அன்புள்ள ஜெயமோகன்,
பாரதி பற்றிய விவாதங்கள், எனக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எதிர் வினைகள்.
எனக்குள் உள்ள ஒரு சில கோட்பாடுகளை நிறுவிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாகவே இது அமைந்தது என்றால் மிகையாகாது.
எந்த ஒரு கலைஞனோ, சமூக சேவகனோ, அரசியல் வாதியோ… இவர்களைப் பற்றிய வழிபாட்டு முறை ஒருபோதும் நம்மை அடுத்த களத்திற்குக் கொண்டு செல்ல உதவப்போவதில்லை. அவர்களின் குறைகளும் நமக்குப் புரியவேண்டும்/உணரவேண்டும். இது மென்மேலும் நம்முடைய சமூகம் முன்னேற வழி வகுக்கும்.
நம் மக்களின் (குறிப்பாக தமிழர்கள்) மனநிலையில் இரு வகையான மனிதர்கள் மட்டுமே வாழ்கிறார்கள் என்ற மாயை உள்ளது. ஒரு வகையினர் கடவுளைப் போன்றவர்கள். குறைகளே இல்லாதவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். தவறே இழைக்காதவர்கள். மற்றொரு வகையினர் சாத்தானைப் போன்றவர்கள், கொடுமைகள் மட்டுமே செய்பவர்கள், குறைகள்/குற்றங்கள் மட்டுமே செய்பவர்கள். இந்த மனநிலைதான் நம்முடைய பிரச்சனை.
ஒரு நல்ல நடிகன், சமூக அக்கறை உடையவனாக, அடுத்தவர்களுக்கு நல்லது செய்பவனாக, ஏழைகளின் பங்காளிகளாகக் கருதுவது. அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்பா அவன் படத்தை நான் பார்க்க மாட்டேன்! என்று சொல்வது. இவை எல்லாமே பாரதி விசயத்திலும் எனக்கு இந்த விவாதம் மூலம் தெரிகிறது.
பாரதியை நிறை குறைகளோடு ரசிக்கலாம் (ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. ஒரு கலைஞனுக்கு அது தேவையும் அல்ல). பாடல் எழுதுபவர், கவித்துவம் உள்ளவர், உரைநடை ஆசிரியர், இன்ன பிற துறைகளிலும் வல்லவனாக இருப்பது அவசியம் இல்லை. நான் சொல்ல வருவது அதைப் பற்றிய மனத்தடை தேவை இல்லை என்பதுதான். “ஆமாம்பா எனக்கு பாரதியை இந்த இடத்தில பிடிக்கும். இந்த இடத்தில பிடிக்காது அல்லது இன்னொருவர் அந்த இடத்தில பாரதியை விடப் பெரியவர்” என்று சொல்ல இத்தகைய வழிபாட்டு முறையே தடையாக உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இவ்வகையான உரையாடல்கள் (முழுவதும் நான் உணர முடியாவிட்டாலும்) கருத்தில் வைத்து கொள்ள உதவும். எதைக் கொண்டு அளவிடுவது என்ற புரிதலுக்கும் உதவும். இந்த உரையாடல்கள் பாரதியின் பெருமையைக் குறைக்கும் என்ற எண்ணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாரதியின் வீச்சு அதிகமாக உள்ள இடங்களை நன்கு ரசிக்க வைக்க இவ்வகையான உரையாடல்கள் மிக்க அவசியம் என்றே கருதுகிறேன்.
இவற்றைப் படிக்கும் சராசரி (என் போன்ற) வாசகர்கள் கம்பராமாயணம் படிக்க ஒரு துளி காரணமாக அமையலாம். அதன் மூலம் பாரதியை அளவிடத் துணியலாம். இவைகளே அவற்றின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
**********************************************************
உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை :) :) : தயவு செய்து இனிமேல் அங்கதக் கட்டுரைகள் எழுதும்போது இது அங்கதம் என்று தெளிவாகக் குறிப்பிடவும். நம் மக்கள் இன்னும் சிவாஜி பற்றிய கட்டுரைகளையும் பாரதி கட்டுரைகளும் குழப்பி அடிக்கிறார்கள். :).
************************************************************
நானும் நல்ல தமிழ் சூழலில் (?) வளர்ந்ததால் சினிமா பற்றி எனக்கு இருக்கும் புரிதல் மற்ற துறைகளை விட சற்று அதிகம் (அதாவது மற்ற கலைத்துறையை காட்டிலும் சினிமா என்ற கலை வடிவம் தொடர்பாக நிறைய — இதைத்தவிர வேறு ஏதாவது பேசுவோமா என்ன?? — பேசியதால் வந்தது…!!
சிவாஜி பற்றிய அந்த எதிர் வினைகளும் அப்படித்தான்!!..
