வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’

1919299 (1)

 

 

பாரதி ராஜாவின் கிராமத்துப்படங்கள் மூலம் நம் மனதில் பதிந்துவிட்ட ஒரு சித்திரம் உண்டு. மிகவும் பிற்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு ஆசிரியனாக அல்லது டாக்டராக ஒருவன் வருகிறான். அவனுடைய கண் வழியாக அங்குள்ள தனித்தன்மைகளும் சிறப்புகளும் இழிவுகளும் நுட்பமாக படம்பிடித்துக்காட்டப்படுகின்றன. அந்த அன்னியன் அச்சிறு உலகுக்கு புறவுலகினை அறிமுகம் செய்கிறான். அவன் மூலம் அங்கே தேங்கி கிடந்த வாழ்க்கையில் அலைகள் எழுகின்றன. சிக்கல்கள் முளைக்கின்றன. பலசமயம் அவன் திரும்பிச்செல்லும்போது கதை முடிவுக்கு வருகிறது. இந்த முன்மாதிரியை பாரதிராஜா புட்டண்ண கனகலின் படங்களிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கக் கூடும். புட்டண்ண கனகல் பிரபலமான சில கன்னட நாவல்களிலிருந்து. ஏற்கனவே மலையாளப் படங்களிலும் நாவல்களிலும் இது ஒரு பழகிப்போன கதைவடிவமாக இருந்தது.

ஆனால் இக்கதையை சராசரித் தமிழ் மனம் உடனடியாக ஏற்றுக்கொண்டு நம் வணிகக்கலையில் ஒரு நிரந்தரவடிவமாக ஆக்கியதற்குக் காரணங்கள் சில உண்டு. நம் கிராமங்கள் ‘அன்னியர்’ வருகையால் துயிலெழுந்தமை சென்ற ஐம்பதுவருடங்களில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றமாகும். சுதந்திரம் கிடைத்த பின் ஐந்தாண்டுத்திட்டங்கள் மூலம் நாடுமுழுக்க பரவலான பொதுக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டமை இதற்கு முக்கியமான காரணம். பொது சுகாதார மேம்பாடு, பசுமைப்புரட்சி போன்ற வேறு மாற்றங்களும் காரணமாயின. இப்போது அறுபதைத் தொடும் ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களிடம் கேட்டால் கணிசமானவர்களுக்கு ‘தண்ணியில்லா காட்டுக்கு’ வேலை கிடைத்து சென்று சேர்ந்த விசித்திர அனுபவங்கள் சில இருப்பதைக் கேட்க முடியும்.

நம் கிராமங்கள் ஒருவகையில் தன்னிறைவு கொண்டவை. அவர்களுக்கு தொழில் , நீதி நிர்வாகம் இரண்டுமே அவர்கள் வாழும் கிராமங்களுக்குள்ளேயே முழுமையாக அடங்கிவிடுமாறு வாழ்க்கை அமைந்துள்ளது. பற்பல நூற்றாண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. ஆகவே அவர்கள் வெளியே செல்லவோ நோக்கவோ வேண்டியதில்லை. நீண்டநெடுங்காலமாக பொதுப்போக்குவரத்து இங்கே வளர்ச்சிபெறவும் இல்லை.’ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன ?’என்ற நோக்கே அவர்களின் பிரக்ஞையை ஆட்சி செய்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நூற்றாண்டுப் பழைமைகொண்ட அசையாத தன்மையை அசைத்தது நமது ‘நலம் நாடும்’ அரசு. ஆசிரியர்களும் தபால்காரர்களும் அதன் முக்கியமான தூதர்கள். கிராமங்களில் ஆசிரியர் மூலமே மானுட சமத்துவம், பொது நீதி, அரசியலில் சாமான்யனுக்கும் பங்கு போன்ற கருத்துக்கள் சென்று சேர்ந்தன.

