எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…

அன்புள்ள எம்.டி.எம்

உங்கள் விலகல் வருத்தமளிக்கிறது.

நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கவில்லை, எப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என் கருத்துக்களுக்கான பின்னணி என நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப்போலவே நானும் நினைக்கிறேன். அதையும் கருத்தில்கொண்டு ஆராய்கிறேன்,அவ்வளவுதான்

என்னைப்பொறுத்தவரை தனிவாழ்க்கை,கருத்துக்கள் என வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால் பிறரது அந்தரங்கவாழ்க்கையை நான் அளவுகோலாகக் கொள்வதில்லை. உங்கள் அந்தரங்க வாழ்க்கைக்குள் எவ்வகையிலும் நான் நுழையவே இல்லை என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

ரசனை விமர்சனம் இறந்தகாலத்தில் மேலாதிக்கத்தை உருவாக்கியதுதான் என நானும் அறிவேன். அதை மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறேன். ஆனால் அந்த மேலாதிக்கத்துடன் விவாதிப்பதற்கான வெளி அதில் எப்போதும் உள்ளது என்பதே என் எண்ணம். ஒரு நூற்றாண்டுக்குள் ரசனைவிமர்சனம் முன்வைக்கும் canon மாறிவிடுவதை அதற்கு ஆதாரமாகக் கொள்வேன். எப்படிக் கந்தபுராணம் மூலப்பெரும்படைப்பு என்ற நிலையில் இருந்து விலகியது, எப்படி மதநூல்களின் இடம் கீழிறங்கியது என நாம் கண்டுகொண்டிருக்கிறோம்

அத்தகைய மேலாதிக்கத்தை எந்த அறிவுச்செயல்பாடும் எப்போதும் உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. ரசனை விமர்சனம் எப்போதுமே diachronic அணுகுமுறையையே கொண்டிருக்கிறது. வேறுவழியில்லை ஏனென்றால் அது canon னை உருவாக்கி நிலைநாட்டியாகவேண்டும். பின்நவீனத்துவ முறை synchronic முறையைக் கைக்கொள்ளலாம். ஏனென்றால் அது எதிர்நிலை மட்டுமே எடுத்தால்போதும். கலைத்தாலே போதும்.

இரு அணுகுமுறைகளுமே தங்களுக்கான எல்லைகளும் வரையறைகளும் கொண்டவை என்பதே என் எண்ணம். இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்பக்கூடும். நீங்கள் என் அணுகுமுறையை மறுக்கலாம். ஆனால் அதைப் பிற்பட்டது, காலாவதியானது என முத்திரைகுத்துவதை என்னால் ஏற்க முடியாது. அது அதிகாரச்செயல் உங்கள் முறை அதிகாரமற்றது என்பதையும் ஏற்கமுடியாது. இதுவே என் தரப்பு.
நீங்கள் எழுதுவது எதையும் தொடர்ந்து வாசித்து வருபவன். இனிமேலும் வாசிப்பேன். சொல்லப்போனால் சில்வியா மீண்டு வரவேண்டுமென விழைபவர்களில் ஒருவன்.

நீங்கள் நிறுத்திக்கொள்வதனால் நானும் நிறுத்திக்கொள்கிறேன். நாம் பரஸ்பர புரிதலுடன் பிறகெங்காவது விவாதிக்க முடியலாம். ஆனால் நீங்கள் என் படைப்புகளை வாசிக்கவேண்டும் விமர்சிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கிய ஆக்கத்துக்கும் கருத்துக்களுக்கும் உள்ள ஊடாட்டத்தின் மர்மங்களையும் தற்செயல்களையும் புரிந்துகொள்ளாத கோட்பாட்டு வாசிப்புகளால் எப்போதுமே சோர்ந்திருக்கிறேன். அதுவே உங்களிடம் என்னை எதிர்பார்க்கச் செய்கிறது.

என்னுடைய புனைவெழுத்து எதையும் நான் எடுத்து முன்செல்வதில்லை. ஒன்றை எழுதியதுமே அதை உதறி முன்செல்பவனாகவே இருந்திருக்கிறேன். அபுனைவு எழுத்துக்களையும் மறுபரிசீலனைசெய்கிறேன். அதற்காக உங்கள் எழுத்துக்களை கவனிக்கிறேன்.

இலக்கியக் கொள்கைகளைப் பொறுத்தவரை ஓர் எழுத்தாளன் செல்லக்கூடிய எல்லை ஒன்று உள்ளது. அதைச் சொல்லியே நான் ஆரம்பிக்கிறேன். நீங்கள் வாசிப்பதுபோல மூலநூல்களை முழுமையாக வாசிக்க முடியாது, கூடாது. அந்த எல்லைக்குள் நின்றே நான் பேசுகிறேன், நிபுணனாக அல்ல. ஆகவேதான் இந்த விவாதத்திலேயே உங்களிடமிருந்து தெரிந்துகொள்பவனாக என்னை முன்வைத்தேன்

நவீனத்தமிழின் முக்கியமான சிந்தனையாளன் எனநான் நினைக்கும் ஒருவர் நீங்கள். நீங்கள் புண்பட நான் காரணமாகியிருந்தால் மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். நான் உங்கள்வரிகளால் புண்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் – நாம் பற்றிய உங்கள் விளக்கங்களுக்கு முன்னரேகூட. அந்தத் தெளிவுபடுத்தலால் உங்கள் வாசகர்கள் புரிதலை அடைந்திருப்பார்கள்.

உங்கள் விலகல் உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்