கெட்டவார்த்தைகள்

 1

எஸ்.வையாபுரிப்பிள்ளை

அன்புள்ள ஜெ.  வணக்கம் …

பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள்.

நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..

இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படித்தபோது தாயைப் பழிக்கும் சொல்லால் பெரும்பாலும் யாரும் யாரையும் திட்டுவதில்லை. ஆனால் இங்கோ வெகு சகஜமாக “தா…..ளி”  இந்த வார்த்தைதான் பிரயோகிக்க படுகிறது.. அது குறித்த ஒரு சின்ன அருவருப்பு கூட திட்டுபவரிடமோ திட்டு வாங்குபவரிடமோ இல்லையே.. ?

மேலும் வசைச்சொற்கள் பெரும்பாலும் பிறப்பையே இழித்துக் கூறுவதாகவே உள்ளன. இங்கு நாமும் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லையே.?

நம் மண்ணில் மட்டும் ஏன் இப்படி.? எதனால் இது சகஜமாக இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது?  மேலும் ஒரு விசித்திரமான வசை, நண்பன் ஒருவன் தூரத்தில் வருவதைபார்த்து மற்றொருவன் சொல்கிறான் ” லேய் மக்கா முத்துச் சாமிக்க மூத்த கொள்ளி வாறாம்ல…”பிற இடங்களைப் பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நெருடலாக உள்ளது .எதனால் இங்கு இப்படி என்று நீங்கள் நினைத்ததுண்டா?

அன்புடன்
K.ராஜேஷ் குமார்

 

அன்புள்ள ராஜேஷ் குமார்

இதில் நெருடலுக்கு எந்த இடமும் இல்லை. கெட்டவார்த்தைகளைப் பற்றி நம்முடைய மனப்பதிவுகள் நம் பெற்றோரால் சிறுவயதில் ஒழுக்க நடத்தை சார்ந்து கற்றுக்கொடுக்கப்பட்ட நிலையில் உள்ளன. சமூக உளவியலைக் கொஞ்சம் கவனித்து அவற்றைப்பற்றி ஆராய்ந்தால் மேலும் பலவகையான புரிதல்களை நோக்கி நம்மால் செல்ல முடியும். ஒரு சமூகத்தில் கெட்டவார்த்தைகள் எப்படி உருவாகின்றன, ஏன் நீடிக்கின்றன?

என் நேரடி மனப்பதிவுகளை மட்டுமே நம்பி இதை விவாதிக்க விரும்புகிறேன். நடைமுறையில் கெட்டவார்த்தைகள் இரண்டு தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, கோபம், வெறுப்பு, கசப்பு முதலியவற்றை வெளிக்காட்டுவதற்காக. இரண்டு, கிண்டல், கேலி, நகைச்சுவைக்காக. இரண்டிலும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. கெட்டவார்த்தைகள் எப்போதுமே நேர்நிலையான ஒரு சமூகநிலைக்கு எதிரான எதிர்மறை வெளிப்பாடாக உள்ளன.

சமூகத்தின் எந்த ஒரு இயக்கத்தையும் நேர் எதிர் சக்திகளின் முரணியக்கமாக புரிந்துகொள்வது ஒரு உபயோகமான கருவி. சமூக இயக்கத்தின் நேர்சக்தி என்பது அறம், ஒழுக்கம், விழுமியம் என்றெல்லாம் சொல்லப்படும் சீரமைக்கும் முறை. அதற்கு எதிரான மீறல் அதற்கு எதிர்சக்தியாகச் செயல்படுகிறது. நேர்ச்சக்தி இருந்தால் எதிர்சக்தி இருந்தே தீரும். அது இயற்கையான இயக்கவியல்.

சமூகச் சீராக்கம் என்னும் நேர்ச்சக்தியின் அழுத்தம் எப்போதுமே வன்முறை கலந்தது. அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் எதிர்ச்சக்தி தன் வன்முறையை சொல்லில் ஏற்றிக்கொள்கிறது. கெட்டவார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் சீர்முறையின் மீறல் என்பதே கெட்டவார்த்தையாக உருவம் கொள்கிறது என்பதைக் காணலாம்.

உதாரணமாக கேரளத்தில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அந்தரங்கமயிரை இது குறிக்கும். முடி என்றால் நல்ல வார்த்தை. ஆக, உடலில் ஒருபகுதியை வெளியே காட்டக்கூடாது, அதைப்பற்றிப் பேசக்கூடாது என்ற சமூகச் சீராக்கத்தின் விதிக்கு எதிரான ஒரு மீறலே இங்கே கெட்டவார்த்தையாக ஆகிறது.