‘பன்கர் வாடி’ அப்படி கிராமத்துக்குச் செல்லும் ஒரு எளிய ஆசிரியனின் கதை. ராஜாராம் விட்டல் சௌந்தனீகருக்கு இன்னும் இருபது வயது ஆகவில்லை. மெலிந்த குள்ளமான உருவம். பள்ளிப்படிப்பை முடித்ததுமே அவனுக்கு வேலை கிடைத்து விடுகிறது. பொட்டல் நடுவே இருக்கும் சின்னஞ்சிறு மலைக்கிராமமான பன்கர் வாடிக்கு. அங்கே எப்படி இருக்கும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. சப்பாத்தியையும் பூண்டுச்சட்டினியையும் பொட்டலமாக எடுத்துக்கொண்டு கையில் சிறுபையுடன் காய்ந்து தூசி பறந்த பொட்டல் நடுவே சென்ற வண்டிப்பாதையில் காலைமுதலே கால் ஓய நடந்து அவன் பன்கர் வாடிக்கு வருகிறான். இருபக்கமும் கிடந்த பசுமையற்ற மேய்ச்சல் நிலத்தைக் கண்டு இங்கே எப்படி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று அவனுக்கு வியப்பு.

பன்கர் வாடி ஒழுங்கில்லாத வைக்கோல் மூட்டைகள் போன்ற ஏறத்தாழ முப்பது குடிசைகளின் தொகுப்பு. தெரு என்று ஏதுமில்லை. குடிசைகள் நடுவேயுள்ள இடம் நடமாட விடப்பட்டிருகிறது. எல்லாருமே ஆடுமேய்ப்பவர்கள். ஆட்டுப்பட்டியும் வீடுகளும் எல்லாம் கலந்தே இருகின்றன. சௌந்தனீகர் வரும்போது ஊரில் யாருமில்லை. ஆடுமேய்க்கச்சென்றுவிட்டார்கள். முடியாத சில கிழவர்கள், குழந்தைகள் அவ்வளவுதான். அவன் சாவடியில் நின்ற வேப்பமரத்தடியில் அமர்ந்து கால்களில் புழுதியை தட்டிக்கொண்டபோது கிராமத்தின் முதல் மனிதன் அவனிடம் பேசுகிறான். ”ஏண்டா முட்டைக்காரனா நீ?”. தன்னை ஆசிரியன் என்று சௌந்தனீகர் அறிமுகம் செய்துகொண்டபோதும்கூட அவனிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. அலட்சியமாக, “ம்ஹம். ஆசிரியனுக்கு இங்கே என்ன வேலை? பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது?கிராமத்தில் பிள்ளைகள் ஏது? சர்க்காருக்கு இதெல்லாம் தெரியாதா? வெட்டிவேலை!”

பொதுவாக கிராமத்தில் மரியாதையான பேச்சோ உபச்சாரமொழிகளோ இல்லை. யாரையும் யாரும் பன்மையில் அழைப்பதில்லை. பள்ளிக்கூடம் என்று ஏதும் கண்ணுக்குத்தெரியவில்லை. எல்லா வீடுகளும் புல்வேய்ந்த மண்தொடும் குடிசைகள். என்ன செய்வது எப்படி தொடங்குவது என்று ஒன்றும் தெரியவில்லை.பின்னர் கிராமத்தின் இன்னொரு முகம் அறிமிகமாகிறது. மிகவயதான நாட்டாண்மை அவனிடம் விசாரிக்கிறார். அவனுடைய அப்பா, குலம், ஊர். ‘நீ நம்மாள்தான்’ என்ற முடிவுக்கு வந்தபின் அவர் அவனுக்கு உதவுகிறார். குடிக்கத் தண்ணீர். அது கிராமத்தில் அபூர்வமான விஷயம். ஒரே ஒரு ஓடைதான் மனிதர்கள் மிருகங்கள் எல்லாருக்கும் எல்லா உபயோகங்களுக்கும். சாப்பிட்டதும் சௌந்தனீகர் ஒரு தெம்பை உணர்கிறான். தொடங்கிவிடலாம் என

