எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்

எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு குழப்பம் எஞ்சுகிறது. அவரது இன்றைய கருத்துக்களைப் பழைய கருத்துக்களின் வளர்ச்சி அல்லது நீட்சியாக எடுத்துக்கொள்ளலாமா இல்லை புத்தம்புதியதாகப் பிறந்துவிட்டாரா என்பதுதான் அது. எதற்கு வம்பு என்று இப்போதுள்ள எம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொண்டு பேசுகிறேன்

முதலில் அவர் என்னுடைய விமர்சனத்தை நிராகரிக்கும் பொருட்டு எழுதியவற்றை அவரைப் புரிந்துகொள்ள அளவுகோலாக எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை என்று சொல்லும் எம்.டி.முத்துக்குமாரசாமி அதற்கு அளிக்கும் காரணங்களைப் பார்த்து தாமிரவருணி கால்நூற்றாண்டாக குளமாகவே தேங்கி விட்டதா என்ற பிரமிப்பையே அடைந்தேன்.

ரசனை விமர்சனம்

எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்கிறார் ‘ரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டுவருகிற விமர்சன முறையாகும். தரம் வாய்ந்த பொருள் அதிகமதிப்பீடு உடையது அதிக எண்ணிக்கையில் அது உற்பத்தி செய்யப்படவேண்டும் அதன் தர நிர்ணயம் ரசனையை அறிந்த நிபுணர்களுக்குத்தான் சாத்தியம் ஆகிய மதிப்பீடுகள் சந்தை விதிகளில்லாமல் வேறு என்ன?’

நான் அறிந்தவரை தமிழில் ரசனைவிமர்சனம் என்பது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வருடக்காலமாக செயல்பட்டு வருகிறது. உலகமெங்கும் இலக்கியம் உருவான நாள் முதலே அதுவும் உள்ளது. ஏனென்றால் அது மிக இயல்பானது. அவற்றின் வெளிப்பாட்டு முறை மட்டுமே காலந்தோறும் மாறிக்கோண்டிருக்கிறது.

இலக்கியப்படைப்புகள் முதன்மையாக ரசிப்பதற்காகவே எழுதப்படுகின்றன. அதை நயம்பாராட்டல் என்றும் ஆஸ்வாதனம் என்றும் நாம் சொல்லிவந்திருக்கிறோம். ரசித்தபின் ரசனையைப் பகிர்ந்துகொள்வதும், அந்த ரசனையின் அடிப்படையில் படைப்புகளை வரிசைப்படுத்துவதும், அவ்வரிசையைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதும் இலக்கியத்தில் எங்கும் எப்போதும் தன்னிச்சையாக நடந்துவருகின்ற விஷயங்கள். ஒவ்வொருநாளும் இலக்கியவாசகன் இதை அவனையறியாமலேயே செய்துவருகிறான். அதை எழுத்தில் செய்வதே ரசனைவிமர்சனம்.

அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று நாளை இந்தியாவின் சர்வாதிகாரியாக எம்.டி.முத்துக்குமாரசாமி ஆகும்போது ஆணையிட்டாலும் ரகசியமாக அதைச்செய்துகொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அதுவே இலக்கியத்தின் அடிப்படையான வழிமுறை.

அவ்வாறு ரசனை நிகழ்ந்து அது பரிமாறப்பட்டு அதன் விளைவாக உருவாகும் பொதுவிவாதங்கள் மூலமே சில ஆக்கங்கள் மேலே எழுந்து வருகின்றன. அப்படித்தான் சில படைப்புகள் பேரிலக்கியங்கள் என்றும் சில படைப்பாளிகள் பெரும்படைப்பாளிகள் என்றும் சொல்லப்படுகிறார்கள். இந்தத் தரவேறுபாட்டைச் சுட்டிக்காட்டவே மகாகவி போன்ற பட்டங்கள் சூட்டப்படுகின்றன, கடிதங்கள் முகவரி தவறாமல் சென்றுசேர்வதற்காக அல்ல.

அப்படித்தான் பல்லாயிரம் பாடல்களில் இருந்து சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. அப்படித்தான் கபிலனும் பரணனும் ஔவையும் அவர்களில் முதன்மை பெற்றார்கள். வள்ளுவன் தமிழ்ப்புலவர்களில் தலைமகனாக ஆனான். எம்.டி.முத்துக்குமாரசாமியின் மகாகவியே கூட ’வள்ளுவன் போல் கம்பனைப்போல் இளங்கோவைப்போல்’ என துல்லியமாக தரவரிசையையே நிகழ்த்துகிறான்.

இல்லை பழைய தமிழ்ப்பின்னவீனத்துவ பொன்வரியின் அடிப்படையில் [சரோஜாதேவி எழுத்து =சுரா எழுத்து] எல்லாமே படைப்புதான், நல்ல படைப்பு என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார் என்றால் இலக்கியமே தேவையில்லை. தொலைபேசிப் பெயர்ப்பட்டியலே போதும்.நிறைய வேண்டும் என்றால் வாக்காளர் பட்டியலைத் தாசில்தார் ஆபீஸில் கேட்டு வாங்கலாம்.

தமிழில் இலக்கிய ரசனை நோக்கும் அதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தலும் அதைக்கொண்டு தொகுப்புமுறையும் உருவான காலகட்டத்தில் நவீன சந்தைப்பொருளாதாரம் உருவாகவில்லை என்றே நான் நம்புகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உமணர்கள் உப்புவிற்பதற்காக கூடியதைத்தான் சந்தை என்கிறாரா என்று தெரியவில்லை.

ரசனை விமர்சனம் என்பது விமர்சகன் தன்னை ஓர் இலக்கிய ஆக்கத்தின் சிறந்த ரசிகனாக நிறுத்திக்கொள்வது மட்டுமே. தன் ரசனையை அவன் விவரிக்கிறான், சிபாரிசு செய்கிறான். இன்றும் உலகமெங்கும் எழுதப்படும் இலக்கிய விமர்சனங்களில் தொண்ணூறு சதவீதம் இத்தகைய விமர்சனங்களே. ரசனை விமர்சனமே ஒரு சூழலில் வெளிவரும் படைப்புகளில் சிலவற்றை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. அது இல்லாமல் இலக்கிய இயக்கமே நிகழமுடியாது

அவ்வாறு ரசனை விமர்சனம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆக்கங்களை மேலதிக ஆய்வுக்கு உள்ளாக்குவதற்காகவே பிற விமர்சன முறைகள் உள்ளன. பெரும்பாலும் அவை இலக்கியத்தை இலக்கியமல்லாத பிறதுறைகளின் கோட்பாடுகளை அல்லது விதிகளைக் கொண்டு ஆராய்வதாக இருக்கும். மெய்யியலை அரசியலை, மொழியியலை, குறியியலை, வரலாற்றை, நரம்பியலை. அவை பல திறப்புகளை அளிக்கும். இலக்கியத்தை சமூகத்தின் அறிவார்ந்த பொதுவிவாதத்தின் தளத்துடன் தொடர்பாடச்செய்யும்.

