அவளது தோற்றம் அளிக்கப்படுகிறது. அவளைப்பார்த்ததுமே பிள்ளைவாள் தன் சவரம்செய்யப்படாத முகத்தைப்பற்றி எண்ணுகிறார். அவள் கால் தன் காலில் பட்டதும் துணுக்குறுகிறார். அவளை தன் மகளுடன் ஒப்பிட மனம் மறுக்கிறது. ரயில் ஓட ஓட பகல்கனவில் சுப்பையாபிள்ளை அந்தப்பெண்ணை பல விபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறார், வீரநாயகனாக ஆகிறார்.ரயில் நின்றதும் பழைய பிள்ளை. சாமானியன் என்றாலும் மனம் அந்த எல்லைக்கு அப்பால்தான் ஓடுகிறது.

ஆர். விஸ்வநாத சாஸ்திரி எழுதிய தெலுங்கு நாவலான ‘அற்ப ஜீவி ‘ புதுமைப்பித்தன் இறந்து பத்து வருடம் கழித்து எழுதப்பட்டது. 1973ல் வாசகர் வட்ட வெளியீடாக பி.வி.சுப்ரமணியம் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தனின் சுப்பையாபிள்ளையின் மறுவடிவம் இதன் கதாநாயகன் சுப்பையா. ‘சுப்பையா அழகானவன் அல்ல – இது சுப்பையாவின் அபிப்பிராயம். சுப்பையா சுத்த உதவாக்கரை – இதுவும் சுப்பையாவின் அபிப்பிராயமே ‘என்று தொடங்கும் நாவல் சுப்பையா என்ற சர்வசாதாரணனின் குணச்சித்திரத்தையும் வாழ்க்கையையும் விவரித்தபடி விரிகிறது. சிறுவயதில் சுப்பையா அவனுடைய சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்ந்தான். அவன் தன் அப்பாவுடன் இரவில் வெளியே செல்லும்போது அவனால் அறிய முடியாத ஏதோ காரணத்துக்காக யாரோ அவரை அடித்துப் போடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். அது ஒரு கொடும் கனவாக அவன் மனதில் நிறைகிறது. அடிக்கடி படுக்கையை நனைக்கும் அழுது கண்ணீர் விடும் குழந்தையாக அவன் வளர்கிறான்.

சுப்பையாவால் எவரையும் எதிர்த்துப் பேசமுடியாது. ஏன் தன் கருத்தையே பிறரிடம் சொல்ல முடியாது. தன்னிடம் ஒருவர் பேசுவதையே அவன் ஒரு கௌரவமாகத்தான் எடுத்துக் கொள்வான். எங்கும் எதிலும் தயக்கம். என்ன நடந்துவிடுமோ என்ற அச்சம். கவனமாகவும் கடுமையாகவும் உழைப்பான். ஆனாலும் அவனுக்கு எங்கும் இடமில்லை. ‘டெஸ்பாட்ச்’ துறையில்தான் அவனுக்கு எப்போதும் இடம். ஆபீஸின் அகடவிகடர்கள் அத்தனைபேராலும் அதட்டப்படும் எள்ளி நகையாடப்படும் உயிர். சாவித்ரி அவனுக்கு எப்படியோ அமைந்துவிட்ட அழகான மனைவி. ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவள். வறுமையின் காரணமாக அவள் அண்ணா வெங்கட் ராவ் அவளை அவனுக்கு கல்யாணம்செய்து வைக்கிறான். அப்படி அவன் கேட்டதே சுப்பையாவுக்கு பெருமை. கல்யாணப்பந்தலில் பெண்ணைப்பார்த்தவன் தன் அதிர்ஷ்டத்துக்காக மனம் களிக்கிறான். சாவித்ரி அதுவரை ஓர் அரசிளம்குமரன் தன்னை கைப்பிடிப்பான் என நம்பியவள். தன்னை மணம்செய்யத் துணிந்தமைக்காக அவள் கணவனை மன்னிக்கவேயில்லை.

வீட்டுக்குள் சுப்பையாவுக்கு இடமில்லை. அவனுடைய இடம் திண்ணைதான். அவனுக்கு இரு குழந்தைகள். இரண்டுமே அம்மாவைக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நோக்கிலும் அவன் சாதாரணமானவன். ஆனால் அவனுக்கு ஓர் உலகம் இருக்கிறது. பகல் கனவுகளின் உலகம். அவன் அதுவரை கண்டே இராத அன்னையை நினைத்துக்கொண்டு அவள் மகா உத்தமி , கடுமையான கஷ்டங்களை அனுபவித்தாள் என்று கற்பனை செய்து கண்கலங்குவான். திண்ணையில் அமர்ந்துகொண்டு தெருவில் போகிறவர்களை வேடிக்கை பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைப்பின்னணியை அவனே கற்பனைசெய்துகொண்டு அதில் திளைத்து வாழ்வான். அவனுடைய கோழைத்தனம் மற்றும் கூச்சம் காரணமாக பிறரால் அவனுக்கு மறுக்கபப்ட்ட சமூக வாழ்க்கையை சுப்பையா அங்கே அனுபவிக்கிறான்.