அங்கே முன்னர் இருந்த ஆசிரியரை ஊர்மக்கள் அடித்து துரத்திவிட்டார்கள். ஊர்பெண்கள் சிலரிடம் அவன் தவறாக நடந்துகொண்டானாம். அதற்குப்பின் பலகாலமாக அங்கே பள்ளி இல்லை. பிள்ளைகள் படிப்பையெல்லாம் மறந்து ஆடுமேய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அங்கிருந்த புல்வேய்ந்த சாவடியின் ஒருபகுதிதான் பள்ளி என்கிறான் கிழவன். அது பாழடைந்து ஒட்டடை பிடித்துக்கிடக்கிறது. தன் கம்பிளியையே பயன்படுத்தி ஒட்டடை அடித்து தூசி தட்டி அறையை சரிசெய்கிறான் கிழவன். அங்கேயே சௌந்தனீகர் அமர்ந்துகொள்கிறான். மாலையில் இடையர்கள் திரும்பவருகிறார்கள். ஆடுகளை பட்டிகளில் அடைக்கிறார்கள். தங்கள் கம்பிளிகளுடன் சாவடிக்கே வந்துவிடுகிறார்கள்.கனத்த கம்பிளிகளை அப்படியே தரையில்போட்டு அதன் மீது அமர்ந்துகொண்டு இருளிலேயே அமர்ந்து பேசிக்கொள்கிறார்கள். ஒரு அகல் விளக்கு வந்த போதுதான் அங்கே எத்தனைபேர் இருந்தார்கள் என்ற வியப்பை சௌந்தனீகர் அடைகிறான். ஆனால் அவர்களுக்கு இருட்டு பொருட்டேயல்ல.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அவர்களுக்கு பிரியமில்லை. அவர்கள் மாடுமேய்த்தால்தான் தொழிலுக்கு நல்லது. ”இங்கே எங்கே பிள்ளைகள் இருக்கிறார்கள்?”என்று கேட்கிறார்கள். நாட்டாண்மை ஒரு அதட்டல் போட்டதும் தொழிலுக்கு உதவாத பையன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொள்கிறார்கள். ஒருவழியாக பன்னிரண்டு மாணவர்கள் தேறிவிட்டார்கள். மறுநாள் பள்ளி தொடங்கவேண்டியதுதான். யாருமே வீட்டுக்குப் போகவில்லை. அந்தக்கம்பிளிகளைபோர்த்தியபடி அங்கேயே படுத்து அப்படியே தூங்கிவிடுகிறார்கள். சௌந்தனீகர்ரின் முதல் நாள் இது.

அதன் பின் அவன் அந்தக்கிராமத்தில் வேரூன்றுகிறான். பள்ளியை நினைத்ததுபோல தொடங்க முடிவதில்லை. தொடங்கியபின் நடத்த முடிவதில்லை. அப்பாக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டுவந்து விட்டால் அம்மாக்கள் கூப்பிடுக்கொண்டு போய்விடுவார்கள். அம்மா கொண்டுவிட்டால் அப்பா கூப்பிட்டுக்கொண்டுபோவார். கிராமத்தில் பகல்வேளைகளில் ஆள்நடமாட்டமே இருப்பதில்லை. அதைவிட மோசம் சோம்பேறிகளும் நோயாளிகளும் வெட்டியாக பொழுதைக்கழிக்க பள்ளிக்கூடத்தில் மாணவர் மத்தியில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்.

ஆனால் மெல்லமெல்ல சௌந்தனீகர் பள்ளியை நடத்தவே செய்கிறான். கிராமத்தில் அனைவருக்கும் அவனுடைய உதவி தேவையாகிறது. காரணம் அவன் தன் ஊருக்கு ஞாயிறு தோறும் போய்வருகிறான். யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமென்ற பட்டியலும் பணமும் தபாலில்சேர்க்கவேண்டிய கடிதங்களுமாக அவன் சனிக்கிழமை கிளம்பி நடந்து மாலையில் ஊரை அடைந்து தூங்கி ஞாயிறு காலை கிளம்பி மாலை மீண்டும் பன்கர்வாடிக்கு வந்து சேர்வான்.