நான் இந்த விமர்சனத்தை ஓர் அடையாளத்துக்காகக் கோட்பாட்டு விமர்சனம் என்று சொல்கிறேன். கோட்பாடுகளின் அடிப்படையில் அல்லது கோட்பாட்டை உருவாக்கும் நோக்குடன் இவை நிகழ்த்தப்படுகின்றன என்பதனால். பெரும்பாலும் இவை கல்வித்துறை சார்ந்தவையாக இருந்தாலும் கல்வித்துறை விமர்சனம் எனத் தனியாக இன்னொன்றை வகுத்துக்கொள்கிறேன். அது இலக்கிய ஆக்கங்களைத் தகவல்ரீதியாகப் பகுப்பாய்வு செய்வதும் அடையாளப்படுத்துவதும் தொகுத்துக்கொள்வதுமாகும்.

இந்த மூன்றுவகை விமர்சனங்களைப்பற்றியும் நான் என் எண்ணங்களை மிக விரிவாக ஏற்கனவே என்னுடைய ஏழு விமர்சனநூல்களின் பொது முன்னுரையில் எழுதியிருக்கிறேன்.இந்த மூன்று வகை விமர்சனங்களுமே தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன. ஆனால் ரசனை விமர்சனம் மட்டுமே படைப்பின் இலக்கியத்தன்மையை முதன்மைப்படுத்துகிறது. ஏனென்றால் அது தன்னை இலக்கியப்படைப்பின் வாசகனின் இடத்தில் வைத்துக்கொள்கிறது.

ஆகவேதான்நவீன இலக்கியம் உருவானதுமே நவீன ரசனைவிமர்சனமும் உருவாகி வந்துவிட்டது. பிரிட்டிஷ் இலக்கிய விமர்சன மரபே அதன் விளைநிலம். பின்னர் அமெரிக்க புதுத்திறனாய்வாளர்களின் விமர்சனம் அதை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றது.

என்றும் எப்போதும் ரசனை விமர்சனத்தை வழிமுறையாகக் கொண்டவர்களே விமர்சனத்தின் மையப்புள்ளியாக இருப்பார்கள். அவர்கள் நிராகரிக்கப்படலாம். விமர்சிக்கப்படலாம். ஆனால் மையத்தை விட்டு விலகுவதில்லை. அவர்களே இலக்கியச்சூழலின் பொது அளவுகோல்களை நிலைநிறுத்துகிறார்கள். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லலாம்– கூல்ரிட்ஜ்,எஸ்ராபவுண்ட்,எலியட், விம்சாட் ஜூனியர் வழியாக இன்றைய ஹரால்ட் ப்ளூம் வரை.

எம்.டி.முத்துக்குமாரசாமி அவரது புனிதமான பின்நவீனத்துவ, பின்காலனித்துவ நோக்கில் ரசனை விமர்சனத்தை நிராகரிக்கலாம். அது அவரது தரப்பு. ஆனால் ரசனை விமர்சனம் காலாவதியானது, செல்லுபடியாகாதது , பழசு, அவரிடமிருப்பது புதிசு என்றெல்லாம் எண்பதுகளின் எளிய இருமைப்பிம்பங்களை இன்று கட்டமைக்க முடியாது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்

ஒரு ரசனை பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது எப்படி பொது அளவுகோல்கள் உருவாக முடியும்? அந்த பொதுவெளியில் ஏற்கனவே வாசிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்டுள்ள முந்தைய பெரும்படைப்புகளையே அளவுகோல்களுக்கான ஆதாரங்களாகக் கொள்ளமுடியும். ஓர் இலக்கியச்சூழலின் பேரிலக்கியமரபே [ canon ] அந்த அளவுகோலை அமைக்கிறது. ப்ளூம் அப்படி ஒரு ஐரோப்பியப் பேரிலக்கியமரபைச் சுட்டியே தன் அளவுகோல்களை உருவாக்குகிறார். அதுவே ஒரே வழி.

இங்கும் அப்படித்தான். நீலகேசி ஏன் பெருங்காப்பியம் இல்லை? சிலப்பதிகாரத்துடன் ஒப்பிடப்படுவதனால்தான். மணிமேகலை சிலப்பதிகாரத்துடன் ஒப்பிடப்படுவதனாலேயே கவித்துவச்சுவை ஒருபடி குறைந்தது எனப்படுகிறது. இதுவே ரசனை விமர்சனத்தின் வழி. ரசனை விமர்சகன் மாபெரும் வாசகன் என்பதே அவன் தகுதி. அவனுடைய அளவுகோல்களை அவனுடைய விரிந்த வாசிப்பே உருவாக்குகிறது. அவன் பொதுவெளியில் நம்பத்தகுந்த இலக்கிய வாசகன், அவ்வளவே.

மேலதிகமாக ஒரு தகுதி உண்டு. எஸ்ரா பவுண்ட் சொல்வதுபோல சொந்தமாக ஒரு நல்ல படைப்பாவது எழுதியிருந்தான் என்றால் அந்த விமர்சகனின் தகுதி உறுதியாகிறது. அவனால் இலக்கிய ஆக்கத்தின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடியும் , அந்த செயல்பாட்டுக்கு வெளியே அவன் இல்லை என்பதற்கான ஆதாரம் அது. இந்த அம்சமே க.நா.சுவையும் சுந்தர ராமசாமியையும் வெங்கட் சாமிநாதனை விட ஒருபடி மேலே நிறுத்துகிறது.

தமிழில் கண்ணெதிரே வரலாறு உதாரணமாக உள்ளது. இங்கே என்றுமே கோட்பாட்டு விமர்சகர்களும் கல்வித்துறை விமர்சகர்களும் வண்டி வண்டியாக எழுதித்தள்ளியிருக்கிறார்கள். ஆனால் எம்.டி.முத்துக்குமாரசாமி உட்பட எவருமே எந்தத் தகுதியான படைப்பையும் படைப்பாளியையும் அடையாளம் காட்டியதில்லை. கூடுமானவரை தப்பான படைப்புகளையே சுட்டிக்காட்டி அவர்கள் காலாவதியானதும் கைவிட்டுவிடுவதே அவர்களின் வழக்கம். செ.கணேசலிங்கன் அல்லது கெ.டானியல் மாதிரி.

