அனல் காற்று – கடிதங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

சில நாட்களாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகின்றேன். உங்களை அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி. உங்கள் எழுத்து மிகத் தெள்ளிய நீர்போலுள்ளது. மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, மிக அழகாக யதார்த்தமாக தெளிவுபடுத்துகின்றீர்கள்.

 

அனல் காற்று, நான் படித்த உங்களது முதல் நாவல். அருமை. அதன் வேகத்தை என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த நாவல் வழி என்னால் சுஜாதாவை பார்க்க முடிந்தது. நாவல் பதினான்காம் அத்தியாயத்தோடு முடிந்ததென்று கருதி, சுசியின் காதல் எங்கழுக்கு வேண்டும், அவளை எங்களுக்கு திருப்பித் தாருங்கள் என்று உங்களுக்கு கடிதம் எழுதலாம் என்றிருந்தேன். அடுத்தநாளே அவள் வரும் அறிகுறி தெரிகின்றது. நன்றி!!!.  ஆனால் அவள் திரும்பி வரும் விதம் அழுத்தமானதாக இல்லை. இருந்தாலும் பதினான்கு அத்தியாயங்களை ஏற்றுக்கொண்ட நான் இதையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறு வழி?

 

 

இருப்பினும், அருண் தன் தந்தையின் அழுகி நாற்றமடிக்க ஆரம்பித்த பூதவுடலுடன் இருந்து, அதை எரியூட்டுமிடத்திற்கு கொண்டு சென்று, முடி வெட்டி பின் வீட்டிற்கு வந்து குளிக்காமல் ( மரண வீட்டிற்கு சென்று விட்டு வந்தபின் குளிப்பது நமது மரபல்லவா?),   தூங்கி காலியில் எழும்பி முகம் கழுவிவிட்டு வெளியில் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களால்?

 

இப்படிக்கு,
கிறிஸ்.

 

 

அன்புள்ள கிறிஸ்,

குளித்திருக்கலாம். ஆனால் அந்த மனநிலையில் அதை மறந்துவிட்டான் என்றும் கொள்ளலாம். பொதுவாக கதைகளை எழுதும்போது ஒஉ விஷயம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் எழுதுபவனின் ஆழ்மனம் சார்ந்து அதற்கு ஒரு அர்த்தம் உண்டு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.  அந்த மனநிலையில் ஒருவகையில் ஊடுகலந்து நாமே ஆகியே அதைஎ ழுதுகிறோம். அப்போது பலசமயம் நாம் அந்தக்கதாபாத்திரம் செய்வதையும் செய்யாததையுமே பதிவு செய்கிறோம்

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,
தங்கள் அனல் காற்று வாசிக்கக் கிடைத்தது. 15வது பகுதி குறித்து நீங்கள் கடிதங்கள் பகுதியில் குறிப்பிட்டிருந்தது கண்டேன். வாசிப்பு முறை வித்யாசங்கள் ஒரு புறமிருக்க, தங்கள் கோணத்தில் அனல் காற்று தன் உச்சத்தை அடைந்தபின் 15வது பகுதியில் குளிர்ந்து போகிறது- புயலுக்கு பின் அமைதி- என்றெல்லாம் கொண்டாலும் நிறைய விஷயங்கள் பொருந்த மறுக்கின்றன.