கிராமத்தில் ஆசிரியனுக்கு இன்னவேலை என்றில்லை. நீதி நிர்வாகம் முக்கியமாக. குடும்பச்சண்டைகளைக்கூட அவன் தான் தீர்த்துவைக்க வேண்டும். ஆசிரியன் படித்தவன். உலகம் தெரிந்தவன் என்ற நம்பிக்கை. ஷேகூ ஆசிரியனிடம் வந்து எனக்கு ஒரு மாடு வேண்டும் உழுவதற்கு என்கிறான்.”ஆசிரியனிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்களே, எனக்கு மட்டும் ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள் ?’என அதட்டுகிறான்.

ஆர்வமூட்டும் கிராமத்துக் கதபாத்திரங்கள் வழியாக நகர்கிறது இந்நாவல். அடிப்படையில் வாழ்க்கை பற்றிய ஒரு நிதானமான புரிதலும், நியாய உணர்வும் கொண்டவரான நாட்டாண்மை ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதேசமயம் வெகுளித்தனமும் அவருக்கு இருக்கிறது. ஆசிரியர் தன் மகளுடன் உறவிலிருக்கிறார் என்று ஒரு அவதூறை காதால் கேட்டதுமே கோபித்துக்கொண்டு பேசாமல் இருக்கிறார். அவனை கண்காணித்து அது உண்மையல்ல என்று தெரிந்ததுமே வந்து ‘சரியப்பா, ரோஷமெல்லாம் என்னைமாதிரி வயதானவர்கள் காட்டவேண்டியது. உனக்கு என்ன?” என்று சமாதானமாகிறார். அக்கிராமத்தில் சௌந்தனீகர் உத்தேசிக்கும் எல்லா மாற்றங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு அளிக்கிறார்.

செல்லாத நாணயங்களாக சேர்த்து வைத்துக்கொண்டு விழிக்கும் ராமா இன்னொரு நல்ல கதாபாத்திரம். அவனிடம் பணம் இருக்கிறது, அதன் மதிப்பு அவனுக்குத்தெரியாது. கிராமத்தானுக்கே உரிய எச்சரிக்கையுடன் ஒரே ஒரு செல்லா நாணயத்தைக் கொண்டுவந்து ஆசிரியனிடம் கொடுத்து மாற்றச்சொல்கிறான். அந்தச்செல்லா நாணயங்கள் உலோகமதிப்பில் அவற்றின் அசல் மதிப்பைவிட அதிகமானவை என்று தெரியும்போது இன்னும் கொஞ்சம் கொண்டுவருகிறான். கடைசியில் ஒரு பெட்டி நிறைய. அத்தனை நாள் அந்த செல்வத்தின் மீது அமர்ந்துகொண்டுதான் அவன் பட்டினி கிடந்தான்!

சாப்பாட்டுக்கு மட்டும் திருட்டு செய்யும் ஆனந்தா ராமோஷி. ‘கேட்டால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை. காக்கா குருவியெல்லாம் வயிற்றுக்கு எடுத்துக் கொள்கிறதே நான் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?’ என்பது ஆனந்தாவின் கோட்பாடு. மனசாட்சிக்கு அதிகமாக எடுத்துக்கொண்டானென்றால் இரண்டுநாள் கழித்து உரிமையாளனைக் கண்டு விஷயத்தைச் சொல்லி தண்டனையை கேட்டு பெற்றுக் கொள்வான். உணவு அன்றி பிற தேவைகளே இல்லாத ஆயபூ. கிட்டத்தட்ட மிருக வாழ்க்கை. ஆனால் கூர்ந்த மதிநுட்பமும் நேர்மையான உணர்ச்சிகளும் கொண்ட மனிதன். பிறந்தது முதல் தொண்ணூறு வயதுவரை மேய்ச்சல் அன்றி வேறு எதுவுமே தெரியாமல் வாழும் காகூபாக் கிழவர். அவர் ஓநாய்கள் போல ஒரு துல்லியமான மிருகம். ஓநாய் வேட்டையாடும் மிருகமென்றால் இவர் மேய்ச்சல் செய்யும் மிருகம்.