காரணம் இந்த கோட்பாட்டாளர்களால் கல்வித்துறையாளார்களால் இலக்கியத்தைத் தங்கள் சொந்த ரசனை அளவில் வாசிக்கவே முடியாது என்பதே. அவர்களுக்கு ஓடும் செம்பொன்னும் ஒன்றுதான். இலக்கியத்தை அடையாளம் காண்பதை க.நா.சுவும் சுந்தர ராமசாமியுமே செய்திருக்கிறார்கள். தங்களுக்குச் சாதகமானவர்களைக்கூட இவர்கள் சொன்னபின்னரே கோட்பாட்டாளர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். ஜி.நாகராஜனைக்கூட சுந்தர ராமசாமி அடையாளம் காட்டியபிறகே நம்முடைய பின்நவீனத்துவர்களால் எடுத்துக்கொள்ளமுடிந்தது.

இங்கே நம் அமைப்புவாத பின் அமைப்புவாத விமர்சகர்களும் செய்யும் பிழை இங்கேதான். மிக எளிய விஷயம். மொழியியல் சார்ந்த அணுகுமுறையில் எல்லா எழுத்தும் மொழியில் உள்ள பிரதிகள் [text] மட்டுமே. மொழியில் உருவான கட்டுமானங்கள் அல்லது தொடரும் நிகழ்வுகள். அவை எப்படி அர்த்த உருவாக்கம் செய்கின்றன என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். அதை விரிவாகப் பகுத்தாராய்கிறார்கள். இது ஓர் உடற்கூறியலாளர் மனித உடலைப் பார்ப்பதற்கு சமம்.

இவர்கள் அதுவே இன்றைக்குரிய மோஸ்தர் என எடுத்துக்கொள்கிறார்கள். மொழியியலாளரின் கோணத்தில் இலக்கியத்தை ஆராய்வதற்குரிய துறைசார் படிப்பு இல்லாத நிலையில் அதை அப்படியே வெந்தும் வேகாததுமாகத் தூக்கிக்கொண்டு பொது வெளிக்கு வருகிறார்கள். அன்றாட அரசியலை மனம்போனபோக்கில் அதனுடன் கலந்துகொள்கிறார்கள். ’இதுவே லேட்டஸ்ட்’ என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். உடலை உடற்கூறியல் நோக்கில் அணுக துறைசார்அறிஞனுக்கு உரிமை உண்டு. அதைப் பார்த்துவிட்டு இனிமேல் மனிதர்களை எல்லாரும் அப்படித்தான் பார்க்கவேண்டும், கட்டின பெண்டாட்டியைக்கூட, அதுதான் பேஷன் என்று ஒரு ஆசாமி சொன்னால் அவனை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம்?

இங்கே உண்மையில் மொழியியல் சார்ந்த அமைப்புவாத-பின் அமைப்புவாத விமர்சனம் வந்திருந்தால் எவ்வளவோ புதிய திறப்புகள் நிகழ்ந்திருக்கும். நம் நவீன இலக்கியம் சென்ற ஒரு நூற்றாண்டின் எப்படி நவீன புனைவுவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என அவர்கள் காட்டியிருக்கமுடியும். நம் கவிதைகள் எப்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சொல்லின் அர்த்தநுண்மையை மாற்றிக்கொண்டே செல்கின்றன என்று காட்டியிருக்கமுடியும். ஆனால் அதற்கு மொழியிலும் மொழிசுட்டும் பண்பாட்டிலும் ஆழமான கவனமும், துறைசார்ந்த பயிற்சியும் ,அனைத்துக்கும் மேலாகத் தன் ஆய்வுத்தளத்தின் எல்லைகளைப்பற்றிய அடக்கமும் தேவை.

இங்கே இதையெல்லாம் பேசியவர்கள் இன்றுவரை ஒரு சிறு புது அவதானிப்பைக்கூட செய்ததில்லை. வெறுமே கலைச்சொற்களைப் போட்டு சுழற்றுவதன்மூலம் அர்த்தமற்ற அதிகாரத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளைத்தவிர. எம்.டி.முத்துக்குமாரசாமி அதையே மீண்டும் வந்து செய்துகொண்டிருக்கிறார் . மிக எளிய விஷயங்களைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மாறாகத் தன் கோட்பாட்டுக்கு ஏற்பத் திரித்துக்கொண்டு பழகிப்போன வாய்ப்பாடுகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்

ரசனை விமர்சனமும் சந்தைப்பொருளியலும்

மேலே சொன்ன வரியையே பார்க்கலாம். தரம்வாய்ந்த இலக்கியம் அதிகமாக உற்பத்தி பண்ணப்படவேண்டுமென எவர் சொன்னது? நேர் மாறாகத் தரமான இலக்கியம் அதிக அளவில் சாத்தியமே அல்ல என்றுதான் எந்த ரசனையாளனும் சொல்வான். இலக்கியம் ஒரு சமூகத்தின் கனவு. அது நிகழ்வதே ஒழிய உற்பத்தி செய்யக்கூடியதல்ல என்றே அவன் சொல்வான். அந்தக் கனவை அதன் எல்லா நுட்பங்களுடனும் அறிவதைத்தான் அவன் முன்வைப்பான். அதற்கு வாசகன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பான். அதற்காக ரசனையைத் தீட்டிக்கொள்ளவேண்டும் என்பான். அது சந்தைப்பொருளியலின் சராசரித்தனத்துக்கு நேர் எதிரானது.

நம் காலகட்டத்தின் மிகப்பெரிய ரசனைவிமர்சகனாகிய ஹரால்ட் புளூம் பலநூறு பக்கங்களில் சந்தைப்பொருளியலின் விதிகள் இலக்கியத்தில் செயல்படுவதை எதிர்த்து எழுதியிருக்கிறார். இன்று சந்தையே சிந்தனைத்தளத்தையும் இலக்கியத்தையும் கட்டுப்படுத்துகிறது. சந்தை பேரளவில் உற்பத்தி இல்லாமல், தொடர்ச்சியாக நீடிக்கும் லாபம் இல்லாமல் நீடிக்கமுடியாது. ஆகவே அது ஒருபோதும் ரசனையும் கவனமும் உடைய சிறுபான்மையினருக்கான எழுத்துக்களை ஆதரிப்பதில்லை.

சந்தைப்பொருளியலில் அனைவருக்கும் உரிய சராசரிகள் பேரளவில் உற்பத்தி செய்யப்பட்டு, உற்பத்தியாளர்களால் பெரும் விளம்பரங்கள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. அதன் பொருட்டு அதற்கான ரசனையும் கட்டமைக்கப்படுகிறது. அதையே ப்ளூம் நம் காலகட்டத்தின் சீரழிவு என்கிறார்.

