எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

முதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை.

அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய மனிதாபிமானமும் கசிவும் மட்டுமே இலக்கியத்தின் உச்சகட்ட சாத்தியங்கள் என்பதை உடைத்த அலை என தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், க.பூரணசந்திரன், பிரேம்-ரமேஷ் போன்றவர்கள் உருவாக்கிய அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் அறிமுகங்களைச் சொல்லலாம். அவர்களின் அந்தப்பங்களிப்பை நான் எப்போதுமே மதித்துவந்திருக்கிறேன். முன்னோடியான தமிழவனுக்கு ஒரு நூலையும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். பின்னாளில் பிரேமுடன் நான் நடத்திய விரிவான தனிப்பட்ட விவாதங்கள் எனக்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

ஆனால் இந்த அலையை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவனாகவே நான் உருவானேன். பொதுவான சிந்தனைத்தளத்தில் இவர்களின் பங்களிப்பு அளவுக்கே இவர்கள் உருவாக்கிய தடையும் முக்கியமானது. இவர்கள் மீதான என் பொதுவான விமர்சனங்களை இரு புள்ளிகளாகத் தொகுத்துச் சொல்கிறேன்

ஒன்று, இவர்கள் முன்வைத்த மேலைச்சிந்தனைகளை அவை விளைந்த பிரம்மாண்டமான விவாதச்சூழலில் இருந்து துண்டித்து எடுத்து உதிரிச்சிந்தனைகளாக இங்கே முன்வைத்தார்கள். அவற்றை நிறுவப்பட்ட கோட்பாடுகளைப்போலக் கையில் வைத்து வாதாடினார்கள். அதாவது மர்ஃபி ரேடியோவுக்குப் பதிலாக டிரான்ஸிஸ்டர் வந்துவிட்டதைச் சொல்வதுபோல.

குறிப்பாக தமிழவன் எல்லா மேடைகளிலும் அவர் அறிமுகப்படுத்திய அமைப்பியல் சிந்தனைகளைவிடக் காலத்தால் முந்தைய எந்தச் சிந்தனையையும் ‘இந்தமாதிரி பாடாவதி சிந்தனைகள்…’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போதுகூட அவர் அந்தத் தோரணையில்தான் பேசிக்கொண்டிருக்கிறார். .’இதுதான் இப்போதைய லேட்டஸ்ட் சிந்தனை. இது அங்கே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சொல்லும் சிந்தனைகள் எல்லாம் காலாவதியானவை’ –இதுவே இவர்கள் பொதுவாகக் கருத்துக்களை முன்வைத்த முறை. இந்த எளிமையான இருமை [binary] இல்லாமல் இவர்களால் பேசமுடிவதில்லை.

ஆனால் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் ஒட்டுமொத்தமாகவே நிரூபணவாதத்துக்கு எதிரானவை என்பதும், அவற்றுக்கு எதிரான சிந்தனைகளுடன் இணைத்து விவாதிப்பதன் மூலமே அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், அவை எப்போதுமே ஒரு பெரிய விவாதக்களனிலேயே பொருள் அளிக்கின்றன என்றும், இவர்கள் புரிந்துகொண்டதற்கு நேர் எதிரான கோணத்திலேயே இவற்றை அணுகவேண்டும் என்றும் நானறிந்தது இவர்கள் கூண்டோடு ‘காலாவதி’யான பிறகுதான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பின்நவீனத்துவமே இந்தவகையான இருமைகளை முழுமுற்றாகக் கட்டமைப்பதற்கு எதிரானது.