சுருக்கமான இக்கதையின் உள்ளே ஒருசில சொற்களில் சொல்லிச்செல்லபப்டும் முழுமையான வாழ்க்கைக்கதைகள் உள்ளன. நோஞ்சான் ஷேகூவுக்காக அவன் காளைக்கு இணையாக நுகத்தில் தன்னை கட்டிக்கொண்டு உழும் அவன் மனைவி அவனால் பின்பு புறக்கணிக்கப்பட்டு தனிமையை வரித்துக்கொள்கிறாள். தந்தை இறந்தபின் ஷேகூவிடம் அடைக்கலமாகும் கிராமத்து அழகி அஞ்சி – கன்னங்கரிய உடலும் பெரிய பற்களும் கொண்டவள் – நோஞ்சான் ஷேகூவை மயக்கி அவனை மணந்துகொள்கிறாள். இன்னொரு இளைஞன் வந்ததும் இயல்பாகவே இவனை உதறி அவனை ஏற்கிறாள். இவ்வாறு வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து அச்சிறு உலகுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நாவலுக்குள் ஒரு தனிக்கதையாக இயங்குவது ஜகன்யா ராமோஷியின் கதை. கட்டுமஸ்தான இளைஞனான அவன் ஊருக்குச்சென்று மராட்டிய இனத்தைச் சேர்ந்த ஒரு கைம்பெண்ணை காதலித்து அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறான். துரத்திவரும் அவர்கள் ராமோஷிகளை ஒட்டுமொத்தமாக அடித்து துவைக்கிறார்கள். விஷயம் அறிந்த ஆனந்தா ராமோஷி ஜகன்யாவை தானே பிடித்துக் கொடுப்பதாக வாக்களிகிறான். ”ஜகன்யா உன் இனம். அந்தப்பெண்ணை அவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளவும் போவதில்லை. அவர்கள் எங்காவது போய் வாழட்டுமே” என்ற நியாயங்கள் ராமோஷிகளுக்குப் புரிவதில்லை. அவர்கள் கண்ணில் அது மன்னிக்கமுடியாத ஒரு பாவம். அவன் தலைமையில் ராமோஷிகளே ஜகன்யாவை தேடி அலைகிறார்கள்.

தப்பி ஓடும் அவர்களை பிடிக்கிறார்கள். கைம்பெண்ணையும் ஜகன்யாவையும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஜகன்யாவை அடித்து துவைக்கும் அவர்கள் அந்த அழகிய விதவையை மூக்கை அறுத்து விரட்டிவிடுகிறார்கள். அவள் அழுதபடி திரும்பி ஜகன்யாவிடமே வருகிறாள். அவன் அடிபட்டு படுக்கையில்கிடக்கிறான். ராமோஷிகள் அவளை விரட்டிவிடுகிறார்கள். அவள் எங்கோ போய்விடுகிறாள். ஜகன்யா மனமுடைந்து குடிகாரனாகி பஞ்சத்தில் ஊரைவிட்டே போய் ஒரு வயலில் களைபறிக்கும் வேலைக்குச் சேர்கிறான். குடியானவர்கள் பஞ்சம் பிழைக்கவரும் இடையர்களுக்கு நாலைந்து நாள் வேலை முடிந்தபிறகே கூலி தருவார்கள். கடும் பசியுடன் நாலுநாள் வேலைசெய்து வயலிலேயே சுருண்டு விழுந்து சாகிறான் ஜகன்யா. உருக்கமான இக்காதல்கதை எளிய தகவல்களாக நாவலில் சொல்லப்படுகிரது.