ஆபீஸின் அதிகார ஆட்டம் காரணமாக சுப்பையா பில்களை சரிபார்க்கும் பகுதிக்கு மாற்றம் செய்யபடுகிறான். அகடவிகடனான மைத்துனன் வெங்கட் ராவ் சுப்பையாவை தேடிவருகிறான். காண்டிராக்டர் கவரையாவிடம் ஐநூறு ரூபாய் கேட்டு வாங்கி கொடுக்கச் சொல்கிறான். அவன் கேட்டதே சுப்பையாவுக்கு கௌரவமாக இருக்கிறது. அண்ணாவின் கோரிக்கையை தட்டகூடாது என்று மனைவியும் சொன்னாள்.ஆனால் அந்தப்பணம் ஏன் எதற்காக அளிக்கப்படுகிறதென்பதெல்லாம் சுப்பையாவுக்கு தெரியாது. அவன் தயங்க வெங்கட் ராவ் அவனை வற்புறுத்து உந்தி செலுத்துகிறான். கடுமையான குழப்பமும் தயக்கமுமாக சுப்பையா கேட்டே விடுகிறான். பணம் கையில்வருகிறது. அதை வெங்கட் ராவ் வாங்கிச்செல்கிறான்.

ஆனால் ஆபீஸில் விஷயம் தெரிகிறது. லஞ்சப்போட்டியில் சுப்பையாவுக்கு முன் அந்த இருக்கையை அலங்கரித்திருந்தவரை நீக்கி தன் சொல்பேச்சு கேட்பான் என சுப்பையாவை அங்கே நியமித்த ஹெட் கிளார்க் ராமசாமி கோபமடைகிறார். சுப்பையா மீண்டும் டெஸ்பாட்சுக்கே வருகிறான். கவரையா பணத்துக்காக மிரட்ட குலைநடுங்கிப்போய் அவன் வெங்கட் ராவைப் பார்க்க அலைகிறான். வெங்கட் ராவ் பணம் தர முடியாது என்று சொல்லும்படிச் சொல்கிறான். அது சுப்பையாவின் கற்பனைக்கே அப்பாற்பட்டது. அப்படி சொல்லும்பொருட்டு சுப்பையா கொள்ளும் மனப்போராட்டமும் அவ்பனது மனநாடகங்களும்தான் நாவலின் மையப்பகுதி. கடைசியில் சுப்பையா சொல்லியே விடுகிறான். அதை அவனாலேயே நம்ப முடியவில்லை.

கவரையா சுப்பையாவை கடத்திக்கொண்டுபோய் ஆயிரம் ரூபாய்க்கு பத்திரம் எழுதிவாங்குகிறான். ஆனால் அதற்குள் மனக்குழப்பம் அடைந்து திரியும் சுப்பையாவை கவர்ந்து தன் பிடிக்குள் கொண்டுவரும் மனோரமா என்ற பாலியல்தொழில்செய்யும் பெண் கவரையாவிடம் பேசி அந்த இக்கட்டிலிருந்து அவனை மீட்கிறாள். மேலும் பெரிய ஒரு சிக்கலுக்குள் சுப்பையா நுழையும் இடத்தில் நாவல் முடிகிறது.

இந்நாவலின் முக்கியமான அம்சம் இதில் சுப்பையாவின் மனம் சொல்லபப்ட்டிருக்கும் விதம்தான். சுப்பையா சொல்லாத சொற்களெல்லாம் அவனுள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒரு எல்லைக்கோட்டுக்கு அப்பால் சுப்பையா சொல்லிழந்து நிற்கிறான். இப்பால் ஓயாது பேசிக்கொண்டிருக்கிறான். அவனது கற்பனையில் அவனுக்கு சாதகமாக எல்லாமே நிகழ்கிறது. சுப்பையா வெற்றிகுடி சூடிக்கொண்டே இருக்கிறான். தன் தோல்விகளை எல்லாம் சுப்பையா அங்கே வெற்றிகளாக மாற்றி சுவைத்துக் கொண்டிருக்கிறான். இது ஒருபக்கம் மட்டுமே

இன்னொரு பக்கம் சுப்பையா அச்சங்களை கற்பனைமூலம் பெருக்கிக் கொள்கிறான். கழிவிரக்கங்களை பலமடங்காக ஆக்கி அந்த துயரில் திளைக்கிறான். அதை அவன் வேண்டுமென்றேதான் செய்கிறான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. தன்னுடைய மரணத்தைப்பற்றியும் தான் இல்லாதபோது பிறர் சொல்வனவற்றைப்பற்றியும் காணாமல் போய்விடுவதைப்பற்றியும் அவன் விரிவாக கற்பனைசெய்கிறான்.இநக் கற்பனையை அவன் மனஓட்டமாக ஆசிரியர் சொல்லியிருக்கும் வரிகளே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன. துயரத்தை கழ்விரக்கமாக ஆக்கி மெல்ல அனுதாபம் தேடும் இடத்தில் தன்னை அமைத்துக்கொண்டு அனுதாபத்தை பிறர் அளிப்பதாகக் கனவுகண்டு அதை ருசித்து ருசித்து மகிழும் சுப்பையாவின் மனம் நமக்கு மிகவும் அறிமுகமான ஒன்றுதான் – நாம் அனைவரிலும் ஓரளவு சுப்பையா இருப்பான்.