இதுவும் கிட்டத்தட்ட அதே வழிபாட்டு மனோநிலைதான். சிவாஜியின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதில் என்ன பங்கம் வந்து விட போகிறது.? நான் சிவாஜி பற்றி அவர் ரசிகர்களிடம் பேசும்போது எப்போதுமே சொல்வது உண்டு. மிருதங்க சக்கரவர்த்தி, முதல் மரியாதை இந்தப் படங்களில் எந்தப் படத்தில் சிவாஜி நடிப்பு பிடிக்கும்?. பதில் எப்போதும் நான் எதிர்பார்ப்பது போலதான் வரும். நான் சிவாஜியை அதோடு மதிப்பிட முடியும். குறைத்தும் அல்ல கூட்டியும் அல்ல. உள்ளது உள்ளபடி பார்த்தால் சிவாஜியின் வீச்சை அவரின் சில படங்களின் மூலம் கண்டு கொள்ள முடியும். இப்படி இல்லமால் “இல்ல பாஸ்..சிவாஜி எப்போதுமே நல்லா நடிப்பாரு…அவர் நடிப்புக்குக் கடவுள்..” என்பது போன்ற பேச்சுக்கள் சிவாஜியை மட்டுமல்ல, அந்தக் கலையையும் சேர்த்து குறைத்து மதிப்பதற்கு சமம். சிவாஜியின் நடிப்பைப் பல படங்களில் பார்த்து ரசிக்கும் என்னால், அவரின் பாடல் காட்சி நடிப்பின்போது டி எம் எஸ் காசையும் சேர்த்து இவருக்கே கொடுதிருப்பான்களோ என்று கிண்டலும் செய்ய முடியும். அவ்வகையான மதிப்பீடுகள்தான் நம்மை நடிப்பின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று திடமாக நம்புகிறேன். இவை இல்லாமல் இருப்பது…நம்முடைய அளவீடுகளையும் பாதிக்கும்.
தேவை இல்லாமல் பேசுகிறேனோ?.. சரி.. நான் சொல்ல நினைத்தது இதுதான்..! வழிபாட்டு மனோநிலை நமக்கு பயனளிக்கப் போவதில்லை. அவை இல்லாமால் அவர்தம் படைப்பின் தரத்தை முன்னிறுத்துவது இந்த வழிபாட்டு முறையை விட பாரதியை நீண்ட காலம் நம்மிடையே நீடித்து வாழ வைக்கும்!!
மிக்க அன்புடன்,
காளிராஜ்
அன்புள்ள காளிராஜ்
விமர்சனம் என்பது உடைப்பதும் நிறுவுவதும் அல்ல. அது நம் ரசனையை நாமே கூர் தீட்டிக்கொள்வது. நாம் தேங்கிவிடாமல் நம்மை நாமே தொடர்ந்து மறுபரிசீலனைசெய்வது. திறனாய்வு இல்லா மொழியில் இலக்கியம் அழியும்
பாரதியை விடுங்கள், வைரமுத்துவை விமர்சித்தபோதுகூட எனக்கு வசைகள்தான் வந்தன. நம் சூழலில் இலக்கியவிமர்சனம் என ஒன்று இருப்பதே ஜனங்களுக்கு தெரியாது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
உண்மைதான்!!.
என் பார்வையில் இவைகள் இலக்கியம், கலை சார்ந்த புறவயங்களின் மீது மட்டும் அல்ல. தன் மீதான சுய விமர்சனமும் நம் மக்களுக்குத் தாங்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
இதை நான் என் அடிப்படையைத் தகர்க்கும் அளவிற்கு உணர்ந்தது ஏழாம் உலகம் படித்த போதுதான். ஒரு இடத்தில பண்டாரத்தின் மனைவி ‘நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை’ என்று சொல்வதாக ஒரு வசனம் வரும். இது நான் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் விஷயம். முதலில் அதைப் படிக்கும்போது அடிப்பாவி என்றுதான் தோன்றியது. ஆனால் யோசிக்கும்போது ஒரு உண்மை விளங்கியது. நாம் அனைவருமே ஒரு விதத்தில் தனக்கு நல்லவனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பார்க்காத (அல்லது பார்க்க விரும்பாத) ஒரு கோணத்தில் நாம் செய்து இவ்வகையான கெடுதல்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம். தனக்கு நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அளவுகோல்களை நம்மை பாதிக்காதவாறு நாமே நிறுவிக் கொள்கிறோம். கசாப்புக் கடைக்காரன் ஆட்டை வெட்டுவது தவறாகத் தெரிவதில்லை. பணக்கார இளைஞன் துப்பாகியால் அதை செய்வதாக சினிமாவில் காட்டும்போது வில்லனாகச் சித்தரித்து உணர்த்த முடிகிறது.