இந்தக் குழப்பங்களுக்கு என்ன காரணம் என்றால் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் எல்லாமே மொழியியல் என்ற விரிவான அறிவுப்புலத்துக்குள் நிகழ்ந்தவை. இவர்கள் எவரும் முறையாக மொழியியலைக் கற்றவர்களல்ல. ஆகவே உதிரி நூல்களை வாசித்துத் தனித்தனிக் கருத்துக்களாக எடுத்துக்கொண்டு அவற்றைத் தங்களுக்குப்புரிந்த வகையில் ஒருவகை இலக்கியத் தோற்றங்கள் போல முன்வைத்தனர். இவர்கள் சொன்னதை அரைவேக்காட்டுத்தனமாகப் புரிந்துகொண்டு பலர் எம்பிக்குதித்தனர். ஒரு கட்டத்தில் அது இலக்கியத்துக்கே எதிரான ஒரு அசட்டு இயக்கமாக இங்கே உருவம் கொண்டது.

இரு உதாரணங்களைச் சொல்லலாம். ரோலான் பார்த் ‘ஆசிரியனின் மரணம்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். இலக்கிய ஆசிரியனை ஓர் தனிஆளுமையாக அணுகாமல் பண்பாட்டுக்களனில் மொழிக்களனில் நிகழும் ஒரு வெளிப்பாட்டுப்புள்ளியாக அணுகும் கட்டுரை அது. அதாவது அது இலக்கிய ஆசிரியனை இன்னும் பிரம்மாண்டமானவனாக ஆக்குகிறது. ஆனால் தமிழில் ‘இனிமேல் இலக்கிய ஆசிரியன் என எவரும் இல்லை. எழுத்து மட்டும் ஆசிரியன் என்ற அடையாளமே இல்லாமல் நிற்கும்’ என்று இது இவர்களால் முன்வைக்கப்பட்டது.

ஆச்சரியமாகவே இருக்கிறது இப்போது. அன்று இதை நம்பிப் பெயர் போடாமல்கூட சிலர் எழுத ஆரம்பித்தார்கள். விவாதத்தில் ஓர் எழுத்தாளனைப் பெயர்சுட்டினால் ‘எழுத்தாளன் பேரை சொல்லாதீங்க. அந்த மாதிரி அணுகுமுறையெல்லாம் அழிஞ்சுபோய்ப் பத்து வருஷமாச்சு’ என்று சொன்னார்கள். அதாவது வண்ணநிலவன் கதைகள் என்று எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் அது தப்பு , வண்ணநிலவன் என்ற ஒருவரே கிடையாது என்றார்கள். வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தரராமசாமி என்றெல்லாம் எழுத்துக்களைப் பிரிக்கக்கூடாது என்றார்கள்.

இதாவது பரவாயில்லை. மொழியியல்தளத்தில் எந்த ஒரு எழுத்தாக்கமும் ஒரு பிரதி [text] தான். அந்த பிரதி எப்படி எச்சூழலில் அர்த்த உருவாக்கம் நிகழ்த்துகிறது என ஆராய்வதே அவர்களின் வேலை. உண்மையில் அது விட்கென்ஸ்டீன் காலம் முதலே உள்ள முறை. ஆனால் அந்த அணுகுமுறையை அப்படியே ஓர் இலக்கியவிமர்சன அணுகுமுறையாகப் புரிந்துகொண்டு எழுத்துக்கள் நடுவே குணவேறுபாடே இல்லை என்று இங்கே முன்வைத்தார்கள். இலக்கியத்தில் தரவேற்றுமை இல்லை என்று வாதிட்டார்கள். ’சுந்தர ராமசாமி எழுத்தும் சரோஜாதேவி எழுத்தும் ஒன்றுதான்’ என்ற அரிய பொன்மொழி பிறந்தது.

