பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

2011 ஆம் வருடத்துக்கான ’விஷ்ணுபுரம்’ விருது மூத்த எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்படுகிறது.

பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி முப்பதாண்டுகளாக எழுதிவருகிறார். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் போன்ற நாவல்கள் தமிழ்ச்சூழலில் பெரிதும் பேசப்பட்டவை. பிறகு தமிழின் இயல்புவாத எழுத்தில் ஒரு முன்னுதாரணப் படைப்பு என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அழகிரிப்பகடை தமிழிலக்கியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. பூமணியின் ஐந்துநாவல்களும் ஒரே தொகுதியாக பொன்னி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன

1985ல் கிரியா ராஜேந்திர சோழனின் எட்டு கதைகள், பூமணியின் ரீதி என இரு தொகுதிகளை வெளியிட்டது. அவ்வருடங்களில் தமிழில் அதிகம் பேசப்பட்ட இலக்கிய நிகழ்வாக அது இருந்தது. இப்போது பூமணியின் எல்லா சிறுகதைகளும் அம்பாரம் என்ற தலைப்பில் ஒரே தொகுதியாக வெளிவந்துள்ளன.

இப்போது பூமணி அஞ்ஞாடி என்ற பெரியநாவலை எழுதி முடித்திருக்கிறார். க்ரியா வெளியீடாக இவ்வருடம் அந்நாவல் வரவிருக்கிறது. 1500 பக்கம் கொண்ட ஆக்கம் இது.

பூமணி கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத் தயாரிப்பு. நாசர், ராதிகா நடிக்க தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் வந்த இந்தப்படம் தமிழக அரசு விருதுபெற்றது.

பூமணி சென்னையில் கூட்டுறவு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுக் கோயில்பட்டியில் வசிக்கிறார். இந்த விருதை ஒட்டிக் கோயில்பட்டி சென்று பூமணி பற்றி விரிவான ஒரு நேர்காணல் எடுத்தேன். அந்த நேர்காணலை ஒட்டி ஒரு நூல் எழுதப்படும். அது விருதுவிழாவில் வெளியிடப்ப்படும்.

விருது வழங்கப்படும் தகவலை பூமணிக்கு நெருக்கமானவர்களான எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோருக்குத் தெரிவித்தேன். பூமணி பற்றிய நூலுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் , யுவன் சந்திரசேகர் இருவரும் விழாவில் கலந்துகொண்டு பூமணிக்கு வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கிறார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக தேவதச்சன் கலந்துகொள்வார்

தமிழிலக்கியத்தின் மையங்களில் ஒன்றாகக் கோயில்பட்டி அரைநூற்றாண்டாக இருந்து வருகிறது. கோயில்பட்டியை சுற்றிய கிராமங்களில் இருந்து எழுத்தாளர்கள் உருவாகி ஒருவரோடொருவர் விவாதித்து தீவிர இலக்கியத்துக்கு பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். முதல் தலைமுறையில் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் இருவரையும் குறிப்பிடலாம்.

இரண்டாம் தலைமுறையில் தேவதச்சன், பூமணி , ச.தமிழ்ச்செல்வன்,வித்யாஷங்கர் நால்வரும் முக்கியமானவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்,உதயசங்கர், அப்பாஸ் போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை. ஒரு சிறுநகரை ஒட்டி இவ்வாறு அறுபடாது ஒரு சரடு நீள்வது ஆச்சரியமூட்டுவது.

பூமணிக்கு வழங்கப்படும் இந்த விருது கோயில்பட்டியின் இலக்கிய இயக்கத்தை வாசகர்களாக நாங்கள் அடையாளம் கண்டு செய்த மரியாதை என்று நினைக்கிறேன்.

அடித்தள மக்களின் வாழ்க்கையை அறக்கவலைகள் இல்லாமல், அரசியல் கோணம் இல்லாமல், நேரடியான இயல்புவாத அழகியலுடன் சொல்லும் முக்கியமான ஆக்கங்கள் பூமணியுடையவை பூமணி என்ற இலக்கிய முன்னோடிக்கு வணக்கம்.

பூக்கும் கருவேலம், பூமணியின் புனைவுலகம்
பூமணியின் கதை களை வாசிக்க

பூமணியின் நாவல்கள் ஒரு வாசகப்பார்வை

முந்தைய கட்டுரைரசனை விமர்சனமும் ஜனநாயகமும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
அடுத்த கட்டுரைரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…