உண்மையில் எதிர்அறம், பிறழ்வு என்ற பேரில் இங்கே பேசப்படும் பேச்சுகளில் பெரும்பகுதி இந்த எழுத்துக்களுக்கான சந்தையால் உருவாக்கப்படுவது. பதிப்பாளர்களாலும் அவர்களுடைய கட்டுரையாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்பபடுவது. இவ்வகை எழுத்துக்களை வாசிக்க வாசகத்தகுதி தேவையில்லை, எவருக்கும் புரியும் எளிய உணர்ச்சிகளின் மிகைவடிவங்களாக இவை உள்ளன. ஆகவே இவை பிரம்மாண்டமாக உற்பத்தி செய்யமுடியும். விற்கமுடியும். நிகர விளைவாக நுட்பம், ஆழம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்றன

ஜோஸ் சரமாகோவை வாசிக்க அது சுட்டும் குறியீட்டுத்தளம் பரிச்சயமாகியிருக்கவேண்டும். ஸ்டீபன் கிங்கை வாசிக்க எந்த அடிப்படைத்தகுதியும் தேவை இல்லை. ஆகவே சரமகோவை சந்தைப்பொருளியல் புறக்கணிக்கிறது. ஸ்டீபன் கிங்கை முன்னிறுத்துகிறது. அவரை நிலைநாட்டுவதற்கான கொள்கைகளைக் கட்டமைக்கிறது. அதற்காகவே இங்கே எதிர்அறம் என்றும் பிறழ்வு என்றும் வசீகரமான லேபில்கள் ஒட்டப்படுகிறது என்கிறார் புளூம்.

அதாவது இங்கே இன்று பரப்பபடும் சந்தைப்பொருளியலின் அழகியலையும் கொள்கைகளையும் எதிரொலிப்பவர் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஏனென்றால் அவை ஓங்கி ஒலிக்கின்றன. அமெரிக்காவில் பிரபலமாக இருப்பதை அப்படியே தழுவியாகவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருக்கிறது. ஆகப்புதியவர்களாக காட்டிக்கொள்ளாவிட்டால் இவர்களால் நீடிக்க முடியாது. சொந்தமாகச் சொல்ல ஏதுமற்ற நிலையில் இவர்களுக்கு புதியதைச் சொல்லும் இன்னொருவனால் தாண்டிச்செல்லமுடியாதபடி தன்னைக் காட்டிக்கொள்ளும் கட்டாயம் இருக்கிறது.

ஆனால் அவரே சந்தைப்பொருளியலின் பிரம்மாண்டமான வன்முறைக்கு எதிராக நிலைகொள்ளும், போராடும், ரசனை விமர்சனத்தை சந்தைப்பொருளியலின் சிருஷ்டி என்று முத்திரைகுத்துகிறார்.

பன்மையும் விவாதமும்

’பல மொழிகள், பல பண்பாடுகள், பல இனக்குழுக்கள், பல சாதிகள், பல வர்க்கங்கள் என்றுள்ள பன்மைச் சமூகத்தில் ஒற்றை அளவீடு ஒன்றை நிறுவி அந்த அளவீட்டின்படியே அத்தனை விதமான பண்பாட்டு முறைமைகள் இலக்கிய வெளிப்பாடுகள் அனைத்தும் இயங்கவேண்டும் என்று வலியுறுத்துவது கொடூரமான வன்முறையாகும்’ என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி மீண்டும்.

அதே வரியை நான் சொல்கிறேன். பல மொழிகள், பல பண்பாடுகள், பல இனக்குழுக்கள், பல சாதிகள், பல வர்க்கங்கள் என்றுள்ள பன்மைச் சமூகத்தில் ஒற்றை அளவீடு ஒன்றை நிறுவி அந்த அளவீட்டின்படியே பாரதி மகாகவியே என ஆணித்தரமாக அடித்துச்சொல்லி , அதன்மீதான விவாதமே கூடாது என வாதிட்டு, அதற்கு எதிரான கருத்துள்ளவர்களை நக்கலடிக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமியின் பார்வைதானே உண்மையில் கொடூரமான வன்முறை? அயோத்திதாசர் முதல் வே.மதிமாறன் வரை பாரதியை நிராகரிப்பவர்களின் நான்கு தலைமுறைமீதான அடக்குமுறைதானே அது? ஒப்புநோக்க நான் அல்லவா இன்னும் ஜனநாயகரீதியாக எல்லாக் குரல்களையும் கணக்கில் கொண்டு ஒரு விவாதத்துக்குத் தயாராக இருக்கிறேன்?

இந்த மாபெரும் பன்மைத்தேசத்தை இதன் மொழிகள், பண்பாடுகள், இனக்குழுக்கள், சாதிகள், வர்க்கங்கள் அனைத்துடனும் பார்க்கக்கூடியவனாகவே நான் இருக்கிறேன்.ஆகவேதான் இங்கே எல்லாவற்றைப்பற்றியும் ஒரு தொடர்விவாதம் நிகழ்ந்தாகவேண்டுமென நினைக்கிறேன். எதையும் முழுமுற்றாக நிறுவிக் கொலுவில் வைத்துவிடவேண்டாமென எண்ணுகிறேன். பாரதியைப்பற்றிய விவாதமும் அப்படியே முன்வைக்கப்பட்டது.

பாரதி பற்றிய விவாதத்தின் தொடக்கத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். பாரதியை மட்டுமே கருத்தில் கொண்ட விவாதமல்ல அது என. அயோத்திதாசரில் ஆரம்பித்து பாரதிக்கு எதிரானவர்களையும் கருத்தில்கொண்டு, விவாதத்தின் மூலம் உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்ட ஒன்றை மறுபரிசீலனைசெய்யும் முயற்சி அது. அவ்வாறு எல்லாவற்றையும் தொடர்ந்து விவாதத்தில் வைத்திருப்பதையே நான் சொல்லிவருகிறேன்.

இந்த தேசத்தின் பன்மைத்தன்மை காரணமாகவே இங்கே ஒரு கூட்டான பெரும் விவாதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. முற்றிலும் மாறுபட்ட தரப்புகள் மோதி விவாதித்து சமரசப்புள்ளியைக் கண்டடைவதையே நாம் இந்திய மெய்யியலில், இந்திய வரலாற்றில், இந்திய இலக்கியத்தில் தொடக்கப்புள்ளிமுதல் கண்டுவருகிறோம். அவ்வாறான விவாதத்துக்கான பொதுத்தர்க்கமுறை இங்கே உருவாகி இரண்டாயிரத்தைநூறு வருடம் தாண்டிவிட்டிருக்கிறது.