இரண்டாவதாக, இவர்களின் இந்த அலை தமிழில் உருவான எந்த இலக்கியப்படைப்பையும் மேலதிக நுண்வாசிப்பு எதற்கும் உட்படுத்துவதாக இருக்கவில்லை என்பதுதான்.ஒரு படைப்பை வாசித்து அதில் வெளிப்படையாக ஒலிக்கும் குரல்களை மட்டுமே கொண்டு வழக்கமாக சூழலில் புழங்கும் அரசியல் அர்த்தங்களைக் கட்டமைப்பதற்கு அப்பால் அவர்களால் எதையுமே சாதிக்கமுடியவில்லை. அது அரைநூற்றாண்டாக நம் கல்விச்சூழலில் நிகழ்ந்துவரும் ‘திரண்டபொருள் காணும்’ பொழிப்புரை நோக்குதான். கலைச்சொற்களை மட்டுமே மாற்றிக்கொண்டார்கள்.

சிறந்த உதாரணம் என்றால் நகுலன் படைப்புகளுக்கு எம்.டி.முத்துக்குமாரசாமிஎழுதிய விமர்சனம். நகுலனை எழுதத்தெரியாமல் குழப்பிய ஒரு பார்ப்பனஎழுத்தாளர் என்ற அளவிலேயே எம்.டி.எம் மதிப்பிட்டிருந்தார். இன்று அக்கட்டுரையை வாசிப்பவர்கள் நல்ல நகைச்சுவைக்கட்டுரையை எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதமுடியும் என நம்பக்கூடும்.

அல்லது குறியீட்டு வாசிப்பு. அதற்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் உதாரணம். என்னுடைய டார்த்தீனியம் கதையில் கரியசெடி ஒன்று ஒரு குடும்பத்தை அழிக்கிறது. அந்தக் கரியசெடி தலித்துக்களைக் குறிக்கிறது என்றும் அந்தக்கதை பாரதிய ஜனதாவின் கொள்கையை முன்வைக்கிறது என்றும் ஒரு வாசிப்பை முன்வைத்திருந்தார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அதைச்சொல்ல மேலாண்மை பொன்னுச்சாமியே போதும் என்பதை மட்டுமே நான் எதிர்வினையாகப் பதிவு செய்தேன்.

அல்லது உளவியல் விமர்சனம். அதற்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் உதாரணம். ‘மௌனியின் மொழி மானுட அறத்தைக் கையாள அறவே திராணியற்றது’ என்ற தன் மதிப்பீட்டுக்கு அவரது கடுமையான விமர்சனக் கட்டுரையில் எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லும் காரணம், அவர் ‘போலும்’ என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிக்கிறார், ஆகவே திட்டவட்டமாக எதையும் சொல்ல மறுக்கிறார் என்பது.

இந்த விமர்சனங்களைக் கண்டு அன்று நானெல்லாம் உண்மையிலேயே பீதியடைந்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக்கூட ஓர் சிந்தனை அலை மேற்கே உருவாகுமா என்ன என்ற கலக்கம் அது. ஆகவே எனக்கு இச்சிந்தனைகளைப் புரிந்துகொள்ளும்படி விளக்கும் மொழியியலாளர்களை தேடி ஓடினேன். மலையாளக் கவிஞர் கெ.சச்சிதானந்தன், கன்னட விமர்சகர் டி.ஆர்.நாகராஜ் ஆகியோரை சந்தித்து விரிவாக உரையாடினேன். அந்த உரையாடல்கள் பேட்டிகளாகக் காலச்சுவடு இதழில் வெளியாயின. அவற்றுக்கு அதன்பின் சிலவருடங்கள் தொடர்ந்து வெளிவந்த எதிர்வினைகளைப்பார்த்தால் அவை தமிழ்ச்சூழலில் உருவாக்கிய தெளிவின் மதிப்பு என்ன என்று புரிந்துகொள்ளமுடியும்.

அதன்பின்னரே நான் நித்ய சைதன்ய யதியை சந்தித்தேன். நித்யா எனக்கு அளித்த ஆலோசனைகள் என்னை மிக எளிதாகத் தெளிவை நோக்கிக் கொண்டுசென்றன. அவர் சொன்ன முதல் விஷயம், நான் புத்தம்புதுச் சிந்தனைகளாக இவர்களிடமிருந்து அறிந்து கொண்டிருந்தவை புதியவையே அல்ல, கால்நூற்றாண்டு பழையவை. புதிய சிந்தனை அலை என்பது நரம்பியல் சார்ந்து எழுந்துவந்து கொண்டிருந்தது. நித்யா எனக்கு ஆலிவர் சாக்ஸின் நூல்களை அறிமுகம்செய்தார்.