நூற்றுக்கு தொண்ணூறு கெட்டவார்த்தைகள் வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவை. நம் சமூகசீராக்கத்தின் மிகமுக்கியமான, மிகக் கடுமையான விதி என்பது தாயுடனான பாலுறவை தடைசெய்தல்தான். ஆகவே கெட்டவார்த்தைகளில் தாயோளி போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக அக்கா தொடர்பானவை. தாயின் அந்தரங்க உறுப்புகள் தொடர்பான சொற்கள் கெடவார்த்தையாக ஆவது அவற்றை எண்ணவும் பேசவும் சமூகத்தடை இருக்கிறது என்பதனாலேயே.

தந்தைவழிச் சமூகம் உருவானபோது தாயின் கற்பு முக்கியமான ஒரு சமூக நெறியாகியது. அதைத்தொடர்ந்தே முறையான தந்தை இல்லாதவன் என்ற வசை கடுமையான ஒன்றாக ஆகியது.  புராதன தாய்வழிச்சமூகமான கேரளத்தைப்பற்றி ஆராய வந்த மேலைநாட்டவரான எட்கார் தர்ஸ்டன் அங்குள்ள மக்கள் ‘பாஸ்டர்ட்ஸ்’ என்றார். அவர் அதை வசையாகக் கண்டாலும் அந்த மண்ணில் அது வசையாக இல்லை. அங்கே ஒருவரின் அடையாளம் தாய் வழியாகவே. தந்தை பெயர் தெரியாமல் இருப்பது ஒரு தவறே அல்ல. தாயின் குடும்பவழியின் பெயர் தெரியாமல் இருந்தால்தான் கேவலத்திலும் கேவலம். ‘தறவாடித்தம்’ இல்லாமை.

ருஷ்ய இலக்கியம் ‘போரும் அமைதியும்’ நாவலை மொழியாக்கம் செய்தபோது டி.எஸ்.சொக்கலிங்கம் ‘சோரபுத்திரன்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். பியரி அவன் அப்பாவுக்கு சோரபுத்திரன். ஆனால் அங்கே அது வசை அல்ல. அவன் ஒரு பிரபு முறையாக கல்யாணம் செய்யாத பெண்ணுக்குப் பிறந்தவன், அவ்வளவுதான். ஆனால் தமிழ்நாடு போன்ற தந்தைவழிச் சமூகத்தில் அது கொலைக்குக் காரணமாக அமையும் கெட்டவார்த்தை.

பலசொற்கள் எப்படி கெட்டவார்த்தை ஆகின்றன என்பது ஆச்சரியம் அளிப்பது. ‘பொறுக்கி’ என்பது ஒரு கெட்டவார்த்தை. உற்பத்திசெய்யாமல் திரட்டி உண்ணும் வாழ்க்கை மேல் உள்ள இழிவுணர்ச்சியின் வெளிப்பாடு. ‘செற்றை’ என்பது குமரிமாவட்டத்தமிழின் கெட்டவார்த்தை. அதன் பொருள் ஓலைவேய்ந்த குடில். அதாவது அஸ்திவாரம் அற்றவன். வீடற்றவன். பண்பாடு அற்றவன். ‘எரப்பாளி’ என்பதும் கெட்டவார்த்தை. இரப்பவன்.

‘போடா புல்லே’ என்று  கெட்டவார்த்தை உண்டு குமரி மண்ணில். கொஞ்சம் அசந்தால் புல்வந்து மூடும் மண்ணில் அது ஒரு வசை. ஆனால் தன்னை புல் என்று சொல்லிக்கொள்வது குஜராத்தில் ஒரு பெருமை. திருணமூல் காங்கிரஸ் என்றால் புல்வேர் காங்கிரஸ் என்று பொருள். தமிழகத்தில் இப்போதுகூட ஒரு உயர்சாதிக்காரனை கீழ்சாதிப்பெயர் சொல்லி வசைபாடினால் அது கெட்ட வார்த்தையாகவே கருதப்படும். சாதியே கெட்டவார்த்தை ஆகிறது இங்கு.

வடிவேலு தமிழில் புகழ்பெறச்செய்த கெட்டவார்த்தைகள் பல. நாதாரி என்றால் மதுரைப்பக்கம் பன்றிமேய்க்கும் போயர்களைக்குறிக்கும் சொல். அவர்கள் புகார்செய்ததை அடுத்து அதை தணிக்கைத்துறை தடைசெய்தது. எடுபட்ட பயல் என்றால் பேதிநோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.