தமிழில் நமக்குக் கிடைக்கும் இலக்கணங்கள், அவற்றின் அடிப்படையிலான தொகைகள் எல்லாமே இந்தப் பொதுவிவாதத்தையே காட்டுகின்றன. புதிய தரப்புகள் உள்ளே வரும்தோறும் இலக்கணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. தொடர்ந்த விவாதம் மூலம் மையஓட்டம் ஒன்று திரட்டப்பட்டு வளர்ந்து உருமாறி வந்துகொண்டிருக்கிறது

மெய்யியல், மதம், இலக்கியம் என எல்லாத் தளத்திலும் மையத்தின் அதிகாரம்,உறுதியான அமைப்பு இரண்டுக்கும் எதிராக வலுவாகப் பேசிவருபவனாகவே நான் இருந்திருக்கிறேன். எந்த ஒரு விஷயத்தையும் பிரம்மாண்டமான ஒரு விவாதக்களனில் வைத்து மட்டுமே பார்க்கிறேன். எதையுமே நிறுவப்பட்டுவிட்ட ஒரு கருத்தாக சொல்வதில்லை. அப்படி அல்லாமல் முழுமுற்றாக , எப்போதுமுள்ளதாகச் சொல்லப்படும் எந்தத் தரப்பையும் நிராகரித்து எழுதிவருகிறேன். நான் ஆன்மீகம்,சமூகம், மதம் பற்றி எழுதிய எந்தக்கட்டுரையிலும் இதை காணலாம். இந்தக் கோணத்தில் என்னளவுக்கு எழுதிய எவருமே தமிழில் இல்லை.

இது நான் ஏற்றுக்கொண்ட நாராயணகுருவின் சிந்தனை மரபின் அணுகுமுறை. சமன்வயம் [இணைவுநோக்கு] யோகாத்மவாதம் [ முரணியக்கம்] என அதை நாராயணகுருவே வகுத்திருக்கிறார். என்னுடைய எல்லாச் சொற்களும் அந்த வழிமுறைகளைக் கொண்டவைதான். தமிழில் எழுதும் வேறெந்த எழுத்தாளரைவிடவும் பின்நவீனத்துவ அணுகுமுறைக்கு நெருக்கமானது எனது பார்வை.

எப்படிப்பார்த்தாலும் இரண்டாயிரம் பக்கம் அளவுக்கு இதைப்பற்றி எழுதியிருப்பேன். அதற்குப்பின்னரும் எம்.டி.முத்துக்குமாரசாமி முன்வைக்கும் இந்த ஒற்றைவரிக்கு விளக்கம் அளிக்கவேண்டியிருக்கிறது. இதையும் சலிக்காமல் செய்துகொண்டிருக்கிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி மீண்டும் இதையே சொல்வார் என்றும் எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் இப்போது ஒரு கருத்துநிலை எடுத்திருக்கிறார். அதற்கு எதிராக என்னைக் கட்டமைக்காமல் அவருக்குப் பேசத்தெரியாயது.

நான் என்னுடைய தரப்பை ஒருபோதும் எந்தவிதப் பின்னணி அதிகாரத்தாலும் நிலைநாட்டுவதில்லை என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதுதான் உண்மை என்று சொல்வதில்லை. இதுதான் மரபில் உள்ள ஒரே வழி என்று சொல்வதில்லை. இதுவே ஆகப்புதியது என்றும் சொல்வதில்லை. எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வது போல மாற்றுத்தரப்பை முத்திரைகுத்தி என் தரப்பைப் புனிதப்படுத்துவது என் வழிமுறை அல்ல. நான் சொல்லும் கருத்து இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய கூட்டு விவாதத்தில் ஒரு குரலாக ஒலிக்கவேண்டும், பரிசீலிக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணம்

என் கருத்துக்களை என்னுடைய படைப்புத்தளம் சார்ந்து, வாசிப்பு சார்ந்து முடிந்தவரை தர்க்கபூர்வமாக முன்வைக்கிறேன். அவற்றுக்கு விரிவான வரலாற்றுப்பின்புலம் அளிக்க முயல்கிறேன்.நான் அவற்றை நம்புவதனால் அவற்றை தீவிரமாகவே பதிவுசெய்கிறேன். வாதாடுகிறேன். இதற்கான உரிமை எனக்கு உள்ளது. இந்தக்கருத்துக்கு மாறானவர்களை நான் வசைபாடியிருந்தால், அவர்களைத் தர்க்கத்தில் இருந்து வெளியேதள்ள முயன்றிருந்தால், அவர்களின் மாற்றுக்கருத்துக்கான உரிமையை மறுத்திருந்தால் அது வன்முறை. நேற்று அதைச் செய்தவர், இன்று செய்பவர் எம்.டி.முத்துக்குமாரசாமி. நான் ஒருபோதும் செய்ததில்லை. எப்போதுமே எக்கருத்தையுமே ஒரு விவாதப்புள்ளி மட்டுமே என்று மட்டுமே சொல்கிறேன்.

ஆம், அதில் அதிகார நோக்கு உண்டு. எந்தக்கருத்தும் எந்நிலையிலும் அதிகாரத்தின் ஒரு துளிதான். எந்தக்கருத்தும் அதிகாரத்தின் விருப்புறுதியாலேயே பொதுத்தளத்தில் முன்வைக்கப்படுகிறது. மோதி முரண்பட்டுத் தன் இடத்தைக் கண்டுகொள்கிறது. அது ஒரு அரிச்சுவடிப்பாடம். எம்.டி.முத்துக்குமாரசாமி நான் சொல்வது அதிகாரம் என்றும் அவர் சொல்வது அதிகார விதைநீக்கம் செய்யபட்ட கருத்து என்றும் நினைப்பாரென்றால் அவர் இன்னும்கொஞ்சம் வாசிக்கவேண்டும்.

தேசியமும் அரசியல்சரிநிலைகளும்

கடைசியாக எம்.டி.முத்துக்குமாரசாமி எங்கே வந்து சேர்கிறார் என்று பார்ப்போம். என்னுடைய இலக்கிய மதிப்பீடுகள் வன்முறையானவை, ஒற்றைப்படையானவை என்றெல்லாம் சொல்வதற்கு ஆதாரமாக எம்.டி.முத்துக்குமாரசாமி சுட்டிக்காட்டுவது ‘உலகளாவிய அளவைகளோடு உறவுடைய ஒற்றை இந்தியா என்ற அரசியல் கருத்தினை நேரடியாகவோ மறைமுகமாகவோ முன் வைப்பவை’ என்பதே.

அதாவது இலக்கியத்தில் ஒருவர் கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் அவர் ஒற்றை இந்தியா என்ற கருத்தை ஏற்றுக்கொண்டவராக இருக்கக் கூடாது. ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் வன்முறையாளர். ஏற்றுக்கொள்ளாத எம்.டி.முத்துக்குமாரசாமி ஜனநாயகவாதி, பின்நவீனத்துவர்.