இரண்டாவதாக, இத்தகைய சிந்தனைகளை ஒரு பெரிய விவாதக்களத்தில் வைத்து ஆராய எனக்குக் கற்றுத்தந்தார். விட்கென்ஸ்டைனை அறியாமல் தெரிதாவை வாசிப்பதைப்போல அபத்தம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு புனைவெழுத்தாளனாகிய நான் அந்த சிந்தனைக்களத்தின் மூலநூல்களை முழுக்க வாசிப்பதென்பது தற்கொலை என்றார் நித்யா. அதைசெய்ய வேண்டியவர்கள் பேராசிரியர்கள். நான் அச்சிந்தனைகளை நவீன வாசகனுக்காகத் தொகுத்து எழுதப்பட்ட ரீடர் வகை நூல்கள் மூலம் கற்றுக்கொண்டேன். அந்த விவாதச்சூழலில் ஒவ்வொரு கருத்தும் எங்கே இருக்கிறது என்ற வரைபடத்தை மட்டும் உருவாக்கிக்கொண்டேன்.

அந்த வாசிப்புக்கு நித்யா எனக்களித்த வழிகாட்டு நெறிகளில் முக்கியமானது நேர் எதிரான சிந்தனைகளையும் சேர்த்து வாசிப்பது. பெக்கி காம்ப் எழுதிய தெரிதா ரீடர் என்ற நூலை வாசிக்கையில் எரிக் ஹாப்ஸ்பாமின் மார்க்ஸியநோக்கிலான வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுதியையும் வாசிக்கும்படி சொன்னார். அவை நடுவே மேலோட்டமாகப் பார்த்தால் தொடர்பே இல்லை. ஆனால் அவை இணைந்து எனக்கான ஒரு விவாதக்களனை உருவாக்கி அளித்தன.

கடைசியாக நித்யா சொன்னது, நான் எல்லாச் சிந்தனைகளையும் என்னுடைய புனைவுவாசிப்பு, புனைவுப்படைப்பு தளத்தில் நின்றபடியே மதிப்பிட வேண்டும் என்று. அதுதான் என்னுடைய காலடிநிலம்..சிந்தனைகள் வளர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அவற்றை நான் பரிசீலிப்பதற்கான என்னுடைய அளவுகோல்களை நான் உருவாக்கிக்கொள்ளவேண்டிய தளம் அதுவே. அவ்வாறு உருவாக்கிக் கொள்ளும் சொந்தக் கருத்துக்களுக்கு மட்டுமே ஏதாவது மதிப்பு உள்ளது என்றார் நித்யா. அக்காலகட்டத்தில் குருகுலத்தில் இருந்த மொழியியலாளர் பீட்டர் ஓபன்ஹைமர், கல்வியியலாளர் பீட்டர் மொரெஸ், ஸ்ட்ராஸ் போன்றவர்களுடனான என்னுடைய உரையாடல்கள் பெரிதும் உதவின

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சிந்தனைகளின் பெரும் விவாதக்களனில் எல்லா கருத்துக்களுமே மறுக்கப்படுகின்றன. எல்லாமே விரிவாக்கம்செய்யப்படுகின்றன. பழைய புதிய, சிந்தனை என்று ஏதுமில்லை. ஒரு தத்துவப் பேராசிரியராக முப்பதாண்டுக்காலத்தில் நித்யா ஹெகலும்,நீட்சேயும் காலாவதியானவர்கள் என்று சொல்லப்படுவதைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறார். அவர்கள் பின்நவீனத்துவ சூழலில் திரும்பி வருவதையும் அவர் காணநேர்ந்தது.