கொடூரமான நோய்கள் வேட்டையாடிய காலத்தில் நோய்கள் சார்த கெட்டவார்த்தைகள் உருவாயின. குமரிமாவட்டத்தில் நீக்கம்பு [நீர்+ கம்பம் ] , குரு [விதை – வசூரி] என்னும் கெட்டவார்த்தைகள் முறையே காலரா மற்றும் சின்னமையைக் குறிக்கின்றன. பேதிலபோவான், கழிச்சிலிலே போவான் போன்ற வசைகள் தமிழ்நாட்டில் பிரபலம். பிளேக் பற்றிய கெட்டவார்த்தைகள் தமிழில் இல்லை

நாம் கெட்டவார்த்தையாக நினைக்கும் பல சொற்கள் பலதளங்களில் புழங்கிய சொற்களே. உவத்தல் [மகிழ்தல்] என்ற தூய தமிழ்ச்சொல்  ”ஒத்தா” ஆக சென்னைத்தெருக்களில் தினமும் அடிபடுகிறது. அடையாளம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் புண்டை. அது பெண்குறியையும்  சுட்டுகிறது. எஸ்.வையாபுரிப்பிள்ளை அதற்கு அவரது பேரகராதியில்  அர்த்தமும் கொடுத்திருக்கிறார். அதாவது வைத்தியம் முதலியவற்றின் புழங்கிய சாதாரண சொல் அது. இப்போது கெட்டவார்த்தையாக ஆகிவிட்டது. புண்டரம் என்றால் விபூதி ,குங்குமத்தால் போடப்படும் திலகம். ஊர்த்துவபுண்டரம் என்றால் நாமம். திரிபுண்டரம் என்றால் முப்பட்டை விபூதி. புண்டரீகம் என்றால் தாமரை. புண்டரிகை என்றால் மகாலட்சுமி.

நாயே என்றால் ஒரு இனிய,. அற்புதமான மிருகத்தின் பெயர். ஆனால் சிலருக்கு அது வசை. இந்துக்களுக்கு பன்றி விஷ்ணு அவதாரம். இஸ்லாமியர்களுக்கு அந்த மிருகத்தின் பெயரே ஒரு கெட்டவாத்தை. ஆங்கிலத்தில் பிருஷ்டம் மலம் போன்ற சொற்கள் கெட்டவாத்தையாக உள்ளன. சம்ஸ்கிருதத்தில் கெட்டவார்த்தையே இல்லை. ஏனென்றால் அதை மக்கள் பேசவில்லை. எல்லாவற்றுக்கும் அங்கே வார்த்தைகள் உள்ளன. ஆனால் அவற்றை வசைபாட பயன்படுத்தும்போதே அவை கெட்ட்வார்த்தை ஆகின்றன

சமூக வரைமுறைகளை மீறுவது ஒழுக்கக் கேடு. அது சொற்கள் மூலமானாலும். எனவே கெட்டவார்த்தைகள் ஒரு நாகரீக சமூகத்தில் எப்போதும் தடுக்கப்பட்டே இருக்கும். ஆனால் கெட்டவார்த்தைகளை முழுக்க தடுக்க முடியாது. ஓர் எல்லைவரை அனுமதித்தும் ஆகவேண்டும். வசைகள் மூலம் எவ்வளவோ அழுத்தங்கள் சமன்செய்யப்பட்டுவிடுகின்றன.

கெட்டவார்த்தைகள் நகைச்சுவையுடன் கையாளப்படுவது இதன் அடுத்த கட்ட நீட்சி. அதுவும் வரைமுறைகளை மீறும் ஒருசெயல்தான். அதன்மூலம் ஒருவகையான சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. சமூக அதிகாரத்தின் அழுத்தம் உடைக்கப்படுகிறது. எந்தெந்த மனிதர்களிடம் கெட்டவார்த்தைகள் வேடிக்கையாக அதிகம் புழங்குகின்றன என்று பார்த்தால் தெரியும். கடுமையான உடலுழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் வேலைசெய்ய நேரும் மக்கள். மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பை சற்றே தவிர்க்க ஆரம்பிக்கும் இளைஞர்கள். நீங்களும் நானும் பதினைந்து வயதில் கெட்டவார்த்தைகளை பிறர் சொல்ல கேட்டு சிரிக்க ஆரம்பித்திருப்போம்.

குமரி நெல்லை மாவட்டங்களில் கிண்டலாகவும் நக்கலாகவும் கெட்டவார்த்தைகளை போடுவது சாதாரணம். காரணம் இங்குள்ள அன்றாட உரையாடலில் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும் கிண்டல்தான். இந்தக் கிண்டல் வழியாகத்தான் பலவகையான சமூக அகழிகள் தாண்டப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் சாதிப்பிரிவினை உண்டு. ஆனால் கிண்டல் நக்கல் வழியாக அதை தாண்டிச்செல்வதைக் காணலாம். புலையர்கள் இங்கே சாதாரணமாக நாயர்களையும் நாடார்களையும் கிண்டல்செய்வார்கள். சின்னப்பையன்கள் அருகே நின்றால் முகம் சிவந்துபோகும்.