உள்ளே வந்ததுமே எம்.டி.முத்துக்குமாரசாமி கட்டமைத்த இருமை பின்நவீனத்துவம்X ரசனைவிமர்சனம். அதற்குள் அவர் உள்ளடக்கியிருக்கும் உண்மையான இருமை இது. இந்தியதேசியம் X தேசியமறுப்பு. இனி இந்த சட்டகத்தில் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டே செல்லலாம். யாரெல்லாம் இந்திய தேசியத்தை முன்வைக்கிறார்களோ அவர்களெல்லாருமே ரசனை விமர்சகர்கள். இலக்கியத்தைப்பற்றிப் பேசத் தகுதி இல்லாத வன்முறையாளர்கள். இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் பின்நவீனத்துவ சாத்வீகர்கள்.

கஷ்டகாலம் என்றுதான் சொல்லவேண்டும். பின்நவீனத்துவம் என்ற பேரில் எதையெல்லாம் காணவேண்டியிருக்கிறது! பேராசிரியர்களுக்கு இந்த எல்லையைத் தாண்டவே முடியாதா என்ன? முடியும். ஆனால் எல்லாப் பேராசிரியர்களையும்போல எம்.டி.முத்துக்குமாரசாமியும் நிதியாதாரங்கள் இல்லாமல் சிந்திக்கமுடியாதவர் என்பதே சிக்கல்.

அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேஷனின் நேரடி நிதியுதவியால் நடத்தப்பெறும் அமைப்பு ஒன்றில், அவர்களின் தேவைக்காக இந்திய நாட்டாரியல் கலைகளைத் தொகுக்கவும் நாட்டார்கலைகளை அவர்களுக்கேற்பக் கட்டமைக்கவும் பெரும் பணம்செலவிடும் மையப்பொறுப்பில் இருப்பவர் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஒற்றை இந்தியா என்ற கருத்துக்கு எதிராக செயல்படவேண்டியது அவரது அலுவலகப்பணி. அதை அவர் செய்வதில் ஒருவகையில் பிழையும் இல்லை. ஆனால் தமிழில் இலக்கியம் பற்றிச் சிந்திப்பதற்கான முன்நிபந்தனையாக அவர் அதை ஆக்குவார் என்றால் அதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்.

கடைசியாக எம்.டி.முத்துக்குமாரசாமி வந்து சேர்கிறார். ’ஒற்றை இந்திய தேசம் என்பதை வலியுறுத்திப் பேசுவதைத் தவிர வேறெதையும் அரசியல் பொருத்தப்பாடு (political correctness) உடைய கருத்தாக்கம் என்று சொல்ல முடியுமா? தொடர்ந்து ஒற்றை இந்திய தேசம் என்பதையே வலியுறுத்திப் பேசி வரும் ஜெயமோகன் பின் எப்படி சார்த்தர் முதற்கொண்டு இந்திய இடதுசாரிகள்,தமிழ் பின் நவீன எழுத்தாளர்கள் எல்லொரும் அரசியல் பொருத்தப்பாட்டினை மீறி எதுவும் பேசுவதில்லை என்கிறார்?’

நான் இந்திய தேசியம் என எதை நினைக்கிறேன் என்பதை எப்படியும் இருபத்தைந்து முறையாவது விளக்கியிருப்பேன். நான் சொல்லும் தேசியம் என்பது கடந்த காலத்தில் உருவம் கொண்டு எப்போதைக்குமான நிபந்தனையாக நம் மீது இருக்கும் ஒன்று அல்ல. அதாவது இந்தியா எப்போதும் ஒரே தேசமாக இருக்கிறது என்றும் ஆகவே நாளையும் அது அப்படியே இருந்தாகவேண்டும் என்று அல்ல. இந்திய தேசியத்துக்கு அப்படி எந்த புனிதத்தையும் நான் ஏற்றவில்லை.

இந்த தேசம் ஒரே அரசியல்தேசியமாக நீடிக்கவேண்டும் என்று நான் விரும்புவதற்கான காரணம் இதன் சமகால அரசியல்,பண்பாட்டுத்தேவைதான். இது ஒரே தேசமாக நீடிக்கவேண்டிய கட்டாயம் இருப்பது இறந்த காலத்தில் அல்ல, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும்தான். இந்த நாடுமுழுக்க நான் கிராமம்கிராமமாக சுற்றியலைந்துகொண்டே இருக்கிறேன். எல்லாவிதமான பன்மைத்தன்மைக்கும் இடமளிக்கக்கூடிய நெகிழ்வான ஒரு ஒற்றைத்தேசிய அமைப்பாக மட்டுமே இந்த நாடு இருக்கமுடியும் என்பது என்னுடைய புரிதல்.

அதற்கான காரணங்களை விரிவாகவே விளக்கியிருக்கிறேன். ஒன்று, இந்திய நிலப்பரப்பில் பல்லாயிரம் வருடங்களாக மக்கள் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் பஞ்சங்கள் அந்தப் பரிமாற்றத்தைப் பலமடங்காக்கின. நவீன இந்தியாவின் தொழில்மயமாக்கல் இன்னும் விரைவுபடுத்தியது. இந்தியாவின் எப்பகுதியிலும் ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே இன அடையாளம் கொண்ட மக்கள் மட்டும் வாழவில்லை. எந்த அடையாளத்தை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்டப் பாதிவரை மக்கள்தொகை சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.

இங்கே பேசப்படும் பிராந்திய தேசியங்கள் எல்லாமே மதம்,இனம், மொழி அடையாளம் மூலம் தேசியங்களைக் கட்டமைப்பவை. அவை தங்கள் மக்களில் பாதிப்பேரைப் பிறர் ஆகக் கட்டமைப்பவை. தமிழ்த் தேசியம் முந்நூறாண்டுகளாக இங்கே வாழும் தெலுங்கர்களையும் கன்னடர்களையும் அன்னியராக்குகிறது.கன்னடதேசியம் நூறாண்டுகளாக அங்கே வாழும் தமிழர்களையும் தெலுங்கர்களையும் அன்னியமாக்குகிறது.

ஆகவே இந்தியதேசியம் உடைந்து பிராந்திய தேசியங்கள் உருவாகுமென்றால் அதன்மூலம் கோடிக்கணக்கான அகதிகளை, மனித வரலாற்றின் மிகப்பெரிய வன்முறையை, மட்டுமே நம்மால் உருவாக்கமுடியும். ஒரு பிரிவினையின் குருதி இன்னமும் இங்கே காயவில்லை

நவீன இந்தியதேசியம் என்பது படிப்படியாக நீண்ட பொதுவிவாதம் மூலம் கட்டமைக்கப்பட்டது. காந்தியால், அம்பேத்காரால் முழுமையாக்கப்பட்டது. நேருவால் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகின் பிற தேசியங்களுடன் ஒப்பிடுகையில் மிகநெகிழ்வான அனைத்து மக்கள்குழுக்களுக்கும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இடத்தையும் அளிக்கக்கூடிய தேசியமாகவே அது உள்ளது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக அப்படியே அது நீடிக்கிறது.இந்திய அளவில் நவீனச்சிந்தனைகளை முன்வைப்பவர்களில் பலர் இந்த எண்ணம் கொண்டவர்களே. எம்.டி.முத்துக்குமாரசாமி ஊழியம் செய்யும் அமெரிக்கா ஒரு நாடாக நீடிக்கமுடியும் என்றால் இந்தியாவாலும் முடியும்.