அனல் காற்று 14 வது  பகுதியில் துவங்குகிறது 14வது பகுதியில் முடிகிறது எனக் கொண்டால் அதன் சுழற்சியும் உக்கிரமும் கதையில் முழுமையாய் காணக்கிடைக்கிறது. மாறாக 15 வது பகுதியை சேர்த்துக் கொண்டால் மொத்த கதையின் அர்த்தமும் சிதறுண்டு தன் மையமிழந்து போகிறது .ஏனெனில் அமைதி பரவுவது இயல்பாக நிகழ வேண்டுமே தவிர- எக்காரணம் கொண்டும் அதுவரை உருவாகி உருகொண்டிருந்த உக்கிரத்தை மறுக்கவோ அர்த்தமிழக்கவோ செய்யக்கூடாது அல்லவா. ஆனால் 15வது பகுதி, அதுவரை கிழகத்திய மனங்கள் ஒன்றுடன் ஓன்று உராய்ந்து தவித்து தகித்துக் கொண்டிருந்த போராட்டங்கள் யாவற்றையும் மேற்கத்திய பாவனை மூலம் மறுத்து பரிகசிக்கிறது. சந்திரா மிக சாதரணமாக- எல்லாம் லஸ்ட் சில்லி என்று குறிப்பிட்டு அதுவரை இருந்த கதையை சுக்கு நூறாக்கி குப்பைத்தொட்டியில் போடுகிறாள். 14 பகுதிகள் வெளிப்பட்ட உக்கிரம் வெறும் பொருளற்றது என சொல்லப்படும் போது அது அமைதிக்கு பதில் ராத்திரி கண்ட கணவுகளை விழித்தெழுந்து பரிகசிப்பதாகவே ஆகி விடுகிறது. அமைதி பரவுவது என்பது மெல்ல மெல்ல அந்த உக்கிரம் தனிந்து தன் நிலையில் படிந்து நிதானத்துக்கு வருவதாக இருக்க வேண்டுமே தவிர தான் இருந்த நிலையே பொருளற்றது எனக் கொண்டால் வாசகன் ஏமாற்றம் அடைந்து விடுவது மிக இயல்பு தானே? இதில் வாசிப்பு முறை,மாற் கோணங்கள் போன்றவை எப்படி மாறினாலும் அத்தனை பக்கங்கள் கதாபாத்திரங்களின் மனத் தவிப்பினை தனதாக்கி படித்து வந்த வாசகனுக்கு ஏமாற்றமே மிஞ்சும் எனத் தோன்றுகிறது.

 


முன்னதாக மேற்கத்திய பாவனை என நான் குறிப்பிட்டதற்க்கு மற்றொரு காரணம் – சந்திரா, தன் மகன் மற்றும் அவன் தோழி இது அம்மாவின் தனிபட்ட விஷயம்- என சொல்லி விலகிக் கொள்ளும் கருத்தினை சிலாகித்து பேசுவது.
நம் கல்வி முறை மேற்கத்திய முறையில் அமைந்திருப்பதும், பிசா கார்ணர் கலாச்சாரம் விரவி வருவதாலும் இளம் தலைமுறையினர் இத்ததைய மனோபாவத்தைக் கொண்டிருப்பது இயல்பே. இதுவே தெளிவு எனக் கொள்ளுதலும் தவறாகிவிடாது. ஆனால் இக்கதையினை பொறுத்தவரை இதைத் தெளிவு எனக் கொண்டால் கிழக்குக்கே உரிய தன்மைகளுடன் விவரிிக்கப்பட்டிருக்கும் இக்கதை, எமோஷனல் டிராமா என சகிக்கவே மூடியாத சீரியல்களை கூட உள்வாங்கிவிட துடிக்கும் சுசி போன்ற கதாபாத்திரங்களை கொண்ட இக்கதை, மேற்கத்திய பார்வையின் உதவியுடன் முழுதாய் தோற்கடிக்கப்படுவதாகவே ஆகிறது. அமைதி பரவுவது எனபதற்கு பதில் கதை தோற்கடிப் படுகிறது என்பதாலே அனேக வாசகர்கள் 15வது பகுதி குறித்து தொடர்ந்து தங்களுக்கு எழுதி வர நேரிடுகிறது என நினைக்கிறேன்.

 


நீங்கள் உங்கள் பார்வை கோணத்தில் முன் வைக்கும் உறவுகளின் உளவியலையும், உச்சத்திலேயே உழன்று சுழலுதல் மனித மனங்களுக்கு சாத்தியம் அல்ல என்பதையும், கதையின் செய் நேர்த்தி தேவைகளையும் உள்வாங்கிய பின்னரே இதை எழுதுகிறேன்.