குணச்சித்திரங்களை அளிப்பதில் அலாதியான ஒரு நுட்பத்தை ஆசிரியர் காட்டுகிறார். அஞ்சியின் இயல்பு என்ன என்பது உழைத்துச்சேர்த்த பணத்தை முழுக்கக் கொடுத்து ஆசிரியர் வழியாக ஒரு ஜாக்கெட் தைத்துக்கொள்ளும் அவளுடைய ஆவலிலேயே வெளிப்படுகிறது. ஒரு மரத்தை பொது நன்மைக்காக தரமறுத்து ஊர் விலக்குக்கு ஆளாகி பிடிவாதமாக அதை எதிர்த்து நிற்கும் பாலாவால் சாமிகும்பிடுவதில் பங்களிப்பதற்கு ஊர் தடைபோடுவதை தாங்க முடிவதில்லை. மனம் உடைந்து அழுகிறான்.

ஒரு நிகழ்ச்சி முக்கியமானது. நாட்டாண்மை கிழவர் அவர் இறந்துபோவதாக ஒரு கனவுகாண்கிறார். மறுநாளே அவர் ஊராரைக்கூட்டி அதைச்சொல்லி தன் மகள் அஞ்சிக்கு புகல் சொல்லி காகூபாவிடம் ஒப்படைத்துவிட்டு எல்லாரிடமும் விடைபெற்று நோய்கண்டு அன்றே மடிகிறார். இந்த நுண்ணிய தகவலை நாவல் சாதாரணமாகச் சொன்னாலும் எளிய மனிதர்களிடம் உள்ள அசாதாரணமாக நுண்ணுணர்வின் சாட்சியமாக உள்ளது இது.

சௌந்தனீகர் ஊரில் ஒரு பொதுக்கட்டிடம் கட்டச்செய்கிறான். ஊருக்குள் பொது நன்மைக்காக சேர்ந்து உழைக்கும் மனநிலையை உருவாக்குகிறான், ஆனால் சட்டென்று வரும் வரட்சியால் எல்லாம் சிதைகிறது. ஆடுகள் மந்தை மந்தையகா சாகின்றன. பசியும்பட்டினியும் தாங்க முடியாத மக்கள் ஊரைவிட்டே செல்கிறார்கள். பன்கர் வாடி மெல்லமெல்ல காலியாகிறது. சரசரவென கூரிய தகவல்கள் மூலம் இந்த முடிவு நாவலுக்குள் நிகழ்கிறது. பள்ளியை அரசு மூடிவிடுகிறது. ஆசிரியன் திரும்ப அழைக்கப்படுகிறான். பிரியாத துணையாக கூடவே இருந்த ஆயபூவிடம் விடைபெற்று கிளம்பும்போது நாவல் முடிகிறது.

ஒரு மந்திரவாதி கோலை அசைத்து காட்டும் மாயக்காட்சி போல பன்கர் வாடியை உருவாக்கி அதை அப்படியே சுருக்கி மீண்டும் தன் கோலுக்குள் இழுத்துக்கொள்கிறார் மாட்கூல்கர். அவருடைய சித்தரிப்புத்திறனுக்கு சிறந்த சான்று இதன் கிராம வர்ணனை. கிராமத்தில் மந்தை வந்தணையும் காட்சியின் நுணுக்கமான விவரிப்பை தல்ஸ்தோயுடன் ஒப்பிடமுடியும். வீடுதிரும்பும் ஆடுகளை தேடி கட்டப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டிகள் தாவிச்சென்று பால்குடிக்க முற்படுதல் ஓர் உதாரணம். ‘தாய் ஆடு குட்டியை தேடுவதும் சிறிய குட்டிகள் தாய் ஆட்டை அழைப்பதுமாக மே மே பே பே என்று கத்தல் காதைத்துளைப்பதாக இருக்கும். பசித்திருக்கும் குட்டீகள் ஏதேனும் ஆட்டின் மடியில் புகுந்து பாலூட்டுவதற்காக முட்ட ஆரம்பித்திருக்கும். தாய் ஆடு அந்த புதிய ஸ்பரிசத்தை புரிந்துகொண்டு துள்ளி வேறுபக்கமாக போக முயற்சி செய்யும். அந்தப் படபடப்பில் சிறிய குட்டிகளைத் தேடும் வெறியில் இருக்கும் தாய் ஆடுகள் கீழே விழுந்த குட்டிகளின் கண்களிலும் முகத்திலும் மிதித்து முன்னேறும். கிராமம் முழுக்க இந்த குழப்பம் நிலவியிருக்கும். ஆயிரம் ஆயிரத்து இருநூறு ஆடுகள் இவ்வாறு  ஒலியெழுப்பும். மேய்ப்பவர்களும் அவர்கள் மனைவிகளும்கூட தங்கள் பேச்சை கூச்சலிட்டுத்தான் பேசும்படி இருக்கும்…’