ஆகவே ஒரு சிந்தனை பழையது, ஒரு சிந்தனை புதியது என்பதற்கெல்லாம் ஒரு தனிமதிப்பும் இல்லை. ஒரு சிந்தனையை அது புதியது,சமகாலத்தது என்பதற்காகப் பரபரப்புடன் ஏற்றுக்கொள்ளுவதே சிந்தனைத்தளத்தில் உள்ள முக்கியமான கத்துக்குட்டித்தனம்.

இந்த விவாதக்களத்தில் இருவகையினர் செயல்படுகிறார்கள். முதல்வகையினர் தன்னுடைய சொந்த வாசிப்பு,படைப்பு,வாழ்க்கை அனுபவங்களில் இருந்து சுயமாகக் கருத்துக்களை உருவாக்கி சூழலுடன் விவாதித்து முன்வைப்பவர்கள். அவர்கள் நவீனமானவர்களாக, எங்கும் செல்லுபடியாகக்கூடியவர்களாக இருக்கவேண்டியதில்லை. அவர்கள் சூழலில் உள்ள எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருக்கவேண்டியதில்லை. அசலாக என்ன எழுதியிருக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பது மட்டுமே முக்கியமானது. அந்தக் கருத்து எதுவானாலும்.

தனிப்பட்ட கருத்துநிலைகளுக்கு நிரந்தர மதிப்பேதும் இல்லை என்பதே என் எண்ணம். எந்த மாபெரும் தத்துவசிந்தனையாளனும் மானுடசிந்தனையின் பெருக்கெடுப்பில் ஒரு சின்னத் துளிதான். மானுடம் பற்றிய,இயற்கை பற்றிய,பிரபஞ்சம் பற்றிய ஒருசில அவதானிப்புகளை மட்டுமே அவன் அளிக்கிறான். அவை உண்மைகள் அல்ல. உண்மையின் பகுதிகள் என வேண்டுமானால் சொல்லலாம். அதிலும் அறிவியல் அல்லாத தத்துவம் இலக்கியம் போன்ற துறைகளில் எல்லாக் கருத்துக்களும் ஒரு கோணத்தை மட்டுமே முன்வைக்கமுடியும்.

ஒருமுறை குற்றாலம் பதிவுகள் சந்திப்பில் நான் ஒரு அவதானிப்பைச் சொன்னதும் ஒருவர் ‘இது யார் சொன்னது?’ என்று கேட்டார் ‘ஜெயமோகன் சொன்னது’ என்று நான் பதில் சொன்னேன். ஒரு இலக்கிய ஆசிரியனாக நான் வாழும் காலம் சார்ந்து சமூக வரலாறு, இலக்கியம், மெய்யியல் பற்றி நான் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும் என்றும் அவை பண்பாட்டுவிவாதத்தின் பெருவெளியில் முக்கியமானவை என்றும்தான் நான் நினைக்கிறேன்.

இரண்டாம் வகையினர் சூழலில் இருந்து கருத்துக்களைக் கற்று அவற்றைத் தொகுத்துச் சொல்பவர்கள், பிறருக்குக் கற்பிப்பவர்கள். இரண்டாம் வகையினரைப் பேராசிரியர்கள் என்று ஒரு வசதிக்காகச் சொல்லலாம். அவர்கள் எப்போதும் கிடைப்பதில் புதியதாக உள்ளதை நோக்கிச் செல்பவர்கள். ஒன்றைப் பற்றியதுமே பழையதை விட்டுவிடுபவர்கள். தாங்கள் அறியும் ஒன்றைப் பரிசீலிக்கும் அளவுகோல்கள் ஏதும் இவர்களிடம் இருப்பதில்லை. அந்த அளவுகோல்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஓர் அந்தரங்க தளமும் இவர்களிடம் இருப்பதில்லை. வாசிப்பவற்றை அவற்றில் உள்ள தர்க்கங்களைக்கொண்டே மதிப்பிடுவது இவர்களின் பாணி.

தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், க.பூரணசந்திரன்,நோயல் இருதயராஜ் என ஒரு நீண்ட பட்டியலை இரண்டாம்வகையினராக நாம் போட முடியும். இவர்களுக்கு ஒரு பங்களிப்பு உள்ளது. ஏதேனும் அறிவுத்துறை சார்ந்து முழுமையாக ஈடுபட்டுக் கற்று சிந்தனைகளைத் தங்கள் சூழலில் அறிமுகம் செய்வது முதன்மையானது. அச்சிந்தனைகளை விவாதச்சூழலில் முன்வைத்து விவாதிப்பதன் மூலம் அச்சூழலில் இயல்பாக எழுந்துவரும் சிந்தனைகளை உலகளாவிய விவாதப்பொதுத்தளத்துடன் உரையாடச்செய்வது அடுத்தபடியாக.

தமிழவன் எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றவர்கள் அவ்வாறு சிந்தனைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று நாம் உருவாக்கும் வாதங்களுக்கான அடிப்படைகளை அதன் வழியாக கட்டமைத்துள்ளார்கள். அவர்கள் மீதான என் மதிப்புக்கு காரணம் அதுவே.

ஆனால் இந்த பேராசிரியர்கள் அங்கே நிற்பதில்லை. இதை நான் முன்பும் பலமுறை எழுதியிருக்கிறேன். தெருக்கூத்து பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் தெருக்கூத்துமேதை புரிசை கண்ணப்பத் தம்புரானை ஒரு அறிவில்லா கிராமத்தானாக நடத்தும் சூழல் நம்முடையது. ஆங்கிலம் மூலம் ஒன்றைத் தெரிந்துகொள்வதனாலேயே அவர் பிறரை விட ஒருபடிமேல் என்று நினைத்துக்கொள்வது. நம்முடைய காலனியாதிக்க வாழ்க்கையின் மனநிலை.

ஆகவே இங்கே பேராசிரியர்கள் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லைக்குட்பட்ட வாசிப்பறிவை அறிவுச்சூழலில் ஒரு மொட்டை அதிகாரத்தை நிறுவிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அது மேலே சொன்னதுபோல ‘இது புச்சு, நான் இத வச்சிருக்கேன், உங்கிட்ட இது இல்லியே’ என்ற வகையிலேயே எப்போதும் அமைகிறது. அந்த அதிகாரத்தை இலக்கியப்படைப்பாளி ஒருபோதும் ஒரு பொருட்டாகநினைப்பதில்லை.

உதாரணமாக இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் இலக்கியவாதி எதை எப்படி எழுதவேண்டும் என்று வகுக்க முயன்றிருக்கிறார்கள். நாகார்ஜுனன் போன்றவர்கள் எழுதிக்காட்டக்கூட செய்திருக்கிறார்கள். யதார்த்தவாதம் செத்துவிட்டது, இனிமேல் எல்லா எழுத்தாளர்களும் ஃபாண்டசி மட்டும்தான் எழுதவேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. வெளியே எங்காவது போய்ச் சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள், ஆனால் இது உண்மை. அவற்றை நம்பி எழுதியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உண்மையான படைப்பூக்கத்துடன் வந்தவர்கள் தன்னிச்சையாக எழுதினார்கள். சூழலை மாற்றி அமைத்தார்கள்குறிப்பாக தலித் எழுத்தாளர்கள்.

தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் மேலைச்சூழலில் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் உடனே மறுக்கப்படுகின்றன. மேலதிக சிந்தனைகள் வருகின்றன. இவர்களுக்கு அச்சிந்தனைகள் மீது சுயமான திறப்பு ஏதுமில்லை என்பதனால் இவர்கள் திகைக்கிறார்கள். கையிலிருப்பதை அப்படியே கைவிட்டுவிட்டுப் புதியதைப் பொறுக்கிக்கொள்கிறார்கள். ’இதுதான் இப்ப புதிசு’என்கிறார்கள். இதை இலக்கியவாதி செய்யமுடியாது. அவனுக்கு ஒரு வாழ்க்கை, ஒரு சுயமான அறிதல்புலம் இருக்கிறது. அங்கே ஒரு சிந்தனை ஊடுருவியாகவேண்டும். அதை அது விளக்கவேண்டும். அவன் ஏற்போ மறுப்போ அங்கேதான் நிகழமுடியும். ஆகவே அவன் இவர்களைப் பொருட்டாக நினைப்பதில்லை.

எம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொள்வோம். எண்பதுகளில் மிகயீல் பக்தின், ரோலான்பார்த் ஆகியோரின் உருவவாதத்தையும் அமைப்புவாதத்தை முன்வைப்பவராக அவர் திகழ்ந்தார். மிகச்சில வருடங்களிலேயே நாகார்ஜுனன் முன்வைத்த பின்அமைப்புவாதம் வந்தது. எம்.டி.முத்துக்குமாரசாமி பின்னகர்ந்தார். இன்னும் சில வருடங்களில் பிரேம் வந்து நாகார்ஜுனனைத் தாண்டி உன்னதமாக்கலை [Sublimation] உள்ளடக்கியதும் அதிகாரத்தைப் பேசுபொருளாகக் கொண்டதுமான பின்நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்தார். ஓர் அடையாளத்துக்காக வேண்டுமென்றால் முறையே பார்த்,தெரிதா, ஃபூக்கோ ஆகியோரை இந்தப்போக்குகளின் மையங்கள் என்று சொல்லலாம். பிரேம் பின்னர் அந்த கோட்பாடுகளில் இருந்து விலகித் தன் புனைவுலகை மட்டுமே முன்வைத்து பேச ஆரம்பித்தார்.

இப்போது எம்.டி.முத்துக்குமாரசாமி பின்னைகாலனித்துவம், பின்னைநவீனத்துவம் என்று இன்றைய சொல்லாட்சிகளுடன் மீண்டும் கிளம்பி வந்திருக்கிறார். பழைய கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அதே தோரணையும் அதே பாவனையுமாக இருக்கிறார். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் அவர் கொண்டிருந்த அதே உள்ளடக்கமும் பொழிப்புரையும் கண்டுபிடிக்கும் கல்வித்துறை வாசிப்பு, அதே சில்லறை அரசியல்கருத்துக்களை உருவி எடுத்துவைக்கும் போக்கு.

’ஜெயமோகன் என்ற நண்பரைத் தாண்டி அவர் கையாளும் ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை’ என்று என்னை வரையறுக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமி ’நான் சார்ந்திருக்கும் விமர்சன முறைமை பின்னை காலனீய, பின் நவீனத்துவ முறைமையாகும்’ என்று தன்னை முன்வைக்கிறார். அதாவது உள்ளே வந்ததுமே செய்வது அந்த இருமையைக் கட்டமைப்பதைத்தான். இதைக்கொண்டு இலக்கியவிவாதங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சிகளைச் செய்வார்.இது லீவுக்குவரும் பட்டாளத்தான் கிராமத்துக்கு ரைஃபிளுடன் நுழைவதுபோல ஓர் அப்பாவித்தனமான கித்தாய்ப்பு.