இந்திய தேசியத்துக்கு எதிரான பிற தேசிய உருவகங்கள் எல்லாமே குறுகலான இன,மத,மொழி நோக்கில் உருவானவை. வெறுப்பையும் நிராகரிப்பையும் வழிமுறையாகக் கொண்டவை. ஆகவே நான் இந்திய தேசியத்தையே இன்றுள்ள ஒரே வழியாகக் காண்கிறேன். அதை ஆதரிக்கிறேன். இன்னும் இன்னும் நெகிழ்வான ஒன்றாக இதை ஆக்கிக்கொள்வதன்மூலம் நாம் வளரமுடியும் என நினைக்கிறேன். பின் நவீனத்துவ சிந்தனை கொண்ட ஒருவர் ஒருபோதும் நம் உபதேசியங்களின் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் ஏற்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

இந்திய தேசிய உருவகத்தின் விவாதக்காலம் ஒரு நூறாண்டுக்கு நீடித்த ஒன்று. அதில் எல்லாத் தரப்புகளும் பேசப்பட்டிருக்கின்றன. முட்டி மோதித் தங்கள் பங்கைப் பெற்றிருக்கின்றன. அப்படி ஒரு மாபெரும் விவாதம் மூலம் தேசிய பொதுஉருவகம் நிகழாத நாடுகள் நம்மைச்சுற்றி உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் பர்மா. உள்நாட்டுப்போரால் அதை ஒடுக்கவந்த சர்வாதிகாரத்தால் நொடித்துப் பட்டினிவெளியாக இருக்கிறது அந்நாடு.

இந்தியாவின் சமூக அமைப்பு என்பதை ஆப்ரிக்காவுடன் ஒப்பிடலாம். உபதேசியங்களை இனக்குழுமுரண்பாடுகளை மதப்பிரச்சினைகளை சமரசம்செய்துகொள்ளாத ஆப்ரிக்க நாடுகள் இன்று எப்படி இருக்கின்றன என்று எவருக்கும் தெரியும். உலகமெங்கும் உபதேசியப் பிரச்சினைகளைத் தூண்டி உள்நாட்டுப்போர்களாக ஆக்கி ஆயுதவணிகமும் மூலப்பொருள் கொள்ளையும் செய்வதில் அமெரிக்காவை மையமாக்கிய ஏகாதிபத்தியத்துக்கு உள்ள பங்கும் அதில் ஃபோர்டு நிறுவனம் வகிக்கும் பாத்திரமும் என்ன என்று அறிந்தவர்களுக்கு எம்.டி.முத்துக்குமாரசாமி வேறுநிலைப்பாடு எடுக்கமுடியாதென்று புரியும்.

அரசியல்சரிநிலை என்பது எப்போதுமே ஒருசூழலின் முற்போக்கு முகமூடி சார்ந்ததாகவே உள்ளது. இன்று இந்தியாவில் இந்திய எதிர்ப்பு என்பதே அரசியல் சரிநிலைகளின் தொகுப்பு. இந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது பழைமைவாதமாக ஃபோர்டு பவுண்டேஷன் மற்றும் திருச்சபைகளின் உதவியுடன் நம்முடைய பொதுச்சூழலில் நிறுவப்பட்டுவிட்டது. அந்த நிலைப்பாட்டை எடுப்பவன் அரசியல்சரிநிலை எடுக்கவில்லை, அரசியல்சரிநிலைகளுக்கு எதிராகவே பேசுகிறான். எம்.டி.முத்துக்குமாரசாமி கூட அதைப் பயன்படுத்திக்கொண்டு என்னைப் பழைமைவாதி என முத்திரைகுத்தி என் எல்லாக் கருத்துக்களையும் ‘முற்போக்கு’த் தளத்தில் தடுத்து நிறுத்தவே முயல்கிறார் என்பதே ஆதாரம்.

யோசித்துப்பார்த்தால் ஆச்சரியம்தான். ஓர் எழுத்தாளன் அவனுடைய சொந்த வாழ்வனுபவத்தால், படைப்பனுபவத்தால் இந்தியா பற்றி ஒரு நிலைப்பாடு எடுக்கிறான். அதைத் தர்க்கபூர்வமாக முன்வைக்கிறான். ஆனால் அந்த நிலைப்பாடு எடுத்ததனாலேயே அவனுடைய இலக்கியக்கருத்துக்கள் எதற்குமே மதிப்பில்லை என ஒட்டுமொத்தமாகத் தீர்ப்பளிக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தை ஃபோர்டு பவுண்டேஷன் எம்.டி.முத்துக்குமாரசாமிக்குக் கொடுத்திருக்கலாம். அதற்கு வாசகர் ஏன் கட்டுப்படவேண்டும்?

ஆசார பின்நவீனத்துவம்

எம்.டி.முத்துக்குமாரசாமி பெயர் சொல்லாமல் ஓரிடத்தில் சொல்கிறார் ‘நாம்தான் பகவத் கீதையைப் படித்துக்கொண்டு, வியாபார கழிசடை சினிமாவிற்குக் கதை எழுதிக்கொண்டு, நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம் தட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோமே  நாம் எப்படி மயிலை வேணு மூலமாக குணங்குடி மஸ்தானின் பாடல்கள் எதிர்க்கலாச்சாரத்தன்மை பெற்றன என்று அறியப்போகிறோம்?’

ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொடர்பாளராக ஒளிந்தும் தெளிந்தும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து சுகபோகத்தில் புரண்டபடி பின்நவீனத்துவமும் எதிர்க்கலாசாரமும் பேசுவதை விட வணிகசினிமா எவ்வளவோ யோக்கியமானது என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் அந்த எதிர்க்கலாச்சாரத்தை ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுக்கேற்பத் திரிப்பதையாவது செய்யாமலிருக்கிறது தமிழ் சினிமா.

அத்துடன் இந்த வரி. இது சுந்தர ராமசாமியின் சொல்லாட்சி. இது உருவாக்கும் இருமையைப் பாருங்கள். கழிசடை வணிகசினிமா X இலக்கியம். கடந்த இருபத்தைந்தாண்டுகளில் இந்தவகை எதிரீடுகள் எல்லாம் என்ன வகையில் நிராகரிக்கப்பட்டு நடுவே உள்ள மயக்கப்பகுதி மேல் குவிந்துள்ள கவனம் என்ன என இவருக்கு ஏதாவது தெரியுமா? பொதுப்போக்கு கலைக்கும் இலக்கியத்துக்கும் எதிரான இந்த ஒட்டுமொத்தமாக நிராகரிப்பைத் தாண்டி என்னென்ன நிகழ்ந்திருக்கிறது இங்கே என கவனித்திருக்கிறாரா.