இந்தத் தளைகளைத் தாண்டி உள்ளது உள்ளபடி நாம் செய்வதை நமக்கு நாமே விமர்சனம் செய்து கொள்ளவேண்டியது நம்முடைய வாழ்விற்கும், அடுத்த நிலைக்கும் நல்லது. பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதில்லை (செய்வது கிட்டத்தட்ட தற்கொலை போல என்பதும் எனக்கு புரிகிறது). முயற்சிப்பது ஒரு அளவிற்காவது மீதமுள்ள வாழ்வை அர்த்தமுடன் கழிக்க உதவும்.
இது போன்ற தன்னைத் தானே விமர்சிக்காத மனநிலைதான், தான் விரும்பும் (அல்லது அப்படி பிம்பம் கட்டபட்டிருக்கும்) ஒரு மனிதனை விமர்சிக்கும்போது எதிர்வினை செய்கிறது. அந்த விமர்சனத்தில் உள்ள உண்மைகளை அறிய உழைப்பு தேவைப்படுகிறது (உங்கள் நவீன இலக்கியம் ஓர் அறிமுகம் புத்தகத்தில் கூறியது போல). அதை செலவழிக்க பெரும்பாலோனோர் விரும்ப வில்லை.
என்னைப் பொறுத்தவரை என்னால் முழுமையாக நீங்கள் சொல்லும்தளத்தில் வைத்து பாரதியை உணர முடியவில்லை. ஆனால் அந்த விமர்சனங்களின் மேல் உள்ள நம்பிக்கை, எனக்கும் ஒரு நாள் இவைகள் புரியும் என்ற எண்ணத்தை அளிக்கிறது. இந்த நம்பிக்கை ஜெயமோகன் மேல் நான் கொண்ட தனிப்பட்ட நம்பிக்கை அல்ல (நம்பிக்கை இல்லை என்ற அர்த்தம இல்லை. :). அது வேறு). நீங்கள் சொல்லும் அந்த குறியீடுகளும், மன விரிவு, ஆகியவற்றை என்னால் நாவல்களில் உணர முடிகிறது என்பதால் ஏற்பட்டதுதான். வாசிக்கும் பழக்கம் தொடர்ந்து ஏற்பட்டால் நீங்கள் பாரதி குறித்து சொல்வனவும் புரியக்கூடும்.
இந்தக் கடிதம் எழுதியதற்கு காரணம் அது குறித்த எதிர் வினைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான். ஆரோக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சில கடிதங்கள், தனிப்பட்ட காழ்ப்பை உமிழ்வதைப் படிக்க நெருடலாக இருந்தது. இந்த மனநிலை எனக்கும் நீங்கள் பெரியாரைப் பற்றி எழுதியதை முதல் முறை படித்தபோது உணர்ந்தேன். தொடர்ந்து வாசித்தபோது பெரியாரை நான் எந்த விசயத்தில் மதிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது. அந்த பிம்பம் உடைபட்டது உண்மைதான். ஆனால் அது இன்னும் முழுதாகப் பெரியாரின் ஆளுமையை ஒரு சில விசயங்களில் உணர்த்தியது (குறிப்பாக – பெரியார் காலத்தின் கட்டாயம் என்ற சொற்றொடர்).
அது போன்றே பாரதி விசயத்தில் நேரம் வரும்போது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
பதிலுக்கு நன்றி!!
அன்புடன்,
காளிராஜ்
Hi Jeyamohan,
Sorry to write in English. Really the discussion about Bharathiyar is going in a thoughtful and healthy manner rather than some nonsense emotional answers that were given. I am just silently on the back of it studying same matters twice or thrice and understanding the things about Bharathiyar. I studied almost all of the bharathiyar poems and most of them are straight forward (Some exceptionals are there). It wont make the reader to think beyond certain limit. I started Kambar’s kamba ramayanam almost a year back and really it takes us to think beyond and even it needs your imagination or your inner bliss to understand the poets of kambar.
Once again am thanking you for starting this blog as am getting closer to both Kambar and Bharathiyar by started reading them again. I am moving to second platform from Prose like poetry of Bharathiyar to Poetic Kambar. I had taken the Kambaramayanam from the Upper self and started reading.
Thanks for showing the seeds to read the Kambar and Bharathiyar. Continue your discussion as will be still close to both the legends by reading it.
with thanks
Panneer Selvam.
அன்புள்ள பன்னீர்செல்வம்
நான் உத்தேசிப்பது ஒரு சலனத்தை
இலக்கியத்தில் எந்தச் சலனமும் நல்லதுதான். இன்று பாடப்புத்தகத்துக்கு அப்பால் கவிதை ரசனை வளராதவர்களே மிகப் பெரும்பாலானவர்கள். காரணம் நம் சூழலில் உள்ள பிம்பங்கள்
ஒரு ஆயிரம்பேர் கவிதையின் முகங்களைப்பற்றிய தெளிவுக்கு வந்தால் நல்லதுதானே
ஜெ