ஆனால் அதன் பின் இருப்பது அறிவுலகின் மீது கடன்வாங்கிய சொற்களைக்கொண்டு ஓர் போலி அதிகாரத்தைக் கட்டமைக்கும் நப்பாசை மட்டுமே. என்னுடைய அணுகுமுறையின் பயன் அல்லது பயனின்மை வேறுவிஷயம். ஆனால் அவை என்னுடையவை. என்னுடைய வேர்நிலத்தை என்னுடைய மொழிப்பரப்பை என்னுடைய பண்பாட்டைக் கிண்டி நட்டு நான் முளைக்க வைத்தவை. உலக சிந்தனைகளுடன் உரையாடி நான் வளர்த்துக்கொண்டவை. சொற்களை அவற்றின் வேருடன் புரிந்துகொள்ள என்னால் முடியும்.

மீண்டும் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான என் மதிப்பைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். பிற எவரைவிடவும் எம்.டி.முத்துக்குமாரசாமி சிந்தனைத்துறையில் செயல்படுவதற்கு இன்றியமையாத முக்கியமான சில தனித்தன்மைகள் கொண்டவர். ஒன்று, அவரால் வாசித்தவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இரண்டு, அவருக்கென ஒரு நடை உள்ளது. தெளிவும் நுட்பமும் கூடிவரும் நடை . நம்முடைய பேராசிரியர்களில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அடுத்ததாக அவரது நடையே சிறந்தது.. ஓர் எழுத்தாளனாக நான் தனக்கென நடை அமையாத ஒருவரைப் பொருட்படுத்த மாட்டேன். கருத்துக்கள் வரும்போகும், கட்டக்கடைசியில் மொழிக்கு அளிக்கும் பங்களிப்பே எஞ்சுகிறதென்றுகூட நான் நினைப்பதுண்டு. கடைசியாக, எந்த விவாதத்தின் இறுதியிலும் இதெல்லாமே ஒட்டுமொத்தமாக ஒரு மாபெரும் விளையாட்டு மட்டுமே என உணர்ந்து சிரிக்கக்கூடிய நிதானமும் அவரிடமிருப்பதை நான் முன்பு உணர்ந்திருக்கிறேன்.

தமிழில் முறையான வாசிப்பும் பின்புலமும் இல்லாமல் கோட்பாடுகளாகவும் வம்புகளாகவும் எழுதிக்குவிக்கும் பலர் இப்போதும் இருக்கிறார்கள். எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம் போன்றவர்கள் போட்டுவிட்டுப்போன புழுக்கைகளை உலர வைத்துக் கோலி விளையாடுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இங்கே ஒரு இடமும் இல்லை. ஆகவேதான் எம்.டி.முத்துக்குமாரசாமி உள்ளே நுழைந்ததும் அவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள். அவர்களை மீறி நின்று நம் சூழலுக்கு முக்கியமான சில பங்களிப்புகளை எம்.டி.முத்துக்குமாரசாமி ஆற்றமுடியும்.

ஆனால் லேபில்களைக்கொண்டு மேட்டிமைத்தனம் காட்டிய அந்தக் காலகட்டம் மாறிவிட்டதென எம்.டி.முத்துக்குமாரசாமி புரிந்துகொள்வார் என நினைக்கிறேன். நிறைய மழை பெய்து தாமிரவருணியில் நிறைய தண்ணீர் ஓடிவிட்டது. அவரது இக்கட்டுரைகளில் எம்.டி.முத்துக்குமாரசாமி செய்திருக்கும் சில்லறை முத்திரைகுத்தல்கள், திரிபுகள், முதிராத சிந்தனைகளைத் தாண்டி இன்னும் கொஞ்சம் இலக்கியத்தை கவனிக்க, அதன் நுட்பமான ஊடுபாவுகளை, விளையாட்டை உணர அவர் மெனக்கெட வேண்டுமென அவரது நண்பர் என்ற முறையிலும் தமிழ்ச்சூழலுக்கு அவரது பங்களிப்பு தேவை என நினைப்பவன் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன்.

அவரது பாரதி பற்றிய கருத்துக்களுக்கு என் பதில் நாளை

http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_12.html

http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_09.html

முந்தைய கட்டுரையார் இந்து?-கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்