தமிழ் சினிமாவில் பல போக்குகள் உள்ளன. அவை மக்களின் ரசனையுடன் உரையாடித் தங்கள் வடிவத்தை அடைந்தவை. அந்த எல்லைக்குள் மக்களின் வாழ்க்கையைப் பேசிக்கொண்டிருக்கும் படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தங்கள் எல்லைகளுக்குள் நின்றபடி ’நான் கடவுள்’ அல்லது ’அங்காடித்தெரு’ பேசியது தமிழ்நாட்டு அடித்தள மக்களின் நேரடி வாழ்க்கையை. அவை மெல்ல ஒரு களத்தை உருவாக்கின. இன்னும் வரக்கூடிய சினிமாக்கள் இன்னும் தீவிரமாகப் பேசக்கூடும். அப்படித்தான் வெகுஜனக்கலை உருவாகி வருகிறது. அது மக்களின் கூட்டு உளவியலால் இட்டுச்செல்லப்படக்கூடிய பொது மொழிபு.

வெகுஜனக்கலையின் உள்ளே ஓடும் சமூக ஊடுபாவுகளைப் பின் நவீனத்துவ சிந்தனைகளைத் தெரிந்தவர்கள் வேறு மொழிகளில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். முக்கியமான திறப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ‘திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’ என்ற வரிக்குக் கைதட்டும் அதே மக்கள் ‘வக்காளஓளி கடவுள் புளுத்தினாரு..’ என்ற பிச்சைக்காரரின் வசனத்துக்கும் கைதட்டுகிறார்கள். அந்த நுண் ஊடுபாவுகளை ஆராய்வதற்குத்தான் மொழியியலும் குறியியலும் உருவாகி வந்திருக்கின்றன. அவற்றில் நான்கு புத்தகங்களை வாசித்தவர் தன்னைப் பெரிய சீமான் என நினைத்துக்கொண்டு அந்தக் கலைவடிவைக் குனிந்து பார்ப்பதற்காக அல்ல.

’கழிசடை சினிமா’ என இந்தப் படங்களை முத்திரை குத்தும் ஒருவரின் மனநிலை என்ன? இதற்குப்பின்னாலிருப்பது என்ன அளவுகோல்? சம்பிரதாய நடுத்தரவர்க்க ஒழுக்க நோக்கு மட்டும்தானே? கூடவே கல்வித்துறை சார்ந்த மேட்டிமை நோக்கு. இந்த மனநிலைகள் கொண்ட ஒருவரா எதிர்அறம் பற்றிப் பேசுவது? இப்படி எளிய இருமைகளைக் கட்டமைத்துத் தன்னை மேலே தூக்கிக்கொண்டு அதிகாரத்தைக் கட்டமைப்பவரா இங்கே பின்நவீனத்துவத்தின் பிரதிநிதி? தமிழுக்கு எல்லாமே இப்படி வந்து வாய்த்துவிடுகிறது.

பின்நவீனத்துவ கீதை

கூடவே பகவத் கீதைபற்றி. நான் பகவத் கீதைபற்றி என்ன எழுதியிருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது. அது அவருக்குக் கடினம் என்றால் வாய்திறக்காமலிருக்கும் நிதானமும் இல்லை. போகிறபோக்கில் ஒரு வரி. இதைச்சொல்ல எதற்குப் பின்நவீனத்துவ ஃபார்முலா? நெல்லையப்பர் தேரடியில் எம்.டி.முத்துக்குமாரசாமி சின்னவயசில் கேட்ட திக பேச்சாளரே போதுமே. பின் நவீனத்துவமே ஆனாலும் நமக்கு கோட் சூட் போட்ட தி.க குஞ்சுதான் அமையுமா என்ன?

நான் பேசிக்கொண்டிருக்கும் கீதைக்கும் இன்று வரை இங்கே பேசப்பட்ட கீதைக்கும் பெரும் வேறுபாடுண்டு. அதைப் பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறேன். இது நாராயணகுருவின் வழி வந்த ஒரு சிந்தனை மரபைச் சேர்ந்தது. அந்த மரபு மேலைநாட்டுத் தத்துவ மரபுடன் உரையாடி உருவாக்கிக்கொண்ட ஒன்று. தீண்டப்படாதவர்களாக வாழ்ந்த அடித்தள மக்களில் இருந்து உருவாகி வந்த ஞானியாலும் மாணவர்களாலும் உருவாக்கப்பட்ட மாற்று விளக்கம் இது.

பிரம்மாண்டமான ஓர் அறிவியக்கமாக இது அரைநூற்றாண்டாக நிகழ்ந்து வருகிறது. மொத்த இந்து மெய்யியலையும் தன் நோக்கில் விளக்கி எழுதிவருகிறது. தமிழில் அதற்கான ஒரு தொடக்கமே நான் எழுதிவருவது. மையத்தை விளிம்புகளில் இருந்து உள்வாங்கிக் கொள்ளும் இந்த முயற்சியையே உண்மையில் சுயமாக சிந்திக்கக்கூடிய பின்நவீனத்துவர் எவரும் முக்கியமாக கவனிப்பார்கள். அந்த போக்கில் அது கட்டமைக்கும் சொல்லாட்சிகளை மாற்றுப்பார்வைகளையே அவர்கள் பின்நவீனத்துவம் என வரையறை செய்வார்ர்கள்.

நாராயணகுருவைப் புரிந்துகொள்ள முடியாத ஒருவர் குணங்குடியாரையோ அல்லது கானாப்பாடலையோ புரிந்துகொள்ளமுடியாது. இவர்களுக்குப் புரிந்துகொள்ளும் நோக்கமும் இல்லை. தங்கள் ஏகாதிபத்திய திட்டங்களுக்கு ஏற்ப அவற்றை திரிக்கும் நோக்கம் மட்டுமே உள்ளது.

மன்னிக்கவேண்டும் எம்.டி.முத்துக்குமாரசாமி. இந்தப் பின்நவீனத்துவ, பின்னைகாலனித்துவ பாவலாக்களை எல்லாம் விட்டுவிட்டு உங்களால் என்ன முடியுமோ அதைப் பேசுங்கள். உங்களால் உண்மையில் என்ன சாத்தியமோ அதைச் செய்யுங்கள். அதன் மூலம் தமிழுக்கு நீங்கள் உண்மையான சில பங்களிப்புகளை ஆற்றமுடியும்

[எம்.டி.முத்துக்குமாரசாமியின் பாரதி பற்றிய கருத்துக்கான பதில் நாளை]

முந்தைய கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்