 


அந்த அந்த நிலபரப்பு சார்ந்து, அந்த நிலபரப்பின் மக்கள் சார்ந்து, அவர்களின் மனங்களை சார்ந்து கதையும் கதையின் சம்பவங்களும் முக்கியத்துவம் கொள்ளும் களமே இலக்கியம் எனக் கொண்டால், ஆரம்பத்திலிருந்து இக்கதை பேசும் களத்தில் மேற்கத்திய பார்வைக்கு இடமில்லை. இல்லை பல்வேறு கலாசாரங்களின் – கலவியான உரு. பார்வை கோணங்களின்- மோதல் இக் கதையின் களம் எனக் கொள்வோமேயானால் அது கதையின் ஆரம்பத்திலிருந்து நிகழ்ந்திருக்க வேண்டும் கடைசி ரீலீல் வேறு வழியின்றி படத்தை முடித்து வைக்க என்றே வலிந்து அறிமுகப்படுத்தப்படும் ஒரு கதாபாத்திரத்தின் தரத்தையே நினைவுபடுதுகின்றன சந்திராவின் கூற்றாக வரும் அவள் மகனின் கருத்துக்கள்.
தவிர அமைதியிலிருந்து புறப்பட்டு உக்கிரம் அடைந்து அமைதி பெறுவதாகவும் அனல் காற்று அமைந்து விடவில்லை. தொடக்க அமைதி என எதுவும் இன்றி நேரடியாக ஒரு வித தவிப்பு மனப்பான்மையில் துவங்கி 14 பகுதிகள் ஒரு வித உக்கிரத்துடன் நீட்சி பெற்று, 15 வது பகுதி மட்டும் தனித்து மேலே குறிப்பிட்ட கருத்துக்களின் மூலம் வலிந்து வரவழைக்கப்பட்ட அமைதியெனவும் காட்சியளிக்கிறது. எனவே அது ஒருவித பொறுத்தமற்ற செயற்கையான முற்றுப் புள்ளியாகவே தோன்றிவிடுகிறது.
மேலும் பாண்டிச்சேரி சாலையில் அதிவேக துரத்தல்கள் போன்றவையெல்லாம்- தோட்டா துளைத்து கீழே விழுந்த கதா நாயகி கண்விழித்து “நான் எங்கே இருக்கிறேன்” என கேட்க, வில்லனிடன் சண்டை போட்டு உன்னைக் காப்பாற்றினேன் என கதா நாயகன் சொல்வது போன்ற பாவனையில் இருக்கிறது. பாக்கெட் சைஸ் கிரைம் நாவலில் எளிதாக இடம் பெற்று விடக் கூடிய சம்பவம் இது.இதனைச் சொல்ல வருகையில் தேவ தேவதேவனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறதுஅசைந்தால் ஒடம்
அசையாவிட்டால் தீவு
ஓடத்திற்கும் தீவிற்கும்
மின்னற் பொழுதே தூரம்மிக அற்புதமான இவ்வரிகளுக்கு முன்னும் பின்னும் நிறைய வரிகள் தேவ தேவன் எழுதியிருந்ததாக நினைவு. ஆனால் இக்கவிதை இவ்விடத்தில் துவங்கி இவ்விடத்தில் முடிவதானால் மட்டுமே கவிதையாக கொண்டாட முடியும் எனத் தோன்றுகிறது.இதற்கு மாறாக எம். யுவன் கவிதை ஒன்று இப்படித்துவங்கும்நேற்று இரவின் ரகசியத்தை