”எதிர் வீட்டு படி இறங்கி வருவது யார்?
கறுப்புச்சேலைககரி அல்லவா?
நான் இவவ்ளவு துயரம் அனுபவிக்கிரேன் என்பது அவளுக்கு எப்படித்தெரியும்?
தெரிந்தால் பாவம் கஷ்டப்படுவாள்.
எனக்குத்தெரியும்
என்னைப்பார்த்தால் அவளுக்கு பரிதாபம்
போய் குளிருக்கு அடக்கமாக அவள் மடியில் படுத்துக்கொள்கிறேன்
எவ்வளவோ சுகமாக இருக்கும்’

சுப்பையாவின் மனம் படிப்படியாக கொள்ளும் நிறமாற்றங்களை இவ்வாறு ஆசிரியர் ஒரு சொற்றொடருக்கு ஒன்றாக, தனித்தனி சொற்றொடர்களினாலான நடைமூலம் காட்டுகிறார். இந்நாவலின் ஈர்ப்பே மனதை மொழியமைப்புமூலம் தொட முயன்றிருக்கும் முறைதான்.

”இனி எழுந்திருக்க வேண்டியதே. குளிக்கவேண்டும். வெந்நீர் இருக்கிரதோ இல்லையோ. சாப்பிடவேண்டும். சமையல் ஆயிற்றோ இல்லையோ. இப்போது என்ன கறி சமைத்திருக்கிறாளோ. சனியன் பிடித்த காய்கறிகள். எல்லாம் விலையேறிக்கிடக்கின்றன. சாப்பிட்டு ஆபீஸ் போக வேண்டும். சனியன் பிடித்த ஆபீஸ். எனக்கு இந்த ஆபீஸூக்கு போகவே பிடிக்கவில்லை. ஆயினும் யார் விட்டார்கள். போகாமலிருக்க முடியாதே…”

தாவிச்செல்லும் மன ஓட்டத்தை நேரடியாக மொழியில் சொல்ல முயல்கின்றது ஆசிரியரின் நடை. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தமிழில் மௌனி அதற்கு முயன்றிருக்கிறார். ஆனால் மௌனி மன ஓட்டத்தை கவித்துவமாகவும் மர்மமாகவும் காட்ட முயல்கிறார். விஸ்வநாத சாஸ்திரி அதன் அபத்தத்தை அர்த்தமற்ற இணைப்புச்சரடை பல இடங்களில் வேடிக்கை கலந்து காட்டுகிறார்.

இந்நாவலின் பாதிப்பால் எழுதப்பட்டதோ என்ற ஐயம் ஏற்படும் ஒரு நாவல் தமிழில் உண்டு. சா.கந்தசாமி எழுதிய ‘அவன் ஆனது’ காசியபனின் ‘அசடு’ இதே வகையைச்சேர்ந்த நாவல். இந்நாவல்களின் பொது அம்சமே இலக்கியத்தால் பொருட்படுத்தப்படாதவர்களை பொருட்படுத்தி பார்க்கும் போக்கு. சாதாரணமான வாழ்விலேயே உண்மையான வாழ்க்கைக்கூறுகள் உள்ளன என்ற நோக்கு. இது நவீனத்துவத்தின் அடிபப்டைகளில் ஒன்றாகும்.

இந்நாவலுக்கு பல குறைகள் உண்டு. மனோரமாவுடனான சுப்பையாவின் உறவு உருவாகும் விதம் இயல்பாக இல்லை. தன்னளவில் ஒரு முக்கியமான நாவல் அல்ல இது. முக்கியமான நாவல்களுக்கு அளிக்கப்பட்ட எதிர்வினை என்ற அளவிலேயே இதன் முக்கியத்துவம் உள்ளது. ஆயினும் நமக்கு கிடைக்கும் தெலுங்கு நாவல்களில் இது குறிப்பிடத்தக்கது என்று சொல்லலாம்.

[அற்பஜீவி . ஆர் விஸ்வநாத சாஸ்திரி. தமிழாக்கம் நேஷனல் புக் டிரஸ்ட்]

முந்தைய கட்டுரைஅய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி
அடுத்த கட்டுரைநானக் சிங்கின் வெண் குருதி