இடையர்களின் வாழ்க்கை முறையையும் இயல்புகளையும் துல்லியமாகச் சொல்லிச்செல்கிறது இந்நாவல். அவர்களுடைய தொழில் என்பது சலிப்பையே அன்றாட நடைமுறையாகக் கொண்டது. நீண்டநேரம் வெறுமே ஆடுகள் பின்னால் சுற்றும் வாழ்க்கை. மற்றும் தனிமை. அதை வெல்ல அவர்கள் கண்டுகொள்ளூம் விளையாட்டுகள். ஒன்று சேர்ந்ததும் அவர்கள் பேசும் ஓயாத பேச்சு. படுக்கவும் போர்த்தவும் மண்ணைக்கூட்டவும் ஒரே கம்பிளியை பயன்படுத்தும் பழக்கம். நான் தர்மபுரி பக்கம் இருந்த நாட்களில் அறிமுகமான இடையர்களுக்கும் இதே பண்புகள் இருப்பதை கண்டிருக்கிறேன்.

எளிய நேரடியான நடையில் சரளமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நாவல். உமா சந்திரன் அறியப்பட்ட ஒரு நாவலாசிரியர் என்பது இதற்குக் காரணம். மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ இவரது நாவலின் திரைவடிவமே. அதிலும் கிராமத்துக்குவரும் எஞ்சீனியர் என்ற கதாபாத்திரம் மையமாக இருப்பதைக் காணலாம். ஆனால் மராட்டிய இடையர்களை கோனார் என்ற தமிழ்நாட்டு சாதிச்சொல்லால் சொல்லியிருப்பது முறையல்ல. அங்குள்ள சாதிச்சொல் என்பது நாவலின் முக்கியமான ஒரு தகவலாகும்.

1954ல் மராட்டியில் வெளிவந்த இந்நாவல் உடனடியாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 1958ல் The village has no walls’ என்ற பேரில் இது வெளியாகியது. ‘A treasury of Asian Short stories’ ‘Twentieth Century Asia’ போன்ற சர்வதேசதொகுதிகளில் சேர்க்கப்பட்டது. [சிறுகதையாக இது கருதப்பட்டிருப்பதை கவனிக்கவும்] பல ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யபட்டுள்ளது.

யதார்த்தத்தின் வலிமை கொண்ட அழுத்தமான படைப்பு இது. களங்கமின்மையை இலக்கியத்தில் சித்தரிப்பதென்பது எளிய விஷயமில்லை. காரணம் இலக்கியம் என்பது எப்படிப்பார்த்தாலும் அறிவார்ந்தது, நுண்ணியது. இலக்கிய ஆசிரியன் ‘களங்கமில்லா’ மனதினனும் அல்ல. ஆகவே களங்கமின்மை மீதான அவதானிப்பாக, விமரிசனமாக இலக்கிய ஆக்கம் மாறிப்போகும். எழுத்தாளனின் இளம் நெஞ்சின் களங்கமில்லா ஒருபகுதி தன்னிச்சையாக வாழ்க்கைமீது படிவதன் மூலமே இது நிகழ முடியும். அந்தச் சவாலை மிகச்சிறப்பாக சந்தித்த இந்திய நாவல் இது.

[பன்கர் வாடி. வெங்கடேஷ் மாட்கூல்கர். தமிழாக்கம் உமா சந்திரன். நேஷனல் புக் டிரஸ்ட் ]

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2006

முந்தைய கட்டுரையார் யாருக்காகப் பேசுகிறார்கள்?
அடுத்த கட்டுரைபோகன்!