வெளிர வைத்து புலர்ந்த பகலினில்,,,( நினைவிலிருந்து எழுதுவதால் நீண்ட இக்கவிதையின் வரிகள் சரிவர நினைவில்லை,,என்னிடம் புத்தகமும் இல்லை,,மன்னிக்கவும்..உங்களுக்கு நினைவு மேலும் துல்லியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்,)இக்கவிதை தொடர்ந்து சென்று முடியும் இடம்இன்று காலை
நானும் ஒரு பனித்துளியும்
முதல் முதலாக சந்தித்துக் கொண்டோம்
ஒரு வாழ் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்து விட்டு
பரஸ்பரம் காணாமல் போனோம்இக்கவிதையில் இந்த இடம் மட்டுமே கவிதையாக செயல் பட்டு கொண்டாடப் படும் என்றாலும் அதற்கு முன் யுவன் எழுதி உள்ள வரிகள் யாவும் கவித்துவத்தை கலைத்துவிடாமல் மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்திருக்கும். அர்த்தங்களும் பல தளங்களில் விரிந்து பரவிச் செல்லும்.எந்த ஒரு கலை வடிவலும் இந்த இரு வகையும் இருந்து விடவே செய்கிறது.
காரணம்- படைப்பாளி தன் நோக்கினில்(தனக்கேயான நோக்கில்) படைக்கும் பொழுது அது இறுதியில் அவன் எத்தனித்த வாசக தொடர்புடன் பல நேரங்களில் வேறு படும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இக்காரணத்தால் பல படைப்பாளிகளின் படைப்புக்கு அவற்றை வெளியிலிருந்து அனுகக்கூடிய வேறொரு தரமான வாசக மனதின் மூலம்- ஒரு சிறு திருத்தம்,எடிட்டிங்!- செய்யப் படும் போது அது படைப்பின் அழகுக்கு வலு சேர்த்துவிடுவதை என்னைவிட தாங்கள் அதிகமாகவே அறிவீர்கள்.அனல் காற்றினை பொருத்தவரை அது மேலே குறிப்பிடப் பட்ட இரண்டில் முதல் வகை என்றும், 15 வது பகுதி குறித்து நீங்கள் மற்றொரு முறை பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றே தோன்றுகிறது.
.
நான் வாசித்தவரை தங்களின் ஆக்கங்களில் குறு நாவல்கள் எனக்கு மிகவும் விருப்பமுடையதாக இருக்கின்றன. ஜெயமோகன் குறு நாவல்கள்
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் புனைவிலக்கிய புத்தகங்களில் ஒன்று. அதில் இடம் பெற்றிருந்த கதைகளில் அனேகமாக அனைத்து கதைகளுமே
ஏதோ ஒரு வகையில் நல்ல வாசிப்பனுபவம் தருவதாக இருந்தது. அந்த புத்தகத்தின் தரத்தினை குறைத்துவிடாமல் அதில் இடம் பெற்று விடக்
கூடிய மற்றொரு குறு நாவலாகவே அனல் காற்று இருந்து விட வேண்டும் என்பதே என் ஆர்வம்அன்புடன்
ஆனந்த் அண்ணாமலை
மலாவி