நெல்லையில் நாயக்கர்களுக்கும் ராவுத்தர்களுக்கும் இடையேயான உறவும் இதைப்போலத்தான் என்பதைக் கவனித்திருக்கிறேன். கிண்டல்செய்து கண் பிதுங்கவைப்பார்கள். நாயக்கர்களும் ராவுத்தர்களும் மாறி மாறி மாமா முறை போட்டு கூப்பிடுவதைக் கவனித்திருக்கிறேன். அதன் பின் ”…வாரும்வே முக்காலி ” என்று நாயக்கர் கூப்பிடுவார். ”நம்ம தங்கச்சி நாமக்காரி எப்டிவே இருக்கா” என்பார் ராவுத்தர். நாமம் என்றால் குறியீட்டுப்பொருள். நாயக்கர்களும் முஸ்லீம்களும் முந்நூறு வருடம் போரிட்டுவந்தவர்கள் என்ற பின்னணியில் இந்த உரையாடலில் உள்ளது மிக ஆக்கபூர்வமான ஒரு வரம்புமீறல்.

இத்தகைய நகைச்சுவை இல்லாத வடமாவட்டங்களில் உக்கிரமான நேரடியான சாதிக்காழ்ப்புகள் இருப்பதை நான் தர்மபுரியில் இருக்கும்போது கண்டிருக்கிறேன். நட்பார்ந்த கிண்டலும் நக்கலும் ஒரு சமூகம் வரலாற்றில் இருந்து பெற்றுக்கொண்ட பிளவுகளை மழுங்கடிக்க மிகவும் இன்றியமையாதவை.

சமூக ஒழுங்குகள் எப்படி பாரம்பரியமாக கைமாறப்பட்டு நெறிகளாக முன்வைக்கப்படுகின்றனவோ அதேபோலத்தான் இத்தகைய சாதி-சமயக் காழ்ப்புகளும் வரலாற்றில் உருவாகி கைமாறபப்ட்டு நெறிகள்போலவே அளிக்கப்படுகின்றன. ஆகவே காழ்ப்புகளை மீறிச்செல்லும்போது கூடவே நெறிகளும் மீறப்படுகின்றன.

குமரிமாவட்டத்திலும் நெல்லையிலும் மொத்த தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத ஒரு சமூக நட்புணர்வு இருந்து வந்தது — சாதி மத அரசியல் தலையெடுக்கும் காலம் வரை. அந்த நட்புணர்வும் சமத்துவமும் உருவானதும் நீடித்ததும் ‘கெட்ட வார்த்தைகள்’ வழியாகத்தான். ஆகவே சாதிமத அரசியல் அளவுக்கு ஆபாசமானதாக நான் கெட்ட வார்த்தைகளைக் கருதவில்லை.

மேலும் கெட்டவார்த்தைகள் எல்லா சமூகங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிபந்தனையுடன் — சொல்லிச்சொல்லி அவை தேய்ந்துபோயிருக்க வேண்டும்! கேட்டால் அது கெட்டவார்த்தையாகவே காதுக்குப் படக்கூடாது. பலவருடங்கள் முன்பு நானும் நண்பரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஒரு படம் பார்த்தோம். அதில் ஸ்டாலோன் ‘ஃபக்’ என்ற வார்த்தையை தவிர்த்து நாலைந்து வார்த்தைகள் மட்டுமே சொல்கிறார். ”ஹாலிவுட் படமுல்லா மச்சான்..உலகம் முழுக்க போகணுமில்லா…அதனாலதான் உலகம் முழுக்க தெரிஞ்ச டைலாக்க மட்டும் வச்சிருக்கான்”என்றார் நண்பர்

ஒரு நண்பர் மொழியாக்கம் செய்த சிறுகதையில் அடிக்கடி ”காளைச்சாணம்” என்று வந்தது. அவருக்கு சந்தேகம் தனியாக ஷிட் என்று வரும் இடத்தில் என்ன எழுதுவது. ”பீ” என்று போடலாம் என்றேன் நான். ”அதெப்படி முதல் வரியில் புல் ஷிட்டென்று வருகிறதே”’ என்று அவர் கவலைபப்ட்டார். கதையில் ”இந்த வேலையும் போய்விட்டதா?” ” காளைச்சாணி”  ”என்ன செய்யப்போகிறாய்? ”சாணி” — இப்படி ஓர் உரையாடல் போவது பற்றி அவருக்கு புகாரே இல்லை.

எங்களூர் இயக்குநர் ஒருவர் உண்டு. அவருக்கு கமா என்ற எழுத்துக்கான ஒலி தாயளி தான். அது மருவி தாளி. ”எங்கப்பா என்னமாதிரி மேடையிலே பேசுவார்னு நெனைக்கிறீங்க…சைவசித்தாந்தம் பத்தி பேசினா தாளி கொன்னு எடுத்திருவார்” கெட்டவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமரும் இடங்களும் உண்டு

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009

 

  

முந்தைய கட்டுரைசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5