 

 

 

 

 

 

 

 

 

 

88

 

அன்புள்ள ஆனந்த் அண்ணாமலை

நீங்கள் எண்ணுவது போல இதில் மேலைநாட்டு கீழைநாட்டு மதிப்பீடுகள் என பேதம் ஏதுமில்லை. பெரும்பாலும் இதெல்லாம் நம் மனப்பிரமைகள் மட்டுமே. நாம் கதைகளில் பண்பாடு பேணபப்டவேண்டும்– மரணத்தின் மூலம் என எண்ணுகிறோம்.

தன் மனைவிக்கு பிறனுஅன் தொடர்பு இருக்கிறது என தெரிந்த 20க்கும் மேற்பட்ட கணவர்கள் என்னிடம் பேசியிருக்கிறார்கள். எவரும் மனைவியைக் கொல்லவில்லை, சாகவும் இல்லை. அந்தக் காலகட்டத்தின் கொந்தளிப்பை மெல்ல தாண்டிவந்து அதை மறந்துஅ டுத்த கட்ட வாழ்க்கைக்கு  நகர்ந்தார்கள். குழந்தைகளுக்காக என்று சொல்லிக்கொண்டார்கள்

மனிதர்கள் எப்போதுமே மிகமிக நடைமுறைவாழ்க்கைசார்ந்தவர்கள். எல்லாவற்றையும் தாண்டி மனிதர்கள் வாழவே முயல்கிறார்கள்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,
தங்கள் கடிதத்திற்கு நன்றி.பண்பாடு பேணப் படவேண்டும் என்றெல்லாம் இது வரை எனக்குத் தோன்றியதேயில்லை. நான் என் கடிதத்தில் குறிப்பிட முயன்றது கதைவெளியினை பொறுத்தவரை14வது பகுதி மற்றும் 15வது பகுதிக்கான இடைவெளி குறித்து மட்டுமே. தவிர, அருண் கதாபாத்திரம் மரணம் எய்துதல் பற்றியும் எனக்கு அதிக கவனம் இல்லை.14வது பகுதி அருணின் மரணத்தை முன் நிறுத்துவதாகவும் நான் நினைக்கவில்லை. ஒரு வேளை அவன் வேறொரு முறையில் கூட காப்பாற்றப் பற்றிருக்கலாம்- அவ்வகையில் 15து பகுதி சொல்லபடாத பொழுது கதையின் முடிவுக்கு வாசக மனதை பொறுத்து (15 வது பகுதிக்கான சாத்தியத்தையும் சேர்த்து) எண்ணற்ற சாத்தியங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
நான் கிழக்கு- மேற்கு- மதிப்பீடுகள் என குறிப்பிட்ட காரணம் கதை நடக்கும் களம் சார்ந்த மனிதர்களின் மன அமைப்பும் அவை கதையில் பொருந்தும் விதம் பற்றியும் சொல்ல முயன்றதனால் மட்டுமே.
அல்பர் காம்யுவின் அன்னியனில் ஒரு இடத்தில் அவன் தன் தோழி அவர்கள் இருவருக்குமான திருமணம் பற்றி கேட்கையில் அவசியம் இல்லை, செய்து கொண்டாலும் தவறு இல்லை என்று குறிப்பிடுகிறான். அது அக்கதை சார்ந்தது. அதுவே தமிழ் சூழலில் ஒரு கதையில் கதாபாத்திரம் சொல்ல வாய்பு இருக்கிறதா என்றால் – நிச்சயம் இருக்கிறது அது கதையின் அமைப்பு சார்ந்து என்றே தோன்றுகிறது. முழுக்க முழுக்க அந்த கதை இயங்கும் தளம் சார்ந்து இதன் பொருத்தம் அமையும் என்றும் பொருத்தம் அமைவது மட்டுமே முக்கியம் எனவும் படுகிறது.
இக்கதையை பொருத்தவரை சந்திராவின் மகனின் கருத்துக்கள் எவ்விடத்திலும் 15வது பகுதிக்கு முன் கதையில் முக்கியத்துவம் பெறவில்லை. அதுவே நான் சொல்ல முயன்றது.
இதில் மதிப்பீடுகள் எங்கு வருகின்றன?
காதல்- காமம் எனபதெல்லாம் வார்த்தைகளை பிரித்து கையாண்டு பார்த்தாலும் அவை ஒரே நாணயத்தின் இருபக்கங்களாகவே உணர்கிறேன். அந்த அடிப்படை உணர்ச்சியின் சரி- தவறு பற்றி தான் கொண்ட அறம் சார்ந்தும், தன்னிலை வசதி சார்ந்தும்,சூழல் சார்ந்தும், மனித மனம் மதிப்பீடு செய்து, அதை நடைமுறைபடுத்திக் கொள்ள முயல்கிறது.இத்தகைய நிகழ்வில் நிலபரப்பு, காலம், இவை உருவாக்கும் சமூக சூழல்கள் போன்றவை இந்த நூதனமான மனதின் கட்டமைப்பில் தங்கள் ஆளுமையை செலுத்துவதன் மூலம் மதிப்பீடுகளில் மறைமுகமாக தன் வினையாற்றுகிறது.
பண்பாடு என்பது பொதுப்படையான சொல். என்னை பொறுத்தவரை என் லயிப்பு அதனை உருவாக்கும், அதனுடம் மோதும், தன் கட்டுமானத்தின் புதிர்களுக்கிடையே தன் நிலையை தேடி அலைந்து அலைகழியும் தனிப்பட்ட பிரத்யேக மனங்களின் மீதே.
         ஆக இத்தகைய மனதின் பிரத்யேக செயல்பாடுகளைச் சொல்ல வருகையிலேயே கிழக்கத்திய மதிப்பீடுகள் மெற்கத்திய மதிப்பீடுகள் எனக் குறிப்பிட நேரிடுகிறது.
          எனக்கான தங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, மனிதர்கள் மிக மிக நடைமுறை வாழ்வு சார்ந்தவர்கள் எல்லாவற்றையும் தாண்டி வாழவே முற்படுகிறார்கள் என்பது மறுக்கவே முடியாத உண்மையாக இருக்கும் பொழுதும், அவர்கள் தாண்டிச் சென்று வாழும் முறையை கவனித்தால் அது தேசத்திற்கு தேசம் வேறு படவே செய்கிறது. இந்தியாவை பொருத்தவரை குழந்தைகளுக்காக என சொல்லிக் கொண்டு தொடரும் மணப்பாண்மை இருக்கிறது என்றால் அமெரிக்க சூழலில் அத்தகைய தேவையே கிடையாது, விவாகரத்து பெற்று குழந்தைகளை வார இறுதியில் பார்த்தபடி அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து விடக் கூடிய சமூகம் அது. நான் வாழும் ஆப்ரிக்க நாடான மலாவியில் என்றால் விவாகரத்து வரை எல்லாம் கூட தேவையில்லை, சாதரணமாகவே இங்கே இருவரும் பிரிந்து சென்று விடுவார்கள்- முதல் கணவனின் குழந்தையை தன் பிள்ளையாக்கி வளர்க்கும் கணவன்மார்கள் இங்கே அனேகம்.
        இதில் என் பெற்றொர்களின் தலை முறையினைச் சார்ந்தவர்களுக்கு பார்க்கக்கிடைத்ததை விட என் தலை முறையினருக்கு பார்க்க கிடைத்த அமெரிக்க திரைப் படங்களும், ருசிக்க கிடைத்த பீசா வைகைகளும், வருமானத்திற்கு வழி செய்த அமெரிக்கன் ப்ராஜெக்ட்டுகளும் அதிகம். இதன் மூலம் இயல்பாகவே மனதின் புரிதல் முறைகள் மாறி வளர்கிறது. சென்ற வருடம் அப்போலோ மருத்துவமனையில் ஜெனரல் செக்கப்புக்காக சென்றிருந்தேன். அப்போது கேட்க பட்ட கேள்வி- திருமணமாகிவிட்டதா, என் பதில்- இல்லை. அடுத்த கேள்வி- லிவ்ங்க் டு கெதர் முறை நான்- சிரித்த படி இல்லை.
     இக் கேள்வி பத்து வருடத்திற்கு முன் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆக புதிய தலை முறையினரிடன் ‘ஈசி கோ ஆட்டிடுயூட்’ – எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. இதை எப்படி இக்கதையில் இணைத்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. அப்படி இணைக்க கதையில் முதல் பகுதிகளில் அத்தகைய இணைப்புக்கான சரடு எதுவும் இருந்திருக்க வேண்டும் அல்லவா- அப்படி இல்லாததையே நான் இரு தலைமுறையின் இரு வித முறையிலான் மதிப்பீடுகள் அவற்றின் முரண்கள் சந்திக்காமலேயே ஒற்றை வரியில் “தெளிவென” கொண்டாடப் படுகிறது என குறிப்பிட முயன்றேன்.
மற்றபடி இக்கதையை விடுத்துப் பார்த்தால் எனக்கான உங்கள் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சம்மதமே. அத்தகைய அடிப்படையிலேயே 27 வயதான நான் இதுவரையான என் வாழ்கையையும், பிற படைப்புகளையும் அணுகி வருவதாக நம்புகிறேன்.
—————————–
ஆனந்த் அண்ணாமலை

அனல்காற்று:கடிதங்கள்

அனல் காற்று:15

முந்தைய கட்டுரைஉதிர்தல்பற்றி
அடுத்த கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்